அரசியல் விவாதங்களின் எல்லை

அன்புள்ள ஜெ,

முதல் முறையாகத் தமிழில் எழுதுகிறேன்; பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். தங்கள் எழுத்துக்களைக் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதற்கு முன் அதிகமாகத் தமிழில் வாசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. நான் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிவதால் என் இலக்கிய வாசிப்பு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே தொடங்கி முடிந்து விட்டிருந்தது. கிளாசிக்கல் இலக்கியம் என்பதையும் சமகால அரசியல் என்பதையும் வெவ்வேறு பகுதிகளாக மனதிற்குள் compartmentalise செய்து வைத்திருக்கிறேன் என்பதே உண்மை. அதனால் பெரும்பாலும் என் அரசியல் நிலைப்பாடுகளில் ஆங்கிலத்தில் மையநீரோட்ட ஊடகங்களும், அவற்றின் இதழியலாளர்களும் முன்னிறுத்தும் பரப்புரைகளின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஏனோ இவர்கள் அன்றன்றைய அரசியல் நடப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீடித்த கருத்தியல் விசாரணைகளுக்கு அளிப்பதில்லை.

இன்று நாட்டில் பெருகிவரும் அடிப்படைவாத வன்முறையும் அரசியல்-கலாசார polarisation போக்கும் எனக்குக் கவலை அளிக்கின்றன. இந்த ஆபத்தான கருத்தியல்களை எதிர்கொள்ள வலுவான தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதற்கான தளங்கள் குறைந்து வருகின்றன என்றே தோன்றுகிறது. இந்நிலையில்  எளிமையான என் கட்சி vs. எதிர்க்கட்சி என்ற எல்லைகளுக்கு அப்பால் நின்று சாவர்க்கரின் கருத்தியல் வேர்கள் எவ்வாறு ஐரோப்பிய வரலாற்றின் தோல்வியுற்ற சோதனைகளிலிருந்து நீள்கின்றன என்று நீங்கள் விளக்கியிருந்தது எனக்கு ஒரு பெரிய திறப்பாக இருந்தது. வரலாற்றின் ஆழங்களை அறியாமல் எளிதாகப் புறந்தள்ளிவிட்டு இன்றைய சிக்கல்களுக்கு விடைகாண முடியாது என்பது எவ்வளவு உண்மை!  நீங்கள் எழுதியிருப்பது போல நாயக வழிபாட்டு மனநிலையிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

வரலாற்றில் ஈடுபாடு காட்டாத என் தலைமுறையுடனும் பொறுமையாக நீங்கள் நடத்திவரும் இந்த உரையாடலுக்கு நன்றி!

வணக்கத்துடன்,

ஐஸ்வர்யா

*

அன்புள்ள ஐஸ்வர்யா,

நான் எழுதுவதே உங்களைப் போன்ற வாசகர்களுக்காகத்தான். இருபத்துநான்கு மணிநேரமும் அரசியல்சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக அல்ல. அவர்களின் சிக்கல் என்னவென்றால் அவர்களால் புதியதாக எதையும் புரிந்துகொள்ள முடியாது என்பதே. ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த தரப்புகளில் ஒன்றாக எந்தக் கருத்தையும் உடனடியாக மாற்றிக்கொள்வார்கள். அத்துடன் தொடர்ச்சியாக இந்த சர்ச்சைகளில் திளைப்பதனால் அபாரமான தன்னம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த தன்னம்பிக்கையை உடைத்து உள்ளே செல்ல எவராலும் இயலாது.

இது எப்படி நிகழ்கிறது? தொடக்கத்தில் மெல்லிய ஆர்வத்துடன் அரசியல் விவாதங்களைக் கவனிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். ஏதேனும் ஒரு கருத்து அல்லது தரப்பு கொஞ்சம் சரிதானே என நினைக்கிறார்கள். அதைச் சொன்னதும் நாலைந்துபேர் பாய்ந்துவந்து அவர்களை குதறி எடுப்பார்கள். அது இவரைச் சீண்டும். இவருடைய ஆணவம் புண்படும். இவர் தான் சொல்வதை ஆவேசமாக அழுத்திச் சொல்லி, அதுவே சரி என வாதிடுவார்.

இவ்வாறு ஒரு நிலைபாடு எடுத்துவிடுவார். அதன்பின் அந்த நிலைபாட்டை பேணி நிலைநிறுத்தியாக வேண்டிய பொறுப்பு வந்துவிடும். வாசிப்பு, சிந்தனை, பேச்சு எல்லாமே அந்த நோக்கம் கொண்டதாக மாறிவிடும். இவர் நிலைபாடு எடுத்துவிட்டால் உடனே அத்தரப்பைச் சேர்ந்தவர்கள் வந்து இவருக்கு ஆதரவளிப்பார்கள். ஒரு குழுவில் இணைந்துவிடுவார். அதன்பின் அந்நிலைபாட்டை சற்று ஐயப்பட்டால்கூட நண்பர்களே நெஞ்சில் மிதிப்பார்கள். ஆகவே வேறுவழியே இல்லை.

அத்துடன் மனித உள்ளம் விசித்திரமானது. ஒரு வகையில் உலகைப் பார்க்க ஆரம்பித்துவிட்டால் உலகமே அப்படித்தான் தெரிய ஆரம்பிக்கும். அதுவே உண்மை என முழுமையாகவே தோன்றும். அந்த மாயை ஏதேனும் ஒன்று நிகழ்ந்து கிழிபட்டாலொழிய அதிலிருந்து வெளியே வரவே முடியாது. வெளியே வந்ததும் எப்படி அப்படிப்பட்ட மாயையில் மூழ்கியிருந்தோம் என்னும் பெருந்திகைப்பும் உருவாகும்.

நான் ஒரு குறிப்பிட்ட தரப்பைச் சொல்லவில்லை. எல்லா அரசியல் தரப்பும், கருத்தியல் தரப்பும் இந்த மூழ்கடிக்கும் தன்மை கொண்டதே. கருத்தியலின் ஆட்கொள்ளல் என்பது சாமானியமானது அல்ல. நவீன யுகத்தின் மாபெரும் பொதுவெளி விசை என்பது கருத்தியலே. முந்தைய யுகத்தில் அது மதம். அதற்கு முந்தைய காலகட்டத்தில் அது இனம். பின்தொடரும் நிழலின் குரல் என்னும் நாவலே கருத்தியலின் எல்லையற்ற ஆற்றலை விளக்கும் படைப்புதான்.

இந்த மாயைக்குள் இருக்கையில் பல உளப்பிரமைகள் உருவாகின்றன. ‘நான் இருப்பதே சரியான தரப்பு’ என்பது முதல் பிரமை. ‘என்னைப்போலவே பிற அனைவரும் ஏதேனும் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள்’ என்பது இரண்டாவது பிரமை. ‘என் தரப்பை மறுப்பவர்கள் என் எதிரித்தரப்பினராகவே இருக்க முடியும்’ என்பது மூன்றாவது பிரமை. ‘என் தரப்பின் காவலன் நான். அதற்காக போரிடும் பொறுப்பு கொண்டவன்’ என்பது நான்காவது பிரமை.

இப்பிரமைகளில் மூழ்கியிருப்பவர்களிடம் விவாதிக்க முடியாது. அதனால் பயனே இல்லை. எந்த ஒரு கருத்தையும் தன் தரப்பா, எதிரித்தரப்பா என்னும் கேள்வியுடன் அணுகி இரண்டில் ஒன்றாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள். புதிய ஒன்றை அவர்களால் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ அறவே இயலாது. அதை தனக்குத்தெரிந்த மிக எளிய ஒற்றைவரித் தரப்பாக மாற்றிக்கொள்வார்கள். வேறு எவ்வகையிலும் அவர்களால் சிந்திக்கவே முடியாது.

இரண்டுவகையில் அந்த ஒற்றைப்படுத்தலைச் செய்வார்கள்.

ஒன்று: எந்த தரப்பிலும் ஒற்றைவரியை பிடுங்கி அதைக்கொண்டு அந்த தரப்பே அதுதான் என வரையறைசெய்துகொண்டு மேலே பேசுவார்கள். அந்த ஒற்றைவரி பலசமயம் அக்கட்டுரையின் மையத்துக்கு நேர் எதிரானதாகக்கூட இருக்கும். அதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அக்கட்டுரை அதையே சொல்கிறது என ஆவேசமாக நம்புவார்கள்.

இரண்டு: எந்தக் கட்டுரையானாலும், அது எந்த தரப்பை எப்படி தர்க்கபூர்வமாகச் சொன்னாலும் அதன் உள்ளடக்கம் தான் அதற்கு அளிக்கும் ஒற்றைவரி மையம்தான் என வாதிடுவார்கள். ‘அதெல்லாம் பூடகமா நுட்பமா ஒளிஞ்சிருக்கு. நாமதான் அதை வெளியே எடுக்கணும்’ என்பார்கள். ‘அப்டித்தான் சூட்சுமமா சொல்லுவாங்க, அது ஒரு தந்திரம்’ என்பார்கள்.

இது அவர்களுக்கு இருக்கும் அபாரமான தன்னம்பிக்கையின் விளைவு. இதைச் சொல்பவர் தன்னை பிறரைவிட ஒருபடி மேலான சிந்தனையாளர் என நினைக்கிறார். அதாவது ஒரு கட்டுரையை வாசிக்கும் மற்ற எவருக்கும் அதில் ’ஓளித்து வைக்கப்பட்டிருக்கும்’ உண்மையான தரப்பை எடுக்கத் தெரியாது என்றும், தன்னால் மட்டுமே அது முடியும் என்றும், ஏனென்றால் தான் அரிதான ஓர் அரசியல்பார்வை கொண்டவர் என்றும் அவர் நம்புகிறார்.

முதல் கேள்வி, ஓர் அரசியல்கருத்தை ஏன் அப்படி திருமந்திர்ப்பாடல் போல பூடகமாக ஆக்கவேண்டும் என்பதே. அப்படி ஓர் அதிநுட்பருக்கு மட்டுமே தெரியும்படி புதைத்துவைக்க அது என்ன சிவரகசியமா?  முதல்வகையினரை விட இரண்டாம் வகையினரே பெரிய அடிமடையர்கள். ஆனால் இவர்களே அதிகம் பேசுவார்கள். நூல்களைக்கூட எழுதுவார்கள்.

இந்தச் சூழலில்தான் நாம் அரசியல்பேசவேண்டியிருக்கிறது. அரசியலின் அன்றாட நிகழ்வுகள் சார்ந்த முடிவில்லாத விவாதங்களில் எழுத்தாளரோ சிந்திப்பவரோ சிக்கக்கூடாதென்றே நான் நினைக்கிறேன். அது அவர்கள் சம்பந்தமே அற்ற அரசியல்கும்பலுடன் விவாதிக்கும் கட்டாயத்தை உருவாக்கிவிடும். அவர்களுடன் பேசப்பேச அவர்கள் தங்கள் உணர்வுச் சமநிலையை இழப்பார்கள். காலப்போக்கில் வேறேதும் சிந்திக்கவோ செயல்படவோ முடியாதபடி ஆவார்கள்.

அரசியல் அல்லது சமூகவியலில் உள்ள அடிப்படைக் கருதுகோள்களைப் பற்றிய விவாதம் சிந்திப்பவர்களுக்கு தேவை. ஆனால் அதை அவர்கள் அன்றாட அரசியலில் மூழ்கியிருப்பவர்களிடம் செய்ய முடியாது. அரசியல் சார்ந்த கவனம்கொண்ட பொதுவாசகர்களிடமே செய்ய முடியும். நான் மிக அரிதாகவே அரசியல் சார்ந்து ஏதேனும் சொல்கிறேன். அப்போது அந்த வாசகர்களை மட்டுமே கருத்தில் கொள்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகொங்கு மண்டல சதகம்
அடுத்த கட்டுரைExploitative World Hidden in Plain Sight