நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். புதிய வாசகர் முகாமும் உங்களுடன் தங்கிய நாட்களும் உங்களின் ஆற்றொழுக்கான பாடங்களும் வீட்டிற்கு திரும்பிய பிறகும் என்னைப் பல நாட்கள் இயல்பில் இருந்து பிரித்து வைத்திருந்தது. அங்கு குறித்து கொண்ட அத்தனை விஷயங்களையும் குறிப்பேட்டில் இருந்து கணினிக்கு கோர்வையாக மாற்றிக் கொண்டேன். இந்தச் செயலில் என் மனத்துக்குள்ளாகவே ஒருமுறை திரும்ப பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு இலக்கிய வகைமைக்கும் நுட்பத்துக்கும் நீங்கள் கொடுத்த கதைகள் முதற்கொண்டு நினைவில் இருந்து எழுந்து வந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளி வகுப்புகளில் முதல் மாணவன் தான் என்ற போதும் கல்லூரி பாடங்களோ அதன் பிறகான தொழில்முறை படிப்புக்கான வகுப்புகளோ எனது கவனத்தில் இத்தனை ஆழமாக பதிந்ததில்லை. எனது ஆர்வம் தாண்டி உங்களது சொல்முறை முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
அந்தப் பயிற்சி வகுப்புக்கு பிறகு (வாசகர் சந்திப்பு எனச் சொல்வதை விட இது தான் பொருத்தமாக இருக்கிறது) நான் வாசிக்கிற சிறுகதைகள் முதல் வாசிப்பிலேயே அதன் நுட்பம் புரிபடுகிறது. நாம் விவாதித்த கதைகளில் அங்கு வந்திருந்த அறிமுக எழுத்தாளர்களின் கதைகளும் அடக்கம். அதில் என் கதையையும் நீங்கள் வாசித்து அதனை மேம்படுத்தச் சொன்ன குறிப்புகளும் அந்தக் கதையின் மீதான மற்றவர்களின் வாசிப்பும் புதிதாக எழுத வருகிற யாருக்கும் அத்தனை எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அந்த வகையில் மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தக் கதை இந்த வார விகடனில் வெளி வந்திருக்கிறது (அப்படியே அல்ல. சில திருத்தங்களுக்குப் பிறகு) அந்த இணைப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மிக நன்றி, ஜெ!
அன்புடன்,
பிரபாகரன் சண்முகநாதன்
அன்புள்ள பிரபாகரன்
வாழ்த்துக்கள். கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எழுத்தாளன் எப்போதும் எழுதும் மனநிலையில் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்களுடன்
ஜெ