அப்பாவின் தாஜ்மகால்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். நான் கிருஷ்ணசாமி (ப.சகதேவன்). பெங்களூரிலிருந்து எழுதுகிறேன்.
உங்களது வலைப்பக்கக் கட்டுரைகளை நான் படிப்பேன். ‘அப்பாவின் தாஜ்மகால்’ என்னை மிகவும் இம்சித்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவாக எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் தந்தை என்பவரின் பிம்பம் மிகுந்த விமர்சனத்துக்குரியதாகவும், மகன்களால் வெறுக்கத்தகுந்ததாகவுமே இருக்கும். ஆனால் அந்தத் தந்தையின் அகவெளிக்குள் விரிந்து கிடக்கும் சரித்திரக்கூறுகள் ( குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தவை) அக்கூறுகளோடு அவர் நடத்தும் நித்தியப்போராட்டம், அப்போராட்டத்தில் தன்னோடு துணை நிற்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் இவை பிற உறுப்பினர்களால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அதிலும் மனைவியின் ஆதரவு இல்லாமல் போனால் மன உளைச்சலின் தாக்கம் தாங்க முடியாததாகி விடும். எனது தந்தையின் இந்த மனநிலையை உணர எனக்குப் பல்லாண்டுகள் ஆயின. கிட்டத்தட்ட அவர் மறைந்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். உங்கள் தந்தையின் அகவெளி மிக விரிந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
நீங்கள் வசித்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாகமாக இருந்திருக்கிறது. அதன் மேட்டிமைக்குணங்கள் உயர்சாதியினரிடத்தில் படிந்திருப்பது இயல்பானது தான். சமஸ்தானம் செல்வாக்கோடு இருக்கிறவரை சரி.. சமஸ்தானமும் வீழ்ந்து, நிலச்சீர்திருத்தமும் வருகிறபோது அதன் இரட்டைப் பாதிப்பை உயர்சாதியினரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. திருவிதாங்கூர் மாதிரி எங்கள் பொள்ளாச்சி-பாலக்காடு பகுதி ஒரு பேர் பெற்ற சமஸ்தானத்தின் பாகமாக இருந்ததில்லை. கொச்சி எங்கோ தூரத்திலிருந்தது.ஆனால் நிலச்சீர்திருத்தத்தின் பாதிப்பு இங்கே நேரடியாக இருந்தது. எழுபதுகளில் நான் சித்தூரில் படித்தபோது எனக்கு நாயர் பையன்களும், ஈழவப்பையன்களும் நண்பர்களாக இருந்தார்கள். விடுமுறை நாட்களில் அவர்கள் வீடுகளுக்குப் (பாடம் அல்லது தோட்டம்) போவேன்.ஆலத்தூர், நெம்மாரா, கொல்லங்கோடு, பட்டாம்பி, ஒலவக்கோடு என்னும் இப்பகுதிகள் எங்கள் பொள்ளாச்சியோடு ஒப்பிடும்போது மிகவும் செழிப்பு வாய்ந்தவை. அதில் நாயர் வீடுகளில் ஒரு மாதிரியான அமிழ்ந்து ஒலிக்கிற சோகம் இழையோடும். காரணம் வறுமை. நிலத்தில் இறங்கிப் பாடுபட முடியாத வறட்டுக்கவுரவம். ஈழவ வீடுகள் உற்சாகமாக இருக்கும். காரணம் நிலச்சீர்திருத்தம் ஈழவர்களை அதிகம் பாதிக்கவில்லை. அவர்கள் எப்போதும் போலவே தோட்டத்தில் பாடுபட்டுக்கொண்டு தான் இருந்தார்கள்
பாலக்காடு மாவட்டத்தில் 45 சதவீதத்தினர் தமிழர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் கொங்கு வேளாளர்கள். எங்கள் குடும்பத்திலேயே பல பெண்கள் அங்கு வாழ்க்கைப்பட்டுப் போயிருக்கிறார்கள் நான் அவர்கள் தோட்டங்களுக்குப் போவதுண்டு. பல நாயர் குடும்பத்துக் கதைகளை அவர்கள் சொல்வார்கள். பல கவுண்டர் குடும்பங்களுக்கு வெளிஉலகத்தொடர்பு அங்குள்ள ஒரு நாயர் மூலமாகத்தான் இருக்கும். மொழி உள்படப் பல காரணங்கள் அதற்குண்டு
ஒரு சமுதாயத்தின் இத்தகைய மாறுதலை- அதன் வேடிக்கையான அம்சங்களை அடூர் அளவுக்கு யாரும் கொண்டு வந்திருக்க முடியாது, கொடியேத்தம், எலிப்பத்தாயம், முகாமுகம் முதலிய படங்களில் அதைப் பார்க்கலாம். மருமக்கட்தாயக் காலகட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும் தங்கள் தாயார் எடுத்த முடிவு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. தந்தைக்கு வேறெந்த மார்க்கமும் இருந்திருக்க முடியாது. ஒரு வேளை அவர் தனது அகவெளியைச் சுருக்கிக்கொண்டிருந்தால் தானும் மகிழ்ச்சியாக இருந்து குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்திருந்திருக்கலாம். வீடும், வெளியும் நாமாக உருவாக்கிக்கொள்வது தானே! எண்டே அப்பூப்பக்கொரு ஆனே உண்டாயிருந்நு நிகழ்காலத்திற்கு எப்படி உதவும்?
இன்னும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இமையம் குறித்த உங்கள் எதிர்வினையை கொஞ்சம் சமனப்படுத்தியிருக்கலாம்.( அவருக்குக் கிடைத்த குவெம்பு விருதுக்குழுவில் நான் இருந்தேன், விருது பெறுவதற்காக அவர் குடும்பத்தோடு நானும், நல்லதம்பியும் குப்பள்ளி சென்றிருந்தோம்.) க்ரியா, காலச்சுவடு குறித்த உங்களது கருத்துக்கள் தடாலடியானவை. அவர்களது ஒட்டுமொத்த இலக்கிய மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பின் முன்னால் வலிமை குறைந்து போகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளவை. மேலும் இத்தகைய கருத்துக்கள் உங்கள் பிம்பத்திற்குக் களங்கம் கொண்டு வரக்கூடும். கருத்துக்கள் ஒருமுகப்படுத்தப்பட்டவையாக இருந்தால் சில பகுதிகளுக்கு நீங்கள் போகவேண்டிய அவசியமிருக்காது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. விமர்சனமல்ல.
அன்புடன்
பழனி.கிருஷ்ணசாமி
***
அன்புள்ள கிருஷ்ணசாமி அவர்களுக்கு
நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் பலசமயம் சீண்டப்படும்போது உணர்வுகளை ஆள முடிவதில்லை. குறிப்பாக ஒரு சிறுமையைச் சுட்டிக்காட்டநேரும்போது. அது மிகையான வெளிப்பாடுதான். ஆனால் அந்த இயல்பால்தான் இலக்கியம் எழுதுகிறோமோ என்னவோ
ஜெ