எழுகதிர் வாங்க
எழுகதிர் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
உங்களுடைய மாயப்பொன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை எனக்கு கொடுத்த உங்களுக்கு என்னால் மட்டும் எழுத முடிந்திருந்தால் குறைந்த பட்சம் நான் நினைப்பதை நல்ல முறையிலாவது எழுதிக் கொடுத்திருப்பேன்.
என் வேலையை செய்வதால் மட்டும் தான் நான். இந்த வேலையை செய்ய வில்லையென்றால் அது நான் இல்லை, என்று நான் செய்கிற வேலை மீது கிறுக்கு கொண்டவன் என்கிற முறையில் எனக்கு இந்தக் கதை மிக ஆழமாக connect ஆனது.
நீங்கள் நான் வாசித்த வரையில் குறைந்த பட்சம் ஒரு பத்துக் கதைகளாவது ஒரு அசாத்திய படைப்பாளியாக இருப்பதை பற்றி அல்லது ஒரு படைப்பாளியின் மனதைப் பற்றி நீங்கள் எழுதி இருப்பீர்கள். ஆனால், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.
மாயப்பொன் கதை மட்டும் ஒருவேளை ஒரு வேளை ஒரு மனிதனாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டால், அது உங்களிடம் இப்படி சொல்லும்,
“நீயே நினைத்தாலும் என்னைப் போன்ற இன்னொரு கதையை எழுத முடியாது” என்று.
நான் உங்கள் படைப்புதிறனை சீண்டுவதற்கு இதைச் சொல்லவில்லை. உங்களை என் ஆசிரியராக பல முறை நினைத்திருக்கிறேன். அதனால், உங்களை வணங்கி மிகத் தாழ்மையுடன் சொல்கிறேன். உங்களின் மிகச் சிறந்த படைப்பு இந்தக் கதை தான்.
இந்தக் கதை வசிப்பதற்கு முன்பு இன்று 10 மணி வரை கொற்றவை தான் உங்களது சிறந்த படைப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதனால் என் மதிப்பீடுகளை serious ஆக எடுத்துகொள்ள வேண்டாம். ஆனால், இந்த வார்த்தையை இந்தக் கதைக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.
நான் நன்றாக வேலை செய்தும், நான் செய்த வேலைகளை அவர்கள் செய்ததாக சொல்லி அதன் மூலம் பலன்களை பெற்றுக் கொண்டும், என் பதவி உயர்வை என் உயர் அதிகாரிகள் தாமதப்படுத்துவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அதிலிருந்து வெளியேற நேற்று தான் ஒரு திட்டமிட்டேன். இன்று அந்த திட்டப்படி செயல்பட தொடங்கினேன். உறங்கப் போகும் முன் தான் இந்தக் கதையை படித்தேன்.
சாகப்போனவன் ராஜா பாடலைக் கேட்டு சாவை விட்டு வந்தான் என்று சொல்வதுண்டு அது போல இந்தக் கதை எனக்கு மிகப் பெரிய ஒரு ஆறுதலை. எவனுமே என்னை recognise பண்ணாட்டியும் நான் என் வேலைல கெத்து. Promotion என் success இல்லை, வேலையில்ல இருக்கிற மாயப்பொன்னை அடிக்கிறது தான் என்னோட success ன்னு ஒரு தெளிவோட தூங்கப்பபோறேன்.
விடிந்தவுடன் இந்த motivation மாறிடும் அதனால் இதனை இப்போதே பகிர்ந்து கொள்ள இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்.
மீண்டுமொருமுறை இந்தக் கதையை எழுதிய உங்களுக்கும், இந்தக் கதையை சொல்லி அறிமுகப்படுத்திய பவாவிற்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
சபரிராஜ் பேச்சிமுத்து,
இயந்திரவியல் பொறியாளர்,
கோயமுத்தூர்.
அன்புள்ள சபரிராஜ்
முழுமை என்பது எங்கோ ஒரு புள்ளியில், இயற்கையைப் படைத்த சக்திகளிடம் , உள்ளது. நாம் அதைநோக்கிச் சென்றுகொண்டே இருப்பது வரைக்கும்தான் செயலூக்கம் கொண்டவர்களாக இருப்போம். செயலூக்கமே மகிழ்ச்சி என்பதே நான் கண்டுகொண்டது.
ஜெ