சனாதனம், திருமாவளவன்

அன்புள்ள ஜெ,

திருமாவளவன் பேட்டி ஒன்று கண்டேன். நீங்கள் இன்னொரு பேட்டியில் அவரைப்பற்றிச் சொன்னதை அவரிடம் கேட்கிறார்கள். அவர் பதில் சொல்கிறார். 

நல்லது. நான் கேட்பதெல்லாம் அவருடைய  சனாதன எதிர்ப்புகொள்கைகள் மீது உங்களுக்கு ஈடுபாடுண்டா? அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது அதை அவர் சமனம் செய்துகொள்ளவேண்டுமென விரும்புகிறீர்களா?  அவர் சாதி பற்றி சொன்ன கடுமையான கருத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

செல்வா ராஜமாணிக்கம்

*

அன்புள்ள செல்வா,

திரும்பவும் சொல்கிறேன். நான் இன்றைய கட்சியரசியலைப் பற்றிப் பேசவில்லை. அவ்வளவு தொடர்ச்சியாக என்ன நடக்கிறதென்று நான் பார்ப்பதில்லை. எழுத்தாளர்கள் அப்படி பார்க்கக்கூடாது. சென்ற இரண்டு மாதமாக நான் பாம்புகள், புராணங்களில் பாம்புகள், உலக இலக்கியத்தில் பாம்புகள் தவிர எதைப்பற்றியும் வாசிக்கவோ கவலைப்படவோ இல்லை. இதுவே என் இயல்புஇப்படித்தான் எழுத்தாளர்கள் இருக்கவேண்டும் என்பதும் என் எண்ணம். ( ஒரு நாவல் எழுதுகிறேன். மயிர்க்கூச்செறிய வைக்கும் படைப்புஅதாவது எனக்கு)

திருமாவளவனின் சனாதன எதிர்ப்பை அவர் சமனம் செய்துகொண்டால் அதன் பின் அவர் எதற்கு? அது அவருடைய கொள்கை, அவருடைய ஆளுமை. அதைத்தான் நான் ஏற்கிறேன்.

சனாதன எதிர்ப்பு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முக்கியமான அரசியல்தரப்பு. இன்றல்ல, மகாபாரதகாலம் முதலே. (வெண்முரசு படியுங்கள். அல்லது திசைகளின் நடுவே கதை மட்டுமாவது படியுங்கள்). 

சனாதன எதிர்ப்பு அல்லது மைய வைதிக மரபின்மீதான எதிர்விமர்சனத் தரப்பு என்பது ஒற்றைப்படையானது அல்ல. அதற்கு நடைமுறைத் தளம் ஒன்றுண்டு. அதை திருமாவளவன் பேசுகிறார். இன்னொரு தத்துவத்தளமும் உண்டு. அந்த தளம் பல உட்பிரிவுகள் கொண்டது, மிக விரிவானது. ஆறு தரிசனங்களில் முதல்நான்கு, அதன்பின் சமணம், பௌத்தம் , அதன்பின் புறச்சைவ சமயங்களில் நான்கு என அது பல கிளைகளாக பிரிந்தும் உரையாடியும் வளர்ந்துள்ளது. (விரிவாக அறிய இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் படியுங்கள்)

வைதிகத்தரப்பில் கிளைத்த சிந்தனைகளிலேயே நீண்ட உரையாடல் வழியாக சனாதன எதிர்ப்புச் சிந்தனைகளின் செல்வாக்கு அடைந்தவை உண்டு. அந்த இணைவும் ஏற்பும் தத்துவத்தின் அடிப்படை இயல்பு. வேதாந்தம் வைதிகமரபை சேர்ந்தது. ஆனால் அதில் ஒரு பகுதி வேதஎதிர்ப்புத் தன்மை கொண்டது. மூலவேதாந்த நூலாகிய கீதையிலேயே வேதத்தை எதிர்க்கும் குரல் உண்டு.  நாராயணகுருவின் அத்வைதம் சனாதன எதிர்ப்புத் தன்மை கொண்டது. சங்கரமடத்தின் வேதாந்தை அதற்கு எதிர்நிலை. ஆனால் இரண்டும் அத்வைதமே.

நான் நாராயணகுருவின் மரபுவழி வந்தவன். அதில் எந்த ஐயமும் ரகசியமும் இல்லை. என் சென்ற 35 ஆண்டுகால வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்,என் ஒவ்வொரு சொல்லும் ,நான் ஈட்டும் ஒவ்வொரு பணமும் குருசமர்ப்பணம் மட்டுமே. என்னை அறிந்த எவருக்கும் அது தெரியும். நாராயணகுரு, நடராஜகுரு, நித்யா, முனி நாராயணப்பிரசாத், வியாசப்பிரசாத் என்னும் வரிசையே என் மரபு. 

இந்த எதிர்நிலைகளை அரசியல்களத்தில் பார்ப்பதற்கும் தத்துவக்களத்தில் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. அதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். ஒரு நூறுபேருக்கு இதை புரியவைத்துவிட்டால் என் வாழ்க்கை அர்த்தம்பெறும்.

தத்துவத்திலுள்ள நிலைபாடுகளின் இயல்புகள் சில உண்டு

.  அதிதீவிர எதிரெதிர் நிலைகள் (binary) தத்துவத்தில் இருக்கமுடியாது. தத்துவத்தில் அது ஒரு சிந்தாமலம் (சிந்தனை அழுக்கு) என்றே கொள்ளப்படும். ஏனென்றால் தத்துவம் உரையாடிக்கொண்டே இருக்கிறது. உரையாடல் வழியாக அது வளர்கிறது. 

எதிரெதிர் நிலைபாடுகள், மூர்க்கமான பற்றுகள், அதைச்சார்ந்த தீவிர உணர்வுநிலைகள் எல்லாம் இரண்டு களங்களில்தான் இருக்கமுடியும். ஒன்று அரசியல், இன்னொன்று மதம். அரசியல் மதம் இரண்டுமே ஏறத்தாழ ஒரே மனநிலை கொண்டவை. தன் தரப்பின் மீதான ஆவேசமான நம்பிக்கை. எதிர்த்தரப்பின் மீதான வெறுப்பு. 

தத்துவத்தை அதிகமாக பயன்படுத்துபவை அரசியலும் மதமும்தான். ஆகவே தத்துவம் பலருக்கும் அரசியல், மதம் வழியாகவே அறிமுகமாகிறது. தத்துவத்தை அவற்றிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். அது ஒரு அறிவியக்க நெறி. எளிதில் அது இயலாது. ஏனென்றால் அரசியலும் மதமும் அன்றாடவாழ்க்கை முழுக்க நிறைந்திருப்பவை. அவற்றிலுள்ள வெறுப்பும் பற்றும் உக்கிரமானவை. 

மேலும் மிகப்பெரிய நிறுவனங்கள் அவற்றை பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கின்றன. தத்துவத்தை பிரச்சாரம் செய்ய அமைப்புகளே இல்லை. ஆகவே நாராயணகுருகுலம் போன்ற தூயதத்துவத்திற்கான அமைப்புகள் புயலில் சுடர்போல பெரும்பாலும் கைகளால் பொத்திப்பொத்தி வைக்கப்பட்டுள்ளன. தேடிச்சென்றாலொழிய வெளிச்சம் கண்ணுக்குப்படாது

தத்துவத்தின் வண்ணவேறுபாடுகள் நுட்பமானவை. மிகமிக மெல்லிய வேறுபாடே வெவ்வேறு தத்துவநிலைபாடுகள் நடுவே இருக்கும். பயின்றாலொழிய அவ்வேறுபாடு கண்ணுக்குப் படாது. அப்பட்டமான திட்டவட்டமான நிலைபாடுகளும், எதிர்நிலைபாடுகளும் தத்துவத்தில் கிடையாது.  உதாரணமாக, பௌத்ததின் சனாதன எதிர்ப்பும் நாராயணகுரு மரபின் அத்வைதத்தின் சனாதன எதிர்ப்புக்கும் இடையேயான வேறுபாடு மிக நுணுக்கமானது. 

. முரணியக்கம் (dialectics) வழியாகவே தத்துவம் செயல்படும். ஆகவே எதிர்த்தரப்பின் இருப்பை ஏற்கும். எல்லா தரப்பின் இருப்பையும் அது ஏற்கும். எந்த ஒரு தரப்பு பலவீனமாக ஆனாலும் அது ஓர் இழப்பே என்றுதான் கருதும். விவாதம் வழியாக எதிர்த்தரப்பை மாற்றிக்கொண்டிருக்கும், தானும் மாறிக்கொண்டுமிருக்கும். 

திருச்சி கல்யாணராமன் என்பவர் பேசிய சில காணொளிகளை எனக்கு அனுப்பி சிலர் கருத்து கேட்டனர். ‘அது என்றும் இங்கே இருக்கும் ஒரு குரல்என்று நான் சொன்னேன். அது நண்பர்கள் சிலருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரை நான் ஏன் எதிர்க்கமாட்டேன் என்கிறேன் என ஒருவர் கண்ணீர்க்கடிதம் எழுதினார். ஏன் எதிர்க்கவேண்டும்? அது இங்கே உள்ள ஆதாரக்குரல்களில் ஒன்று. அதையே சிலசமயம் நம் சொந்த அப்பாவில் இருந்தும் கேட்க முடியும்.

அதுவும் கூட ஒற்றைப்படையானது அல்ல. சந்திரசேகர சரஸ்வதி போன்ற பேரறிஞர்கள் அதன் மிகச்சிறந்த முகம். மறுபக்கம், கல்யாணராமன் மிக அடித்தள முகம். அறிவமுகம், அறிவில்லா முகம் என இரண்டு பட்டை அதற்கு. அந்த தரப்புக்கு அழிவில்லை. அது இந்திய சிந்தனைமரபின் நிலைச்சக்தி (Static Force) செயல்சக்திகள் அதை எதிர்கொண்டபடியே இருக்கும் (Dynamic Force)  

அது விவாதத்தில் ஒரு குரலாக இருந்துகொண்டிருக்கவேண்டும். கீழ்த்தட்டில் அது வெறும் ஆசாரவாதம். அத்துடன் சாதிய மேட்டிமைவாதம். ஆனால் உயர்த்தட்டில் அது தொன்மையான ஞானநூல்களையும், ஆழ்படிமங்களையும் பேணி நிலைநிறுத்திய ஓர் அறிவுத்தரப்பு. பல்லாயிரமாண்டுக்கால தொடர்ச்சி கொண்டது. பேணுவது அதன் இயல்பு. ஆகவே மாற்றமின்மை அதன் அடிப்படை. ஆகவே எல்லாவகை முன்னகர்வுகளுக்கும் அது எதிரானது.

சனாதன மரபு என நாம் இன்று சொல்லும் இந்த மரபு அதன் நம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகியவற்றால் தேக்கநிலை கொண்டது. தத்துவார்த்தமாகவும் அது நிலைபெயராமையை தன் கொள்கையாகக் கொண்டது, ஆகவே மறுக்கத்தக்கது. ஆனால் அது தத்துவத்தளத்தில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்திய ஒன்று. கலையிலக்கியங்களில் அதன் கொடைகள் மகத்தானவை. அனைத்துக்கும் மேலாக பல்லாயிரமாண்டுகளாக , பழங்குடிமரபில் இருந்தே பெற்றுக்கொண்ட ஏராளமான ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் அது பேணி முன்னெடுத்து கொண்டுவந்து சேர்த்துள்ளது. அவற்றை  வெறும் தகவல்பதிவுகளாக கொண்டுவராமல் அவற்றை வாழும் படிமங்களாக, ஆழ்மனத்தில் நீடிக்கும் தொன்மங்களாக தன் ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள், புராணங்கள் வழியாக நிலைநிறுத்தியுள்ளது. அது மானுட இனத்திற்கே பெரும்கொடை. அவை கலையிலக்கியங்களுக்கு மிகப்பெரிய ஆதாரங்கள். அதற்கும் மேலாக ஆன்மிகப் பயிற்சிகளுக்கும் அகப்பயணங்களுக்கும் மிகமிக இன்றியமையாத கருவிகள். அக்கொடையை கருத்தில்கொண்டே நாராயணகுருவின் நவீன அத்வைத மரபு அத்தரப்பை எதிர்க்கிறது. அந்த தொன்மங்கள், ஆழ்படிமஙகளை எடுத்துக்கொண்டு, தனக்கான அகப்பயிற்சிகளுக்கு உரியவகையில் உருமாற்றிக்கொண்டு முன்னகர முயல்கிறது. ஆகவேதான் எளிமையான எதிர்ப்புநிலைகள், அதன்விளைவான காழ்ப்ப்புகள், அவற்றின் அரசியல் கூச்சல்கள் ஆகியவற்றை நிராகரிக்கிறது.

நான் சனாதனத்துக்கு எதிரான தரப்பினன். நித்யா போல. நாராயணகுரு போல. அது விவாதங்களில் தோற்கடிக்கப்படவேண்டுமென விரும்புபவன். திருமாவளவன் பேசுவதை விட தீவிரமான சனாதன எதிர்ப்புக்குரல் என் படைப்புகளில் உள்ளது. சொல்லப்போனால், தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பின் வலிமையான, தத்துவார்த்தமான சனாதன எதிர்ப்புக்குரல் நவீன இலக்கியத்தில் என் கதைகளிலேயே உள்ளது– ஒரு ஐம்பது கதைகளை சுட்டிக்காட்டமுடியும். நேரடியாக வெளிப்படும் மாடன்மோட்சம், திசைகளின் நடுவே, நூறு நாற்காலிகள் போன்றவை முதல் நுட்பமாக வெளிப்படும் நீரும் நெருப்பும் வரை.

ஆனால் நான் பிராமண வெறுப்பாளன் அல்ல. அத்தகைய எந்த வெறுப்பும் ஆன்மிகப்பயணத்திற்கு எதிரானது என்றே நான் நினைக்கிறேன். பிராமணர்களின் கல்விப்பற்று, பயிற்றுவிக்கும் திறன், வன்முறையற்ற தன்மை என நான் பெரிதும் மதிக்கும் பண்புகள் பல. ஒட்டுமொத்தமாக  நான் பிராமணர்களை மதிப்பவன் என்றே சொல்வேன். அவர்களுக்கு எதிரான எந்த வகை வெறுப்புக்குரலையும் ஏற்கமாட்டேன், எதிர்ப்பேன். அதுவே நாராயண குருகுலத்தின் வழிமுறை.

திருமாவளவனும் சனாதன எதிர்ப்பாளர், ஆனால் எந்த சாதிக்கும் எதிரானவர் அல்ல. சராசரி திராவிட அரசியல்வாதிகளுக்கு பிறப்பால் பிராமணர்கள் அனைவருமே எதிரிகள்தான். சுந்தர ராமசாமியாக இருந்தாலும் அசோகமித்திரனாக இருந்தாலும் அவர்கள்  ‘பார்ப்பனர்கள்’ மட்டுமே. திருமாவளவன் அந்த காழ்ப்புக்கு அப்பாற்பட்டவராகவே வெளிப்பட்டுள்ளார். தமிழில் பிறப்பு காரணமாகவே எந்த ஒரு அங்கீகாரமும் பெறாது மறைந்த பிராமணச் சமூக எழுத்தாளர்கள் மறைந்தபோது பெருமதிப்புடன் எழுந்த முதல் அஞ்சலி அவருடையதாகவே இருந்துள்ளது என்பது வரலாறு.

நான் சனாதனத் தரப்பின் எதிர்ப்பாளன். ஆனால் அந்தத் தரப்பு அழியக்கூடாதென்றும் நினைப்பேன். அழிந்தால் தத்துவத்தில் ஒரு தரப்பு இல்லாமலாகும். அது எனக்கு முக்கியம். அந்த தரப்பு உருவாக்கிய கலைகள் இலக்கியங்களும் எனக்கு முக்கியம்.

நித்யா இ.எம்.எஸின் மார்க்ஸியத்தையும், அப்துல் சமது சமதானியின் சூஃபிசத்தையும், கிறிஸ்தவத்தையும் அவைதிகஅதாவது சனாதன எதிர்ப்பு தத்துவங்களாகவே பார்த்தார். அந்த தரப்புகளின் தத்துவ அறிஞர்களுடன் என்றும் விவாதத்தில் இருந்தார். அவை நூல்களாகியுள்ளன. அவர்களுக்கும் நாராயணகுருவின் அத்வைதத்துக்குமான பொதுப்புள்ளிகளை அந்நூல்களில் விவரிக்கக் காணலாம். நான் என் நூல்களில் தொடர்ச்சியாக அந்த நோக்கையே முன்வைக்கிறேன். பலநூறு பக்கங்கள் எழுதியுள்ளேன்.

என் தரப்பு கொஞ்சம் சிக்கலானது.  இங்கே பொதுக்களத்தில் பேசும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் இந்த தத்துவத்தின் குரலை மூர்க்கமாக எதிர்ப்பார்கள். எல்லா சாராரும் தங்கள் எதிர்த்தரப்பாகவே என் குரலை விளக்குவார்கள். என்னை பிராமண எதிர்ப்பாளன் என பிராமணர்களில் ஆசாரவாதிகளும், பார்ப்பன அடிவருடி என அரசியல்வாதிகளும் ஒரே சமயம் சொல்வார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் அவர்களின் எதிரிகளிடம் பேசும் வெறுப்பின் மொழி  மட்டுமே உண்டு.

ஆகவே தமிழ்ச்சூழலில் இதைப்புரியவைப்பது கடினம். நாராயணகுரு முதல் முனி நாராயணப் பிரசாத் வரை நூறாண்டுகளில் கேரளத்தில் செய்து ஓரளவு வெற்றிபெற்ற ஒரு முயற்சி. அதை நான் ஒருவனே இங்கே செய்யவும் முடியாது என அறிவேன். ஆனாலும் நான் அடைந்த வெற்றி மிக அதிகம்  என்னும் நிறைவு எனக்குள்ளது.

*

ஆக திரும்பச் சொல்கிறேன். இந்தியச் சூழலில் அரசியலில் சனாதன எதிர்ப்பு ஒரு முதன்மைச் சக்தியாக மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது. மகாபாரதமே அதற்குச் சான்று. இனியும் இருக்கும். அதன் அதிகாரம் இருந்தாகவேண்டும். அது ஒரு விடுதலைச் சக்தி என்றே நான் நினைக்கிறேன். (விவேகானந்தர் சொன்னதுதான் அது) ஆகவே அதன் முகமாக திருமாவளவன் இருப்பதில் எனக்கு ஏற்பே உள்ளது. அவர் வென்றால் அது ஒரு விடுதலைநிகழ்வே. அவர் ஆற்றுவது ஓர் அரசியல்விடுதலை இயக்கப்பணியையே. 

மற்றபடி அதன் நடைமுறை அரசியலை நான் கவனிப்பதில்லை. நான் அதை விவாதிக்கும் தத்துவ தளம் என்பது முழுக்க இன்னொரு மனநிலையில் நிகழ்வது. அங்கே எதிர்த்தரப்பே உள்ளதுஎதிர்ப்பு இல்லை. நான் ஏன் அரசியல்தரப்புக்குள் செல்லவிரும்பவில்லை என்றால் அந்த உணர்வுநிலைகளே தத்துவத்திற்கு நேர் எதிரானவை என்பதனால்தான். அவற்றை முழுமையாக தவிர்க்காமல் தத்துவத்தின் நுண்ணிய தளங்களை பேசவே முடியாது. 

ஜெ

திசைகளின் நடுவே வாங்க

திசைகளின் நடுவே மின்னூல் வாங்க 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைஅரிமதி தென்னகன்
அடுத்த கட்டுரைWhen I first came to Mumbai….