தனுஷ்கோடியும் முற்போக்கு எழுத்தும்

அன்புள்ள ஜெ,
ஆரம்பத் தொண்ணூறுகளில் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு -“சேதாரம்” என்று நினைக்கிறேன் – படித்த நினைவு.

அதில் முதல் சிறுகதை “அன்புள்ள”, ஒரு கிராமத்துப் பெண் அந்த வாரம் வந்து போன அத்தானுக்குக் (சங்கர நாராயணன்?) கடிதம் எழுத ஆரம்பித்து “அன்புள்ள” என்று ஆரம்பித்து மேலும் எழுத வராது…பின் அந்த முழுநாள் நடப்பு சொல்லப்படும், அந்தக் குடும்ப ஏழ்மையும் காரணங்களும் கூடவே சேரும். பெண்ணிற்கு அடுத்த வார்த்தை துவங்கத்தயக்கம்…கடிதம் தொடரவே செய்யாது…அடுத்த நாள் அத்தானிடமிருந்து கடிதம் வந்துவிடும் “அன்புள்ள” என்று ஆரம்பித்து!

தொகுப்பு முழுவதும் சிவகாசி, சாத்தூர் சுற்றிய கந்தக வாசனை வீசும் கதைகள்… பள்ளிச்செல்ல வேண்டிய குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் தாயார்கள்…இன்னொரு சிறுகதையில் ஒரு சிறுவனை அம்மா பின்மாலையில் கிழிந்த நோட்டைக்கொடுத்து எண்ணையோ என்னவோ வாங்கிவரச்சொல்வாள், கூட மிட்டாய் போனஸ்…பையன் வழி இருட்டு பயத்தில் நோட்டை இறுக்கினதில் அது நன்கு கிழிந்து நாடார் எண்ணையும் மிட்டாயும் மறுத்துவிடுவார்.

சிறுவன் எப்படித்திரும்ப இருட்டையும் அம்மாவையும் எதிர்கொள்ளப்போகிறான் என்று திகைத்தது நினைவிற்கு வருகிறது.அப்புறம் “சீதை”, “சேதாரம்”…ரோஷக்கார இளம்பெண்கள்’’…அப்புறம் நான் இவர் எழுத்துகளைப் படித்த மாதிரி நினைவில்லை, அதாவது நான் தொடரவில்லை.

இன்று திடீரென்று நினைவிற்கு வந்தது.தங்கள் தளத்தில் இவர் எழுத்துக்களைப்பற்றி எதுவும் குறிப்பிட்டிருந்தீர்களா என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் சிக்கவில்லை…
இவர் எழுத்துக்களைப்பற்றி தங்கள் அபிப்ராயம் என்ன ஜெ?

ESSEX சிவா

சிவா,

தனுஷ்கோடிராமசாமியை நான் நன்றாகவே அறிவேன், எழுத்தாளராக, இனியநண்பராக. தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராக இருந்தார். தனிவாழ்க்கையில் அவரைப்போன்ற கள்ளமற்ற அன்பே உருவான நிறைந்த மனிதர்களை மிக அபூர்வமாகவே நம்மால் சந்திக்கமுடியும். உற்சாகமான உரையாடல்காரர். அவரது சிரிப்பு பொங்கிப்பெருகக்கூடியது

தனுஷ்கோடி ராமசாமி  இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சித் தொழிற்சங்கத்தில் பணியாற்றியவர்.  தமிழ்நாடு கலையிலக்கியப்பெருமன்றத்தைச்  சேர்ந்தவர். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு இலக்கியவாதிகளில் ஒருவர். பலநல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 24.11.05 அன்று மரணமடைந்தார்.

தமிழக முற்போக்கு எழுத்தில் இரண்டு வகைமாதிரிகளைக் காணலாம். ஒன்று கி.ராஜநாராயணன் பாணி. இன்னொன்று சு.சமுத்திரம் பாணி. [சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்ற ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்கள் வேறு வகை] நுட்பமான இயற்கை,கதாபாத்திரச்சித்தரிப்பும் நகைச்சுவையும் உடையவை கி.ரா பாணி எழுத்துக்கள். அவை மிகவும் குறைவும்கூட. முக்கியமான வாரிசு என லட்சுமணப்பெருமாளைச் சொல்லலாம். அவரும் விருதுநகர்க்காரர்தான்.

சு.சமுத்திரம் பாணி,உணர்ச்சிகரமான நேரடியான வாழ்க்கைச்சித்தரிப்பு கொண்டது. அடர்வண்ணங்களால் ஆனது. அதற்கு நிறைய வாரிசுகள். தனுஷ்கோடிராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.

ஓர் ஆரம்ப நிலை வாசகனை இவர்களின் கதைகள் மிகவும் கவரும்.  நாம் வாசித்துப்பழகிய வணிக இலக்கியத்துக்கு மாற்றாக அன்றாட யதார்த்தத்தை நேர்மையாக வைக்கும் கதைகள் அவை. தனுஷ்கோடி முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர். நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சாத்தூர் என்ற வறண்ட நிலச்சூழலை எழுத்தில் கொண்டுவந்தவர்.எண்பதுகளில் விகடனில் இவர் எழுதிய கஸ்பா என்ற கதை [காவல்நிலையக் கொடுமை பற்றியது] பிரபலமாகியது. அப்போது பரவலாக அறியப்பட்டார்.

ஆனால் சுயமான தேடல், வாழ்க்கை நோக்கு என்பதற்குப்பதிலாக கட்சியும் சித்தாந்தமும் கற்பித்த வாழ்க்கைப் பார்வையே இவ்வகை எழுத்துக்களில் வெளிப்படுகிறது என்பது மெல்லமெல்லத் தெரியும். ஒருகட்டத்தில் இக்கதைகளின் ரகசியங்கள் பிடிபட்டு சலிப்பு உருவாகிவிடும். அதாவது சுஜாதா பாலகுமாரன் ஒன்றாம் வகுப்பு என்றால் இவர்கள் இரண்டாம் வகுப்பு. அவர்களையும் தாண்டியே அடுத்த கட்ட வாசிப்புக்கு வந்தாகவேண்டும். உண்மையில் அப்படி முறையாகக் கடந்து வருவது நல்லதும்கூட

இந்த முற்போக்கு எழுத்தாளர்கள்  சிறுகதைகளில் தப்பித்துக்கொள்வார்கள். அதன் அமைப்பு இவர்களுக்குக் கைகொடுக்கும். ஒரு வாழ்க்கைத்தருணம், ஒரு மன எழுச்சி சிறுகதையை நிலைநாட்டிவிடும். ஆனால் நாவல் எழுதும்போது மாட்டிக்கொள்வார்கள். நாவலுக்குத்தேவை சுயமான வாழ்க்கை நோக்கு. அதற்குப்பதில் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக உருவகம் வெளிப்பட ஆரம்பிக்கும். விளைவாக  உண்மையான  உணர்ச்சிகளுக்குப்பதிலாக செயற்கையான ரெடிமேட் உணர்ச்சிகள் வெளிவரும்.அங்கே நாவல் சூம்பிவிடும். மிகச்சிறந்த உதாரணம் தனுஷ்கோடி ராமசாமியின் ‘தோழர்’ என்ற நாவல்.

இன்னொன்று, இவர்களின் சித்தாந்தச்சார்புக்கு ஆதாரமாக இருக்கும் உணர்வு,உண்மையான மனிதாபிமானம். தனுஷ்கோடி ராமசாமியை நான் நன்கறிவேன். தூய மனிதாபிமானி அவர். அதற்காகவே அவர் களப்போராளியாகவும் இருந்தார். அந்த உணர்ச்சியின் தீவிரமே அவர்களை ஒற்றைப்படையானவர்களாக ஆக்குகிறது. வாழ்க்கையின் சிக்கல்களை, உணர்ச்சிகளின் மாறுபட்ட தளங்களைப்பார்க்க அவர்களால் முடிவதில்லை.  அந்த ஒற்றை உணர்ச்சி சிறுகதைகளுக்குச் சரியாக வரும், நாவலை வெளிறச்செய்துவிடும்.

அத்துடன் அந்த ஒற்றையுணர்வெழுச்சி அவர்களை வேறு நுட்பங்களற்றதாகச் செய்துவிடுகிறது. குறிப்பாக விவரணைகள் தட்டையாகின்றன.  இயற்கையின் தோற்றங்களைக் காட்ட முடிந்த முற்போக்குநாவல் ஒன்றுகூட இல்லை —  ஒரே சுமாரான விதிவிலக்கு கு.சின்னப்பபாரதியின் தாகம் என்ற நாவல். மனிதர்கள்கூட எளிய ஒற்றைப்படைச்சித்தரிப்பால் காட்டப்படுகிறார்கள். ஏன் இவர்கள் நன்கறிந்த வட்டாரவழக்கேகூட அதன் அழகையும் தளுக்கையும் நுட்பங்களையும் காட்டுவதில்லை. காரணம் ஒரே உணர்ச்சியை மட்டுமே பிரதிபலிப்பவையாகச் சொற்கள் மாறிவிடுகின்றன என்பதே.

கடைசியாக, கோட்பாட்டால் சமைத்தளிக்கப்பட்ட சமூகநோக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சட்டகத்தை அளித்துவிடுவதனால் கதையும் கதைமாந்தரும் எல்லாருமே புதுமையை இழந்துவிடுகிறார்கள். என்ன நடக்குமென ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. ஒரு நாவலை வாசித்துமுடிக்கும்போது கிடைக்கவேண்டியவை நமக்குக் கிடைப்பதில்லை. அந்த ஏமாற்றம் வழியாக நாம் இவர்களைக் கடந்து வருகிறோம். மேலும் நுட்பமான வாசிப்புக்கு வந்துசேர்கிறோம்.

ஆனாலும், இலக்கியம் என்பது என்றென்றும் இலட்சியவாதத்துடன் இணைந்தே இருக்கும் என்ற நம்பிக்கை கொண்ட என்னைப்போன்றவர்களுக்கு முற்போக்கு எழுத்து தவிர்க்கக்கூடியது அல்ல. தனுஷ்கோடி ராமசாமி போன்ற இலட்சிவாதிகள் இலக்கியத்தின் மதிப்பை எப்படியோ மேலே கொண்டுசெல்கிறார்கள்.

ஜெ

[ குழும உரையாடலில்]


தனுஷ்கோடி அஞ்சலி-மாதவராஜ்

முந்தைய கட்டுரைபத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்
அடுத்த கட்டுரைவெறுப்பின் ஊற்றுமுகம்- இரு கடிதங்கள்