அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சிறுவர் இலக்கிய எழுத்தாளர் வாண்டுமாமா (வி.கிருஷ்ணமூர்த்தி) அவர்களை அவரது இறுதிக்காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்துசென்று அவ்வப்போது சந்தித்து வந்தோம். சென்னையில் இருந்த அவருடைய வீட்டில் அந்த சந்திப்புகள் நிகழ்ந்தன. அங்கு நிகழ்ந்த உரையாடல்கள் அனைத்திலும் தனது அகவிருப்பமாக தெரிவித்த கனவு ஒன்றே ஒன்றுதான். ‘குழந்தைகளுக்கான நல்ல தரமான கதைப்புத்தகம் தமிழில் அச்சாக மாத இதழாகவோ, வார இதழாகவோ வெளிவர வேண்டும். நிச்சயம் அது வண்ணப்புத்தகமாக உருவாக்கப்பட வேண்டும். அதில் சமரசமே கூடாது. உலக உருண்டையில் எங்கு நல்ல கதை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் தமிழில் வாசித்து அறிய வேண்டும். கற்பனையும் மாயவுலகும் நம் பிள்ளைகளிடம் துளிர்விட்டு காடாகப் பரவ வேண்டும். எனது இறுதிமூச்சு அந்தப் பிரார்த்தனையில்தான் கழிகிறது’ என்றுரைத்து கண்கலங்கினார் வாண்டுமாமா.
புற்றுநோய் உயிர்த்திசுக்களைத் தின்றுகொண்டிருந்த ஓர் படைப்பாளியின் இறுதிக்கால வார்த்தைகள் எங்களை கலங்கடித்தது. அறுபதாண்டுகளுக்கும் மேலாக இதழியலில் பணியாற்றிய ஓர் மூத்த ஆசிரியமனதின் ஆத்மக்கட்டளை என்றே நாங்களனைவரும் அதை உளமாற ஏற்றுக்கொண்டோம். அந்தக் கனவின் நிறைவேற்றமாகவே தும்பி குழந்தைகள் மாத இதழைத் துவக்கினோம். இடைநின்றுவிடாத ஓர் அச்சிதழ் முயற்சியாக இதை தமிழில் நிகழ்த்திட வேண்டும் என்கிற தவிப்பில், இந்தியாவில் குழந்தைகளுக்காகச் செயலாற்றும் படைப்பாளுமைகளை நேரில்சென்று சந்தித்து அவர்களது அனுபவ அறிவுரைகளைக் கேட்டுப்பெற்றோம்.
இந்திய அறிவியலாளர் பத்மஸ்ரீ அரவிந்த் குப்தா போன்ற மூத்த ஆசிரியர்களின் துணையிருப்பும் வழிநடத்துதலும் தும்பி இதழுக்கு திசைதிறந்தது. ‘விதவிதமான நிலப்பரப்புகளை, வெவ்வேறு வாழ்வவுச்சூழல்களை, பூகோளத்தின் எண்ணற்ற உயிரினங்களை முழுவண்ண ஓவியங்களாக வெளிப்படுத்தும் கதைகளாக அச்சுப்படுத்தலாம்’ என்பதே அவர்களின் முதற்கட்ட அறிவுறுத்தலாக இருந்தது. வண்ணம் என்பதுதான் இவ்விதழின் பிரதானமாக இருத்தல் வேண்டும் என்கிற முடிவை அதன்பொருட்டே நாங்களடைந்தோம். குழந்தைகளின் வாசிப்புலகு சார்ந்த நிறைய வருடங்கள் களப்பணியாற்றிய ஆசிரியர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிகளில் கதைகளை ஒவ்வொரு மாதமும் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் புத்தகமாக தும்பி இதழை உருவாக்குவது என நண்பர்கள்கூடி முடிவுசெய்து அச்சாக்கத் தொடங்கினோம்.
இதுவரையில் எழுபது இதழ்கள் தும்பியில் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு இதழையும் நினைத்தவாறு அச்சுப்படுத்தி வெளியிடுவதற்கான உற்பத்திச் செலவு, பதிப்பக இடத்திற்கான வாடகை, பணிசெய்யும் நண்பர்களுக்கான மாதாந்திரத் தொகை, தூதஞ்சல் செலவுகள் என தும்பி இதழ் அச்சில் நிகழ்வதற்கு பெருந்தொகை செலவாகிறது. சமரசமின்றி தரமான காகிதத்தில், தேர்ந்த வடிவமைப்பு நேர்த்தியில் முழுவண்ணமாக இவ்விதழ் அச்சாகிறது. முன்பக்க ஓவிய அச்சு பின்பக்கம் பதியாதவாறும், பல ஆண்டுகள் வரைக்கும் ஓவியங்கள் நிறமிழக்காமலும் நீடிக்க அச்சுக்காகித தேர்வு என்பது மறுதலிக்க முடியாத அவசியத் தேவையாக மாறிவிட்டது.
ஒருசில கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர்களிடம் வரைந்துபெற்று அச்சாக்க முயலும்போது அவர்களுக்கான அடிப்படை ஊதியச்செலவு எங்களால் தொடர்ந்து அளிக்கக்கூடியதாக இல்லை. ஆகவே, தும்பி இதழுக்காக ஒரு ஓவியரைத் தொடர்ந்து தக்கவைக்க இயலாத சூழ்நிலைதான் யதார்த்தமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்த அழுத்தங்களை வென்றுகடந்து தும்பியை குழந்தைகளிடம் சென்றுசேர்ப்பிக்க நண்பர்களிடம் உதவிகளையும் கடனையும் தேடித்திரட்டியே சாத்தியப்படுத்துகிறோம். தாமதம் ஏற்பட்டாலும்கூட, பிரதிமாதம் இவ்விதழை வெளியிடுவது என்பதே பெரும் சவாலாகத்தான் இன்றளவும் உள்ளது.
இத்தகைய நெருக்கடிச்சூழலிலும்கூட, தும்பி இதழை தெலுங்கு மொழியில் வெளியிடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு சிலமாதங்களாக தெலுங்கில் தும்பி இதழ் வெளியாகி வருகிறது. மேலும், விழித்திறனற்ற குழந்தைகள் விரல்தடவி வாசித்தறியும் பிரெய்ல் அச்சுமுறையிலும் தும்பியின் சில கதைகள் அச்சாக்கப்பட்டு இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. ‘கண்பார்வையற்ற பிள்ளைகளுக்கான ப்ரெய்ல் மாத இதழ்’ எனும் தீராக்கனவு இன்னும் பரிசோதனை முயற்சி என்றளவிலேயே நீடிக்கிறது. இந்தியச் சூழலில் வடிவமைப்பு, அச்சாக்கம் எனும் செயற்பாடுகளின்வழி நாம் நினைத்த கலை – அழகியல் வெளிப்பாடுகளை அடைவதற்கு அதற்குரிய தொகையை தந்தாகவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது.
தும்பி இதழ் துவங்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகிவிட்ட சூழ்நிலையில், அவ்வப்போது பெரும் கடன் நெருக்கடிகளை ஏற்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக நீடிக்கிறது. இதற்குமுன்பு, அதுபோலான இரு இக்கட்டுச் சூழ்நிலைகளில் பொதுவெளியில் ‘மீண்டெழ’ எனும் உதவிகேட்பு வாயிலாக நண்பர்களின் ஒருமித்த துணைநிற்றலும் உதவியளிப்புமே எங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறது.
தற்போது, தும்பி இதழ் அத்தகையதொரு பெரும் கடன்சுமையை மீண்டும் எட்டியிருக்கிறது. தொகை ரீதியாக இதுவும் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றுதான். தும்பி இதழுக்கான சந்தா எண்ணிக்கையும் நினைத்தவாறு கைகொடுக்கவில்லை. தமிழ் வாசிப்புலகில் சிறார் இதழுக்கு இது நேரக்கூடியதுதான் என்பதே பொதுவிதியாக உள்ளது. அண்டைய மாநிலமான கேரளாவில் குழந்தைகளுக்கு அத்தனை சிறார் இதழ் முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்கின்றன. ஆனால், தமிழில் ஒவ்வொரு சிறாரிதழும் தன்னிருப்பைத் தக்கவைப்பதற்குப் பேராடுவதே வழமையாகிவிட்டது. ஆனாலும், தும்பி இதழ் கூட்டுழைப்பின் பகிர்வாலும், நம்பிக்கை கொண்ட மனிதர்களின் நல்லுதவியாலும் தன் பற்றுக்கொடியை இக்கணம்வரை பற்றிக்கொண்டு வளர்ந்துவருகிறது.
ஆனந்த விகடன் போன்ற முன்னோடி நிறுவனங்கள் சுட்டி விகடன் போன்ற சிறந்த இதழ்களை நிறுத்திவிடுவதும், கோகுலம் போன்ற நெடுங்கால இதழ்கள் உரிய சந்தாக்கள் இல்லாததால் கைவிடப்படுவதும் தமிழ் இதழியலில் சமகால யதார்த்தம். இந்தப் பொருளாதார அழுத்தங்களைத் தாங்கியே தும்பி இதழும் தத்தளித்து ஒவ்வொருமுறையும் கரைசேர்கிறது. இம்முறையும் கரைசேர நண்பர்கள் கரமிணைவு ஒன்றுதான் உறுதுணை என்று நாங்கள் நம்புகிறோம். மீளமீள பொதுவெளி உதவிகளின் வழியே அச்சில் சாத்தியமாகும் இத்தகைய இதழ் முயற்சிகள் அடுத்த தலைமுறையிலாவது அரசாங்கப் பங்களிப்புடன் நிகழவேண்டும் என்கிற கனவும் தவிப்பும் எஞ்சுகிறது.
எனவே, நண்பர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியளிப்பு தும்பிக்கு நிகழ்ந்தால் சமகால பொருளியல் இடர்களிலிருந்து மீட்சியடைந்து தொடர்ந்து அச்சாகும் வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் அத்தனை அரசுப்பள்ளிகளும் குழந்தைகள் சார்ந்த நலனமைப்புகளும் உள்ளன. ஆகவே, அத்தகைய பள்ளிக் குழந்தைகளுக்கு தனித்தனியாக தும்பி இதழ் சென்றடைய, இயன்ற தோழமைகள் அனைவரும் உதவ வேண்டுகிறோம். ஓரிரு சந்தாக்கள் என்றளவினைத் தாண்டி ‘கூட்டுச்சந்தா’ என்ற முன்னெடுப்பு மூலம் பள்ளிகளுக்கோ சிறாரமைப்புகளுக்கோ மொத்தமாக தும்பி இதழ்களை வழங்கும் முயற்சிக்கு எல்லோரின் பரிந்துரையையும் வேண்டுகிறோம். நிதிப்பங்களிப்பு செய்தவரின் பெயரிலேயே இதழ்களை குழந்தைகளிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பினையும் இத்துடன் உறுதியளிக்கிறோம்.
நன்கொடை வாயிலாக தும்பி இதழுக்குத் துணைநிற்கும் நண்பர்களின் பேருதவியை வேண்டிநிற்கிறோம். தனிநபராகவோ நிறுவனப் பங்களிப்பாகவோ தும்பிக்கு நிதியளிக்க 80G வருமான வரிவிலக்கு சான்றிதழ் குக்கூ காட்டுப்பள்ளி வங்கிக்கணக்கில் நடைமுறையில் உள்ளது. ஆகவே, கூட்டுச்சந்தா முறையிலோ அல்லது குக்கூ குழந்தைகள் இயக்கத்திற்கான நிதப்பங்களிப்பு மூலமாகவோ தோழமைகள் தங்கள் உதவிக்கரத்தை அளிக்கலாம். பெற்றடையும் ஒவ்வொரு சிறுதொகைக்கான நன்றிக்கடனையும் நிச்சயம் செயல்வழியாக நிறைவேற்றக் காத்திருக்கிறது தும்பி.
குக்கூ காட்டுப்பள்ளி, தன்னறம் பதிப்பகம், தும்பி சிறார் இதழ் வெளியீடு உள்ளிட்ட முன்னெடுப்புகளின் மூலம் திரள்கிற தொகை அனைத்தும் பல்வேறு நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது என்பதையும் அறியச்செய்ய விரும்புகிறோம். அதாவது, தன்னறம் இலக்கிய விருது, குக்கூ முகம் விருது ஆகிய இலக்கிய நிகழ்வுக்கான விருதுத்தொகை மற்றும் நிகழ்வுச்செலவுகள், மூத்த எழுத்தாளர்களின் நெருக்கடிச்சூழலில் உதவிபகிர்வது, விலையில்லா புத்தகப் பிரதிகளை வாசகர்களுக்கு அனுப்புவது… இம்மாதிரியான அகநிறைவுச் செயல்பாடுகளுக்கே நாங்களடைகிற பொருளியல் தொகைகள் கரைகின்றன. எனவேதான் மீளமீள உதவிகளின் நீட்சியைச் சார்ந்தே நாங்கள் இயங்கவேண்டியுள்ளது.
பூந்தளிர் எனும் சிறார் இதழை தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவு இல்லாத முந்தைய காலகட்டத்திலும்கூட, வாண்டுமாமா மிகச்சிறந்த அச்சு இதழாகக் கொண்டுவந்தார். இன்றிருக்கும் பல ஆளுமைகளின் முதல் ஈர்ப்புவாசிப்பு பூந்தளிரில் துளிர்த்தது. துணை ஆசிரியராக, ஓவியராக, இதழ் வடிவமைப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக, இன்னும் எத்தனையோ பங்களிப்பின் வாயிலாக பூந்தளிர் இதழின் தொடர் வருகைக்காகத் தன்னை முற்றளித்துக் காற்றில்கரைந்த வாண்டுமாமாவின் அர்ப்பணிப்பினை தொழுது வணங்கி தும்பி இதழ் தொடர்ந்த அச்சில் நிகழ உங்கள் உதவியைப் பணிவுடன் வேண்டுகிறோம். வாண்டுமாமா போன்ற பேராசானின் சொற்களை எங்களின் இந்தக் கையேந்தலும் காப்பாற்றி நிறைவேற்றும் என தீர்க்கமாக நம்புகிறோம்.
தோழமைகள் தும்பி இதழுக்குத் துணைநில்லுங்கள்!
~
தும்பி கூட்டுச்சந்தா நிதிப்பங்களிப்புக்கான விபரங்கள்:
தும்பி ஆண்டுசந்தா (தமிழகம்) : ரூ 1000
தும்பி சந்தா (பிறமாநிலம்) : ரூ 1250
THUMBI
Current A/c no: 59510200000031
Bank Name – Bank of Baroda
City – ERODE
Branch – Moolapalayam
IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)
Gpay : 9843870059
—
80G வருமான வரிவிலக்கு பெறும் நிதிப்பங்களிப்புக்கான விபரங்கள்:
Cuckoo
Account no : 6762513706
Bank : Indian Bank
Branch : Singarapettai
IFSC code : IDIB000S062
MICR code : 635019022
(For clarifications please mail to [email protected] or call on +91 82702 22007)
~
நன்றிகளுடன்,
தும்பி சிறார் இதழ்
9843870059