சவார்க்கர், கடிதங்கள்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

ஜெ

வசுமித்ர முகநூல் பதிவு இது. காந்தி படுகொலையில் சவார்க்கர் குற்றவாளி அல்ல. அம்பேத்கர். இதை வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய சவார்க்கர் இரண்டாம் பாகம் வழியே அம்பேத்கார் மீதான புரிதல் தெளிவாகியது. மிகச் சரியான விதத்தில் தர்க்கமும், உள்ளுணர்வும் கலந்த எழுத்து. மிக்க நன்றி.

ராஜகோபால்.

அன்புள்ள ராஜகோபால்

அம்பேத்கருக்கு இந்துமகாசபையுடன் பலவகையிலும் நல்லுறவு இருந்தது. அதெல்லாம் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டவை. அவர்களின் சாதிசார்ந்த பார்வைகள், தேசியம் சார்ந்த பார்வைகள் அவருக்கு உவப்பானவையாக இருக்கவில்லை. இருந்தும் அந்தப் புரிதல் உருவானது அவர்களுக்கிடையே இருந்த நவீனத்துவம் சார்ந்த பொதுவான அம்சத்தால்தான். அது மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு கூறு. அதை தவிர்த்தால் சவார்க்கரைப் புரிந்துகொள்ள முடியாது. 

ஜெ 

அன்புள்ள ஜெ

சாவர்க்கர் பற்றிய கட்டுரையை அதற்குள் அரைகுறையாக வாசித்து, துண்டு துண்டாகப் பிய்த்து, தங்களுக்குத் தோன்றியதை எழுத ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு வேறுவழியே இல்லை. அவர்களை குழப்புவதையே நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அறிந்தவை எல்லாம் ஒற்றைமுத்திரை அடிப்பது. ஏனென்றால் அவர்கள் அதற்கு முன் தங்களுக்கு ஒற்றைமுத்திரை அடித்துக்கொண்டவர்கள். அவர்களால் சிக்கலான, பல தளங்கள் கொண்ட எதையும் புரிந்துகொள்ளவே முடியாது.

சாவர்க்கர் பற்றிய புரிதலில் அவருடைய நவீனத்துவப்பார்வை என்பது ஒரு புதிய அம்சம். அவரிடமிருந்தது அவர் ஐரோப்பாவில் இருந்து பெற்றுக்கொண்ட கலாச்சாரத்தேசியப் பார்வை. அதற்கு இந்து மத கலாச்சார அம்சங்களை அவர் எடுத்துக்கொண்டார். இன்னொரு வகையில் அதைத்தானே மொழித்தேசியம், இனத்தேசியம் பேசுபவர்களும் செய்தார்கள்? சாவர்க்கர் பேசிய வெறுப்பின் மொழிக்கும் ஈ.வெ.ரா பேசிய மொழிக்கும் என்ன வேறுபாடு?

சாந்தராஜ்

அன்புள்ள சாந்தராஜ்,

பொதுவாக இத்தளங்களில் பேசுபவர்கள் ஒரு வெறுப்புத்தரப்பை எதிர்க்கையில் இன்னொன்றின் சார்பில் நின்றிருப்பார்கள். தங்கள் தரப்புக்கான வெறுப்புக்கு வரலாற்று நியாயம் உண்டு, சமூகநியாயம் உண்டு, அது நன்மைதந்த வெறுப்பு என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் ஒரு வெறுப்புத்தரப்பை ஆதரிப்பவர் இன்னொரு வெறுப்புத்தரப்பு செயல்படுவதற்கான நியாயத்தை அளித்து விடுகிறார்.

எந்த விஷயத்துக்கும் வரலாற்று நியாயங்களை உருவாக்க முடியும். அதையே வரலாற்றுவாதம் ( Historicism) என்கிறோம். அவ்வாறு எல்லாவற்றுக்கு வரலாற்று நியாயம் உருவாக்குவதையே நவீனத்துவ சிந்தனையின் அடிப்படை என சொல்லி அதை பின்னவீனத்துவர் நிராகரிக்கிறார்கள். 

என்னைப் பொறுத்தவரை எல்லா வகையான வெறுப்புசார்ந்த பார்வையையும், எல்லாவகையான கலாச்சாரத்தேசியப் பார்வையையும் (மதம் இனம் மொழி எதுவானாலும்) எதிர்ப்பதையே முப்பதாண்டுகளாகச் செய்து வருகிறேன். இந்த தளத்தில் 2002 முதல் தொடர்ச்சியாக அதையே எழுதி வருகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைமழித்தலும் நீட்டலும் -கடிதம்
அடுத்த கட்டுரைஇராவுத்தர் சாஹிபு