2004 ஆகஸ்டில் நான் இளையராஜாவை முதன்முதலாக லோகிததாஸுடன் சென்று சந்தித்தேன். கஸ்தூரிமான் படத்தில் பாடல்களுக்காக. லோகிததாஸ் அப்போதுதான் அந்தப்படத்தை தொடங்கியிருந்தார். சொல்லப்போனால் அப்போது அவர் தயாரிப்பதாகவே இல்லை. சும்மா ஒரு சந்திப்பு அது.
இப்போது சொன்னால் சிலருக்கு ஒருவகை அதிகப்பிரசங்கித்தனமாக தெரியலாம், இருக்கட்டும். நான் அவரை முதன்முதலில் பார்த்ததுமே எண்ணியது ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற ஜெயகாந்தனின் தலைப்பைத்தான். நான் அதுவரை பலரை நேரில் சந்தித்திருக்கிறேன். மேதைகள், பெரும்சாதனையாளர்கள் என அறியப்பட்டவர்கள். ஆனால் பற்றி எரியும் செயலூக்கம் என நான் என்னுள் உணர்ந்த ஒன்றை அவர்களிடம் காணவில்லை. அல்லது நான் காணும்போது அவர்கள் அனைந்துவிட்டிருந்தனர். ராஜா ஒரு பிழம்பாகத் தெரிந்தார்.
ராஜா வேலைபார்ப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு அவரே ஆர்மோனியம் வாசித்தபடி பன்னிரண்டு மெட்டுகளை பாடி அனுப்பினார். அதில் லோகித்தாஸ் தேர்ந்தெடுத்தவற்றை உடனே பாடலாக ஆக்கினார். பாட்டுக்கு நோட் எழுதுவது, கலைஞர்களை பயிற்றுவிப்பது, ஒலிப்பதிவு எல்லா இடத்திலும் அவர் விளையாடுகிறரா வேலைபார்க்கிறாரா என்றே தெரியாது. முற்றிலும் தன்னை மறந்து மூழ்கியிருந்தார். அப்படித்தான் நான் எழுதும்போது இருந்தேன், இன்றும்.
ஆச்சரியமாக லோகித்தாஸ் என்னை அறிமுகம் செய்யும்போது “உங்களைப்போல ஒருவர்” என்று மலையாளத்தில் சொன்னார். ராஜா சிரித்து “நல்லது, அப்டியே இருங்க” என என்னிடம் மலையாளத்திலேயே பேசலானார். என் ஊர், என் மலையாள வேர் ஆகியவற்றை பற்றி விசாரித்தார். நான் பத்மநாபபுரம் குலசேகரம் பற்றியெல்லாம் அவரிடம் சொன்னேன். அவர் அங்கெல்லாம் தன் அண்ணனின் இசைக்குழுவுடன் வந்திருந்தார்.
அவர் இல்லாதபோது இளையராஜாவின் நூலகத்திற்குள் சென்றேன். அங்கே அவர் எவரையுமே விடுவதில்லை என உதவியாளர்கள் பதறினர். திட்டுவாரென்றால் திட்டட்டும் என நான் சொன்னேன். ஆனால் ராஜா வந்ததுமே அவருடைய அரிய நூல்களை, சித்தர் பாடல் தொகுப்புகளை எடுத்து எனக்குக் காட்ட ஆரம்பித்தார். சித்தர் பாடல்களைப் பற்றி அன்று பேசினோம்.
அதன்பின் நான் கடவுள். அதன் இசையமைப்பின்போது நண்பர், இயக்குநர் சுகா இருந்தார். சுகாவுடன் பலமுறை ராஜாவைச் சந்தித்திருக்கிறேன். கோவிட்டுக்குப் பின் சந்திக்கவில்லை.
இந்தக் காணொளி பழைய நினைவுகளை கொப்பளிக்கச் செய்கிறது. சினிமாவின் முதன்மை சிறப்பே அது நினைவுகளின் மாபெரும் பெட்டகம் என்பதுதான்.