காய்த்துப்போன விரலிருந்தும்
எத்தனை அழுத்தியபோதும்
செயல்படவில்லை.
இது தொடுதிரை அப்பா
மெல்ல தொட்டாலே போதும்
அழுத்தவே வேண்டியதில்லை
சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை
இதோ இப்படி
அவன் விரல்
நீரின்மேல் ஏசு போல
நடந்தது
அவன் விரும்பியபடி
செயல்பட்டன எல்லாம்
உலகம்
எனக்கு வசப்படாமலிருந்தது
இதனால்தானா?
நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா?
என்னளவு அறிவோ ஆற்றலோ இல்லாதவர்கள்
நான் விரும்பியவற்றை
விரும்புவதைக் கண்டு
தேவையில்லாமல் ஆற்றாமை கொண்டேன்.
எதிரிகளுக்கு
ஏன் எல்லாமே எளிதாக இருக்கிறது என்று
தெய்வத்திடம் முறையிட்டேன்
மேல்தளத்தில்
எடையில்லாமல் நகர
என்னால் இயலவில்லை
முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்
பூ விரிவதை கண்டதில்லையா
செடி அழுத்துகிறதா என்ன?
ஆனால் நான்
பழுதடைந்த மின்விசிறிபோல
ஓசையிட்டபடி மலர்ந்தேன்
நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து
என் அப்பங்களை வேகவைத்தேன்
அது ஐந்தாயிரம்பேருக்கல்ல
ஐந்துபேருக்கே போதவில்லை.
என் ஏசு
அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல
தேவைக்குமேல் சிலுவையேறியவர்.
மூடிய வாசல்களை எளிதில் திறந்தவர்களை
நான் கண்டிருக்கிறேன்
வெறும் குண்டூசியால்
பூட்டின் ஏழு தடைகளையும் திறந்த
நண்பனின் கண்களில் திருட்டுச்சிரிப்பை
நான் அறிவேன்
அசாத்தியமானதை செய்தவர்கள்
சாத்தியமானதை செய்தவர்கள்போல
பாடுபடுவதில்லை என்பதை
உணர்ந்திருக்கிறேன்
ஏமாற்றியவனை
மாயாவி என
ஊரார் போற்றுவதையும் கண்டதுண்டு
நான் கற்பாறைமேல் கட்டினேன்
இவனோ அலைநீரின்மேல்.
திறக்க
பலமே தேவையில்லாத வாசல்முன்
ஏன் வந்தோம் என்பதையே மறந்து
நின்றிருக்கிறான் ஒரு தனியன்.
மெல்ல அழுத்தினால்போதும்
அழுத்தக்கூட வேண்ட
தொட்டாலே போதும்
சரியாகச் சொன்னால்
தொடக்கூட வேண்டியதில்லை.
கல்பற்றா நாராயணன் டச் ஸ்க்ரீன் கவிதையை வாசிக்கிறார். காணொளி