மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க
ஒரு மெல்லிய புன்னகையுடன் படித்து முடித்துவிடக்கூடிய கதைகள்தான் சிறுகதைகளில் எனக்கு நினைவில் நீடிப்பவை. பல கடுமையான கதைகள் மறந்துவிடுகின்றன. இந்தக் கதைகள் மறப்பதில்லை. பொதுவாக யோசிக்க வைக்கும் சிறுகதைகள், சிடுக்கான சிறுகதைகள், பாவலா கொண்ட சிறுகதைகளை நான் விரும்புவதில்லை. சிறுகதை என்பது அவற்றுக்கான வடிவம் இல்லை என நினைக்கிறேன்.
சிறுகதை ஒரு சின்னஞ்சிறிய கிடுக்கி மாதிரி. பொன்வேலை செய்பவர்கள் வைத்திருப்பார்கள். அல்லது கண்ணிலே சர்ஜரி செய்வதற்கான கத்தி மாதிரி. அவ்வளவு நுட்பமாகச் செய்யவேண்டும். அதை பயன்படுத்தி எழுதிய கதைகளே எனக்கு பிடித்தமானவை. அப்படி எனக்குப்பிடித்த கதாசிரியர்களின் ஒரு பட்டியலே உள்ளது. ஹெமிங்வே, சரோயன், எடித் வார்ட்டன் எனறு பலபேர்.
நீங்கள் எழுதிய கதைகளில் எனக்குப்பிடித்தவை அனலுக்கு மேல், தவளையும் இளவரசனும் போன்ற வித்தியாசமான காதல்கதைகள். புதிய புதிய இடங்களில் ஆணும் பெண்ணும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்களின் மனங்கள் ஒன்றாக தொட்டுக்கொள்கின்றன. நான் காமத்தை எழுதுவதை அவ்வளவாக விரும்புவதில்லை. அது ஜூவனைல் ரீடிங் மெட்டீரியல். அதை கடந்துவிட்டேன். இன்று இந்த மாயம்தான் மனசுக்கு உகந்ததாக இருக்கிறது. பன்னிரு காதல்கதைகள் புத்தகம் ஒரு நல்ல தொகுதியாக இருக்குமென நினைக்கிறேன். நன்றி
ஜே.ஆர். ஸ்ரீரங்கன்
*
அன்புள்ள ஜெ,
பன்னிரு காதல்கதைகளின் அட்டை சிறப்பானது. எளிமையான ஒரு படம். ஆனால் அந்தக்கால் கவர்ச்சிகரமானது. ஒரு சிற்பத்தின் கால் போல. அவ்வளவு ஆபரணங்கள். நம் சிற்பங்களில் தான் கால்களில் இவ்வளவு நகையா என்ற திகைப்பு ஏற்படும். அந்த அட்டை அக்கதைகளைப் பற்றிய பலவகையான எண்ணங்களை அளிக்கிறது. காதல் என்றால் கால் விரல் நுனி வரை பூத்து குலுங்குவதுதானா? பொன்னாகப்பூக்கும் ஒரு பருவம் இல்லையா?
எஸ்.மோகன்