இறுதியாத்திரை, ஒரு சித்திரம்

எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழ்விக்கி

அன்பின் ஜெ,

வணக்கம்.

எண்பதுகளின் இறுதியில் கணையாழியில் வெளிவந்த உங்களின் “நதி” சிறுகதை (சிறுகதைகள் தொகுப்பில் இருக்கிறது) எனக்கு மிகப் பிடித்த, மனதின் ஆழத்தில் பதிந்த ஒன்று. நான் அச்சிறுகதையை 97 ஜனவரியில் அம்மாவின் இறப்பிற்குப் பின்னர்தான் படித்தேன். கதை வெகு நிதானமாக, அமைதியான நதி போல்தான் நகர்ந்தது. ஆனால் அது பிரத்யேகமாக எனக்குள் ஏற்படுத்திய மனக் கொந்தளிப்புகளும், பின்னோக்கிய நினைவுப் பயணமும்… அந்தக் கனத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம் ஜெ.

அம்மாவின் அஸ்தியை பெரியப்பா வெங்கடாசலபதியுடன் சென்று திருப்புவனம் வைகை ஆற்றில்தான் கரைத்தோம். ஊரில் அம்மாவை எரியூட்டிய சாம்பலிலிருந்து எடுத்துவந்த சில எலும்புகளை ஆற்றோரத்தில் முன்னே இலையில் பரப்பி அய்யர் ஏதோ மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். வீட்டின் மூத்த பையனான எனக்கு அப்போது 26 வயது. நான் வேஷ்டி கட்டி மேல் சட்டை இல்லாமல் அய்யர் எதிரில் நிச்சலனமாய் உட்கார்ந்திருந்தேன். எலும்புகள் பார்த்து “இதுதான் அம்மாவா?” என்ற கேள்வி எழுந்தது; “எது அம்மா?” என்ற கேள்வி தொடர்ந்தது. அம்மாவின் நினைவுகளால், ஒரு கணத்தில் மனதின் பாரம் தாங்கமுடியாமல் கண்கள் நிறைந்து விம்மியபோது பெரியப்பா தோள் பிடித்துக் கொண்டார். “நதி” சிறுகதை என் மனதில் உண்டாக்கிய சலனங்கள் இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் இன்னும் பசுமையாய் இருக்கிறது.

சமீபத்தில் எம்.டி-யின் “இறுதி யாத்திரை” வாசித்தேன் (தமிழில் கே,வி, ஷைலஜா; வம்சி புக்ஸ் வெளியீடு). எம்.டி-யின் வழக்கமான, அடங்கிய, நிதானமான, ஆழம் காட்டும், கவித்துவ அனுபவம் உணர்த்தும் எழுத்து, “இறுதி யாத்திரை”-யிலும் சிறப்பான வாசிப்பனுபவம் தந்தது. ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு அணுக்கமாயிருந்தது.

“இறுதி யாத்திரை”-யில் அப்பாவின் மரணம், அதீதசோகத்தையோ துயரங்களையோ உண்டாக்குவதில்லை. ஆனால் வடக்கேடத்து நாலு கெட்டு வீட்டில் நடைபெறும் அந்த மரணம்/இழப்பு, உயிர் பிரிந்த உடல் இறுதிச் சடங்குகளுக்காக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அப்பொழுதில், அது உருவாக்கும் பின் நினைவுகள், மௌனத்தின் சலனப் படங்களாய் எம்.டி-யின் எழுத்தில் விரியும்போது, “இறுதி யாத்திரை” மறக்க முடியாத நாவலாகிறது.

நாணு நாயர் தன் 71-ம் வயதில் இறந்துவிட்டார். இறுதிக் காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரின் மகன்கள் நான்கு பேரும் முறை வைத்துப் பார்த்துக்கொண்டார்கள். டாக்டர் இனி மருத்துவத்தினால் பயனில்லை, வீட்டிற்குக் கொண்டு செல்லலாம் என்று சொல்லிவிட, சொந்த ஊரில் நாலு கெட்டு வீட்டிற்கு மாற்றப்பட்டார். சில நாட்களிலேயே, மேலும் அதிகம் அவதிப்படாமல் இறந்து போனார். இறுதிச் சடங்குகளுக்காக அவரின் நான்கு மகன்களும் வெவ்வேறு ஊர்களிலிருந்து சொந்த கிராமத்திற்கு வருகிறார்கள். ஒரு நாயர் இறப்பு வீட்டின் ஈமச்சடங்குகளூடே, மகன்கள் ஒவ்வொருவருக்குமான பின் கால நினைவுகளாக நாவல் விரிகிறது.

அப்பா பல பணிகள் செய்தவர்; ஸ்கூல் வாத்தியாராயிருந்தார்; பின்னர் பாலப்பள்ளி ரப்பர் தோட்டத்தில் கிளெர்க்காக வேலை செய்தார்; அங்கிருந்த போஸ்ட் ஆஃபீஸையும் பார்த்துக்கொண்டார். சிலோனுக்குச் சென்று வணிகம் செய்தார். சாத்துக்குட்டி மாமா அவரின் நண்பர்.

நான்கு மகன்களில் மூத்தவர் குட்டேட்டன். அவரின் மனைவி தேவு; வீட்டின் முதல் மருமகள். குட்டேட்டனின் தம்பிகள் மூவருக்கும் தாய் போன்றவள். இரண்டாவது மகன், ராஜன் நாயர். சமன்லால் பாய் சேட்டின் “சமன்லால் சன்ஸ் டொபேக்கோ” கம்பெனியில் எழுத்தராக வேலை செய்கிறார். மூன்றாவது மகன் வடக்கேடத்து அப்பு; ரயில்வே கிளார்க். அப்புவின் மனைவி ஹேமா. இளையவர் உண்ணி, ஒரு டுடோரியல் காலேஜில் ஆசிரியராக வேலை செய்தார்; தற்போது பிரலமான எழுத்தாளர். எழுத்தாளருக்கு கொச்சு குட்டியின் மேல் காதலுண்டு.

அப்பாவின் தங்கை ஒருவரை (அப்புவின் மனைவி ஹேமாவின் அம்மா) மணந்த மாதவன் மாமா, ஊரே பயந்து கொண்டிருந்த கேடி மம்மாலியையே அடித்துத் துவைத்து பிரபலமானவர். அப்பா, மாதவன் மாமாவிற்கு சிலோனில் இருந்தபோது அங்கு வேலை வாங்கித் தந்தார். ஆனால் அதன்பிறகு சில வருடங்களிலேயே இருவருக்கும்மன விலகல்.

அப்பாவிற்கு சிலோனில் “அடிகண்ணாவ”-வில் ஒரு குடும்பமுண்டு; மனைவியும், மகள் லீலாவும். சிலோனில் முப்பது வருடமாக வசிக்கும் குஞ்ஞிமங்கலத்து குரூப்பு, கணக்கு எழுதுபவராக அப்பாவிடம் வேலை செய்கிறார். ராஜன் முன்னர் வேலை தேடி அப்பாவைப் பார்க்க சிலோன் சென்றபோது குரூப்பைச் சந்தித்திருக்கிறார்.

*

ராஜனுக்கு அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. நாவல் இப்படித் துவங்குகிறது…

கண்ணீர் ஊற்றுகளை அடக்கி நினைவுகளில் அடங்காத அகலங்களைப் பார்த்தபடியிருந்தான். இந்த யாத்திரையைப் பற்றி பின்னொரு நாளில் எழுத நினைக்கும்போது உண்ணி எப்படியான சொற்களை இட்டு நிரப்பப் போகிறான்…#

வெங்கி

“இறுதி யாத்திரை” – எம்.டி. வாசுதேவன் நாயர்

மலையாளத்திலிருந்து தமிழில்: கே.வி. ஷைலஜா

வம்சி புக்ஸ் வெளியீடு

முந்தைய கட்டுரைமதி வழிப்பயணம்- “ஜீன் மெஷின்” நூலை முன்வைத்து
அடுத்த கட்டுரைஇளந்தமிழன்