மேடையுரையும் வாழ்க்கையும்

அன்புள்ள ஆசிரியருக்கு

மேடையுரை பயிற்சியைத் தொடரப்போவதில்லை எனக் கூறியுள்ளீர்கள்

எனக்கு சென்ற வாரம் பதவி உயர்வுக்கான நேர்காணல். ஏழு பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள். மூவர் என்னுடைய துறையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் வெவ்வேறு துறை. என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விஇப்போது பணிபுரியும் இடத்தில் உங்களுடைய இருப்புக்கான அவசியம் அல்லது தேவை என்ன?”. 

மனதிற்குள் கடந்த இரண்டாண்டுகளாக புதிய இடத்தில் செய்த வேலைகளை பட்டியலிட்டேன். பதில் சொல்ல ஆரம்பித்த கணத்தில்  மேடையுரை பயிற்சி ஞாபகத்தில் வந்தது

1. மிகச்சரியான தொடக்கம். Uniqueness / fresh start. 2. நினைவின் ஒழுங்கில் பேசாமல் புறவயமான ஒழுங்கில் பேசுதல். Objective logic , Not memory logic or order of memory. 3. Avoid fillers. 4. அலட்சியமாக பேசாமல் தீவிரமாக பேசுதல். 5. தேவைக்குமேல் நீளமாக பேசாதிருத்தல். 6. ஆரம்பித்த ஒரு நிமிடத்திற்குள் கவனத்தை ஈர்த்தல்

இரண்டு நிமிடத்தில் எனது இரண்டாண்டுகால பணியின் முக்கியத்துவத்தை சொல்லிமுடிக்க வேண்டும். பட்டியலிட்டால் அதில் சுவாரசியம் இருக்காது என எண்ணி நான் இப்படி ஆரம்பித்தேன். ” சார் நான் ஒரு உண்மைக்கதை சொல்லவா?” எழுவரும் சற்று ஆச்சர்யத்துடன் பார்க்க, என் பணியிடத்தில் நடந்த ஒரு  கதையை சொல்லிமுடித்தேன். எங்களுடைய/ என்னுடைய இருப்பின் அவசியத்தை தெளிவாக உணர்த்தியதாக அவர்களுடைய ஏற்பில் இருந்து அறிந்தேன். கதையை முடிக்கும் தருவாயில்தான் தோன்றியது நான் பேசுவது என்னுடைய துறை நிபுணர்களுக்கு புரியும். ஆனால் மற்றவர்களுக்கு?. 

முக்கியமாக பயிற்சியில் நீங்கள் சொல்லியநீங்கள் பேசுவது/சொல்வது உங்களுக்குப் புரியும். ஆனால் அது எதிரிலிருப்பவர்களுக்கும் புரியனும்“. ஆகவே கடைசியில் எல்லாவற்றையும் இணைத்து அனைவருக்கும் புரியும்படி கதையை முடித்துவிட்டேன்

ஆசிரியரே, மேடையுரைப் பயிற்சி மேடையுரைக்கானது மட்டுமாக நாங்கள் கொள்ளவில்லை. சாதாரண தின உரையாடல் தொடங்கி தீவிரமான நேர்காணல் வரை உதவுவது. நீங்கள் கூறியதில் சிலவற்றை மட்டும் மேலே கூறியுள்ளேன். அதை எந்த புத்தகத்திலும் படிக்கலாம். ஆனால் மூன்று நாட்கள் எங்களை பேசவைத்து குறைகளை சுட்டி, சிந்தனைமுறையை மாற்றி பயிற்றுவித்தது முக்கியமானது. சிந்தித்தல் என்னும் செயலை எந்த புத்தகமும் கற்றுத்தர இயலாது. அதை ஒரு மனிதனே கற்பிக்கமுடியும்நன்றி

பேரன்புடன்

தங்கபாண்டியன்

***

அன்புள்ள தங்கபாண்டியன்,

மேடையுரை என்பது மேடையில் சீமான் போல தொடைதட்டி முழங்குவது அல்ல. சீமான் போன்றவர்களுடையது ஓர் எளிய நாடகப்பயிற்சி மட்டுமே. மெய்யான மேடையுரை என்பது சிந்தனைகளை கோவையாக தொகுத்து முன்வைப்பது, கேட்பவர் புரியும்படிச் செய்து அவர்களின் நினைவில் அதை நிறுத்துவது. அதற்கு அப்பால், அதன் உச்சநிலையில்  அது மேடையில் பேசும்போதே கோவையாகச் சிந்திப்பது.

பொதுவாக, நம் மேடைப்பேச்சுக்களின் பிரச்சினை என்னவென்றால் அவை கட்டமைப்பே இல்லாமல் நினைத்து நினைத்து பேசிச்செல்லப்படுபவை என்பதே. அவை ஒரு மாதிரி கோடைமழை மாதிரி பெய்து தீரும். ஆனால் அமைப்பு ஒருமையே இருக்காது.  ஆகவேதான் ”அபாரமான பேச்சு. ஆனா ஒண்ணுமே ஞாபகமில்லை” என்று பெரும்பாலானவர்களின் பேச்சு கேட்பவர்களால் நினைவுகூரப்படுகிறது. நான் கேட்ட சிறந்த உரைகள் மேடையில் ஒரு கலைநிகழ்ச்சி போல நிகழ்பவை– ஆனால் மிகச்சரியான வடிவ ஒருமையும் கொண்டவை.

பெரும்பாலான மேடைப்பேச்சாளர்கள் பெரும்பாலும் ஆண்டுதோறும் ஒரே பேச்சையே நிகழ்த்துபவர்கள். திரும்பத்திரும்ப ஒன்றே பேசப்படும். ஒரே ’டெம்ப்ளேட்’ இருக்கும். அதைவிட அத்தனை பேச்சாளர்களுக்கும் பொதுவாக ஒரே வகையான சொற்றொடர் அமைப்புகளும், ஏற்ற இறக்கங்களும், நாடகீய வெளிப்பாடுகளும், குரல்நடிப்புகளும் இருக்கும். அவை தேய்வழகாக ஆகிச் சலித்துப்போய்விட்டிருக்கும். நான் மதிக்கும் பேச்சாளர்கள் ஒரு முறை பேசியதை திரும்ப பேசுபவர்கள் அல்ல. மேடைகளில் அக்கணம் புதியதாக நிகழ்பவர்கள்.

அந்த வடிவ ஒருமையும் புதுமையும் எங்கிருந்து வருகிறது? அது சிந்தனையில் இருக்கும் கட்டமைப்பின் விளைவு. தனக்கென ஒரு தனித்த சிந்தனை உடையவர்களே நல்ல மேடைப்பேச்சாளர்கள். இரண்டு, அவர்கள் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே இருந்தாகவேண்டும். உள்ளே செல்பவையே சிந்தனைகளாக வளர்ந்து வெளிவருகின்றன.

ஆகவே மேடையுரைக்கு அவசியமானது சிந்தனை. சிந்தனைகளை ஒரு வடிவுக்குள் நிகழ்த்திக்கொள்வதற்கான பயிற்சியே மேடையுரைப் பயிற்சி. குரல், தோரணை, மொழி ஆகியவை அல்ல. அந்த தொழில்நுட்பப் பயிற்சியை நான் அளிப்பதில்லை. நான் அளிப்பது ஒருவர் கூர்மையாகச் சிந்திப்பதற்கும், அச்சிந்தனைகளை கோவையா முன்வைப்பதற்குமான பயிற்சி. அதற்கான சில அடிப்படை வழிமுறைகள். அந்தப் பயிற்சிகள் அபாரமான பயன் தருவதை நான் நிகழ்த்திய இரண்டே இரண்டு அரங்குகளில் பங்கேற்றவர்களின் பேச்சில் உருவாகியிருக்கும் பிரமிக்கத்தக்க மாறுதல் காட்டுகிறது.

மேடையுரைப் பயிற்சி என்பது ‘சொற்பொழிவு’ பயிற்சி அல்ல. மேடையில் குரல்வளை புடைக்க முழக்கமிடுவதற்கான செயல்முறைப்பயிற்சி அல்ல. அது சிந்திப்பதற்கான சில எளிய அடிப்படைகளை கற்றுத்தருவதுதான். நம் உள்ளத்தை நாம் நேரடியாகப் பயிற்றுவிக்க முடியாது. ஏனென்றால் பயிற்றுவிக்கும் ஆசிரியரும் உள்ளம்தான். ஆகவே வெளியே எதையாவது நாம் பயிலவேண்டும். உள்ளம் அதற்கேற்ப மாறிவிடும். உள்ளத்தை ஒருமையாக்க ஜபமாலையை உருட்டுவது அதனால்தான். எழுத, பேச பயில்வதென்பது உள்ளத்தை சிந்தனைக்குப் பயிற்றுவிப்பதே.

இப்பயிற்சி கோவையாகப் பேசுவதற்கு, தனி உரையாடல்களையே திறம்பட நிகழ்த்துவதற்கு மிக இன்றியமையாதது. இருபத்தொராம் நூற்றாண்டின் அடிப்படைத்தேவைகளிலொன்று இது. ஆகவே ஒரு வாழ்க்கைப் பயிற்சி.

இப்பயிற்சிக்கு மிகமிக எளிய சில அடிப்படைகள் உள்ளன. அவற்றை அறியாத காரணத்தால் ஓரளவு வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள்கூட மேடையில் முனகி முனகி, முன்பின் தொடர்பில்லாமல் சொற்றொடர்களை உதிர்த்து படுத்துவதை எல்லா இலக்கியமேடைகளிலும் காண்கிறேன். அல்லது எழுதி வாசிக்கும் கொடுமை. அல்லது மிகையுற்சாகத்துடன் வாயில் தோன்றியதை கட்டுப்பாடில்லாமல், நேரக்கணக்கே இல்லாம,கேட்பவர்களை பற்றிய அக்கறையே இல்லாமல் பொழிந்து தள்ளும் வன்கொடுமை.

ஆகவே இப்பயிற்சி ஓரு நல்ல உதவியாக அவர்களுக்கெல்லாம் இருக்குமென நினைத்தேன். சில லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு கல்விநிலையங்களில் நான் முன்னர் அளித்த பயிற்சி இது. கிட்டத்தட்ட இலவசமாக அளிக்கவும் முன்வந்தேன்.

ஆனால் இத்தகைய பயிற்சியின் தேவை இங்கே உணரப்படவில்லை. பெரும்பாலானவர்கள் மேடையேற தயக்கம் கொண்டவர்கள். அந்தத் தயக்கத்தாலேயே இத்தகைய பயிற்சிக்கும் தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம் இப்பயிற்சியை பெற்றே ஆகவேண்டிய நிலையில் இருக்கும் இளம் எழுத்தாளர்கள் ஏற்கனவே தாங்கள் சொற்பொழிவு நிபுணர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நான் எண்ணிய அளவுக்கு வரவேற்பு இப்பயிற்சிக்கு இல்லை.  தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசா.ஆ.அன்பானந்தன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : வேட்டை கண்ணன்