கள்வன், காதல் – கடிதம்

வணக்கம் ஜெ,

நலம்தானே? உங்கள் பிறந்த நாள் அன்று மலர்த்துளி சிறுகதை தொகுப்பைப் பற்றிய உங்கள் குறிப்பை பார்த்தவுடன் படிக்க ஆர்வம் கொண்டு இன்று படித்து முடித்துவிட்டேன்.

“கொலைசோறு”, இத்தொகுப்பின் முதல் கதை காதலின் உறுதியையும், எப்படி காதல் ஒரு மனிதனை உலகநியதிகளுக்கு அப்பால் தள்ளுகிறது என சிந்திக்க வைத்தது. சிறிது கண்கலங்க வைத்தது. எந்த நொடியில் எவர் மேல் காதல் ஏன் வருகிறது என்ற கேள்வியை சற்று தள்ளிவிட்டு, காதலின் இனிமையை அசைபோட வைத்தது.

“கருவாலி, யமி, பெருங்கை, என்னை ஆள” ஆகிய கதைகள் மயிலிறகால் வருடுவது போன்ற இனிமையானகதைகள்.இவை அனைத்தையும் புன்னகையுடன் வாசித்து முடித்தேன். உங்கள் வர்ணனைகள் காட்சியை கண்முன் கொண்டுவந்தன, அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. கதையின் நேர்த்தன்மை மற்றும் உணர்ச்சிகளின் நுட்மான வெளிப்பாடு இரண்டும் போட்டிபோட்டுக் கொண்டு மனதில் மகிழ்ச்சியை வரவழைத்தன.

காதல் என்பது ஒரு நிமிடம் தோன்றும் உணர்ச்சியா? அல்லது அந்த ஒரு நிமிடத்தை நமக்குள் பல மணிநேரமாக மாற்றி நமது தனிமையை தொலைக்கும் விளையட்டா? எதுவாய் இருந்தால் என்ன இன்னொறு உயிரின் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற உந்தும் காதல் சற்று கடுமையாக இருந்தால் என்ன என்று நினைக்க வைத்த “சுவை” மற்றும் ஆசாரியைபோல் ஒருவர் நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும் என ஏங்கவைத்தது “பரிசு”

காதலை உணர்வதற்கு இருவர் தேவையா, அது என்ன மாற்ற முடியாத விதியா? “மலர்த்துளி” மற்றும் “கேளாச்சங்கீதம்” இந்த இரண்டு கதைகளும் சத்தமாக இக்கேள்விக்கு பதில் அளித்தன. காதல் என்ற உறவில் இருவர் இருந்தாலும் உணர்வு என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட அணுபவம் மட்டுமே. வயதான காதலைப்பேசும் “கல்குருத்து”; “கள்ளத்தனத்தை” பேசும் கள்வன் (கள்ளியும் தான்) என வரிசையாக படித்து வரும்போது கண்ணைக் குளமாக்கியது “ஒரு மிக எளிய காதல்”. இக்கதை புத்தகத்தின் கடைசிக் கதை, உள்ளத்தை உருகவைத்த கதை, காதலின் உண்ணதத்தையும் அதன் அழுத்தத்தையும் உணரவைத்த கதை.

படிமங்கள் இல்லாத உங்கள் கதைத் தொகுப்பைப் படிக்க புதுமையாகத் தான் இருந்து. பல கதைகளில் காதலிக்கும் கதாபாத்திரங்களுக்கு பெயரே இல்லை ஆனாலும் ஒவ்வொருவரும் மிக அணுக்கமாகிவிட்டனர். இத்தொகுப்பை அளித்தமைக்கு நன்றி ஆசானே.

புவனேஸ்வரி

பெங்களூர்

மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க

பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்

முந்தைய கட்டுரைஒரு சொல்லுயிரி தந்த வாசிப்பு அனுபவம் – அமிர்தம் சூர்யா
அடுத்த கட்டுரைவல்லினம், மலேசியாவின் குரல்