அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆலய கலை பயிற்சி முகாமின் தொடர்ச்சியாக தாராசுரம் ஆலயத்திற்கு களபயிற்சிக்கு சென்று திரும்பிய பின், அஜிதன் அவர்களின் மைத்ரியை மறுபடியும் வாசித்தேன். நாவலில் மைத்ரியின் பிரிவுக்கு பின் ஹரனுக்கு ஏற்படும் உளகொந்தளிப்பு கனவா அல்லது மனபிறழ்வோ என அவன் காணும் காட்சிகளின் நுண் சித்தரிப்புகளின் மூலம் வெளிப்படுகிறது. மழையீர செஞ்சகதியை குருதியோடும் சதைக்கு உவமைபடுத்துவதும், கரிய பாறையில் ஒளிரும் கேதார்நாத் உச்சியை கண்டு மனம் பேதலித்து உவமைக்கு தேடி பின் குருதியொழுகும் யானை தோலை போர்த்த சிகரம் என கண்டடையும் சித்தரிப்பை வாசித்தவுடன், ஜெயக்குமார் அவர்கள் தேவார பதிகத்தின் வரிகளை கொண்டு ஆனையுரித்த பெருமானை உணர்ச்சி பெருக்குடன் விவரித்தது கண் முன் விரிந்தது.
ஹரனின் ஆணவத்தின் இருள் மைத்ரியை தனதென கொண்ட மகிழ்வும், தனதில்லையென்றவுடன் அடையும் துக்கத்தில் தலை அறைந்து உடைக்க பாறைகளை தேடுவதும் என பித்து நிலையின் உச்சத்தை அடைகிறான். அவ்வுச்சத்தில் அவன் காணும் உச்சி ஓளிரும் கேதார்நாத் கரியுரித்த தேவராக காட்சியளிக்கிறார். மலையுச்சியில் குளிரில் உறையும் உடலுடன் அவன் அக்காட்சியைக் கண்டு அவன் அகம் தன்னை கண்டுகொள்கிறது. ஓநாய்களால் குதறப்பட்ட சதையென அவன் அகம் விரிந்து
”திசையெங்கும் விரிந்து ஆயிரம் நாவால் என்னை சுவைத்தேன்.”
என அவன் நினைக்கும் போது, மைத்ரியின் குரல் என்னையும் உதறி செல்வாயா? நான் அல்லாமல் நீ யார்? என கேட்கிறது.
அவன் பித்தின் உச்சியிலிருந்து கீழிறங்குகிறான். அவன் மலையிறங்கி உறைந்த் உடலுடன் கௌரிகுண்ட் நோக்கி செல்லும் வழியில் மந்தாகினியின் அணைப்பில் உள்ள வெந்நீர் குளத்தில் அவன் இறங்க அவன் உறைந்த உடல் வெம்மை கொள்ளும் போது, அவன் கண்ணீருடன் புன்னகைக்கிறான். ஜெயக்குமார் ஆனையுரித்த தேவரை பற்றிய பதிகத்தில்
” விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்துமை அஞ்சக்கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே”
பெருமானின் ஆனையுரித்த் கோலத்தை கண்டு அச்சபடும் தேவியை புன்னகையுடன் பார்க்கும் தேவரை சிற்பத்தில் வடிக்கபட்டிருப்பதை கூறினார். பாதி உக்கிரமான முகமும் , தேவியை பார்க்கும் பக்கம் புன்னகையுடன் அமைந்த முகமும் என. சிற்பம் ஆலயத்திலிருந்து தஞ்சை கலைகூடத்திற்கு சென்றுவிட்டதால், அவர் குடவாயில் அவர்களின் தாராசுர ஆலயத்தை பற்றிய நூலிலிருந்து படங்களை சுட்டி விவரித்தார்.
இலக்கியத்திலிருந்து ஆலயத்திற்கும், பின் சிற்பத்தில் இருந்து இலக்கியத்திற்கு வந்த கரியுரித்த தேவரின் படிமம், நம் ஆழ்மனம் செயல்படும் வழியையும், ஆலய படிமங்களின் முக்கியத்துவத்திற்கு சான்று.
அன்புடன்
ஆனந்தன்
புனா
அன்புள்ள ஆனந்தன்
இந்தியச் சிற்பவியல், ஆலயக்கலை ஆகியவற்றை அறிந்துகொள்ளுதல் உண்மையில் நம் ஆழ்மனதை ஆக்கியுள்ள படிமங்களை அறிதலே. அது கலைகள், இலக்கியம் மீதான நம் பார்வையையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்துவிடும்.
வளர்க
ஜெ