இவான் இல்யிச்சின் மரணம், கடிதம்

அன்பின் ஜெ,

வணக்கம்.

மரணம் குறித்தான பயமும், அது சார்ந்த கேள்விகளும்தான் என் தேடலைத் துவக்கிய முக்கியப் புள்ளிகளாய் இருந்தன. யோசித்துப் பார்த்தால், “சுய மரணம்” கூட அல்ல, நாம் மிகுந்த பிணைப்பு கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்/அன்பைப் பெறும் ஒருவரின் சட்டென்ற “இல்லாமை” ஏற்படுத்தும் வெற்றிடம், தாங்க முடியாத மன அழுத்தத்தையும், அச்சூழலை நேருக்கு நேர் சந்திக்க முடியாத அதிர்வையும், சூன்யத்தையும், “இது என்ன?” என்ற கேள்வியையும், “இனிமேல் என்ன?” என்ற விரக்தியையும், அதுவரை வாழ்வைப் பற்றி, கொண்டிருந்த வரையறைகளையெல்லாம் சிரிப்பாக்கி, பொசுக்கி முற்றிலும் வேறு கோணத்தில், மாற்றுப் பாதையில் பயணப்பட வைக்கிறது.

அப்பா இறந்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (அம்மா இன்னும் 30 வயதைக்கூட எட்டவில்லை). அப்போது கிராமத்தில் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி) வசித்தோம். நள்ளிரவில் அப்பாவின் உடல், மதுரை இராஜாஜி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது நானும், தம்பிகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்தோம். மலங்க, மலங்க விழித்துக்கொண்டு அழுகையில் கரைந்த அந்த இரவு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்பா இல்லாத வெற்றிடத்தை அம்மா அன்பின் திடத்தைக் கொண்டு சாதுர்யமாக நிரப்பியதால் அந்த வயதில், அப்பாவின் இழப்பு அதிகமாய் அதிர்வுண்டாக்கவில்லை.

வளர, வளர, எங்கள் மூவரையும் வளர்த்துப் படிக்க வைக்க, அம்மா படும் கஷ்டங்களைப் பார்த்து, மூத்த பையனாகிய நான் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய் சம்பாதித்து அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொளவேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தேன். கல்லூரி முடித்து, 23 வயதில், ஓசூரில் முதல் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே அம்மா நோய்வாய்ப்பட்டார். செங்கப்படை அரசுப்பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்த அவர் (அப்பா இறப்பிற்குப்பின் அவருக்குக் கிடைத்த வேலை), வார இறுதிகளில் சிகிச்சைக்கு மதுரை வந்து போய்க்கொண்டிருந்தார். நோய் முற்ற, மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டியதாயிற்று. தம்பி சத்யன் உடனிருந்தான். இன்னொரு தம்பி மூர்த்தி அப்போது பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தான்.

நான் ஓசூரிலிருந்து இரு வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மதுரை மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அம்மாவினால் சரியாகப் பேசமுடியவில்லை. இரண்டாம் நாள் படுக்கையிலிருந்த அம்மா “வேலையெல்லாம் எப்படியிருக்கு? ஒழுங்கா சாப்பிடறயா? கஷ்டமாருந்தா வந்துருப்பா. வீட்ல இரு. மெதுவா வேற வேலை தேடிக்கலாம்” என்றார். எனக்கு கண்கள் நிறைந்து உடைந்து அழ வேண்டும் போலிருந்தது. பக்கத்தில் தம்பி இருந்ததால் அடக்கிக் கொண்டேன். முந்தைய நாள் முன்னிரவில்தான், ராஜாஜி மருத்துவமனையின் மொட்டை மாடியில் அம்மாவின் நிலையை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதால் கலங்கி தோளில் சாய்ந்து அழுத சத்யனைத் தேற்றியிருந்தேன்.

அம்மா கொஞ்சம் தேறி, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவசரத்திற்கு மறுபடியும் மருத்துவமனை செல்லவேண்டுமென்றால், வசதியாயிருக்குமென்று, தல்லாகுளத்தில் மாமா வீட்டில் இருந்தார். சத்யனை உடன் விட்டுவிட்டு நான் ஓசூர் திரும்பினேன்.

1997 ஜனவரி 1; மார்கழியின் இன்னும் புலராத அதிகாலை. மணி இரண்டு/இரண்டரை இருக்கும். அலுவலகத்தின் இரவு காவல்காரர் கதவு தட்டி மதுரையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக சொன்னார்.

பெரும் இருள் சூழ்ந்த, சூன்யத்தில் நடமாடிய, அதன்பின்னான நாட்களை/மாதங்களை, இப்போது நினைத்துப் பார்க்கவும் பயமாக இருக்கிறது. பல நாட்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இப்போதும் பேருந்தில் மதுரை கோரிப்பாளையம் கடக்கும்போதெல்லாம், ராஜாஜி மருத்துவமனையைப் பார்க்கும்போது, கண்கள் நிரம்பும். அந்த இரவில் என்ன நடந்தது என்பதை சத்யனிடம் முழுமையாகக் கேட்கும் தைரியம் கூட எனக்கில்லை அப்போது. மணி ராத்திரி பதினொன்று/பனிரெண்டு இருக்கும்; மூச்சு விடச் சிரமமாயிருக்கிறதென்று அம்மா சொல்ல, அவசரமாக தல்லாகுளத்தில் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்கள். தல்லாகுளத்திலிருந்து கோரிப்பாளையம் செல்லும் சாலையெங்கும் புது வருடப் பிறப்பின் கொண்டாட்ட வண்ண விளக்குகள்…மருத்துவமனை சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வருவதற்குள் அம்மா அடங்கி காலத்தில் கரைந்திருக்கிறார்.

“இவான் இலியிச்சின் மரணம்” எழுதப்பட்டு 135 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னும், இன்னும் அது புத்தன்மையோடு, நிகழ்காலத்தின் உணர்வாகத்தான், மனஓட்டமாகத்தான், சிந்தனையாகத்தான், ஒளியில் பிரகாசிக்கிறது.  இனிமேலும் வரும் நுற்றாண்டுகளிலும் அதன் வெளிச்சம் சிறிதும் மங்காது என்றுதான் நினைக்கிறேன். பேராசிரியர் ந. தர்மராஜ் ஐயாவின் மொழியாக்கம் சிறப்பாக இருந்தது. தளத்தில் தேடி, 2009-ல் பேராசிரியர் பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன்.

கவுன்சிலர் “இலியா கலவீன்”-க்கு மூன்று மகன்களும் ஒரு மகளும். மூத்தவன், அரசின் வேறொரு துறையில் கவுன்சிலராயிருக்கிறான். “இவான் இலியிச்” இரண்டாவது மகன். மூன்றாவது மகன் ரயில்வே இலாகாவில் வேலை செய்கிறான். மகள் கிரேஃப், செல்வம் மிக்க ஒரு பிரபு குடும்பத்தின் கனவானைத் திருமணம் செய்துகொண்டு உயர்குடி மருமகளாகி விட்டாள்.

இவானும், தம்பியும் ஒன்றாக, ஒரே கல்லூரியில்தான் சட்டப்படிப்பு படித்தார்கள். ஆனால், தம்பி படிப்பை முடிக்கவில்லை. இவான் படிப்பை முடித்து, ஒரு கவர்னரின் காரியதரிசியாக வேலைக்குச் சேர்கிறான். இவானின் உற்சாகமான, இனிய சுபாவமும், திறமையும், மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகக்கூடிய தன்மையும் பணியிடத்தில், இவானுக்கு நல்ல பெயரும், மதிப்பும் பெற்றுத் தருகிறது. ஐந்து வருடங்கள் கழித்து, நீதிமன்ற கவுன்சிலின் உறுப்பினராகி, பின்னர் அரசு உதவி வழக்கறிஞராகவும் ஆகிறான். உயர்மட்ட விருந்துகளில் சந்தித்த இளம்பெண் “பிரஸ்கோவியா”வைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான். நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட, இரண்டுதான் தங்கியது. இப்போது ஒரு மகனும், மகளும். மகள் “லீசச்கா”-விற்கு இப்போது 16 வயது. திமித்ரி இவானோவிச்சின் மகன், இளம் விசாரணை நீதிபதி பெத்ரோவிச், லீசாவைக் காதலிக்கிறான். அவனுக்குத்தான் லீசாவைத் திருமணம் செய்துவைப்பதாக ஏற்பாடு. இளையவன் “வசீலி இவானோவிச்” உடற்கல்வி படிப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.

ஃபியோதர் இவானோவிச், இவானின் நெருங்கிய நண்பர்; உடன் படித்தவர். ஷவார்த்ஸ்-ம், ஃப்யோதர் வசீலியெவிச்-சும் கூட இவானின் நண்பர்கள்தான். இயல்பாக போய்க்கொண்டிருக்கிறது வாழ்வு. சில வருடங்கள் கழிந்தபின், இவானுக்கும், மனைவிக்குமிடையில் ஈர்ப்பு குறைந்து, இல்வாழ்க்கை கசப்புகள் நிறைந்ததாக மாறுகிறது. பணியிடத்திலும், தலைமை நீதிபதி பதவிக்கு கோப்பேயுடன் போட்டி போட்டு, தோற்கிறார் இவான். வருமானம், குடும்பத்தை நடத்தப் போதவில்லை. சில காலம்  கிராமத்தில் பிரஸ்கோவியாவின் சகோதரன் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.

மந்திரி சபையில் மாற்றம் வர, அரசுப் பதவியில் இருக்கும் இன்னொரு நண்பர் (கல்லூரியில் உடன் படித்தவர்) ஸஹார் இவானோவிச்சின் உதவியால், அவரின் சட்ட இலாகாவிலேயே இருமடங்கு அதிக மாத சம்பளத்தில் இவானுக்கு வேலை கிடைக்கிறது. ஏற்பாடுகள் செய்துவிட்டு பின்னர் குடும்பத்தை அழைத்துச் செல்லாம் என்று மைத்துனன் சொல்கிறான். மனைவி, குழந்தைகளை கிராமத்தில் விட்டுவிட்டு வேலை கிடைத்த நகருக்குச் சென்று ஒரு வீட்டை வாங்கி, அதன் உள் அலங்காரங்களை மனைவிக்கும், மகளுக்கும் பிடித்த மாதிரி பார்த்துப் பார்த்துச் செய்கிறார் இவான். ஒருமுறை உள்ளறையில் ஏணி வைத்து திரைச்சீலை மாட்டிக்கொண்டிருக்கும் போது ஏணி வழுக்கி விழுந்து இடது விலாப் பகுதியில் சிறிய சிராய்ப்புக் காயம். குடும்பம் வீட்டிற்கு வந்தபின், மனைவியிடம், வீட்டு வேலையின் போது தான் எப்படி வழுக்கி விழுந்தேன் என்று நடித்துக் காட்டி சிரிக்கிறார்.

சில வருடங்கள் கழித்து, சிராய்ப்புக் காயம் உண்டான இடத்தில் மெல்ல வலி துவங்குகிறது. வலி வரும் நேரத்தில் வாயில் கசப்பான உணர்வு. பல டாக்டர்களைப் பார்த்தும் பயனில்லை. நாளாக நாளாக வலி அதிகரிக்கிறது. குணமாகி விடும் என்ற நம்பிக்கையும் ஏமாற்றமுமாக இவானின் நாட்கள் கழிகின்றன. இவான் நோய்வாய்ப்படுகிறார். மருந்துகளினாலும், மனநிலையினாலும் வீட்டிலும், வேலையிடத்திலும் இவானின் செயல்களால் சூழல் துணுக்குறுகிறது. நோயும், மரண பயமும் இவானை அலைக்கழிக்கின்றன. இவான் படுத்த படுக்கையாகிறார். பால்யத்திலிருந்து, தற்போது வரையிலான தன் வாழ்வை மீண்டும் பின்னோக்கிப் பார்க்கிறார். ஆனந்தம் என்பதற்கும், வாழ்வு என்பதற்கும், மரணம் என்பதற்கும், உறவு என்பதற்குமான அவரின் இதுவரைக்குமான கருதுகோள்களில் முற்றிலும் நேரெதிர் மாற்றம் உண்டாகிறது. வேலைக்காரன் கெராஸிம் மட்டுமே அவரின் ஓரே ஆறுதல் இப்போது.

1882 பிப்ரவரி 4-ஆம் தேதி, தன் நாற்பத்தைந்தாவது வயதில் இறந்து போகிறார் “இவான் இலியிச்”. மூச்சு முட்டும் இருட்டுப் பொந்திலிருந்து விடுபட்டு ஒளியை நோக்கி பயணிக்கிறார். அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு…இருளிலிருந்து ஜோதிக்கு…

வெங்கி

“இவான் இலியிச்சின் மரணம்” (குறுநாவல்) – லேவ் தல்ஸ்தோய் (1886)

தமிழில்: பேரா.நா. தர்மராஜன்

ராதுகா பதிப்பகம், மாஸ்கோ/NCBH

முந்தைய கட்டுரைபிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்
அடுத்த கட்டுரை’வெயில்’ மூன்று கவிதைகள், சதீஷ்குமார் சீனிவாசன்