அக ஆழம், கடிதம்

அறம் வாங்க 

அன்புள்ள ஜெ!

ஒரு சில எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகள் குறித்து பேசும்போது  ’என்னால் மட்டுமே இது எழுதமுடியும்’ என சொல்லும்போது சீற்றம் ஏற்பட்டதுண்டு வாசிக்க புதிதாய் வந்த காலங்களிலும் அதன் பின்னரும். நாஞ்சில் நாடனின் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு தன்னால் மட்டுமே சில விஷயங்கள் எழுதமுடியும் என்று சொல்லியிருந்தார். உதாரணத்திற்கு அவர் நாஞ்சில் நாட்டு உணவு பழக்கங்கள் குறித்து எழுதிக்கொண்டிருப்பதாகவும் அதை தன்னைத் தவிர வேறு எவராலும் எழுத இயலாது எனவும் சொன்னார். எனக்கு சரியாகப்பட்டது. இந்த புரிதலின் வழி சொல்கிறேன் ‘ அறம்’ தொகுப்பிலுள்ள கதைகளை தங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு நேர்த்தியாக மனதில் நிறுத்தும் விதமாக சொல்ல இயலாது

அறச் சிந்தனை உடையவர்களில்கூட பெரும்பாலும் தாம் செய்யும் அறச்செயல்களை முன்னிறுத்தி அதனால் பலன் பெற விழைவதிலேயே குறியாய் நிற்பர். அந்த அனுகூலம் புகழில் முடிந்தால் தொடர்ந்து அறச்செயல்களில் முனைப்புடன் செயல்படுவர். பலனில்லை எனில் சோர்வின்கண் உழன்று அச்செயல்களை கைவிடவும் வாய்ப்புண்டு. புகழுக்காக தம்மைச் சார்ந்த நலன்களுக்காக செய்யப்படுபவை என்றாலும் அவ்வறச்செயல்களும் மேலானவைகளாக கருதப்படவேண்டும். அறச்செயல்கள் மானுட சமூகத்தின் மீது சக மனிதர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதாக உள்ளன. அப்படியான நம்பிக்கைகளை மீட்டெடுக்கும் மாபெரும் சாசனம் ‘ அறம்’ தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும். ‘

நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ‘ என்பது நம் ஔவையின் மொழி. மேற்படி கதை மாந்தர்கள் வாழ்ந்த காலத்தில் பெய்த மழை அவர்களின் நற்செயல்களினாலும் எனக் கருதலாம். இப்போது பெய்யும் மழையும் பல மனிதர்கள் செய்யும் அறச்செயல்களாலேயே. மாண்புமிகு அறத்தை உயரத்திப்பிடித்து உரக்கச் சொன்னதற்காக தங்களுக்கு இருகைகூப்பிய வணக்கங்களும் பலத்த கைதட்டல்களும்.

ஒவ்வொரு கதையும் அறத்தின்பால் படிப்போரை தீர்க்கமாக நகரச் செய்பவை. ‘அறம்’ கதையில் எழுத்தாளரின் அறப்பற்று மற்றும் பதிப்பாளர்‌ மனைவியின் உறுதி, யானை டாக்டரின் ‘ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திண்மை, வணங்கான் , நூறு நாற்காலிகள் ஆகியவற்றில் சகமனிதன் மீதான சாதிய காழ்ப்புணர்வின் தாக்குதல்களால் ஏற்படும் வலிகள் , அவற்றை எதிர்கொள்ளும் மனம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லா கதைகளும் நம்முடைய அகத்தை ஆழ உழுது அவற்றில் அறம் எனும் வித்தை விதைத்துச்செல்கின்றது. அன்பு நீர் ஊற்றி வளர்த்தெடுப்பதும் விட்டுவிடுவதும் அவரவர் மனங்களை பொறுத்தது.

‘சோற்றுக் கணக்கு ‘ படித்து நீண்ட நேரம் அப்படியே மனம் நெகிழ்சியோடிருந்தது. இப்படியும் ஒரு மனிதரா? யாவருக்கும் அடிப்படையில் முதன்மையான தேவை உணவு. அவ்வுணவு அளிப்பதற்கு ஒருவர் முழுமூச்சோடு எவ்வித மனச்சுருக்கமுமின்றி பிரதிபலனுமின்றி செயல்படுகிறார் எனில் அவரல்லவோ வானுறையும் தெய்வத்திற்கு நிகர்.

‘பெருவலி’ சிறுகதையில் கோமல் அவர்களின் திடம் பெரும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிறு தலைவலி என்றாலே வெளியில் செல்ல முடங்கும் மனம் கொண்டவர்கள் நம்மில் பலபேர். உயிர்கயிற்றை நித்தமும் தீயில் வாட்டும் வேதனையான நோயோடு ஒருவர் இமயமலை வரை செல்ல முனைவது Strongest of Strong, Indomitable determination என்பதை தவிர என்ன சொல்வதென தெரியவில்லை.

மத்தறு தயிர், தாயார் பாதம், மயில் கழுத்து, உலகம் யாவையும் – எல்லாமே செம்மை.

‘ கோட்டி’ சிறுகதையில் வரும் பூமேடை அவர்கள் தனியொரு மனிதனாக எவருடைய கேலியையும் பொருட்படுத்தாது கேலி செய்பவர்களுக்கும் சேர்த்து போராடுகிறார் தான் செல்லும் இடங்களிலெல்லாம். போற்றப்பட வேண்டிய‌ மாபெரும் மானிடன் . கடைசிவரை தன் உறுதிமிக்க காந்தியக் கொள்கைகளின் பிடிப்பிலிருந்து ஒரு இம்மி கூட , ஒரு இமைப்பொழுதுகூட அகலாதவர். இன்று இல்லை எனினும் அவரை நினைத்து அவர் வாழ்ந்த திசையில் கும்பிடவே தோன்றுகிறது. அவரை ‘ கோமாளி’ என அடையாளப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கலாம். ஈனப்பிறவிகளின் பின் கைதொழுது செல்வதால் உண்மையில் நாம்தான் கோமாளிகள். அகத்திற்கும் புறத்திற்கும் வேறுபாடு காட்டத்தெரியாத உள்ளம் பூமேடையினுடையது. எதார்த்தங்களை அவ்வளவு எளிதில் உணராத இவ்வுலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?. பெயருக்கேற்ப அவர் பூமேடையாகத்தான் இருந்திருக்கிறார். வாசனையை உள்வாங்குவதில் நாம்தான் தோற்றுப்போயிருக்கிறோம்.

என்னுடைய பார்வையில் ‘அறம்’ தொகுப்பு முழுமையும் பல்கலைகழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய ஒன்று. வெளிவரும் இளையோர்கள் அறச்சிந்தையோடு வருதல் சாலச்சிறந்ததன்றோ!

மேலும் இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையையும் முடிந்தால் மலிவு விலை பதிப்பில் விஷ்ணுபுரம் நண்பர்கள் பதிப்பகம் வழி வெளியிட்டு அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம். நாங்களும் துணை நிற்போம். மனிதம் வேரூன்றுவதற்கும் தழைப்பதற்கும் செய்யப்படும் எல்லா செயல்களும் மானுடம் வெல்ல உதவும். அறம் நனி சிறக்கும்.

மிக்க அன்புடன்

பார்த்திபன் .ம.

காரைக்கால்

முந்தைய கட்டுரை‘As a writer I’m apolitical and spiritually free’: Jeyamohan
அடுத்த கட்டுரைபெண்ணெழுத்தாளர் பெயர் சூட்டுவது…