இமையம், தலித் இலக்கியம் பற்றி மீண்டும்…

வணக்கம்,

சில நாட்களுக்கு முன்பு இமையம் தன்னை தலித் எழுத்தாளர் என்று அழைக்க கூடாது என்றார். இப்போது தலித் இலக்கியம் பற்றி பேசப் போகிறார்.

இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற பிரிவு அவசியம்தானா? அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இராஜீவ்

இமையம் சொல்லும் அவதூறு…

அன்புள்ள இராஜீவ்,

இமையம் அதில் தன்னைத்தவிர மற்றவர்களெல்லாம் தலித் இலக்கியவாதிகள் என முத்திரையடிக்கப்போகிறாரோ என்னவோ?

(தெளிவத்தை ஜோசப் தலித் எழுத்தாளர் என்று எவருமே இதுவரை சொன்னதில்லை. பலருக்கு இப்போதுதான் அவருடைய சாதியே தெரிந்திருக்கும். அந்த அடையாளத்தை முழுமையாக ஏற்க மறுத்தவர் அவர். அதை மட்டுமேனும் இமையம் சுட்டிக்காட்டலாம் என எதிர்பார்க்கிறேன்)

என்னை குற்றம்சாட்டிய இமையத்தின் பேச்சு என்பது ஓர் அரசியல்நாடகம். அவருடைய படைப்புகளின் மொழியாக்கங்கள் எல்லாமே தலித் அடையாளம் கொண்டுதான் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் தன்னை தலித் எழுத்தாளர் என சொல்லிக்கொண்டு பல அரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

அவர் எவருக்கோ தன்னை ஒரு வகையில் காட்ட விரும்புகிறார். அதற்கான இலக்காக என்னை எடுத்துக்கொண்டு வசை. அவருக்கு அவர் நினைத்தது அமையட்டும்.

*

இந்த விவாதங்களில் ஒன்று கவனித்தேன். பலர்  ‘தலித் பின்னணி கொண்ட எழுத்தாளகளை தலித் இலக்கியவாதிகள் என்று சிலர் முத்திரை குத்தி ஒதுக்குகிறார்கள்’ என்று குமுறியிருந்தனர். இமையமும் இப்போது அவ்வப்போது அப்படி சொல்கிறார்..

தமிழகத்தில் தலித் இலக்கியம் என்ற வகைப்பாட்டை உருவாக்கியவர்கள் ’பிற’ எழுத்தாளர்கள் அல்ல. அது முழுக்க முழுக்க தலித் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. 1980 களில் குஜராத்திலும், மராட்டியத்திலும், பின்னர் கர்நாடகத்திலும் தலித் இலக்கிய அலை உருவானது. அங்கே உருவான தலித் அரசியலின் ஒரு பகுதியாக அது பிறந்தது. அதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் அமைந்தது. தலித் என்ற பெயர் அவர்கள் தங்களுக்குச் சூட்டிக்கொண்டது.

பல முக்கியமான படைப்பாளிகள் அந்த வரிசையில் உருவாகி வந்தார்கள். அவர்களில் பலருடைய எழுத்துக்கு தலித் வாழ்க்கையைப் பதிவுசெய்தார்கள் என்னும் ஆவண மதிப்பு மட்டுமே உண்டு. ஆனால் அவர்களில் தேவனூரு மகாதேவா (கன்னடம்) ஒரு மகத்தான இந்தியப் படைப்பாளி. எந்த பெரும் படைப்பாளியையும் போல தனக்கான மொழியுலகை உருவாக்கிக்கொண்ட மேதை அவர்.

அப்படி ஒரு தலித் இலக்கிய இயக்கம் தமிழிலும் உருவாகவேண்டும் என்ற அறைகூவல் தொடர்ச்சியாக சில கோட்பாடாளர்களால் முன்வைக்கப்பட்டது. ராஜ் கௌதமன், ரவிக்குமார் இருவரும்தான் தமிழகத்தில் தலித் இலக்கியம் என ஒன்று உருவாகவேண்டும் என குரல் கொடுத்த முன்னோடிகள். அவர்கள் எழுதிய பல நூல்கள் வாசிக்கக்கிடைக்கின்றன.

தலித் இலக்கியம் என தனியாக ஒன்று உருவாக வேண்டும் என்பதற்கு முன்னோடிகளான அவர்கள் சொன்ன காரணங்கள் கீழ்க்கண்டவை

அ. தலித் இலக்கியம் பிறப்பால் தலித்துக்கள் எழுதுவது

ஆ. தலித் வாழ்க்கையின் அக உண்மையை தலித்துக்களே எழுதமுடியும். ஆகவே சமூகப்பதிவாக தலித் இலக்கியம் உருவாகவேண்டும்.

இ. தலித் மக்களுக்கு முற்றிலும் தனித்துவம் கொண்ட மொழியும் பண்பாடும் உள்ளது. அவர்கள் அதிலேயே பிறந்து வளர்ந்தவர்களாதலால் அவர்களே அதை எழுதமுடியும்.

இந்த அறைகூவலை ஒட்டி தமிழில் உருவான இலக்கிய அலையே தலித் இலக்கியம். அது தன்னியல்பாக தனக்கான அழகியலாக இயல்புவாதத்தை கண்டுகொண்டது. அதில் முக்கியமான படைப்பாளிகள் உருவானார்கள்.

இவ்வண்ணம் ஒரு புதிய அலை உருவாகும்போது அதன்மேல் வாசகர் கவனம் குவிகிறது. அந்த கவனக்குவிப்பை இந்தப் புதிய படைப்பாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். அந்த கவனத்தை தாங்களும் பெறுவதற்காக தலித் அல்லாத சிலர் தங்களையும் தலித் என சொல்லிக்கொண்டு, உண்மை வெளிப்பட்டதும் ‘நான் உணர்வால் தலித்’ என சமாளித்ததுண்டு.

தலித் இலக்கியவாதிகள் என்று அவர்களை எவரும் ‘முத்திரை’ குத்தவில்லை. அவர்களே தங்கள் எழுத்துக்கு இட்ட பெயர் அது. அவர்கள் கோரிய தனிக்கவனம் அது. தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் சீற்றம்கொண்டு அவர்கள் ‘ஒரிஜினல்’ தலித்துக்கள் அல்ல என்றும் எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் நேர்மாறாக சுந்தர ராமசாமியோ, வெங்கட் சாமிநாதனோ, நானோ எங்கள் அழகியல் கொள்கைகளின் அடிப்படையிலேயே எல்லா எழுத்துக்களையும் போல அவர்களையும் பார்த்தோம். வடிவம், மொழி, படிமக்கோப்பு, வாழ்க்கையுடனான தொடர்பு, உள்ளார்ந்த தரிசனம் ஆகியவையே எங்கள் அளவுகோல்கள். முற்போக்கு, தலித், பெண்ணியம் போன்ற ‘லேபிள்’களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை அளவுகோலாகக் கொள்ளவுமில்லை.

அந்த அடையாளங்கள் அந்தப் படைப்பின் சமூகவியலையோ, அரசியலையோ புரிந்து கொள்ள ஓர் எல்லைவரை உதவலாம். ஆனால் இலக்கியப்படைப்பு சமூகவியல், அரசியல் பேசுபொருட்களால் நிலைகொள்வதில்லை. கலைத்தன்மையால்தான் நிலைகொள்கிறது. தலித்தியமோ பெண்ணியமோ பேசியதனால் மட்டுமே ஒரு படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது ஆகிவிடாது. அதன் அழகியல்கூறுகளே அதை இலக்கியமாக்குகின்றன.

இவ்வாறு சொன்னதன் பொருட்டு சுந்தர ராமசாமியும் நானும் கடுமையாக வசைபாடப்பட்டிருக்கிறோம். தலித் இலக்கியத்தின் இருப்பை அங்கீகரிக்க மறுக்கிறோம் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ’தலித் வாழ்க்கை என்றல்ல எந்த வாழ்க்கையும் எழுதப்படவேண்டியதே, எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம்’ என நான் பதிலளித்திருக்கிறேன்

வேதனை என்னவென்றால் இப்போது அதே எழுத்தாளர்கள் ’எங்களை தலித் எழுத்தாளர்கள் என்று சொல்கிறார்கள், அடையாளப்படுத்தி ஒதுக்கிறார்கள்’ என்று கூவுகிறார்கள். அவர்களே இன்னொரு பக்கம் இதேபோல தலித் இலக்கிய அரங்குகளை ஒருங்கிணைக்கிறார்கள். தலித் இலக்கியவாதியாக தங்களை மேடைகளில் முன்னிறுத்துகிறார்கள்.

என்ன உளச்சிக்கல் இது? மிக எளிது. தொடர்ச்சியாக ஒரு victim play யை இமையம் போன்றவர்கள்  செய்தாகவேண்டியிருக்கிறது. தாங்கள் ஒடுக்கப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த எழுத்தாளர்கள் அங்கீகாரங்களைப் பெறும் வழி. எத்தனை ஏற்புகள், விருதுகள் அமைந்தாலும் இமையம் போன்றவர்களின் உள்ளம் நிறைவடைவதில்லை. அது எழுத்தாளர்களின் சொந்த உளச்சிக்கல்.

தமிழில் தலித் வாழ்க்கை இன்னமும் கூட ஒடுக்கப்பட்டதாக, ஒதுக்கப்பட்டதாகவே உள்ளது. இன்னமும்கூட அரசியல், சமூக அதிகாரம் தலித்துகளுக்கு அமையவில்லை. உடனடியாக அதற்கான வழிகளும் தென்படவில்லை. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் தலித் பின்னணி கொண்ட எழுத்தாளர்கள் எவரும் எந்நிலையிலும் ஒதுக்கப்பட்டதில்லை. மாறாக, கூடுதல் கவனமும் மரியாதையும் விருதுகளுமே அவர்களுக்குக் கிடைத்துள்ளன.

இமையத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய நாவல்களை தமிழின் முதன்மைப் பதிப்பகமான க்ரியா வெளியிட்டது. என்.சிவராமன் போன்ற தலைசிறந்த எடிட்டர்கள் அதை மேம்படுத்தினர். அவருடைய முதல்நாவலுக்கே சுந்தர ராமசாமி மிக நீளமான மதிப்புரை எழுதினார் – வேறு எவரைப்பற்றியும் அவர் அப்படி எழுதியதில்லை. இமையத்தின் படைப்புகள்தான் தமிழில் இருந்து முதல்முறையாக ஆங்கிலத்திற்குச் சென்றவை.  மேலும் முப்பதாண்டுகள் கழித்தே என்னுடைய ஒரு நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இமையம் தமிழில் ஓர் எழுத்தாளர் அடையத்தக்க அத்தனை விருதுகளையும் பெற்றுவிட்டார். ஞானபீடம் மட்டுமே மிச்சம்.

ஆனாலும் அவர் அந்த ‘அய்யய்யோ ஒடுக்குகிறார்களே’ என்ற கோஷத்தை அவர் தொடர்ந்து போடவேண்டியிருக்கிறது. தமிழில் இமையத்தைவிட தீவிரமான படைப்புகள் பலவற்றை எழுதிய ’மாஸ்டர்’ எனத்தக்கோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர் அடைந்த ஏற்புகளில் நூறிலொன்றாவது அமைந்துள்ளதா? பல முன்னோடிகளுக்கு அவர்கள் அடையும் ஒரே விருதே விஷ்ணுபுரம் விருதாகவே உள்ளது.

ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். யுவன் சந்திரசேகர் தமிழின் மாபெரும் படைப்பாளி என்று சொன்னால் எவரும் மறுக்கப்போவதில்லை.   அவர் எழுத வந்து நாற்பது ஆண்டுகளாகின்றன. இன்றுவரை அவருக்கு கிடைத்த விருதுகள் என்ன? ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்றே ஒன்றுகூட இல்லை. பிராமணர் என்பதனாலேயே அவர் ஒதுக்கப்படுகிறார் என்பதே அப்பட்டமான உண்மை. ஆனால் தன் கலையையும் காலத்தையும் நம்பி நிலைகொள்ளும் கலைஞனுக்குரிய நிமிர்வு அவருக்கு உள்ளது.

*

தலித் இலக்கியம் என்னும் இந்த அடையாளம் தேவையா? ஓர் அமைப்பாக, ஓர் இயக்கமாக தலித் படைப்பாளிகள் திரள்வது சரியா?

தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், மார்க்ஸிய இலக்கியம் போன்றவை சமூகவியல் -அரசியல் அடையாளங்கள். அறிவியல்புனைவு, வரலாற்றுப் புனைவு, மானுடவியல் புனைவு போன்றவை உள்ளடக்கம் சார்ந்த அடையாளங்கள். இந்த எந்த அடையாளமும் ஒருவகையில் உதவியானதே. ஒரு குறிப்பிட்ட வகையான பேசுபொருள் மேல் கவனத்தை ஈர்க்கவும், தீவிரமான உரையாடல் வழியாக ஒருவரை ஒருவர் செறிவாக்கிக் கொள்ளவும் அவை உதவும்.

உலகம் முழுக்க இவ்வாறு பல இலக்கிய இயக்கங்கள் தோன்றி, பங்களிப்பாற்றியிள்ளன. கன்னட இலக்கியத்தில் நவ்யா, தலித் -பண்டாயா என்னும் இரு இலக்கிய இயக்கங்கள் உண்டு. நவ்யா என்றால் நவீனத்துவ இலக்கிய இயக்கம். அது அழகியல் சார்ந்தது. தலித் இலக்கிய இயக்கம் அரசியல் -சமூகவியல் சார்ந்தது. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கான பங்களிப்பை ஆற்றியுள்ளன.

கேரளத்தில் இன்று ‘கோத்ர கவிதா’ என்னும் இயக்கம் உள்ளது. பழங்குடி மக்கள் தங்கள் தனிமொழியில் கவிதைகளை எழுதுகிறார்கள். (அதற்கான ஓர் அரங்கையே நாங்கள் கூட்டியிருக்கிறோம் ) அந்த மொழி மலையாளம் அல்ல. தமிழும் அல்ல. அதில் கவிதைகளும் புனைவுகளும் எழுதப்படுகின்றன.பி.ராமன் அவற்றை ஒருங்கிணைக்கிறார்.

அதைப்போல ஓர் இயக்கம் தமிழில் வரவேண்டும். இருளர், பளியர், சோளகர் போன்றவர்கள் தங்கள் பேச்சுமொழியில், தாங்கள் அறிந்த உலகை எழுதவேண்டும். சோளகர்களுக்கு செடிகளைப் பற்றி இருக்கும் பிரமிப்பூட்டும் அறிவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களின் இலக்கியம் வருமென்றால் தமிழிலக்கியத்தின் முகமே மாறிவிடும்.

அதேபோல தமிழில் ஓர் இலக்கிய இயக்கமாக உருவாகவேண்டியது அறிவியல் புனைவு. அரூ இதழ் அதற்கான சில முயற்சிகளை எடுத்தது. அது வெற்றிபெறவில்லை. ஓர் இயக்கமாக அது நிகழ்ந்தால் மட்டுமே அதில் பலவகையான எழுத்தாளர்கள் இணைவார்கள். அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களிடையே உரையாடல் நிகழும். அவ்வகையில் எல்லா இலக்கிய இயக்கங்களும் நல்ல பங்களிப்பை அளிப்பவை. ஆகவே வானம் அமைப்பின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று. இது தொடரவேண்டும்.

ஆனால் எந்த இலக்கிய இயக்கமும் இலக்கியத்தை அறுதியாக அடையாளப்படுத்திவிட முடியாது. வெறுமே அடையாளங்களைத் தான் அளிக்கிறதென்றால் அந்த இலக்கிய இயக்கத்திற்குப் பொருளுமில்லை. உதாரணமாக, ஒரு கதையை ‘அறிவியல் புனைவு’ என்று சொல்வது ஒரு வசதிக்காகவே. அது அந்தப்படைப்பின் முழுமையான அடையாளம் அல்ல. அப்படி நினைத்தால் நாம் அதன் இலக்கியத் தகுதியை காணமுடியாமலாகும்.

தொடர்ச்சியாக இந்த விஷயத்தை எழுதியிருக்கிறேன். உதாரணமாக ஐசக் அஸிமோவின் ’அமைதியான மாலைப்பொழுதில்’, உர்சுலா லெ குவின் எழுதிய ’ஓமெல்லாஸை விட்டு போகிறவர்கள்’ போன்ற கதைகளை எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்து சொல்புதிது இதழில் வெளியிட்டோம். அதை அறிவியல் புனைகதை என்றுதான் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அந்தக் கதைகளின் அழகு அவை அறிவியலைப் பேசுகின்றன என்பதனால் அல்ல. அவற்றின் வடிவம், அவற்றில் வெளிப்படும் வாழ்க்கைத் தரிசனம் ஆகியவற்றால்தான். அதுவே எல்லாக் கதைகளுக்கும் எப்போதுமுள்ள அளவுகோல்.

இலக்கிய இயக்கங்களுடன், அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் எழுத்தாளர்கள் அவை அளிப்பது ஒரு புறச்சூழலை மட்டுமே என புரிந்துகொள்ளவேண்டும். அவற்றின் பகுதியாக தங்களை உணர்ந்தால் அது பேரிழப்பு. வாசகர்கள் அந்த இயக்கங்களும் அமைப்புகளும் இலக்கியப்படைப்புக்கான களங்களையும் வாய்ப்புகளையும் மட்டுமே அளிக்கின்றன என்றும், அவை இலக்கியத்தை அறுதியாக வரையறைசெய்ய முடியாது என்றும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன் உருவாக்கக் காட்சிகள்
அடுத்த கட்டுரைமுரண்களின் தொகை – சுப்ரமண்ய ராஜு புனைவுலகம்- ரம்யா