சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம். விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதுச் செய்தியை வாசித்தபோது ஆய்வகத்தில் இருந்தேன். அறைக்குச் சென்று சில கவிதைகளை மேற்கோள் காட்டி இக்கடிதத்தை எழுதலாம் என எண்ணியிருந்தேன்; தொகுப்பு வீட்டில். இன்று திரும்பிப் பார்க்கும்போது கவிஞரின் முதல் தொகுப்பு நிறைய அதிர்ச்சிக் கவிதைகளுடன் வந்திருந்தது நினைவிலிருக்கிறது. கூடவே, திருப்பூரைப் பற்றிய கவிதைகள் மனதிற்கு அணுக்கமானவையாக இருந்தன. மொழியில் நல்ல ஓட்டம். அம்மா என்றாலும் பெண்தானே, பிள்ளை என்றாலும் ஆண்தானே எனும் பொருள்படும் கவிதை குறித்த நினைவுகள் இன்னும் நீங்கவில்லை.

ஒருமுறை முகப்புத்தகத்தில் நேரலையாக கையில் சிகரெட்டுடன் – (விருது அறிவிப்புப் புகைப்படத்திலும் பேனா அதே லாவகத்துடன் விரலிடுக்கில் அமர்ந்திருப்பதைக் காணலாம்) பிற கவிஞரின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தார். “யார்ரா இவன் ஒரே நேரத்தில் ரெண்டு போதையை போடுறான்! நம்ம சொந்தத்துல இவன் ஒரு டைப்பா இருக்கானே?!” என நினைத்துக் கொண்டேன். பிறகு தமிழ் விக்கியிலோ அல்லது அவர் எழுதிய பெருந்தேவியின் கவிதை ரசனைக் குறிப்பிலோ அவர் உயிர்மை பதிப்பகத்தில் இருக்கிறார் என அறிந்து கொண்டேன். பனியன் கம்பெனியில் இருந்து ஒருவர் பத்திரிகைத் துறைக்குப் பாய்வது, அதுவும் கவிதையால் நிகழ்ந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது; இப்போது விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது. அவர் முன் அன்போடு கைநீட்டிச் சொல்கிறேன்: கவிதை உன்னைச் சும்மா விடாது சதீஷ். இன்னும் வெகுதூரம் அழைத்துச் செல்லும்.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. என். பி. சுப்பிரமணியன் நகர்
திருப்பூர் 641608
————————————

நன்றி,

விஜயகுமார்.

முந்தைய கட்டுரைபுரவிக்கால்கள், கடிதம்
அடுத்த கட்டுரைஅந்தகக்கவி