மலம் என்ற ஊடகம் – ஜெயராம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று தளத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த ’குருகு’வில் ஜெயராமின் ’மலம் என்னும் ஊடகம்’ கட்டுரை வாசித்தேன். எனக்கு முன்பே உங்கள் தளத்தை வாசித்துவிடும் சரண் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ’’ஜெயராம் அண்ணா ஊடகங்களை மலம்னெல்லாம் சொல்லி என்னவோ எழுதியிருக்காங்க’’ என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். மலம் என்னும் சொல்லையே அச்சில் கூட அவ்வளவாக பார்க்காததால் தலைப்பே புரிய சற்று நேரமாகிறது.
மிக சிறப்பான வித்தியாசமான கட்டுரை. சரணிடம் மாலை கட்டுரை குறித்து விரிவாக பேசப் போகையில் ’அய்யே’ என்றான்.
பல ஆண்டுகளுக்கு முன்பு படுகர் இனத்தவளான என் நெருங்கிய தோழி ராஜியின் வீட்டில் ஊட்டியில் இருக்கையில் அதிகாலையில் அவளது அப்பாவின் உருளைக்கிழங்கு விளையும் வயலில் ஒரு லாரி முழுக்க மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதை பார்த்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது. அதை என்னால் மறக்கவே முடியவில்லை இன்று வரை உருளைக்கிழங்கும் உண்பதில்லை. ஊட்டியில் கேரட் பீட்ரூட்டுக்கெல்லாம் கூட அதை போடுகிறார்கள் என்றாலும் நான் கண்ணில் பார்த்துவிட்டதால் உருளைகிழங்கு ஒவ்வாமை வந்துவிட்டிருக்கிறது.
பின்னர் இதுகுறித்து வாசித்தேன். இரவுகளில் குடியிருப்பு பகுதிகளில் செப்டிக் டேங்க்’களிலிருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளில் லாரி டேங்கின் மேற்புறம் மண்ணைக்கொட்டி மறைத்து இருள் விலகாதபோதே வயல்களில் உரமாக போட்டுவிடுவதால் அந்த மனித கழிவு உரத்துக்கு night soil என்றே பெயர்.
இப்போது கழிவுகளை சேகரித்து மட்க செய்து உரமாக்குகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அப்படியே untreated மனிதகழிவுகளும் உரமாக உபயோகத்தில் தான் இருக்கிறது அவற்றில் இருக்கும் நோய்க்கிருமிகள் காய்கறிகளின் தோலில் மறைந்து தங்கியிருக்கும் வாய்ப்புகள் மிக் அதிகம்.
மனிதகழிவுகளை பண்டைய பல நாகரீகங்களில் இப்படி உரமாக உபயோகித்திருக்கிறார்கள்.
ஏதென்ஸ் நகரில் மாபெரும் ஏரிபோன்று மனித கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை விவசாய நிலங்களுக்கு கால்வாய்களில் அனுப்பப்பட்டன.
அப்படியே சீனா ஹாங்காங் சிங்கப்பூரிலும் முன்பு இப்படி மனித கழிவுகளை மட்கச் செய்யாமல் பயிர் சாகுபடியில் உரமாக பயன்படுத்த பட்டது.
ஜப்பானில் மனித கழிவுகளை உலரச்செய்து மலையாக குவித்து வைத்துக்கூட உரமாக விற்பனை செய்யப்பட்டது.
ஜப்பனிய அடுக்ககங்களின் உரிமையாளர்களுக்கு இந்த உர விற்பனை ஒரு கூடுதல் வருமானமாக இருந்தது.
அதிலும் சத்தான உணவை சாப்பிடும் செல்வந்தர்கள் வாழும் அடுக்ககங்களில் கழிவுகள் விலை உயர்ந்தாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செயற்கை உரங்கள் புழக்கத்தில் வந்த பிறகு தான் இந்த கழிவு உரங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்தது. உலகமெங்கிலும் இப்போது 1% மட்டுமே பயன்பட்டில் இருக்கின்றன.
மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் இப்படி மனிதக்கழிவுகளை உரமாக்குவது பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்டெக் பழங்குடியினர் மணலையும் மனிதக்கழிவுகளையும் கொண்டு chinampas என்னும் செவ்வக மணல் மேடுகளை உருவாக்கி அவற்றில் பயிர்ச்சாகுபடி செய்து 7 முறை ஒரே பயிரில் அறுவடை செய்துவந்தார்கள்.
நவீன ஜப்பானில் இன்றும் மனிதகழிவுகளை சேகரித்து உரமாகும் வழக்கம் இருக்கிறது.
மலம் இப்போது மருத்துவத்துறையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. நுண்ணுயிரியல் துறையில் Fecal microbiota transplantation (FMT) என்னும் ஒரு புதிய சிகிச்சை முறை இப்போது வெற்றிகரமாக பலரை குணமாக்கிக்கொண்டு இருக்கிறது
நம் அனைவரின் உடலிலும் உடலுக்குள்ளும் நுண்ணுயிரிகள் பல இருக்கின்றன. அவற்றில் குடற்பகுதியில் இருப்பவற்றில் பல நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நாம் எப்போதாவது ஆன்டிபயாடிக்குகள் எடுத்துக்கொள்ளுகையில் அவை பெனிசிலின் போல உடலின் மொத்த நுண்ணுயிரிகளையும் அழிக்கும் அகலக்கற்றை நுண்ணுயிரெதிர்ப்பியானால் நமக்கு மீண்டும் குடல் பகுதியில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் குழாம் அமைய சிறிது நாட்கள் பிடிக்கும். அவை இருந்தால் மட்டுமே ஜீரணம் சரியாக நடக்கும்
இந்த FMT எனப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒருவரின் மலக் கரைசலை, நோயுற்ற குறிப்பாக செரிமானக் கோளாறு குடல் தொடர்பான தீவிர சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளின் குடலுக்குளேயே செலுத்தி அவரது குடலில் அந்த நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வளர்த்து நோயாளியை குணப்படுத்தும் ஒரு சிகிச்சைமுறை.
இந்த முறையில் உடல்பருமன், இரைப்பை மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பல உடல்நிலைகள் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.
4 ம் நூற்றாண்டில் சீன மருத்துவர் Ge Hong இந்த மலமாற்று சிகிச்சையை பல வயிற்றுக்கோளாறுகளுக்கு முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார்.
1958ல் சோதனைமுயற்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட இந்த மலமாற்ற சிகிச்சையான FMT கடந்த பத்தாண்டுகளில் உலகெங்குமே பல வகையான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.
மற்ற சிகிச்சைகள் பயனளிக்காத போது நோயாளிக்கு இந்த மல சிகிச்சை குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லி அவர் சம்மதத்தின் பேரிலேயே இதை செய்யவேண்டும் என FDA அனுமதியளிதிருக்கிறது.
இந்த மலசிகிச்சையில் புற்றுநோய்க்கும் ஆட்டிஸத்துகும் கூட சிகிச்சையளிக்கும் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன பல நாடுகளில் விந்து வங்கி ரத்த வங்கி இருப்பதைபோல் ஆரோக்கியமான மல டோனர்கள் மல வங்கி என்றழைக்கபப்டும் வங்கிகளில் பெயரை பதிவு செய்துகொண்டு காத்திருக்கிறார்கள் மல மாத்திரைகள் கூட சிகிச்சையில் பயன்பாட்டில் இருக்கிறது.
நான் சிறுமியாக இருக்கையில் என் தாத்தா வீட்டில் கழிப்பறை பக்கெட்டுகளை எடுத்துச்சென்று சுத்தம் செய்து மீண்டும் அதே இடத்தில் வைக்கவென்றே குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தமக்கள் இருந்தார்கள் அவர்களுடன், அவர்களின் குழந்தைகளுடன் கலந்து பழக எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
அவர்களுக்கென்று தனித்த கொப்பரை காபியும் அந்நாட்களில் தயராகும். காலம் மாறி இப்போது மலக்கரைசலை வயிற்றுக்குள் செலுத்திக்கொண்டு உயிர்பிழைக்கிறோம் சாதி மத பாகுபாடேதுமின்றி.
பன்னிரு படைக்களத்தில் ரம்ப கரம்பர்களின் நோயைகுறித்த அத்தியாயத்தில் சபரர் ’’நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.” என்பார் அப்படி நோய்களுக்கு தாவர, ஜங்கம, தாது. நுண்ணுயிரி மருந்துகள் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது மலத்திலிருக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது
அன்புடன்
லோகமாதேவி
https://www.livescience.com/61044-poop-pills-effective-cdiff.html
https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/fecal-transplant