சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது, கடிதம்

அன்புள்ள ஜெ,

நல்ல தேர்வு. அவருக்கு கவிதை இயல்பான வெளிப்பாட்டுக் கருவியென அமைந்திருக்கிறது. உயரமான கட்டிடங்களின் நிழல் தாங்கும் இலை ஒன்று, உதிர்வதற்காகவே வீசும் காற்றிலேறியாயினும் மண் தொடும் முன் சுழன்றிறங்கும் அந்த விடுதலையைக் கொண்டாடத் துடிப்பதைப் போல, கருவறைத் தனிமைக்கும், அத்தனிமையில் இருந்து வெளியேறி வாழ்தல் என்னும் கொண்டாட்டமான விடுதலைக்கு ஏங்கியலைதலுக்கும் இடையேயான உணர்வுகளே அவரது கவிதையுலகு. இத்தகைய உணர்வுகள் சற்றேனும் நுண்ணுணர்வும், தன்னுணர்வும் உடைய எந்தவொரு இலக்கிய வாசகனுக்கும் இருப்பது தான். உணர்வை மொழியில் சொல்லுகையில் அது கெட்டிப்பட்டு, வரையறுக்கப்பட்டு, செறிவூட்டப்பட்டு ஒரு பெருங்கடல், கையளவு படிகமாகக் குறுக்கப்படும் விபத்து நிகழும். இவ்வளவு தானா என்ற ஒரு வியப்பும், அதையடுத்து அதைக் கடந்து போவதும், இறுதியாக ஒரு வெறுமையுணர்வும் நிகழும். அது ஒரு வகையில் இலக்கியத்தின் வழிநிலை. ஆனால் அதே உணர்வுகள் கவிதையென ஆகும் போது, ஒரு கோப்பை நீரே ஆவியென ஆகி இவ்வகல் விசும்பெங்கும் வியாபித்து நிற்பதென ஆகும். இதனாலேயே என்னால் கவிதையை இலக்கியத்தின் ஒரு பகுதியென குறுக்க இயல்வதில்லை. இலக்கியம் அளவிற்கே ஒரு தனித்த இருப்பென, தன்னை நிறுவிக் கொள்வது கவிதை. அத்தகைய ஒரு நிலையை எய்த இவருடைய கவிதைகளுக்கு இயன்றிருக்கின்றன.

நம் விஷ்ணுபுர விருதுகளில் குமரகுருபரன் விருதுக்கென ஒரு தனிச்சிறப்பு உண்டு. பிற விருதுகள் சாதனையின் அங்கீகாரமென வழங்கப்படும். இவ்விருதோ சாதிப்பதின் பயணத்தில் இருக்கிறீர்கள் என நினைவுட்டி, இனி வருங்காலங்களில் எல்லாம் அப்பயணத்தைக் கைவிடாமல் கொள்ள, தடும் மாறும் போது திசைகாட்ட, இருள் சூழும் போது கைவிளக்காக மாற என பெறுபவரின் உடன் நின்றிருக்கும் ஓர் இருப்பென உடன்செல்வது. இவ்விருது பெற்ற ஒவ்வொரு இளங்கவிஞர்களுக்கும் இது பொருந்தும். ஒருவகையில் இவ்விருது ஒரு பெரும் பொறுப்பு. பெறுபவர்களால் சுமந்து, நிறைவேற்றத் தக்க பொறுப்பு. சதிஷ்குமாருக்கு அத்தகைய ஒரு பொறுப்பைச் சுமக்கும் திறன் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

சதீஷ்குமார் சீனிவாசன் எனக்கு ஜெவின் கட்டுரைகள் வழியாக  அறிமுகமானவர். அவரின் “ஆடை களைதல்” கடிதமும் ஜெவின் விளக்கமும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக  அணுக்கமானது. நண்பர்களின், கவிதை வாசகர்களின் கட்டுரைகளை எதிர்நோக்கியிருக்கிறேன். குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதுவிழா வழியாக  அவரை மேலும் அணுகி அறியமுடியும். வாழ்த்துகள் சதீஷ்..

அழகியமணவாளன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
அடுத்த கட்டுரைராஜா நினைவுகள்