இரு வாழ்த்துக்கள்

அன்புள்ள ஜெ,

உங்களின் பிறந்தநாளுக்கு என் இனிய வணக்கங்கள்.
நிலக்கோட்டை மு.வ. மாணிக்கம் அண்ட் கோ தங்க நகை விற்பனையாளர்கள் பற்றிய பதிவினை படித்த பின் இன்று அந்த கடைக்கு குடும்பத்துடன் சென்றோம். இரவு 8 மணிக்கே செல்ல முடிந்தது. திண்டுக்கல்லில் இருந்து 30 கிலோமீட்டர் தான் ஆனாலும் வீட்டில் வேலைகள் முடிந்தபிறகு தான் கிளம்ப முடிந்தது.
ஊரெங்கும் உங்களின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் கடைக்கும் அதுவே வழிகாட்டி. உங்களை அதில் பார்ப்பது அத்தனை மகிழ்வளிப்பது. பார்த்துக் கொண்டே சென்றேன்.
முதல் முறையாக அட்சய திரிதியை அன்று (அதற்கு முதல் நாள் என வைத்துக்கொள்ளுங்கள் ) 1 கிராமில் மோதிரம் வாங்கினேன். என் பொருளாதாரம் தரும் இடம் அவ்வளவே.
உங்களின் வாசகி என அங்கு இருந்தது நான் மட்டுமே என உணர்ந்தேன். ஆனால் கிராமத்து மக்கள் “செயமோகன் பிறந்தநாளாம் அதனால செய்கூலி, சேதாரம் இல்ல” என மகிழ்வோடு சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். அந்த நிகழ்வு மனம் நிறை ஒன்று ஆசானே.
அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்ளவே அங்கே சென்றேன் என சென்ற பின்னரே உணர்ந்தேன் ஆசானே.
யானை டாக்டர் புத்தகம் பரிசாக தந்தார்கள்.
அவர்களுக்கு என் நன்றிகள்.
உங்களுக்கு என் வணக்கங்கள்
சரண்யா
நிலக்கோட்டை நகைமாலிகை.

உளம் கனிந்த ஜெவிற்கு,

கடந்த வருடம் உங்கள் பிறந்த நாள் அன்று முதன் முதலாக கடிதம் அனுப்பி உங்களிடம் பதில் பெற்ற நாள் முதல் இன்று வரை உங்கள் சொல்லையும் செயலையும் நினைக்காது ஒரு நாள் கூட செல்வதில்லை. பல கோணங்களில் வாழ்வை அணுகவும் அதை இனியதாக வாழவும் உங்கள் அணுக்கம் உதவி செய்கிறது. அருகமைதல் எப்படி என்னை வழிநடத்தியது என்பது என்னால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று. ஆசானாக சில நேரங்களில் தந்தையாக வழிநடத்தும் உங்களுக்கு இந்நன்னாளில் நான் செய்ய கூடிய எளிய செயல் பட்டிபெருமானிடம் வணங்கச் செல்வது மட்டுமே.  இரண்டு அர்ச்சனை சீட்டு வாங்கி தங்களுக்கும் அருண்மொழி நங்கைக்கும் அர்ச்சனை செய்து, திருமுறை பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். தீடீரென குருக்கள் செந்தாமரையை பிரசாதமாக தந்தார். பல முறை சென்று தரிசனம் செய்யும் இடம், இதுவரை பெற்றதில்லை, இன்று கிடைத்த செந்தாமரை மலர் மனதை மிக மங்கலமாகவும், மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் உள்ளாக்கியது. நிறை மாந்தருக்கு நிறை மலர் என்பது போல…  என்றும் குழகனாக திகழும் ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன். பட்டிபெருமானின் அருளாசிக்கு என் பிராத்தனைகள் என்றுமிருக்கும்….
*வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம்
பெண்டான் மிகவானான் பிறைச் சென்னிப் பெருமானூர்
தண்டாமரை மலராளுறை தவளந் நெடுமாடம்
விண்டாங்குவ போலும் மிகு    வேணுபுரமதுவே.*
பிரியமுடன்
பவித்ரா, மசினகுடி
முந்தைய கட்டுரைWhy the Anglophone reader should know Jeyamohan
அடுத்த கட்டுரைஅழகியல்வாதம்