சுப்ரமணிய ராஜு, ரம்யா -கடிதங்கள்

முரண்களின் தொகை – சுப்ரமண்ய ராஜு புனைவுலகம்- ரம்யா

சுப்ரமணிய ராஜூ தமிழ் விக்கி

இனிய ஜெயன்,

வணக்கம்.

சுப்ரமண்யராஜூவின் சிறுகதைகள் குறித்த ரம்யாவின் பார்வை சிறப்பு. ராஜூ தன் காலத்திலேயே கவனிக்கப்படாதவர். மாலனுக்கும், பாலகுமாரனுக்கும் கிடைத்த இடம் இவருக்கு கிடைக்காமல் போனது சோகம் தான். சிறு பத்திரிக்கைக்கும், நடு பத்திரிக்கைக்கும் நடுவில் ஊசலாடிய ட்ரப்பீஸ் கலைஞன் என்றும் சொல்லலாம்.

இவரது கதைகள் எண்பதுகளின் வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் போன்றே அக்காலத்தைப் பிரதிபலித்தவையே. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு இன்றைய அளவுகோலை அவரது கதைகளுக்குப் போட்டால் சிறிது  ஏமாற்றம் ஏற்படுவது இயல்பேஅவர் இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தால் அவரது உச்சத்தை அவர் தொட்டிருக்கக்கூடும்.

டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, புதுமைப்பித்தன் போன்றோர் நூறு வருடங்களை கடந்தும் fresh ஆக இல்லையா என்ற கேள்வி எழக்கூடும்.

ஆம், நிச்சயமாக ராஜூ ஒரு டால்ஸ்டாயோ, தஸ்தயேவ்ஸ்கியோ, புதுமைப் பித்தனோ இல்லைதான். ஆகியிருப்பதற்கான சாத்தியங்களை ஒரு முரட்டு சக்கர டயர் எடுத்துக்கொண்டு விட்டது என்பதை கற்பனைக்கு விட்டுவிடலாம்.

அதையும் மீறி ரம்யாவின் இத்தகைய மீள்கூறல்கள் ராஜூவுக்குக் கிடைத்த உண்மையான கைத்தட்டல் எனக் கொள்ளலாம்.

பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் ராஜூவை நமக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக்குகிறது. வாழ்க்கையையும் முரண்களின் தொகை என்று சொல்லலாம்தானே ரம்யா? ராஜூ போன்றே அபூர்வமாக எழுதிய கார்த்திகாராஜ்குமார்இரவிச்சந்திரனின் கதைகள் குறித்தும் ரம்யா எழுதலாம் என்பதே என் அவா.

நன்றி.

சந்தானகிருஷ்ணன்தஞ்சை.

அன்புள்ள ஜெ

இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிய சாதாரணமான எழுத்தாளர்கள்கூட நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் வணிக இதழ்களில் எழுதினார்கள் என்ற ஒரே காரணத்தாலேயே  சுப்ரமணிய ராஜு போன்றவர்கள் முற்றாகவே விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சுஜாதாவின் கதைகள் பற்றி ஒரு இலக்கிய விமர்சகர் கட்டுரை எழுதினார் என்றால் நீங்கள் அவருடைய நாடகம் பற்றி எழுதியதுதான். சுப்ரமணிய ராஜு பற்றிய முதல் இலக்கிய விமர்சனக் கட்டுரை இது என நினைக்கிறேன். நெகிழ்ச்சிப்பதிவுகள் வாசகப்பதிவுகளே இதுவரை வந்துள்ளன

வி.ஶ்ரீனிவாஸன்  

முந்தைய கட்டுரைகுருகுலங்களை அணுகுதல்
அடுத்த கட்டுரைசாலமோனின் தோட்டம் – கடிதங்கள்