துணைவன்: மின்னூல் வாங்க
துணைவன் நூல் வாங்க
அன்புள்ள ஜெ
அண்மையில் ஒருவர் முகநூலில் துணைவன் கதையை நீங்கள் இலவசமாக வாசிக்க முடியாமல் உங்கள் தளத்தில் பிளாக் செய்திருந்தது மோசடி, வணிக மனநிலை, அறமில்லாத அயோக்கியத்தனம் என்றெல்லாம் வசைபாடியிருந்தார். அதாவது இலவசமாகக் கொடுக்காவிட்டால் அது மோசடியாம். அதை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். நான் கேட்டேன், மொத்த வெண்முரசு நாவலும் இலவசமாக இணையத்தில்தானே இருக்கிறது, அதில் என்ன வணிகம் இருக்கிறது என்று. பதில் கிடையாது. ஆனால் மேலும் வசை. ஆச்சரியமாக இருந்தது இந்த மனநிலையைக் கண்டு.
அன்புடன்
ஜே.வி.பொன்ராஜ்
***
அன்புள்ள பொன்ராஜ்,
முகநூலில் எழுதப்பட்டதென்றாலே அதன் தரமென்ன என்பதில் ஐயமில்லை. துணைவன் கதை விடுதலை படமாகியுள்ளது. இத்தொகுப்பில் உள்ள இன்னொரு கதையின் உரிமையும் திரைப்படத்திற்காக வாங்கப்பட்டுள்ளது.
என்னிடம் ஆங்கில இதழ்களில் நடத்தப்படும் பேட்டிகளிலெல்லாமே கேட்கப்படும் திகைப்படைந்த கேள்வி இது, ”உங்கள் படைப்புகளில் மிகப்பெரும்பாலானவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றனவாமே, உண்மையா?”
நான் அதற்குச் சொல்லும் பதில். ‘ஆம். ஏனென்றால் நான் இங்கே செய்துகொண்டிருப்பது ஓர் இலக்கிய இயக்கத்தை உருவாக்கும் பணியை. ஆகவே எப்படியேனும் அதிகமானபேர் படித்தால் போதும் என்பதே என் எண்ணம். ஆகவேதான் என் கதைகளை யூடியூபில் சொல்ல, வாசிக்க அனுமதிக்கிறேன். அவற்றுக்கு ஒலிப்பதிவு வெளியிட உரிமைத்தொகை அளிப்பதாக வந்த நிறுவனங்களை அனுமதிக்கவில்லை. என் தளத்திற்கு விளம்பரம் அளிப்பதாக ஒவ்வொரு நாளும் வரும் மின்னஞ்சல்களை பொருட்படுத்துவதுமில்லை’.
உண்மை, இப்படிச் செய்ய எனக்கு சினிமா உதவுகிறது. எழுத்தை நம்பி இருந்திருந்தால் இதைச் செய்ய முடிந்திருக்காது. என் நண்பர்களின் உதவி இல்லாமல் இணையதளம் நடக்க முடியாது. நிதியாக, தொழில்நுட்ப உதவியாக பலருடைய பங்களிப்புதான் இணையதளத்தை நடத்த உதவுகிறது. நூறுசதவீதம் விளம்பரம் இன்றி நடக்கும் பெரிய இணைய இதழ் இது ஒன்றே. என்னை வசைபாடுபவர்களும் இலவசமாக வாசித்துவிட்டே அதைச்செய்கிறார்கள்.
ஆனால் தொடர்ச்சியாக எரிச்சலூட்டுபவர்கள் என் எழுத்துக்கள்மேல் எந்த ஆர்வமும் இல்லாத ஒரு கூட்டத்தினர். சினிமாவாக வருகிறது என்றால் மட்டுமே ஒரு கதையை படிப்போம் என்னும் பிடிவாதம் கொண்டவர்கள். அது அந்த சினிமா பற்றி வம்பு பேசும் பொருட்டு மட்டுமே. வணிகக்கேளிக்கை சினிமா தவிர எதிலுமே ஆர்வமில்லாதவர்கள் அவர்கள். அவர்களை எவ்வகையிலும் இலக்கியத்திற்குள் கொண்டுவர முடியாது.
மிகக் கடமையுணர்ச்சியுடன் ஒரு சாரார் உடனே அக்கதையை பிடிஎஃப் போட்டு சுழற்சியில் விடுகிறார்கள். அதை வாசித்துவிட்டு இடவலம் புரியாமல் மொக்கைத்தனமாக கருத்து சொல்லிச் சலம்புகிறார்கள் பலர். அரசியல், வரலாறு என என்னென்ன சொன்னாலும் அவர்களின் உலகம் சினிமாவம்புதான். அந்தக்கூட்டம் என் உலகிலேயே இல்லை.
அவர்களில் ஒருசாரார் நாள்தோறும் பொங்கும் பேரார்வத்துடன் மின்னஞ்சல் செய்து சினிமாவாக வரவிருக்கும் கதைக்கு பிடிஎஃப் அல்லது இணைப்பு கேட்கிறார்கள். ஒவ்வொரு மின்னஞ்சலையும் உடனே பிளாக் செய்துவிடுவேன். ஆனால் காலையில் அந்த மின்னஞ்சலைப் பார்ப்பதே எரிச்சலூட்டும் அனுபவம்தான். அவர்களிடமிருந்து கதையை தடுத்து வைத்தாகவேண்டும், குறைந்தபட்சம் அவர்களின் அரைவேக்காட்டு வம்புகளுக்கு நான் உதவி செய்ததாக ஆகக்கூடாது என நினைத்தேன்.
ஒருவருக்கு எழுதினேன். ”உன்னைப்போன்ற ஒருவர் மேல் எனக்கு எந்த மதிப்பும் இல்லை. நீ அக்கதையை வாசிக்கவேண்டும் என்பது என் அவசியமும் இல்லை. உன் தேவை. அப்படியென்றால் காசுகொடுத்து வாங்கு” அவர் உடனே திகைப்புடன் பதில் எழுதினார். “என்ன காசு கேட்கிறீர்கள்?” நான் சொன்னேன். “சினிமாவுக்கு காசு செலவழிக்கிறாய் அல்லவா?” அதற்கு அவருடைய பதில்தான் கிளாஸிக். “நான் சினிமாவும் பெரும்பாலும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் சும்மாதான் பார்க்கிறேன். ஏனென்றால் நான் எல்லா சினிமாவையும் பார்ப்பவன்”.
நான் தோற்றுவிட்டேன். “ஐயா, உங்களைப் போன்றவர்கள் தமிழகத்தின் சொத்து. கதையும் இணையத்தில் சும்மாவே சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. தேடிப்பாருங்கள், கிடைக்கும். நன்றி. நம் வழிகள் இனிமேல் சந்திக்காமலிருக்க இறையருளும் உங்கள் பெருந்தன்மையும் வழிகோலவேண்டும்” என அவருக்கு கடைசி மின்னஞ்சல் அனுப்பினேன்.
உண்மையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்ட வாசகர்களுக்காக அக்கதையை, மற்ற எல்லா கதைகளையும்போல, தொகுப்பாக போட்டிருக்கிறோம். உண்மையான இலக்கிய வாசகர்கள் அதை வாங்கி படிப்பார்கள். அக்கதையை மட்டுமல்ல, மற்ற கதைகளையும்.
துணைவன் தொகுப்பில் எட்டு கதைகள் உள்ளன. இரு கதைகள் என்னுடைய ஸ்வீடன் பயணத்தை ஒட்டி எழுதியவை. ஃபின்லாந்தின் ரோவநாமியின் நிலக்காட்சி எனக்களித்த தீவிரமனநிலையால் எழுதப்பட்டவை. ஒரு கதை தோல்பாவைக் கூத்து கலைஞர்கள் பற்றிய ஒரு செய்தியில் இருந்து எழுதியது. அவற்றை எங்கேனும் வெளியிடலாமென நினைத்து வைத்திருந்தேன். தொகுப்பின் தேவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சியவை முன்னரே வெளியானவை. காவல்துறை சார்ந்த கதைகள் மூன்று.
நான் எப்போதுமே சொல்வதுதான், என்னுடைய உரையாடல் முழுக்கமுழுக்க என் வாசகர்களுடன் மட்டுமே. அவர்கள் நான் என் படைப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்கும்போதுகூட என் நூல்களை பணம் கொடுத்து வாங்குபவர்கள். ஒரு பிரதி கையில் இருக்கும்போதே அட்டை அழகாக உள்ளது என இன்னொன்று வாங்குபவர்கள். நான் என் நூல்களை இலவசமாக அளிப்பது, மெய்யான ஆர்வமுள்ள, ஆனால் பணமில்லாத வாசகர்களுக்கும் தொடக்கநிலை வாசகர்களுக்கும்தான். இணையவம்பர்களுக்கு அல்ல.
ஜெ