யோகம் இரண்டாம்நிலை- கடிதம்

அன்புள்ள ஜெ,

சென்ற வார யோக முகாம் நிலை 2யில் அறிதலின் இன்பத்தை நான்கு நாட்களும் அனுபவித்தேன். இங்கே எழுதியவை கொஞ்சம், அறிந்தவை அனேகம், ஒவ்வொரு அமர்வை எழுதும் பொழுதும் மேலும் விரிந்து விரிந்து செல்கிறது. தகவல்களை அதிகமாகவும் என்னுடைய அனுபவத்தை குறைவாகவே பதிவு செய்ய முடிந்தது

குருஜி வழமை போலவே  ஒவ்வொரு அமர்வையும், அமர்வுக்கு நடுவே கிடைக்கும் சிறிய இடைவெளியில் கேட்கும் கேள்விகள் மற்றும் உணவு இடைவேளையில் நடக்கும் அனுபவ பரிமாற்றங்கள் வரை எல்லவற்றையும் அணுகுவதற்கு எளிதாக எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் கனிவுடனும் எதிர்கொண்டு பதிலளித்தார். சாரதா அக்கா ஆசனங்களை செய்து காட்டுவது, பெண்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று உதவினார். நண்பர் மாயாவுடைய சிறுவர்கள், சத்யன் மற்றும் வெற்றி ஆகியோர் மற்ற இடைவெளிகளை தங்களுடைய குறும்புகள்/விளையாட்டு/விடுகதை வழியாக நிறைத்து கொண்டாட்டமான நிறைவான நாட்களாக 3 நாட்கள் சென்றன.

நடுநடுவே தபஸ்வி, த்வஜன், த்ரிசக்தி, சங்கல்ப புத்ரன், காம்யப் புத்ரன், தெளமனஷ்யம், நயன, ஸ்பரிச, மானஸ தீட்சை, யுவால் ஹராரியின் புத்தகங்களில் சொல்லப்பட்டவை என பல நுணுக்கமான தகவல்களை யோகாவுடன் சம்பந்தப்படுத்தி அள்ளி தந்துகொண்டே இருந்தார். இது இல்லாமல் நாங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கேள்விகளாக கேட்டுத் தள்ளினோம்.

குருஜிக்கு நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றியும். இந்த முகாமை இனிமையான மலைத்தங்களில் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தி தரும் உங்களுடைய குருவருளுக்கு பாதம் பணிந்த வணக்கம்.

முகாமின் மைய குறிக்கோள்சுருக்கமாக 

ஆசனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து உடலை மேம்படுத்தி, சூரிய நமஸ்காரம் மற்றும் ப்ராணாயாமம் மூலம் ப்ராண சக்தியை பெருக்கி, ப்ரத்யாஹார பயிற்சிகள் மூலம் சேமித்து, அந்த சேமித்த சக்தியை தவறான வழியில் செலவழிக்காமல் சங்கல்ப யோக நித்ரா மூலம் உலகியல் சம்பந்தமான தேவைகளுக்கு செலவழித்து நிறைவு கொள்ளவேண்டும்.

வியாழன் இரவு

நானும் மனைவியும் மலை தங்குமிடத்திற்கு மாலை 5 மணி அளவில் சென்று சேர்ந்தோம். குருஜி எங்களுடைய ரிஷிகேஷ் பயணத்தை பற்றி கேட்டு தெரிந்துகொண்டார். செல்வதற்கு முன்னாலும் அங்கிருந்த போதும் அவரை தொடர்பு கொண்டு அங்கு என்னுடைய ஆன்மீக பயணத்தை மேம்படுத்த செல்ல வேண்டிய இடங்கள், கேள்விகள் பற்றி கேட்டிருந்தேன்

பிறகு அஜியும் குருஜியும் Neuro Plasticity, STEM Cell, DNA/Genetics எவ்வாறு ஒரே விஷயத்தை வேதியல், இயற்பியல் மற்றும் நரம்பியல் அனுகுகின்றன என்ற தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தனர், அஜி சுதந்திர விருப்பம் (Free Will) பற்றி விரிவாக பல தத்துவ மரபுகளிலிருந்து எடுத்து பேசியது எனக்குள் சில புரிதல்களையும் மேலும் கேள்விகளையும் எழுப்பியது.

முதல் நாள்

யோகா சம்பந்தமான எந்த கற்றலும் மரபு சார்ந்து அதுவும் அந்த மரபு 150 வருடங்களாவது இங்கு இருந்து 7 தலைமுறைகள் தொடர்ந்து கால நேர வர்த்தமானங்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டு/திருத்தப்பட்டு அடுத்தடுத்த குரு பரம்பரைக்கு நேரடியாக கையளிக்கப்பட்டு வந்திருந்தால் மட்டுமே முழுமையானதாக இருக்க முடியும் என்று ஆரம்பித்தார்குறைந்த வருடமே இருந்திருந்தால் எல்லோருக்கும் பயனளிக்காது, குறிப்பிட்ட வயது, பிரச்சினை, தட்பவெட்பம் என சிறிய வட்டத்தில் உள்ளவர்களுக்கு தான் உபயோகப்படும், தவறல்ல ஆனால் முழுமையானதல்ல என்று குறிப்பிட்டார்.

மரபை மற்றுமே போற்றி பெருமித மனப்பான்மையில் அறிவியலை மறுக்காமல் மரபு சார்ந்த தகவல்களை தற்போதய அறிவியல் குறிப்பாக நரம்பியலின் பார்வையை தொடர்ந்து அவதானித்து புதிய முன்னேற்றங்களையும் (Neuroplasticity, Embodied cognition) தகவல்களையும் பிழைகளை அகற்றி அறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்அதே சமயம் சித்தத்தை தெரிந்து கொள்ளவதில் நரம்பியலின் போதாமைகளையும் தெளிவுபடுத்தினார்

முதல் நிலை வகுப்பில் கலந்து கொண்ட 25 பேரில் 10 பேர் தான் கலந்து கொண்டாலும் எண்ணிக்கை முக்கியமில்லை நாம் தீவிரத்தோடு செய்வதே முக்கியம் என்றார்வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் தொடர்ந்தோ அல்லது சிறிய இடைவெளி விட்டோ செய்து வந்தவர்கள்

குருஜி, யோக மரபு இத்தனை ஆசனங்கள் ப்ராணாயாம மற்றும் ப்ரத்யாஹார பயிற்சிகளை ஏற்படுத்தியது, எப்படியாவது தேடி வருபவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து செய்வதற்கேற்ற வசதிக்காக எளிமைப்படுத்தப்பட்டது என்றார். ஒரு நாளில் குறைந்தபட்சமாக ஒரு பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலே மறுபடியும் மற்ற பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கும்பொழுது குற்ற உணர்ச்சி அறவே இருக்காது என்று தொடர்ந்து செய்ய முடியாதவர்களுக்கு ஆறுதல் அளித்தார்இரண்டு நிமிட தாடாசனமோ, ஐந்து நிமிட பிராணாயாமமோ அல்லது 15 நிமிட யோக நித்ராவை காரில் அலுவலகம் செல்லும்பொழுது காதில் ஹெட்போன் வழியாக கேட்க சொல்லி எளிமைப்படுத்தினார்

அதே சமயம் ஒரு நாளில் குறைந்தது 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் 20 நிமிடம் வரை செய்யாதவர்கள் முதல் நிலை சாதகர்கள் மட்டுமே. உடல் சிக்கல்களை மட்டும் தீர்ப்பதை நோக்கமாக கொள்பவர்களால் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல இயலாது, மாணவனின் நிலைகளை பிரதம, மத்திம மற்றும் உத்தம சாதகன் என்றும் பயிற்சிகளை ஆரம்ப, மத்திம மற்றும் மேம்படுத்தப்பட்டவை என்றும் மூன்றாக வகுத்து அவர்களின் தகுதிகளை மற்றும் அந்த நிலையில் ஏற்படும் அனுபவங்களை விளக்கினார். அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதற்கு மரபில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை செய்து தபஸ்வி ஆகும்படி ஊக்கப்படுத்தினார். சில பயிற்சிகளினால் பலன் ஏற்படாதது போல் தோன்றினாலும் அவை நம்மை அறியாமல் தூய்மை செய்வதை மத்திம சாதகனால் அவதானிப்பது மூலம் மட்டுமே சாத்தியம், தியான நிலை எட்டுவதற்கு மேலும் 7 நிலைகள் உள்ளதாக சொல்லி சிறு மலைப்பையும் ஏற்படுத்தினார்.

முதல் நிலை பயிற்சிகள் அறிமுக அடிப்படை பயிற்சிகள் மட்டுமே, அடுத்த நிலையில் நாம் மரபார்ந்த முக்கியமான மத்திம பயிற்சிகளை பார்க்கவிருக்கிருப்பதாக கூறி ஒரு ஆசனம், யோக நித்ராவின் இரண்டாவது நிலை மற்றும் சித்தத்தை ஒருமுகப்படுத்தும் ப்ரத்யாஹார பயிற்சியான த்ராடகாவுடன் முதல் நாள் நிறைவுற்றது.

இரண்டாவது நாள்

யோகா மரபு 1923ஆம் ஆண்டுக்கு முன் வரை எந்த வித முன்னுரையுமின்றி மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாக பயிற்சியை செய்ய கற்றுக்கொடுப்பார், 1923க்கு பிறகு தான் ஒரு பயிற்சி பற்றி ஒரு முன்னுரை, அதனுடைய பலன்கள், பக்க விளைவுகள், செய்யும் முறை ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டு பயிற்றுவிக்கப்படுவதாக ஆரம்பித்தார்மைசூர், பீஹார் யோக மரபு ஆகியவை எப்படி ஆவணப்படுத்துதலை சிறப்பாகவும் ஆழமாகவும் அதே சமயம் விளம்பரப்படுத்தாமலும் பங்களிப்பாற்றுகின்றன. அவரும் டாக்டர் மாரிராஜ் அவர்களும் தொடர்ச்சியாக அறிவியல் குறிப்பாக நரம்பியல் மற்றும் இயற்கை சம்பந்தமான தகவல்களை தொடர்ச்சியாக படித்து வருவதாக சொன்னார்.

பதஞ்சலியை மருத்துவர்களின் உத்தமன் (பிஷக் உத்தமன்) எனவும் குரு நித்யா யூனிவர்சல் சைக்கலாஜிஸ்ட் என அழைத்ததையும் பகிர்ந்து கொண்டார்.

பஞ்ச அவதான நிலைகளை விளக்கி கடைசி நிலையை அடைய ஸ்வார்தா ராமா தொகுத்த 16ஆம் நூற்றாண்டு நூலான ஹத யோக ப்ரதீபிகாவில் 7 வருடங்கள் ஆகலாம் என்று விவரித்துள்ளது பற்றி குறிப்பிட்டார். இன்னும் 7 வருடங்களா என்ற மலைபையும், குருஜியின் வழிகாட்டுதலில் அதை குறைந்த வருடங்களில் அடைய முயல்வேன்.

சென்ற முகாமில் கற்று கொண்ட ஆசங்களை செய்ய சொல்லி, தவறுகள் இருப்பின் சரி செய்துவிட்டு முதுகு, இடுப்பு, தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்தி இலகுவாக்கும் 6 புதிய ஆசனங்களை சொல்லி தந்தார்

நாத யோகம் பற்றி விரிவாக கூறிவிட்டுதினமும் காலை விழித்தவுடன் முதல் 15 நிமிடங்களில் பார்த்தல், கேட்டல் வழியாக ஏற்படும் உணர்வு மூளையில் பதிந்து அன்று முழுவதும் நிலவும் என்றும் அப்பொழுது உணர்வு ரீதியான இணைப்புகளை ஏற்படுத்தாத நாதங்களை கேட்பதின் சிறப்புகளை விவரித்தார். இரண்டு வகை மந்திரங்களில், ஒன்று நம்பிக்கை/சடங்கு சார்ந்தது சில கட்டுபாடுகளுடனும் மற்றொன்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் அதன் அர்த்தம் கூட தெரியாமல் சொல்லலாம். 20,000 மேல் உள்ள மந்திரங்களில் உள்ள 18 சாதனா மந்திரங்களில் த்ரிமந்த்ரங்களான ம்ருத்யஞ்சய, காயத்ரி (யாக்ஞவல்கியர்) மற்றும் துர்கா மந்திரங்களை 10 நிமிடம் கேட்டுவிட்டு எழுந்திரிக்க சொன்னார். அவை நாதமாக நம் காது வழியே மூளைக்கு சென்று நாளில் திரும்ப திரும்ப செய்யும் புலம்பல்களை குறைத்து இனிமையான நாளாக அமைக்கும் என்றும் நாதத்தை மற்ற ஆசனங்கள், ப்ராணயமங்களோடு சேர்ந்து செய்யும் பொழுது பலன்கள் அதிகரிக்கும் என்றார்.

அடுத்ததாக ப்ராணனின் சிறப்புகளை விரிவாக தரவுகளுடன் விளக்கி பெருஞ்செயல்களை செய்வதற்கு ப்ராணன் இன்றிமையாதது, மத்திம பயிற்சிகள் அதை பெருக்குவதையே முக்கியமாக முன் வைக்கின்றன, அடுத்த நிலை ப்ராணயாமப் பயிற்சிகளளில் நாதத்தையும் இணைத்து கற்றுத் தந்தார். இதன் முக்கியத்துவத்தால் தான் யாக்ஞவல்கியர் மைத்ரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ப்ராணாயமம் பயிற்சிகளை அளித்துள்ளார். இந்த பயிற்சிகளை அதிக நேரம் செய்வதற்கு ஏற்ற உட்காரும் நிலைகளில் (வஜ்ராசனம், பத்மாசனம், ..)  உட்கார முடியாதவற்களுக்கு அர்த்த தித்தலி ஆசனப்பயிற்சியையும் சொல்லித் தந்தார்.

ப்ராணாயாமப் பயிற்சிகள், உடலில் உள்ள நாடிகள் (இடா, பிங்கலா, ஷுசும்னா), ஆயுர்வேதத்தில் உள்ள ஸ்ரோதஸ், நமது மூளையின் வலது/இடதாக பிரிந்துள்ள அமைப்பு, நாடியின் மூலம் உடல் முழுவதும் ப்ராணன் எடுத்துச்செல்லப்படுவது, நமது உடலின் இயற்கையில் அமைந்துள்ள மூக்கின் இடது/வலது/இரண்டிலும் வந்து/செல்லும் மூச்சு முறை இவற்றில் ஏற்படும் மாற்றங்களால் வரும் சிக்கல்கள், ப்ராணன் இழப்புகளை விளக்கினார். ஆசனம்  மற்றும் ப்ராணாயாமப்பயிற்சிகள் மூலம் இழந்த ப்ராணனை திரும்பப்பெற்று, பெருக்கி நாடி மூலம் உடல் முழுவதும் அனுப்பி, மூளையின் பாதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல்/மன சிக்கல்களை சரிசெய்யும் விதத்தை விரிவாக இணைத்து புரிய வைத்தார்.

காலை வகுப்புகள் முடியும்பொழுது மாலை புதிய பயிற்சியை பற்றி சிறிது கலக்கத்தை ஏற்படுத்தினார். அந்த புதிய பயிற்சி சூர்ய நமஸ்காரம். அதன் வரலாறு, அருமை பெருமைகளை பட்டியலிட்டுவிட்டு செய்யும் முறையை பிரித்து மூன்று சிறு பயிற்சிகளாக விளக்கினார். ஆண் (சோலார்)/பெண்(லூனார்) தன்மையை எவ்வாறு சீராக மாற்றுகிறது என்ற தகவல் மேலும் ஆர்வத்தையும் உடனே செய்யவேண்டும் என்ற தீவிரத்தையும் அதிகப்படுத்தியதுதினமும் 5 முறை சரியாக செய்தால் மற்ற எந்த ஆசனப் பயிற்சியையும் செய்ய வேண்டியதில்லை என்ற இன்ப அதிர்ச்சியை அளித்துவிட்டு, முறையாக செய்வதற்கு சில மாதங்கள் முதல் வருடங்கள் ஆகலாம் என்ற மலைப்பை ஏற்படுத்தி அதுவரை மற்ற பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து உடலையும் மனதையும் தயார் செய்ய ஊக்கப்படுத்தினார். நாங்கள் எல்லோரும் உற்சாகமாக செய்தோம், சில நிலைகளை செய்வதற்கு உடல் ஒத்துழைக்க மறுத்த போதிலும் தொடர்ந்து முயற்சித்தோம். உடல், மூச்சு, இடது/வலது, அடுத்தடுத்த ஆசனங்களை ஞாபகம் வைத்து கொள்வது என பல சவால்கள் இருந்த பொழுதும், பல முறை செய்ய வைத்து செம்மை[யாக] படுத்தினார். பயிற்சி செய்ததின் விளைவுகளை தூங்கி எழுந்த பிறகு அடுத்த நாள் நன்றாக(!) உணர முடிந்தது. இந்த பயிற்சி சம்பந்தமான தகவல்களின் பிரமிப்பு இன்று வரை அகலவில்லை. இன்னும் எழுதிக்கொண்டே செல்லலாம்

இரவு அமர்வாக ப்ரத்யாஹார த்ராடகா பயிற்சி செய்து முடித்தோம்.

மூன்றாவது நாள்

புதிய ப்ராணயாமம் பயிற்சிகள் ஷீதலி, பஸ்திகா ஆகியவற்றின் தேவையை கால நிலை/உடல் நிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து செய்ய சொன்னார்.

சூரிய நமஸ்கார பயிற்சியை மறுபடியும் செய்ய சொல்லி தவறுகளை சுட்டிகாட்டினார். 6 மணி நேரம் காரை ஓட்டி வீட்டிற்கு செல்ல முடியுமா என்று குருஜியை சந்தேகத்தோடு கேட்கும் வரை தொடர்ந்து செய்ய சொன்னார்.

முதல் இரண்டு நாட்கள் கற்றுத் தந்த பயிற்சிகள் எல்லவற்றையும் செய்ய தேவையில்லை என்று விளக்கி செய்ய வேண்டிய பயிற்சிகளை இரண்டு நாட்களாக பிரித்து அட்டவணைப்படுத்தி தந்தார்தேவைப்பட்டால் வசதிக்கேற்ப 2க்கு மேற்பட்ட நாட்களாக பிரித்துக்கொள்ள சொன்னார், உடல் சிக்கல்களை மட்டும் தீர்ந்தால் போதும் என்பவர்கள் தேவையான பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும், அதனால் தான் யோக மரபு இவ்வளவு பயிற்சிகளை உருவாக்கி அளித்திருப்பதாக சொன்னார். சாதகன், ஜிக்ஞாசு, கர்ம சன்யாசம், பூர்ண சன்யாசம் என்ற நிலைகளை விளக்கி ஆன்மீக/தீவிர சாதகர்கள் எல்லாவற்றையும் கண்டிப்பாக செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்

சில புத்தகங்களை பரிந்துரைத்து அவை படிப்பதற்கு மட்டுமே பயிற்சிக்காக அல்ல என்று எச்சரித்தார்.

  • ஹத யோகா ப்ரதீபிகாஸ்வார்த்தா ராமா
  • லைட்ஸ் ஆன் யோகாபி கே ஐயங்கார்
  • ஆசனா ப்ராணாயாமாபி கே ஐயங்கார்
  • ஆசனா ப்ராணாயாமா முத்ரா பந்தாசந்த்யானந்த சரஸ்வதி
  • மரணமின்மை என்னும் மானுடக் கனவுசுனில் கிருஷ்ணன்
  • ஆயுள் ஆயுர்வேதம்மகாதேவன்
  • சரஹ சம்ஹிதைமகாதேவன்.

கடைசியாக அடுத்த வகுப்பு எப்பொழுது என்றவுடன், எப்பொழுது உங்களுடைய மனதின் புலம்பல்கள்/புகார்கள் குறைகின்றனவோ அப்பொழுது நீங்கள் அடுத்த கட்ட வகுப்பிற்கு தயாராகிவிட்டீர்கள் என்று சொல்லி முடித்தார்.

குழு புகைப்படங்கள் எடுத்து முடித்தவுடன் விடைபெற்றோம்.

ஒம் சாந்தி, சாந்தி, சாந்தி.

வணக்கத்துடன்,

திரு

பி.கு

75 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து செய்த முதல் நிலை பயிற்சிகள் உடலளவில் முதுகு தண்டின் இலகுத்தன்மை அதிகமாக்கியிருக்கிறது, நாள் முழுவதும் புத்துனர்ச்சியுடன் இருக்கிறேன்மனதளவில் அமைதியும், தியானம் செய்வதற்கு மேலும் உற்சாகமாகவும் உணர்கிறேன். இரண்டாவது பயிற்சி இந்த அனுபவங்களை மேலும் அதிகமாக்கும் என்று நிச்சயமாக சொல்வேன்.

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு, ஒரு கதை- கடிதம்
அடுத்த கட்டுரைஇராம. சுப்பையா