’வெயில்’ மூன்று கவிதைகள், சதீஷ்குமார் சீனிவாசன்

வெயில்

வெயில் ஒரு பிரிவுணர்ச்சிபோல
எங்கும் பரவியிருந்தது

சிமென்ட்டால் ஆன பறவைகள்
சுற்றுசுவர்களில் சமைந்து நின்றன
நீர்மோர் பந்தல்களில்
மதிய நேர கூட்டம்
டயர்களின் மணம் சாலைகளில்
மிதந்துகொண்டிருந்தது
இந்த வெயிலில்
யாருக்கும்
எந்த தீங்கும் நிகழவேண்டாமென
விரும்பாத எதுவும் நடக்க வேண்டாமென
ஒரு கணம் நினைத்துக்கொண்டேன்
அந்திவரையிலாவது
எல்லோரையும் காப்பாற்று வெயிலே

பறிகொடுத்த வெயில்

இன்று பார்க்க கிடைத்தது வெயில்
இன்று உணர கிடைத்தது வெட்பம்
இன்று நாளெல்லாம்
உடன் இருந்தது தாகம்
யாரையும் நினைவூட்டாத வெயிலை
ஒரு மாலையில்
பறிகொடுத்தேன்

இசையற்ற வெயில்

வெயிலுக்கு ஏதேனும்
இசைமை இருக்கிறதா
ஆயிரம் மௌனங்களின் மனம்போல
விழுகிறது நிலத்தில்
ஈரமற்ற பொழுதுகளில்
வாடின உயிரின் தாவரங்கள்

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஇவான் இல்யிச்சின் மரணம், கடிதம்
அடுத்த கட்டுரைஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’ – கடிதம்