இலக்கியத்தில் கொள்பவை

அன்புள்ள ஜெ

“வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும் ஆம் அது அவ்வாறேயிருக்கும்”

தீவிர மனச்சிதறல்களின் உச்சமாக விபத்தில் சிக்கி முகத்தில் அறுவை சிகிச்சை செய்த அவ்விரவு தற்கொலை எண்ணங்கள் தலைதூக்க கண்டிப்பாக எதாவதொரு வழி கிடைக்குமென அழுத்தமாக அவ்விரவை கடந்து பின் தேட ஆரம்பித்தபோது உங்களை அடைந்தேன். உங்கள் படைப்பின் ஒரு பக்கத்தில் மேலிருந்த அவ்வரிகளின் தரிசனம் கிடைக்கப்பெற்றது. அவ்வரிகள் என்னை தூய்மையாக்கி எழச் செய்தன. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் படைப்புகளில் நீங்கள் எனக்காக ஏதேனும் பக்கங்களை வைத்திருப்பீர்கள் அதை பற்றிக்கொண்டு எப்படியாவது நான் இங்கு பூரணமானதொரு வாழ்வை வாழ்ந்து விடுவேன் என தீவிரமாக வாசித்து கொண்டிருக்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் புதிய உயிராக பிறந்து இறந்து மீண்டும் அடுத்த நாளின் ஒளியில் பூவென பூக்கிறேன். இவையனைத்தும் நீங்கள் செய்ததே, மாயக் கிணறுகளிலும் வயல் புதையல்களிலும் நம்பிக்கை வந்துள்ளது, இனி சிறுமைகளுக்கு இடமேயில்லை உச்சம் அடைவதே ஒரே நோக்கமென பயணித்துக் கொண்டு பயணத்தை கணத்துக்கு கணம் ரசித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தந்தையின் ஞானம் கிடைக்காதது குறித்து எத்தனையோ  இரவுகளில் அழது தீர்த்திருக்கிறேன், அக்குறையும் நீங்கியது உங்களால். இவையனைத்திற்கும் நன்றி நன்றி ஆசிரியரே. இனிய அகவை தின வாழ்த்துகள்

சக்திவாசா

*

அன்புள்ள சக்திவாசா

இங்கு ஒவ்வொரு கணமும் வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அது வெறுமே திகழ்வது மட்டுமல்ல. இங்குள்ள ஒவ்வொருவரும் செயலாற்றவே வந்துள்ளனர். செயல்வழியாகவே நிகழ்கின்றனர், வளர்கின்றனர், கடந்துசெல்கிறனர். செயல்களம் ஒன்றை கண்டடைக.

ஜெ

*

அன்புள்ள ஆசிரியருக்கு

2011 முதல் என நினைக்கிறேன், வழக்கம் போல அனல் காற்று இணையதளத்தின் ஊடே வாசிக்க (ஒரு குட்டி நோக்கியா கீ-பேட் ஃபோனில்) வாசித்து உங்கள் தளத்திற்கு வந்திருந்தேன். பின் இருக்கும் எல்லா கட்டுரைகளையும் வாசித்துக்கொண்டே இருந்தேன். மூன்று ஆண்டுகள் இருக்கலாம். என் வாசிப்பு திறன் மிக குறைவாகவே இருந்தது. உள்வாங்கும் திறனும் அவ்வளவு தான் இருந்திருக்க கூடும். பின் உங்கள் நூல்கள் ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கி கொற்றவை மற்றும் வெள்ளையானை தவிர அனைத்து புனைவுகளும் படித்திருப்பேன். மிக சமீபமாக உங்களை படிப்பதை முற்றிலும் விட்டு விட்டேன். கிட்டத்தட்ட வெறுக்கிறேன் என சொல்லலாம். காரணம் என் பலவீனம் தான். முதல் முறை கோமல் சுவாமிநாதன் (அறம் தொகுப்பில்) உள்ள சிறுகதையை படித்து எனக்கு அப்போது கிட்னி ஸ்டோன் இருந்தது (குஜராத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்) நோயை பற்றிய பெரும் கற்பனைகளை நானே உருவாக்கி அந்த வேலையை விட்டு வர முயன்றேன்.

பெரிய திறமைகள் ஏதும் இல்லாமல் சிறிதளவு வாசிப்பு மட்டும் வைத்துக்கொண்டு மலையளவு ஈகோவை வளர்த்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன். அதை உணர பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. காரணத்தை ஆராய்ந்த போது உங்கள் ஆளுமையின் செல்வாக்கு என்னில் குறுகலான வாசிப்பினால் நிகழ்ந்து இருக்கலாம் என தோன்றியது. (உங்கள் ஆபாரமான வாசிப்பும் உழைப்பும் திறனும் இன்றி வெறும், (உங்கள் சொற்களில் சொல்வதென்றால் அகங்காரம் மட்டும்) பெரும் லௌகீக சிக்கலை எனக்கு  தோற்றுவித்துகொண்டு இருந்திருக்கிறது. இவையெல்லாம் என்னுடைய தவறுகள் தான். என்னுடைய பலவீனம் தான். உணர வெகு நாட்கள் ஆகிவிட்டது. நோயை பற்றிய என் பயமும், வெவ்வேறு ஆளுமை சிதைவுகளும் நானே உருவாக்கி கொண்டது தான் என்றாலும் என் பெர்சனல் வாழ்வு பெரும் வலிகள் கொண்டதாக நானே மாற்றிக்கொண்டேன்.

விளைவாகவே 40 களின் அருகில் உள்ள நான் முடிவெடுத்தேன் “இனி வாசிப்பே வேண்டாம், மிச்சம் உள்ள வாழ்வை எளிமையாக ஈகோ இன்றி எல்லோரையும் போல வாழ்ந்து கடப்போம்”. இந்த கடிதம் தனிமையில் உங்கள் பிறந்த நாள் என்பதால் எழுதுகிறேன். நீங்கள் என்னுள் வெறும் ஈகோவை மட்டும் விதைக்கவில்லை, உங்களிடம் கற்றுக்கொண்டதை விவரிக்க இக்கடிதத்தில் இயலவில்லை. இந்த உணர்தல் நிகழ்ந்த தருணத்தையும் கூறி முடித்துக்கொள்கிறேன்.

சமீபத்தில் அருணாச்சல பிரதேச பயணத்தில் ஓரிடத்தில் சொல்லியிருப்பீர்கள் “நான் நன்றாக உறங்கும் காரணத்தால் தான் இந்த வயதிலும் நன்றாக ஓட முடிகிறது” அதை எனக்கே உரிய பலவீனத்தால் (நான் இரவு ஷிப்ட் பார்ப்பவன், கூடவே மன ஒருமையும், அமைதியும் இல்லாதவன், அதன் காரணம் போதுமான உறக்கம் இல்லாதவன்) நோயைப்பற்றிய ஆரோக்கியத்தை பற்றிய பயத்தை ஊதி பெருக்கி கொண்டேன். அதை உணர்ந்து மீள இரண்டு மாதம் ஆகியது.

அதன் பின் தான் தீர்மானித்தேன் இலக்கியம் வாசிப்பு மிக எளிதாக என்னில் செல்வாக்கை நிகழ்த்துகிறது எனவே இவையேதும் வேண்டாம், அமைதியான எளிமையான வாழ்வு, நல்ல உறக்கம் இவையே அவசியம்

உங்களுக்கு சில முறை எழுதியிருக்கிறேன், அவை உங்கள் ஸ்பெமில் இருக்கக்கூடும். இக்கடிதமும் அவ்வாறே ஆகும் என விழைகிறேன்.

*

அன்புள்ள அ

எனக்கு இரண்டு வகை கடிதங்கள் வருகின்றன. என் எழுத்துக்களில் இருந்து ஊக்கமும் நம்பிக்கையும் பெற்றவர்கள் எழுதுவது. இன்னொரு வகை என் எழுத்துக்களில் இருந்து தாழ்வுணர்ச்சியை, அல்லது பொய்யான நம்பிக்கையை அடைந்தவர்கள் எழுதுவது. இரண்டாம் வகை கடிதங்கள், நீங்கள் எழுதிய இக்கடிதம்போல, ஆண்டுக்கு ஒன்றிரண்டு உண்டு.

இவ்விரண்டும் அல்லாத ஒருவகை உண்டு, நான் முன்வைக்கும் அறிவியக்கப்பரப்பைக் காண்கையில் அச்சம் கொண்டு, உடனே ஆணவம் சீண்டப்பட்டு எழுதுபவர்கள்.

இவை மூன்றுக்குமே நான் பொறுப்பல்ல. நான் வழிகாட்டல்களை எழுதுவதில்லை. ஆலோசனை சொல்வதுமில்லை. நான் எழுதுவது என் வாழ்க்கையை, என் அனுபவ உலகை. நான் வாழும் அறிவுலகை முன்வைக்கிறேன். அதிலிருந்து ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கும் உளநிலைக்கும் ஏற்ப எடுத்துக்கொள்கிறார்கள்.

இதை இத்தனை தீவிரமாக முன்வைப்பதற்கான காரணம் ஒன்றே. தமிழ்ச்சூழலில் இப்படி இலக்கியம், கலை, தத்துவம் சார்ந்த ஓர் உலகம் வேறெங்கும் முன்வைக்கப்படுவதில்லை. எல்லா இடத்திலும் இலக்கியம் என்றபெயரில் முன்வைக்கப்படுவது உண்மையில் அரசியல்தான். அரசியலுக்கு ஆள் திரட்டுவதற்கு இலக்கியம் கருவியாக்கப்படுகிறது (அவர்களுக்கு மற்றவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் என்று மட்டுமே எண்ணவும் முடியும்)

தமிழ்ச்சூழலில் ஓர் இளைஞன் இயல்பாக இலக்கியத்தை, கலையை, தத்துவத்தை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. கல்விக்கூடங்களில் ஓர் எழுத்தாளர், ஒரு நூல் பெயர் உச்சரிக்கப்படுவது அரிதினும் அரிது. வெளியே பொதுச்சூழலில் பிழைப்புக்கு அப்பால், கேளிக்கைக்கு அப்பால் எதுவுமே பேசப்படாது. ஆகவே முப்பது வயது வரை இலக்கியம், கலை, தத்துவம் சார்ந்து ஓர் உலகம் இருக்கிறதென்பதையே அறியாமல் வாழ்ந்து அதன்பின் அறிமுகம் கிடைப்பவர்களே இங்கே மிகுதி.

அவர்களுக்கு ஓர் அறிவியக்க அறிமுகத்தை அளிப்பதே என் நோக்கம். இணையம் ஒரு பெரிய வசதி. இது இலவசம். பகிர எளிது. ஆகவே எப்படியும் ஆர்வமுள்ள ஒருவரை ஒருமுறையேனும் சென்று தொட்டுவிடும். ஆயிரத்தில் ஒருவருக்கே மெய்யான ஆர்வமிருக்கும். எஞ்சியவர்களுக்கு ஆர்வமிருக்காது. சிலருக்கு எளிய வம்புகள் மட்டுமே கவர்வனவாக இருக்கும்.

ஆகவே இணையத்தில் ஒரு தொடர் உரையாடலாக இதை இருபதாண்டுகளாக நிகழ்த்தி வருகிறேன். அது பல ஆயிரம் பேருக்கு அறிமுகமாகப் பயன்பட்டுமுள்ளது. இதை ஒருவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பது அவருடைய சொந்தப்பிரச்சினை.

உதாரணமாக, அதீத தாழ்வுணர்ச்சி கொண்ட ஒருவர் இந்த தளத்தின் வழியாக அறிவியக்கம் சார்ந்த அறிமுகம் பெறும்போது மலைப்புற்று, தாழ்வுணர்ச்சி மிகுந்து, இது தனக்கு அப்பாலுள்ள ஓர் உலகம் என நினைக்கக்கூடும். ஆகவே இதை நிராகரிக்கும் மனநிலைக்கும் செல்லக்கூடும்.

அதேபோல எதுவும் பெரிதாக தெரியாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வலம்வரும் ஓர் இளைஞர் இந்த சூழலுக்குள் நுழைந்து இங்கே அவருடைய உள்ளீடற்ற தன்னம்பிக்கைக்கு இடமே இல்லை, அது வெறும் அறிவின்மையாகவே பார்க்கப்படும் என அறிந்து சீண்டப்படலாம்.

இளைஞர்களில் சிலர், தங்கள் உலகியல் சோம்பலையோ செயலின்மையையோ நியாயப்படுத்திக் கொள்ள அறிவுஜீவிப் பாவனையை சூடிக்கொள்கிறார்கள். குடி முதலிய போதைகளுக்கு அடிமையானவர்களும் அறிவுஜீவியாக நடிப்பதுண்டு. அது வெறும் தப்பித்தல் அன்றி வேறேதுமல்ல. அவர்கள் சோம்பேறிகளும் போதையடிமைகளும் மட்டும்தானே அன்றி அறிவுஜீவிகள் அல்ல.

அறிவுசார்ந்த செயல்பாடுகள் சோம்பேறித்தனத்தால் இயல்வன அல்ல. தீவிரமான, அர்ப்பணிப்புள்ள தொடர் செயல்பாடுகள் வழியாக அமைபவை. மனிதவரலாறு முழுக்க அபப்டித்தான் இருந்துள்ளது, இனியும் அப்படித்தான். அறிவைத்தேடி பல்லாயிரம் காதம் நடந்து தேசங்களைக் கடந்து சென்றவர்களின் வரலாறாலானது மானுட அறிவியக்கம்.

இன்றைய அறிவியக்கம் என்பது மிகமிக சிக்கலானதும் உலகம் தழுவியதுமாகும். அது விழிப்புற்ற மூளையால் மட்டுமே சற்றேனும் தொடரச் சாத்தியமானது. எந்தவகையான உடல்சார்ந்த போதையும் அறிவியக்கத்திற்கு தகுதியற்றவர்களாக நம்மை ஆக்கிவிடும். உணவின்மீது கொள்ளும்போதைகூட. நவீன மருந்துகள் கூட.

போதையடிமைகள் தொடர்ச்சியாக, பல ஆண்டுகள் உழைத்து பயில முடியாது. கற்பனவற்றை நினைவில் நிறுத்தி தொடர்ச்சியை பேணிக்கொண்டு ஓர் அகக்கட்டுமானத்தை உருவாக்கிக்கொள்ளவும் முடியாது. அவர்களுடைய அறிவு உதிரிவரிகளின், உதிரிக்கருத்துக்களின் சிதைவுற்ற தொகுப்பாகவே இருக்கும். எல்லா வகையிலும் பயனற்றது அது. பொருளற்ற ஒரு சிடுக்கு. அறிவுப் பாவனைக்காக மட்டுமே உதவுவது.

நான் பேசவிரும்புவது அறிவுத்தேடல் கொண்ட, அறிவுக்காக தன்னை அளிக்கும் மனநிலைகொண்ட, அதற்கான அறிவுத்தகுதி கொண்ட ஒரு சாராரிடம் மட்டுமே. அவர்களிடம் அறிவியக்கத்தை அறிமுகம் செய்கிறேன். அதில் செயல்பட வழிகாட்டுகிறேன்.  என் அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அடிப்படை அறிவுத்தகுதி அற்ற ஒருவர் என்னை தற்செயலாகக் கண்டடைந்து வாசிக்கக்கூடும். அடிப்படையில் சோம்பல் கொண்ட ஒருவர், அல்லது போதையால் மழுங்கிப்போன ஒருவர் என்னை வாசிக்கக்கூடும். அவர்கள் நான் காட்டும் அறிவுலகைக் கண்டு அஞ்சலாம், எரிச்சல் கொள்ளலாம். நான் என்ன செய்யமுடியும்? அவர்களையும் கருத்தில் கொண்டு அறிவுலகை முன்வைக்கமுடியுமா என்ன? அது சாத்தியமா?

அவர்கள் இது அவர்களுக்குரிய உலகமல்ல எனக்கண்டு விலகிச் செல்வதே சிறந்த வழி. அவர்கள் வாழ்வதற்குரிய பலநூறு களங்கள் இங்குள்ளன. மானுடரில் மிகமிகச் சிறிய அளவினரே அறிவியக்கத்தில் செயல்படுபவர்கள். என்றும் அப்படித்தான். எஞ்சியோர் அவர்களுக்கு வாய்த்த, அவர்களுக்கு உகந்த வாழ்க்கையை தேடி அடைந்து வாழவேண்டியதுதான்.

அந்த தகுதியின்மை காரணமாக அவர்கள் அறிவியக்கம் மீது ஒவ்வாமை கொண்டிருப்பார்கள் என்றால், அறிவியக்கத்தை வசைபாடுவதை செய்துகொண்டிருப்பார்கள் என்றால் அது அவர்களுக்கே தீங்கானது. அந்த பொருமலால் அறிவியக்கத்திற்கு ஒன்றுமில்லை. அறிவியக்கம் அதை பொருட்படுத்தவே போவதில்லை. அது அறிவியக்கத்தினர் கண்களுக்குப் படவும் படாது. ஆனால் பொருமுபவர் தன் உலகியல் வாழ்க்கையையும் இழப்பார். அங்கு சென்றும் அவரால் நிம்மதியாக இருக்கமுடியாது.

நான் எப்போதும் முற்றிலும் நடைமுறை சார்ந்த ஒரு வழியையே சுட்டிக் காட்டுகிறேன். எவருக்கும் அவருடைய உலகியலை துறக்க அல்லது உதாசீனம் செய்ய வழிகாட்டுவதில்லை. உலகியல் வாழ்க்கையில் குறைந்த அளவுக்கேனும் ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவே அறிவுறுத்துகிறேன். அந்த அடித்தளமே கலையிலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களில் சுதந்திரமாகச் செயல்பட அவசியமானது என வலியுறுத்துகிறேன். கலைக்காக உலகியலை துறப்பவர் ஒரு கட்டத்தில் உலகியலுக்காக கலையைத் துறக்கவேண்டியிருக்கும் என்பதே என் வரி.

மெய்யான அறிவியக்க ஆர்வம் கொண்டவர்களுக்கு உலகியல் வேலை பெரிய சிக்கலாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களால் வாழ்க்கைக்காக ஏதேனும் ஒரு வேலையை மிக எளிதாகச் செய்ய முடியும். டி.எஸ்.எலியர் காப்பீட்டுத்துறை குமாஸ்தாவாகப் பணி புரிந்தார். புதுமைப்பித்தன் பிழைதிருத்துநராக இருந்தார். சுந்தர ராமசாமி துணிக்கடை வைத்திருந்தார். அதெல்லாம் அவர்களின் துறை அல்ல. அவர்களின் பணிகள் இருந்தது அதற்கப்பால் அவர்களின் அகத்தில்தான்.

அவர்களுக்கு குமாஸ்தாவோ வணிகரோ அல்ல தாங்கள் என தெரியும். தங்கள் துறை என்ன, அதில் தங்கள் சாதனை என்ன என்று தெரியும். ஆகவே உலகியல் தளத்தில் தேவையான அளவு உழைத்தபடி தங்கள் அகவுலகை , அறிவுலகை சுதந்திரமாகவும் அந்தரங்கமாகவும் வைத்துக்கொள்ள அவர்களால் முடியும்.நானும் அப்படி வாழ்ந்தேன். அப்படித்தான் இருக்கிறேன்

ஆகவே ஒன்றுமே செய்யாமல் புறச்சூழலில், தொழிலில் முட்டிக்கொண்டிருப்பவர்கள் இயல்பாகவே தொழிலுக்கும் புறவாழ்வுக்கும் தேவையான தகுதிகள் அற்ற எளிய மனிதர்கள் மட்டுமே. அறிவுத்தகுதி, உணர்வுத்தகுதி என இரண்டு உண்டு. அறிவுத்தகுதி கொண்ட சிலர் உணர்வுத்தகுதி அற்றவர்களாக இருக்ககூடும். அவர்கள் தங்கள் தகுதியின்மையை மறைக்க இலக்கியத்தையோ தத்துவத்தையோ குற்றம்சாட்டுவார்கள்.

கலையிலக்கிய தத்துவச் செயல்பாட்டை பலவீனர்களுக்காக நான் முன்வைக்கவில்லை. தன்னை ஆளவும், தன்னைத்தானே செலுத்திக்கொள்ளவும் தகுதியற்றவர்களுக்காக பரிந்துரைக்கவுமில்லை. அவர்களுக்கான இடம் அல்ல இது. உடல்நலமில்லாதவனை விளையாட்டுப்போட்டிக்கு கொண்டுசெல்வதுபோன்றது உளவல்லமை இல்லாதவர்கள் கலையிலக்கியம், தத்துவம் ஆகியவற்றுக்குள் நுழைவது. அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். அத்தகையோரிடம் இது உங்கள் இடமல்ல என்றே சொல்வேன்.

கலையிலக்கியமும் தத்துவமும் அடங்கிய அறிவியக்கம் என்பது அறிவும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கான களம். இப்படி ஒன்று அத்தகுதி கொண்டவர்களுக்கு தெரியாமல் இருக்கலாகாது என்பதனாலேயே இந்த இணையதளத்தில் அவற்றை தொடர்ந்து முன்வைக்கிறேன்.

ஒருவர் தன்னுடைய சொந்த பலவீனங்கள், தவறுகள் ஆகியவற்றை நியாயப்படுத்திக்கொள்ள இலக்கியத்தை அல்லது கலையை அல்லது தத்துவத்தை சுட்டிக்காட்டுவதுபோல அபத்தமான பிழை வேறில்லை. தகுதியற்றவர்கள் விலகிக்கொள்ள என்ன தடை? அறிவியக்கம் உங்களுக்கு ஒவ்வாமை அளிக்கிறதென்றால் ஏன் மீண்டும் இதை எழுதுகிறீர்கள்?

தமிழகத்தில் இத்தகையோர் உருவாக்கும் சிக்கல் சாதாரணமல்ல. உண்மையான சாதனையாளர்கள் நிமிர்வுடன், நம்பிக்கையுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதையுமே சாதிக்காமல், எதையுமே கற்றுக்கொள்ளவும் செய்யாமல் , தங்கள் சொந்த சிக்கல்களை பெரிதாக்கிக்கொண்டு, தோல்விகளை வலிந்து ஏற்றுக்கொண்டு, அதற்காக அறிவுச்செயல்பாட்டை பழிசொல்பவர்கள் எங்கும் சென்று தங்கள் வீழ்ச்சிக்கு அறிவுச்செயல்பாடே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அதிநுண்ணுணர்வு கொண்ட கவிஞரான தேவதச்சன் நகைக்கடையாளராக வெற்றிகரமாக திகழ்வார். அதே ஊரில் ஒருவன் குடித்துவிட்டு சாலையில் கிடப்பான். நாலைந்து கவிதைநூல் படித்து அப்படி ஆகிவிட்டதாகச் சொல்வான். தேவதச்சனை எவரும் சுட்டிக்காட்டமாட்டார்கள். அடுத்த தலைமுறைக்கு அந்தக்குடிகாரனை சுட்டிக்காட்டி அவர்களை அறிவியக்கம் பக்கமே வராமல் தடுப்பார்கள்.

நான் உங்கள் கடிதங்களை ஏன் தவிர்த்தேன் என்பதை உணர்ந்திருப்பீர்கள். உங்களுடையது சோம்பல் மற்றும் உளத்தயக்கம்.  அதற்கு ஒரு சாக்கு இலக்கியம் அல்லது என் எழுத்து. என் எழுத்தில் இருந்து எந்த நல்ல விஷயத்தையும் பெற்றுக்கொள்ளாமல், எவ்வகையிலும் தன்னை வளர்த்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ செய்யாமல் இலக்கியத்தை வாசித்தாலென்ன பயன்? அதன்பின் உங்கள் சிக்கல்களுக்கு இலக்கியத்தை பழிசொல்லி கடிதம் வேறு. இதை நூறு இடங்களில் சொல்லிச் சொல்லி நீங்களே நம்ப ஆரம்பித்திருப்பீர்கள்.

எனக்கு உண்மையான சிக்கல்களை அறிவதில், விவாதிப்பதில் ஈடுபாடுண்டு. தங்கள் சோம்பல் அல்லது பிற சிக்கல்களுக்கு செய்துகொள்ளும் பாவனைகளுடன் விவாதிப்பதில் ஆர்வமே இல்லை. அந்த முக்காட்டை கிழிக்கவே முடியாது

ஜெ

பிகு: உங்கள் முடிவு மிகச்சிறந்தது. உங்களுக்கு மிக உகந்தது. அவ்வழியே தொடர்க. அதற்கு இந்தவகை கடிதங்கள் எழுதி அறிவித்துக்கொள்ளுவதுகூட தேவையற்றதே.

முந்தைய கட்டுரைஅருட்செல்வப்பேரரசன்
அடுத்த கட்டுரைவாட்ஸப் வரலாறு