இமையம், தலித் இலக்கியம் பற்றி மீண்டும்…
இமையம் சொல்லும் அவதூறு…
எண்ணியதுபோலத்தான். ‘நீ அப்படித்தான் சொல்வாய். ஏனென்றால் உன் சாதி அது. உன் அரசியல் அது. உன்னால் வேறுமாதிரி பார்க்கமுடியாது. உங்கள் அளவுகோல்களை எங்கள் மேல் போடவேண்டாம்’ என்றவகை வசைகள் வந்துவிட்டன.
இத்தகைய விவாதங்கள் நிகழும்போது ஒவ்வொரு முறையும் சொல்லப்படுவதுதான் இது. இலக்கியம் அல்லது கலை பற்றிய அறிதலே இல்லாத அரசியலாளர்களும், அவர்களை தொழுது பின்செல்லும் முதிராப்படைபபளிகளும் சொல்வது அது. அதை இவ்வாறு சுருக்கிக் கொள்ளலாம். ‘புறவயமான அழகியல் பார்வை இருக்கமுடியாது. வாசிப்பவரின் சாதி, வாசிப்பவரின் அரசியல் சார்ந்துதான் அது முடிவாகிறது’
ஒரே ஒரு இலக்கியப்படைப்பை உளமொன்றிப் படித்த எவருக்கும் இது எந்த அளவுக்கு அபத்தமானது என்று தெரியும். தெரியாதவர்களிடம் விவாதிக்கவே முடியாது. இலக்கியம் மானுடர் உருவாக்கியுள்ள சாதி, மதம், இனம், மொழி, நிலம், வட்டாரம், பால் சார்ந்த எல்லா அடையாளங்களையும் கடக்கும். மொழி வழியாகவே அது ஆசிரியனின் உள்ளம் வாசகனைச் சென்றடையச் செய்யும். அப்படி நிகழ்ந்தால்தான் அது இலக்கியம்.
வாசகனின் ஆழுளத்துடன் உரையாடும் வல்லமை இலக்கியத்திற்கு உண்டு. அந்த வல்லமை இலக்கியத்திற்கு உள்ளது என்பதனால்தான் இலக்கியமென்னும் செயல்பாடு இன்றுவரை மானுடக்குலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நான் பலமுறை சொன்னது இது. ஆர்ட்டிக் எஸ்கிமோ மக்களின் வாழ்க்கையை யூரி பலாயன் எழுதினால், ஆப்ரிக்க மக்களின் வாழ்க்கையை பென் ஓக்ரி எழுதினால் நான் அந்த வாழ்க்கையை வாழமுடியும். அதுவே இலக்கியம்.
அவ்வாறல்ல, இலக்கியம் அவரவர் அரசியலால் மட்டுமே வாசிக்கப்பட முடியும் என ஒருவர் உண்மையில் நம்பினால் அவர் எழுதவேண்டியதே இல்லை. அரசியல் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தால்போதும். அவர் என்னதான் எழுதினாலும் அதில் அவரவர் அரசியலே படிக்கப்படுமென்றால் அவர் புனைவு எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கவேண்டும்?
இலக்கியத்தை இலக்கியமறிந்தோரிடம் மட்டுமே விவாதிக்க முடியும். அரசியலாளர்களுக்கு அது அரசியல் மட்டுமே . வம்பர்களுக்கு அது வம்பு மட்டுமே. அவர்களின் கூச்சல்களை என்றுமே இலக்கியம் பொருட்படுத்தியதுமில்லை.
இலக்கியத்தின் வழி மூளையூடாக அல்ல. அது உணர்வுகள் வழியாக, கனவுகள் வழியாக தொடர்புறுத்துகிறது. அது வெளியே நின்று ஆராய்ந்தறியும் பார்வையை கோரவில்லை. புனைவுக்குள் புகுந்து தன்னையும் அக்களத்தில் அக்கதைமாந்தருடன் வாழச்செய்யும் கற்பனையை வாசகனிடம் கோருகிறது. அழகியல்விமர்சனம் என்பது அப்படி வாழச்செய்கிறதா அந்த புனைவு என்று பார்ப்பது மட்டுமே