பேயும் தர்க்கமும் -கடிதம்

கதாநாயகி வாங்க

கதாநாயகி மின்னூல் வாங்க

ஜெ,

நாவலுக்கு அடிப்படையாக தர்க்க முறை ஒன்று இருக்கிறது என்பதை கதாநாயகியை வாசிக்கும் போது உணர முடிந்தது. அது பேய் கதையே ஆனாலும் இந்த தர்க்க முறை மிக அவசியம் போலும். நாவலில் உணர்ந்த அந்த கருத்தியல் நிலைக்கு விமர்சன பூர்வமாக அல்லது கோட்பாட்டளவில் மொழியில் ஒரு வடிவத்தைக் கொடுக்க இப்போது இயலாது. உருவப் படுத்திக் கொள்ள அதனிடம் அருகே செல்ல செல்ல உருவம் சிதைந்து அது கரைந்து காணாமல் போய் விடுகிறது. கதை நாயகன், மெய்யன் பிள்ளை,  விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையில் அவன் கண்ட Fanny Burneyஇன் புனைவு உலகத்தை போன்று இந்த தர்க்கம் என்ற கருத்தியலும் தொந்தரவு செய்யப்படாமல் அப்படியே கனவு நிலையில் இருக்கட்டும். கொஞ்சம் விழிப்பு வந்தாலும் கதாநாயகி ஹெலனா காணாமல் போய் விடுவாள்.

பேய் கதைக்கு மித மிஞ்சிய கற்பனை போதுமே logic அவசியமா? அல்லது logic என்பது எதார்த்தவாத கதைகளுக்கு மட்டுமே உரியதா? கதையை வாசிக்கும் போது இந்த கேள்விகள் இந்த நாவலை மையமிட்டு இருந்தன. கலைஞன் ஒருவன்  யதார்த்தவாதத்திற்கு வலிந்து logic ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர் எதிராக பேய் கதைகளின் மாய புனைவுக்கு உறுதிப்பட்ட அடித்து உருவாக்கிய தர்க்க முறைமை ஒன்று அவசியம். அது கல் சிற்பம் ஒன்று தான் தாங்கி நிற்கும் உருவம் தெரியாத கலைஞனின் இருப்பைப் போன்றது. நம்ப முடியாத பேய் கதையின் நம்பகத்தன்மை ஆசிரியன் கட்டமைக்கும் தர்க்க முறைமையினால் சாத்தியப்படுகிறது. தர்க்கத்திற்கு வெளியில் கட்டமைக்கப்படும் பேய் கதைகள் ஒருவேளை திகிலையும் பயத்தையும் ஏற்படுத்தலாம் ஆனால் நாவல் வடிவத்தில் உயர் கலை வடிவமாக இருக்குமா என்பது ஐயத்திற்கு உரியது.

இங்கே ஒரு பேய் கதையில் திருவாங்கூர் வரலாறும் இங்கிலாந்தின் காலனிய ஆதிக்க வரலாறும் காட்டின் நடுவில் கேப்டன் மெக்கன்சி கட்டிய சிறிய வேட்டை பங்களாவில் 18ம் நூற்றாண்டின் Fanny Burnney நாவலில் சந்திக்கின்றன. அந்த வீட்டின் கதவை திறப்பதும், ஜெயமோகனின் கதாநாயகி நாவலை திறப்பதும், வீட்டின் உள் உள்ள Fanny Burnney நாவலை திறப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்பவைகள்.

கதாநாயகி + வேட்டை பங்களா + Fanny Burnneyயின் நாவல் =  Endless Labyrinth.

ஒருமுறை இந்த சுழலுக்குள் நுழைந்து விட்டால் அதில் இருந்து வெளியேறவே முடியாது. மூன்று வாசிப்புகள் கதாநாயகியை திறந்தவுடன் ஆரம்பித்து விடுகின்றன. ஒன்று முதலில் கண் இருக்கும் தொடக்கூடிய நாவலான  கதாநாயகியை வாசிப்பது, பின்பு அந்த முதல் வாசிப்புக்கு உள்ளே இன்னொரு சலிப்படையச் செய்யும் 18ம் நூற்றாண்டின் நாவலை வேறொருவர் வாசிப்பது. மீண்டும் அந்த இரண்டாவது வாசிப்புக்கு உள்ளே நடக்கும் ஹெலனாவின் மூன்றாவது வாசிப்பு. இதில் காலங்களின் குழப்பம் வேறு. நிகழ்வில் இருந்து கடந்த காலமும் கடந்த காலத்தில் இருந்து நிகழ் காலமும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன.  அந்த வீட்டில் காலங்களின் இடைவெளிகள் அற்று அனைத்தும் ஒன்றாகி விடுகின்றன. சிக்கிக் கொண்டால் வெளியில் மீள முடியாத Labyrinth இது. கதாநாயகியை வாசித்துக் கொண்டிருந்த எனக்கும் ஓர் இடத்தில் இந்த நாவல் Labyrinth ஆக மாறி விட்டது. ஹெலனா வேட்டைக்காக கொதையாறுக்கு வரும் காட்சி அது.  இக்காட்சி இந்த நாவலுக்கு முன் நான் வாசித்த அல்லது வாசித்து கொண்டிருந்த இன்னொரு ஆங்கில நாவலின் சம்பவத்தோடு சேர்ந்து குழம்பி விட்டது. வாசித்த அந்த ஆங்கில நாவலின் கதாநாயகியின் பெயர் Ragna of Normandy (Ken Follett’s The Evening and the Morning). Regna Normandyயில் இருந்து தான் காதலித்த Earl ஒருவனை திருமணம் செய்து கொள்ள இங்கிலாந்து வருகிறாள்.  1000 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தின் சில நகரங்கள் நம் கோதையாறு போன்றதுதான் இருந்திருக்கின்றன. Ragna என்ற அந்த  கதாநாயகியை சற்று முந்தைய அதிகாரத்தில் ஹெலனாவாக வாசித்த குழப்பம் ஏற்பட்டு விட்டது. Fanny Burnney இன் நாவல் மட்டுமல்ல அதற்குள் நுழைய வாசலாக நிற்கும் ஜெயமோகனின் வேட்டை பங்களாவான கதாநாயகி நாவலே கூட ஒரு வகையில் Labyrinth என்று சொல்ல வேண்டும். அல்லது போர்ஹேஸின் மொழியில் இந்த வாசிப்பு ஒரு Aleph தருணம். இந்த Alephல் நிகழ் காலம், கடந்தகாலம், பரந்துபட்ட  முழு உலகமும் என அனைத்தும் ஒரே நேர் கோட்டில் ஒருமித்து நம் கண் முன் காட்சியாக விரிய ஆரம்பித்து விடுகின்றன.

பொதுவாக உங்கள் கதைகளில் யானையின் கம்பீர நடை அப்படியே வியக்க வைக்கும். வழக்கத்திற்கு மாறாக இங்கே புலியின் ராஜ கம்பீரம் யானையை விட அபாரமாக காட்டப்படிருக்கிறது. இதுவரை கற்பிக்கப்பட்ட புலியின் எதிர்மறை கருத்துக்கள் அனைத்தையும் கதாநாயகியில் சுக்குநூறாகிவிட்டன. வாசிப்பில்  சில நேரங்களில் Rudyar Kipling நினைவுக்கு வந்தார். “Kipling, you are dead wrong about Shere Khan in your Jungle Book” என்று சொல்ல தோன்றியது. காலங்களையும் இடங்களையும் மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே புள்ளியில் இணைக்கும் கதாநாயகி ஜெயமோகனின் Aleph என்றுதான்  சொல்ல வேண்டும்.

அன்புடன்

இரா. அருள்

முந்தைய கட்டுரைமரபுக்கவிதைகள் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைடி.என்.சேஷாசலம்