கலை அசலும் நகலும்

ஆசிரியருக்கு ,

கோனார், நான் மற்றும் அரங்கா அடங்கிய உங்களை சந்திக்க வந்த எங்கள் ஆந்திரப் பயணத்தில் அமராவதி சென்றோம்.  உள் நுணுக்கங்கள் உள்ள அழகிய புடைப்புச் சிற்பங்கள், செந்நிற சலவைக்கல்லினால் செதுக்கப் பட்டவை, கவனமான உள்விளிம்புகள் என பலவற்றைக் கண்டு பல மணித்துளிகள் அசைவற்று நின்றோம் , பல கோணங்களில் படமெடுத்தோம் , ஒருவருக்கொருவர் அதை மெச்சினோம்.  அருங்காட்சியகத்தின் அலுவலர் வந்தார் , பக்கத்து அறையில்தான் அசல் சிற்பங்கள் இருப்பதாக சொன்னார் .

அப்போது தான் அறிந்தோம் அது இந்தியாவில் பல இடங்களில் கிடைத்த  பல்வேறு சிற்பங்களின்  புகைப் படத்தை அடிப்படையாக வைத்து மெல்லிய  சிவப்பு வண்ணம் கலந்த ‘plaster of paris’ இல் செய்த மாதிரிகள் என. ஆனால் தத்ரூபமானவை.  அதுவரை நாங்கள் அடைந்ததது ஒரு அபாரமான ரசனையை. அதன் பின் மெல்ல ஒரு மன விலகல் , ஏமாந்த உணர்வு.  ஆனால் அதுவரை நாங்கள் அடைந்த ரசனை அசலானது .

இதே தான் ஜென் கவிதைகளைப் போலி செய்த தமிழ்க் கவிதைகளில் நிகழும் என நினைக்கிறேன். பாவனையான படைப்புகளிலும், அசலை அறிவிக்காத மொழி பெயர்த்து எடுத்த படைப்புகளிலும் நிகழும்.  திருமணக் கூடத்தில் முலாம் பூசிய அழகிய நகைகளுடன் வரும் பெண்ணை , எவ்வாறு அசல் நகைகளுடன் வரும் பெண்ணுடன் பொருத்துவது. இருவரும் சம அளவில் கவர்கிறார்களே,

எனவே நான் அடைவது அசலான ரசனை கணங்கள் என்றால் , போலியைக் கண்டறிய வேண்டிய ஆவின்  அவசியம் ஒரு ரசிகனுக்கோ , இலக்கிய வாசகனுக்கோ என்ன அவசியம். அவ்வாறு கண்டறியப் பட்டபின் நிகழும் வித்தியாசம் என்ன ?

கிருஷ்ணன்.

[மோனாலிசா நகல்]
கிருஷ்ணன்,

முதலில் உங்கள் ஒப்பீட்டில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டுகிறேன். அசலான ஜென் கவிதைகளைத் தழுவி எழுதப்படும் போலி ஜென்கவிதைகளை எப்படி ஒரு கலைப்படைப்பின் நகலுடன் ஒப்பிட முடியும்?  போலி வேறு நகல் வேறு.  நகல் என்பது உண்மையின் ஒரு பிரதி. போலி என்பது கீழான வடிவம்.  அந்த ஜென் கவிதையை தமிழில் மொழியாக்கம்செய்து படிப்பதுடன் வேண்டுமானால் நீங்கள் சொல்வதை ஒப்பிடலாம்.

எனக்கும் இந்த அனுபவம் உருவானதுண்டு. சிலசமயம் மேலைநாட்டு ஓவியக்கூடங்களில் அபூர்வமான ஓவியங்களைப் பார்ப்போம். ஆனால் அவை துல்லியமான நகல்கள் எனக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். முதலில் வரும் பரவசம் சட்டென்று வடியும். ஆனால் உடனே தோன்றும், கலைவடிவமென்ற அளவில் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?

அதையே யோசித்துப்பாருங்கள் குளோட் மோனே, வின்செண்ட் வான்கா போன்றவர்களின் ஓவியங்கள் மேல் பெருமதிப்புள்ள ஓவியர்கள் உலகமெங்கும் உண்டு. அவர்களில் எத்தனைபேர் அவற்றின் அசல்களைக் கண்டிருப்பார்கள்? அசலைக் கண்டாகவேண்டுமென எவர் சொன்னது? கலையனுபவம் அசலில் இருந்து மட்டுமே உருவாகும் நகல் அளிப்பது இரண்டாம்பட்ச அனுபவம் என எவரால் வரையறுக்கமுடியும்?

இன்னொன்றும் சொல்லப்படுகிறது, இன்று உலக அருங்காட்சியகங்களில் உள்ள முக்கியமான பல கலைப்பொருட்கள் உண்மையில் வெளியே தெரியாத நகல்களே. அசல்களை மிகப்பாதுகாப்பாக பெட்டகங்களில் வைத்திருக்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம், அதனாலென்ன?

அப்படியானால் அசலில் ஒன்றுமே இல்லையா? இருக்கிறது. ஒரு பொருளைக் கலையாக்குவது என்ன என்று முன்னர் ஒருமுறை எழுதியிருந்தேன். ஒரு பொருள் கலைப்படைப்பாவது அது தன்னை ஒரு குறியீடாக ஆக்கிக்கொள்ளும்போதுதான். அது பல்வேறு விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக ஆகிறது, நம் கற்பனையை விரிக்கிறது. அதுவே அது அளிக்கும் கலையனுபவம்.

அந்தப்பொருள் ஒரு கலைப்படைப்பாக இருக்கையில் அக்கலைஞன் அதற்கு அளிக்கும் குறியீட்டுத்தன்மைகளுடன் மேலதிகமாக ஒரு குறியீட்டுத்தன்மை இணைந்துகொள்கிறது. அதன் வரலாற்றுத்தன்மை என அதைச் சொல்லலாம். உதாரணமாக மோனாலிசா ஓவியத்தில் டாவின்சியின் வண்ணத்தேர்வு, அந்த திரையில் அவர் உருவாக்கியிருக்கும் வடிவங்கள் ஆகியவை ஒரு குறியீட்டுப்புலத்தை உருவாக்குகின்றன. அந்த குறியீட்டுப்புலம் நம் கற்பனையைத் தீண்டி விரிக்கும்போதே நமக்கு அது கலையனுபவத்தை அளிக்கிறது.

கூடவே அதன் வரலாற்றுத்தன்மை அதற்கு இன்னொரு குறியீட்டுப் புலத்தை அளிக்கிறது. அந்த ஓவியத்தின் தொன்மை, டாவின்சி அதைத் தொட்டு வரைந்திருப்பார் என்ற யதார்த்தம், அதன் அந்தக்காலக் கித்தான், அந்தக்கால வண்ணப்பூச்சு, விரிசல்கள்… அவையும் நம் கற்பனையை விரிக்கின்றன. இந்த வரலாற்றுத்தன்மையும் ஒரு பொருளை கலைப்பொருளாக ஆக்கக்கூடும். பெரும்பாலான தொல்பொருட்கள் கலைப்படைப்பாகக் கருதப்படுவது அவற்றின் வரலாற்றுத்தன்மையால்தான்.

நீங்கள் ஓர் அசலைப் பார்க்கையில் கலையனுபவம் இரு தளங்களில் இருந்தும் கிடைக்கிறது. அது நகல் என தெரிந்ததும் வரலாற்றுத்தன்மை இல்லாமலாகிவிடுகிறது.  ஆகவே கலையனுபவத்தில் ஓர் இழப்பு ஏற்பட்டுவிடுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைவெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம்
அடுத்த கட்டுரைவேதம் இந்துஞானத்தின் முதல்நூலா?