அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
ஜனவரி மாதம் நடைபெற்ற மேடையுரை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனுபவத்தை பகிரும் கடிதம். என்னுடைய இரண்டாவது கடிதமிது. “வைணவங்கள்” தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையை நேரில் கேட்டு அதைப் பற்றி என்னுடைய முதல் கடிதத்தை எழுதியிருந்தேன்.
நம்முடைய வலைத்தளத்திலும் அது பிரசரிக்கப்பட்டதின்பால் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன்.
மலைப்பகுதி முகாம் என்றதுமே கல்லூரி மாணவனுக்குரிய உற்சாகம் தொற்றிக் கொண்டது. தங்கள் அருகாமையில் மூன்று நாட்கள் என்பது உற்சாகத்தை பன்மடங்காக்கிற்று. இதை எழுதும் போது கூட அதே உற்சாகம் கொப்பளிக்கிறது.
கல்லூரி வயதையெல்லாம் கடந்து பல்லாண்டு ஆன போதிலும் மீண்டும் மாணவனாய் மூன்று நாட்கள். அதுவும் தங்களை ஆசிரியராக பெற்ற மாணவன் என்பதில் பெருமிதம் தானே கூடுவதை தவிர்க்க முடியவில்லை.
சிறுகதை மற்றும் ஜோக்ஸ் தோன்றிய காலத்தில் ஆரம்பித்தது வகுப்பு. சேவைத்துறை பெருமளவு வளர்ச்சி அடைந்து வரும் காலத்தில் உரை ஆற்ற வேண்டியது கட்டாயம் ஆகிறது. சுவாரசியமில்லாத பேச்சு கேட்பவரை ஓட வைத்து விடும்.
ஏழு நிமிட நேரத்தில் ஒரு உரையை ஆற்றுவது எப்படி? அதன் விதிமுறைகள் என்ன என்பது பற்றிய விளக்க உரை. ஒவ்வொரு விதிக்கும் கதை சொல்லி எப்படி உரையை உருவாக்க வேண்டும் என்று மிகவும் விளக்கமான உரையை அளித்தீர்கள். தங்களின் ஆசிரிய அவதாரம் நேரில் கிடைத்த அனுபவத்தை அப்படியே வார்த்தைகளால் அள்ளி காகிதத்தில் நிரப்ப என்னால் முடியாது.
வெளியே சொன்னால் என்னிடமிருந்து அந்த அனுபவம் விலகிடுமோ என்ற பயத்தில் ரகசியம் காக்கும் பூதமாய் மாறிப் போனேன். அமைதியான மலைப்பகுதியில் வகுப்பு. ஜனவரி மாத குளிர் என எண்ணும் போதே மீண்டும் குளிரென்னை பற்றிக் கொள்கிறது. தங்களின் சிந்தனையும் பேச்சும் தீயாக பரவி வெம்மை கொள்ளச் செய்தது.
உணவு எப்போதுமே எனக்கு பெருந்தொல்லையாக இருக்கும். ஆனால் அங்கே மூன்று வேளையும் அளித்த உணவு சிறப்பாக இருந்தது. அதிகம் சாப்பிட்டு பழக்கம் இல்லாத நிலையிலும் கூட அங்கே நிரம்ப சாப்பிட்டேன். செவிக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் இன்பம் சேர்ந்தது.
இரவு பதினோரு மணி வரை சளைக்காமல் வகுப்பு நடந்ததில் ஆச்சரியம். இரண்டு உரைகள் எல்லோரும் ஆற்றினார்கள். என்னுடைய முதல் உரைக்கு தாங்கள் அளித்த மதிப்பெண் ஏழு. ஒவ்வொருவரும் ஆற்றிய உரையை விமர்சித்து மீண்டும் ஒரு முறை அதை உரையை எப்படி நிகழ்த்தலாம் என்று தாங்கள் உரைத்தது எனக்கு நன்றாக உரைத்தது.
குளிரிரவிலும் உறக்கம் பிடிக்காமல் உரை உருவாக்க முயன்று கொண்டிருந்தேன். தமிழிலக்கியத்தின் அரும்பெரும் படைப்பாளியிடம் பாராட்டு பெற வேண்டும் என ஆசை. இரண்டாம் நாள் மாலை, நான் ஆற்றிய உரைக்கு (“காந்தியல்லாத இந்திய சுதந்திர வரலாறு”) ஒன்பதரை மதிப்பெண் பெற்றேன். கச்சிதமான உரை என்ற உங்கள் பாராட்டும் நிறைவளித்தது.
பலரும் ஆற்றிய உரையும் அதற்கு தங்களின் பதிலுரைகளும், ஒவ்வொரு நிமிடமும் கற்றல் என வகுப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. வகுப்புக்கு இடையே உரையாடல், அதிலும் கல்வியென அகத்தை கல்வியால் நிரப்பி விட்டீர்.
இரண்டாம் நாள் வகுப்பு முடிந்ததும் தங்களின் காலிலிருந்து குருதி வடிந்து மேடையில் சில துளிகள் விழுந்ததை நான் கவனித்து நானும் என்னுடன் பங்குபெற்ற நண்பரும் மணி அண்ணாவிடம் கூறினோம். பிறகு தான் அதைத் தாங்கள் கவனித்தீர்கள். சிறு பதற்றமோ சங்கடமோ முகத்தில் இல்லை. ரத்தம் வர வகுப்பெடுத்தேன் என சிரித்துக் கொண்டே சென்றீர்.
மிக்க நன்றி.
மகிழ்ச்சியுடன்
சு. திருமுருகன்
புதுச்சேரி.