சலிப்பு, மீள்வு

மகிழ்ச்சிக்கணக்கு

அன்புள்ள ஜெ,

நான் பலமுறை உங்களுக்கு எழுதிய விஷயம்தான். என் வாழ்க்கை அர்த்தமில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. வேலை கடுமையானது கிடையாது. குடும்பத்திலும் பெரிய சிக்கல்கள் ஒன்றுமில்லை. நான்தான் சிக்கல். குடும்பத்தில் நான் எரிந்து எரிந்து விழுகிறேன். அது மற்றவர்களுக்குப் பிரச்சினை. ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம் என்னுடைய சலிப்பு.

சலிப்பு எதனால் என்று தெரியவில்லை. சலிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. எதிலும் ஈடுபடமுடியவில்லை. நண்பர்களிடம் கலக்க முடியவில்லை. அவர்கள் பேசும் அரசியல் சினிமா சாப்பாடு எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கே இந்த பெரிய சலிப்பு இருக்கிறது என நினைக்கிறேன். ஆகவேதான் குடிக்கிறார்கள். குடிபற்றி சிந்தனைசெய்துகொண்டே இருக்கிறார்கள். குடிபற்றி கேலிபேசுவது மட்டும்தான் அவர்களின் ஒரே மகிழ்ச்சி. குடித்துவிட்டு சினிமாப்பாட்டுக்கு நடனம் ஆடுவதை மகிழ்ச்சி என நினைக்கிறார்கள்.

என்னுடைய பிரச்சினை என்ன என்று எனக்கு தெரியவில்லை. நானே அதையெல்லாம் யோசித்து சலிப்படைந்துவிட்டேன். இன்றைக்கு தீவிரமாக இருப்பவர்களில் 90 சதவீதம்பேர் நெகட்டிவாகத்தான் அப்படி இருக்கிறார்கள். பெரும்பாலும் அரசியலில் கடுமையான காழ்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அதை முடிந்தவரை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். காலைமுதல் மாலை வரை கசப்பும் காழ்ப்புமாக இருக்கிறார்கள்.

இலக்கியவாதிகளிலேயே பலர் எழுதுவது எல்லாமே கசப்பும் நையாண்டியும் வெறுப்பும்தான். பத்தாண்டுகளாக பாசிட்டிவாக ஒரு வரி எழுதாத சிலரை பார்க்கிறேன். எப்படித்தான் உயிர்வாழ்கிறார்கள். நெகெட்டிவ்னெஸ் அளிக்கும் ஒரு நமைச்சல் தவிர அவர்களுக்கு சந்தோஷம் என ஏதாவது உண்டா? அவர்களைப்போல ஆவதைவிட தற்கொலை செய்துகொள்ளலாம்.

நான் திரும்பத் திரும்ப புலம்பி எழுதுகிறேன். நீங்கள் பெரும்பாலும் பதிலளிப்பதில்லை. ஆனாலும் இதை எழுதுவது ஓர் ஆறுதலை அளிக்கிறது.

ராம்குமார் பாலசுந்தரம்

அன்புள்ள ராம்,

இதைப்போன்ற ஒரு கேள்விக்கு இன்னொருவருக்கு எழுதிய பதில் இது. (மகிழ்ச்சிக்கணக்கு)  இக்கடிதம் அதன் நீட்சி.

நான் பார்த்தவரை மகிழ்ச்சியின் வழிகள் இரண்டே. ஆற்றலை அடைதல், ஆற்றலைச் செலவழித்தல். மிக எளிமையான உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நல்ல உணவை உண்ணுதலும் அவ்வுணவு முற்றிலும் செரிக்கும்படி உடலை செயல்படுத்துவதும்தான் உடல்சார்ந்த மகிழ்ச்சிகளாக உள்ளன. அதையே உள்ளத்திற்கும் போட்டுப்பார்க்கலாம். வாசித்தல், பயணம் ஆகியவை உள ஆற்றலை சேகரிக்கும் செயல்கள். எழுதுதல், சிந்தித்தல் ஆகியவை செலவழிக்கும் செயல்கள்

மூன்றாம் நிலை என்பது அடைதலும் அளித்தலும் இல்லாத வெறும் நிலை. கடத்தல். அது வேறொன்று. அதை இங்கே கலந்துகொள்ளவேண்டியதில்லை. எளிய தியானங்கள் உள ஆற்றலை சேகரிக்கும் செயல்பாடுகள்தான். அதற்கப்பாலுள்ளது யோகம்.

கற்றல் எப்போதுமே முதன்மை மகிழ்ச்சி. கற்றவற்றை எவ்வகையிலேலும் செயல்படுத்துதல் அடுத்தநிலை மகிழ்ச்சி. மிக எளிய அளவிலேனும் எதையேனும் கற்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை மீண்டும் மீண்டும் காண்கிறேன். இலக்கியம், கலைகள், தத்துவம், பண்பாட்டு மரபு எதுவானாலும். அவ்வாறு கற்றவற்றில் இருந்து முன்னகர்ந்து எதையேனும் தாங்களே செய்பவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

உண்மையில் இப்படிப்பட்ட வினாக்களை பலரும் தொடர்ந்து எழுப்பி வந்தமையால்தான் அப்படி கற்றலுக்குரிய சில அமைப்புகளையும் முறைமைகளையும் உருவாக்கினோம். உதாரணமாக, இந்திய தத்துவம், ஆலயக்கலை, யோகம், மேடையுரை, மேற்கத்திய இசை, மேலைத்தத்துவம் என பல துறைகள் சார்ந்த பயிற்சிக்கான முகாம்களை நடத்துகிறோம். ஓராண்டாக அவை நிகழ்கின்றன.

அவை கற்றலுக்கான வாய்ப்புகள். ஒன்றைக் கற்பதே முதன்மை இன்பம். கற்றவற்றினூடாக செயலுக்குச் செல்வது மேலும் இன்பம். அத்துடன் இணையான சுவையும் மனமும் கொண்ட நண்பர்கள் அமைகிறார்கள். அந்த நட்புச்சுற்றம் மிகப்பெரிய ஒரு களம். மகிழ்வாக இருப்பதற்கு.

ஆலயக்கலை முகாமில் கலந்துகொள்ளும் ஒருவருக்கு இந்தியாவின் ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு பார்வை சட்டென்று கிடைத்துவிடுகிறது. வேறெப்படியும் இன்று அப்படி ஒரு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. அந்தப்பார்வை அமைந்தபின், அதில் ஒரு சுவை உருவானபின், ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் தன் ஊருக்கு மிக அருகே உள்ள ஆலயங்களை மட்டும் பார்த்தாலே பத்தாண்டுகள் கலையிலும் வரலாற்றிலும் திளைக்க முடியும். வாழ்நாள் முழுக்கக் கூடவரும் ஒரு மகிழ்வு அது.

நான் அளிக்கும் மேடையுரைப் பயிற்சி என்பது சிந்தனை, உரையாடல் இரண்டுக்குமான பயிற்சிதான். ஒரு கருத்தை தரவுகளில் இருந்து தொகுத்துக்கொள்வது, அதை தர்க்கபூர்வமாக முன்வைப்பது, அதை மேடையிலோ பேச்சிலோ வெளிப்படுத்துவது எப்படி என்று கற்பித்தேன். அது ஒருவரின் சிந்தனையையே மாற்றிவிடும். அவர் வாசிப்பவை குவியத் தொடங்கும். அதைப்போல சலிப்பை வெல்லும் வழி இல்லை.

ஆனால் அப்படி பயிற்சிகள் அறிவிக்கப்பட்டபோது ஒன்றைக் கவனித்தேன். பெரும்பாலானவற்றில் கலந்துகொள்பவர்கள் ஏற்கனவே செயலூக்கத்துடன், உற்சாகமாக வாழ்பவர்கள். மகிழ்ச்சிக்கான வழிதேடுபவர்கள் அல்ல. மகிழ்ச்சிக்கான வழி என்ன என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்பவர்கள் அக்கற்றலுக்கு வருவதில்லை. பலர் ஆர்வத்தால் தகிப்பதுபோல, வெளியேற வழிதேடுவதுபோல ஒரு பாவனையை மேற்கொள்கிறார்கள். உண்மையில் ஆர்வமில்லாமை, சோம்பல்தான் அவர்களின் இயல்பாக உள்ளது.

ஆகவே மேடையுரைப் பயிற்சி போன்ற சிலவற்றை தொடரவேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இப்படி ஒரு வாய்ப்பு எங்குமில்லை என இருக்கக்கூடாது என்பதனாலேயே இந்த பயிற்சியை வழங்க எண்ணினேன். ஆனால் பொதுவாக இங்கே ஆர்வமில்லை என்பதனால்தான் இங்கே வாய்ப்புகளும் உருவாகவில்லை என்று தெரிகிறது.

ஏன் என்று பார்த்தால் தவிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் விந்தையானவை. ஒன்று, அதற்காக ஒரு பயணத்தைச் செய்வதற்குச் சோம்பல். ”அவ்வளவு தூரமா, இங்கே எங்களூரிலேயே அதற்கான வசதி உண்டா?” என்கிறார்கள். அவர்கள் ஊரிலேயே என்றால் அவர்கள் வீட்டுக்கே செல்லமுடியுமா என அடுத்த வினா எழும். அல்லது பணம். அதன்பொருட்டு பணம் செலவிடுவது வீண் என நினைக்கிறார்கள். அந்தப் பணத்திற்கு பத்துமடங்கை ஓர் ஆடைக்காகச் செலவிடுபவர்கள் அவர்கள். அதாவது அவர்களின் உள்ளத்தில் கற்றல் என்பது உண்மையில் மதிப்பிற்குரிய பொருளல்ல.

அதற்கப்பால் வழக்கமான சால்ஜாப்புகள். கிளம்பும்போது சிறு வேலை வந்துவிட்டது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அஞ்சினேன். நினைத்தேன் ஆனால் கிளம்ப மனமே இல்லை. வீட்டிலே அன்றைக்கு கறி எடுத்து சமைத்தார்கள்… இப்படிப் பல. அதில் உச்சகட்ட பாவனை என்பது ‘எனக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா என்ற சந்தேகம் வந்தது’ என்னும் சொற்றொடர். அதைச்சொன்னவர்களை உடனே என் நட்புப்பட்டியல், மின்னஞ்சல்பட்டியல் அனைத்திலிருந்தும் நீக்கிவிட்டேன். அந்த பாவனையை எந்த சுத்தியலாலும் உடைக்கமுடியாது.

ஒன்றின் பொருட்டு அதற்குத் தேவையான சிலவற்றைச் செய்யாத எவரும் அதை அடைய முடியாது. எல்லாவற்றுக்கும் விலை உண்டு. பயணம், நேரம், பணம் எல்லாமே. எதையுமே அளிக்காமல் ஒரு கல்வி நேரடியாகத் தேடிவரவேண்டும் என எண்ணுவதுபோல மடமை வேறில்லை.

ஆக, உண்மையான சிக்கல் என்பது மகிழ்ச்சிக்கான வழி தெரியாமலிருப்பதோ அதற்கான வாய்ப்பு இல்லாமலிருப்பதோ அல்ல. அதற்கான மனமில்லாமல் இருப்பதே. அதற்கான சிறு முயற்சிகளைக்கூட எடுக்காமலிருப்பதே.

அதற்கு இன்னொருவர் எந்த உதவியும் செய்யமுடியாது. ஒருவர் அவரே சோம்பியிருக்க, துயரும் சலிப்பும் கொண்டிருக்க முடிவெடுத்துவிட்டாரென்றால் இன்னொருவர் என்ன செய்ய முடியும்? பலர் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதே அதைப்பற்றி புலம்பும் பொருட்டுத்தான் என நினைக்கிறேன்.அப்புலம்பல் வழியாக அவர் ஒரு வகையான தன்னடையாளத்தை அடைகிறார். ஓர் ஆளுமைச்சித்திரம் உருவாகிறது. பேச தலைப்பு இருக்கிறது. மகிழ்ச்சி அடைந்துவிட்டால் புலம்ப ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே என அஞ்சுகிறார்கள்.

அத்துடன் நம் காலகட்டத்தின் இயல்பான எதிர்மறை மனநிலை இங்கே பெரும்பாலானவர்களிடம் உள்ளது. ’ஒண்ணுமே உருப்படாது’, ’எதுவுமே சரியில்லை’, ’என்ன செய்றதுன்னே தெரியலை’, ’சலிப்பா இருக்கு’ ‘எல்லாருமே அயோக்கியப்பயல்கள்’ என்பதுபோன்ற சொற்றொடர்கள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. எல்லாவற்றிலும் உள்நோக்கம், சூழ்ச்சி ஆகியவற்றை கண்டடைவார்கள். (அதைக் கண்டடையும் தனித்திறன் தனக்கு உள்ளது என்ற பாவனையும் இருக்கும்.  ‘அதிலே சூட்சுமமா பாத்தீங்கன்னா ஒரு அரசியல் இருக்கு…’ என்பதுபோன்ற சொற்றொடர்களை சொல்வார்கள்)

இத்தகையோரால் நேர்நிலைகொண்ட செயல்களில் ஈடுபட முடியாது. எதற்காவது எதிர்வினையாற்றவே முடியும். இன்னொன்றுக்கு எதிராகவே ஒன்றைச் செய்யமுடியும். எதிர்ப்பு, கசப்பு, காழ்ப்பு, சீற்றம் ஆகியவற்றை உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ அடைவது மட்டுமே அவர்கள் அடையும் செயல்நிலை. ஆனால் அவை துயரளிப்பவை. நிலையழியச் செய்பவை. ஆகவே அவர்கள் செயலாற்றுந்தோறும் மேலும் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள் ஆகிறார்கள். மேலும் துயர் அடைகிறார்கள். அவர்களை எங்கும் இழுக்க முடியாது.

ஆனால், இந்த உலகில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அதன்பொருட்டு கற்றல்-செயலாற்றல் என வாழவேண்டும் என ஏதாவது நிபந்தனை உண்டா என்ன? மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை சிலருக்கு அவர்களின் தெரிவு என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே என இப்போது நினைக்கிறேன். இந்த உலகம் பலவகைப்பட்ட மனிதர்களாலானது. இயற்கையில் எல்லாவற்றுக்கும் இடமும் நோக்கமும் உண்டு. சிலர் மகிழ்ச்சியாக இருக்கவே கூடாது என்பதுதான் இயற்கையின் நெறியோ என்னவோ. அந்த சோர்வு, சோம்பல், கசப்பு, துயர் இந்த உலகின் வலைப்பின்னலில் ஒரு கூறு ஆக இருக்கலாம். எல்லா சுவைகளும் இயற்கையில் உள்ளன இல்லையா?

மகிழ்ச்சியை நாடும் ஒருவர், அதற்கான வழி அமையாது தவிக்கும் ஒருவர் மட்டுமே என் முன்னிலையில் எப்போதுமிருக்கிறார். அவரிடமே பேசுகிறேன். மற்றவர்களின் குரல்களை நான் செவிகொள்வதில்லை. அவர்கள் வாழ்வது வேறு உலகில். திரும்பத் திரும்ப சலிப்பு சலிப்பு என்று சொல்பவர் ஒரு வகையில் சலிப்பைப் பரப்புபவர். சலிப்பு, கசப்பு, காழ்ப்பு போன்றவை வைரஸ்கள் போல. அவற்றின் கட்டமைப்பிலேயே பரவுவதற்கான விழைவு உண்டு. அவற்றை அடைந்தவர்களிடம் அவை ‘என்னை முடிந்தவரை பரப்பிக்கொண்டிரு’ என ஆணையிடுகின்றன. அவற்றையே அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தவிர்க்கப்படவேண்டியவர்கள்.

நான் பொதுவாக  வெற்றுப் புலம்பல்களை கவனிப்பதில்லை. ஆகவேதான் உங்களுக்கும் எதிர்வினை ஆற்றவில்லை. ஏனென்றால் நான் செயலூக்கம் கொண்டவன், செயலில் நிறைவும் மகிழ்வும் காண்பவன். புலம்பல்கள் என்னை சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைநா.பார்த்தசாரதி – இலட்சியக் கனவுகள்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக் கூடுகை-59