சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

சவார்க்கர் கோழையா?

இன்று சவார்க்கர் அளித்த மன்னிப்புக் கடிதம் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. இதைச்சார்ந்த காங்கிரஸின் பேச்சுக்கள் எளிய கட்சித்தொண்டர்களால் சொல்லப்படுமென்றால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. கொள்கை வகுப்பாளர்களுக்கோ தலைவர்களுக்கோ இன்னும் சற்று விரிவான வரலாற்றுப்புரிதல் தேவை.

சவார்க்கர் சிறைசென்றபோது இந்தியாவில் அரசியலியக்கமே பெரும்பாலும் இல்லை. காங்கிரஸ் உயர்நிலை மக்களின் ஒரு கூடுகையாக, அரசிடம் மன்றாடும் போக்கு கொண்டதாக இருந்தது. சவார்க்கர் பொறுமையிழந்த தலைமுறையைச் சேர்ந்தவர். அன்றைய ஐரோப்பாவில் ஓங்கி ஒலித்தஆயுதக்கிளர்ச்சி வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுதல்பற்றிய கருத்துக்களால் கவரப்பட்டவர். அன்றைய ஐரோப்பாவின் மையப்பேசுபொருளானபண்பாட்டுத் தேசியம்அவரை ஈர்த்தது. ஆகவே அவர் வன்முறை சார்ந்த ஒரு குறுங்குழுக் கிளர்ச்சியை தொடங்கினார்.

சவார்க்கர் ஆயுதக்குறுங்குழு வழியாக ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்னும்  நம்பிக்கை கொண்டிருந்தபோது 1910-ல் ரஷ்யாவில் லெனினும் அதே நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். லெனின் தான் நடத்திவந்த ஆயுதக்குறுங்குழுப் போரை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத்தருணத்தில் ராணுவக்கிளர்ச்சியாக மாற்றிக்கொண்டார். ருஷ்ய ராணுவம் ஜார்மீது கொண்டிருந்த அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டதன் வழியாக, ருஷ்ய ராணுவ ஆதரவை அடைந்து,  ரஷ்யப்பேரரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினார். 

ஆனால் அது அளித்த நம்பிக்கையில் உலகம் முழுக்க பல நாடுகளில் ஆயுதக்குறுங்குழுக்கள் அரசுக்கு எதிராக போராடின. கியூபா போன்ற சில நாடுகளில் மட்டுமே அவை வென்றன. எஞ்சிய நாடுகளில் எல்லாம் அக்குழுக்கள் வேருடன் அழிக்கப்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, காங்கோ, ஸ்பெயின்,பொலிவியா என ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

சவார்க்கர் சிறையில் இருந்தபோது ஆயுதக்குறுங்குழுச் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழந்திருக்கலாம். இந்தியாவில் காந்தி தலைமையில் உருவான மக்களியக்கத்தை கண்டு அதன் செயல்முறைகள் மீது ஈர்ப்பு கொண்டிருக்கலாம். ஆகவே புதிய ஒரு பாதையை தேர்வுசெய்ய எண்ணி பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசமாகச் செல்ல முடிவெடுத்திருக்கலாம்.தன் ஜனநாயகப் பார்வை மேல் பிரிட்டிஷாரின் நம்பிக்கையை கோரியிருக்கலாம். அவருடைய கடிதங்களும் சரி, பின்னர் அவருடைய நடவடிக்கைகளும் சரி அதையே காட்டுகின்றன.

இந்தியாவில் இன்று அதிகாரத்தில் இருக்கும் பல கட்சிகள் பிரிட்டிஷ் ஆதரவு கொண்டவையாக இருந்தவைதான். திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சி முழுக்க முழுக்க பிரிட்டிஷ் ஆதரவு கொண்டது. .வெ.ரா பிரிட்டிஷ் ஆதரவுப் போக்கு கொண்டிருந்தவர். அம்பேத்கர் பிரிட்டிஷாரால் முன்னிறுத்தப்பட்டவர், பிரிட்டிஷ் ஆதரவு கொண்டவராகவே ஏறத்தாழ சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை நீடித்தவர்.  

இந்திய அரசியல் கட்சிகளில் பிரிட்டிஷாருடன் ஏதேனும் ஒரு தருணத்தில் சமரசம் செய்துகொள்ளாத எந்தக் கட்சியும் இல்லைகாங்கிரஸ் உட்பட. காந்தி சௌரிசௌரா வன்முறையை ஒட்டி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக்கொண்டதுகூட சமரசமாக பார்க்கப்பட்டு கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்திய கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷாரை ஆதரித்தனர். 

அரசியல் எப்போதுமே அப்படித்தான். அது போராட்டமும் சமரசமும் மாறி மாறி வருவது. சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.  திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க விட்டுக்கொடுத்தது ஓர் உதாரணம். சவார்க்கரின் மன்னிப்புக் கடிதத்தை நான் அவ்வாறுதான் பார்க்கிறேன். மன்னிக்க முடியாத விட்டுக்கொடுத்தல் என்பது சுபாஷ்சந்திரபோஸ் சயாம் மரணரயிலில் பல லட்சம் தமிழர்கள் ஜப்பானியர்களால் கொடூரமாக வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதை அறிந்தும் ஜப்பானியரிடம் சமரசம் செய்துகொண்டதுதான். (சயாம் மரண ரயில்பாதை )

சவார்க்கர் எனும் அடிப்படைவாதி

சவார்க்கர் ஒரு கோழை என நான் நினைக்கவில்லை. அவருடைய தேசபக்தியை ஐயப்படவில்லை. அவர் தேசத்திற்காக தியாகம் செய்தவர் என்பதை மறுக்கவுமில்லை. ஆனால் அவர் எவ்வகையிலும் ஏற்கமுடியாத அரசியல்வாதி என்றே மதிப்பிடுகிறேன். அது அவருடைய வரலாற்றுப் பார்வையாலும் அவருடைய அரசியல் நடைமுறையாலும் அவர்மேல் வைக்கத்தக்க மதிப்பீடு.

சவார்க்கர் ஒரு அடிப்படைவாதிஎந்தவகையான அடிப்படைவாதமும் (Fundamentalism) ஜனநாயகத்திற்கு நேர் எதிரானதுதான். அது மக்களின் நல்வாழ்வுக்கு எதிரானது, அறுதியில் அழிவை மட்டுமே கொண்டுவருவது. மதம், சாதி, மொழி, இனம், தேசியம் எதைச்சார்ந்த அடிப்படைவாதமும் அழிவுச்சக்தியே. 

எல்லா அடிப்படைவாதமும் நடைமுறையில் ஒன்றே. ஏனென்றால் அடிப்படைவாதம் மக்களின் நல்வாழ்க்கையை விட மேலானதாக ஒரு கருத்துருவத்தை முன்வைக்கிறது. அந்தக் கருத்துருவத்தை நிலைநிறுத்த எத்தனைகோடி மக்கள் செத்தாலும் சரியே என வாதிடுகிறது. கூசாமல் கோடிக்கணக்கானவர்களை பலிகொள்கிறது. வரலாறு திரும்பத் திரும்ப அதையே காட்டுகிறது

அடிப்படைவாதம் என்றால் என்ன? ‘ஒரு கருத்துருவத்தை மையப்புள்ளியாகக் கொண்டு, அதை நிலைநாட்டும் பொருட்டு செய்யப்படும் பண்பாட்டு, அரசியல் செயல்பாடுகளையே அடிப்படைவாதம் என்கிறோம்’.  

அடிப்படைவாதத்தின் இயல்புகள் சில உண்டு

. அடிப்படைவாதம் அந்த கருத்துருவ மையப்புள்ளியை ஐயத்திற்கே அப்பாற்பட்ட ஒன்றாக, புனிதமானதாக நிலைநிறுத்தும். அதை மறுப்பவர்களை அல்லது ஏற்காதவர்களை எதிரிகளாகக் கட்டமைக்கும். அந்த எதிரிகளை அழிக்க முற்படும். எப்போதுமே அது எதிரிகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். எதிரிகளுக்கு எதிரான செயல்பாடாகவே தன் அனைத்துப் பணிகளையும் வகுத்து வைத்திருக்கும். அதற்கு நேர்நிலைச் செயல்பாடே இருக்காது.  

. அடிப்படைவாதம் தன் கருத்து மையத்தின் சரியான பிரதிநிதிகள் என சிலரை முன்வைக்கும். அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும். அவர்களை திருவுருக்கள் ஆக்கும். அவர்களை முழுக்க நம்பி கொண்டாடும்படி அறைகூவும்.  

. அடிப்படைவாதம் எப்போதும் தன் மையக் கருத்துருவத்தை மதம், இனம், மொழி என பழமையான பண்பாட்டு மரபில் இருந்தே எடுத்துக் கொள்ளும். அவற்றுக்கு புனிதத்தன்மையை உருவாக்கும். ஆகவே அவற்றை மறுக்கமுடியாதவையாக ஆக்கும். 

இம்மூன்றின் விளைவாக அடிப்படைவாதம் தன்னளவிலேயே ஜனநாயகத்திற்கு எதிரானது. ஏற்பும் மறுப்புமான விவாதத்தன்மை ஜனநாயகத்தின் அடிப்படை. நிராகரிப்பதற்கான உரிமையை ஒவ்வொருவருக்கும் அளிப்பதே ஜனநாயகம். அனைத்தையும் உள்ளடக்குவதும், அனைத்து முரண்பாடுகளும் ஒன்றோடின்று விவாதித்து முரணியக்கமாக ஆவதுமே ஜனநாயகத்தின் செயல்பாடு. அடிப்படைவாதம் அதற்கு நேர்மாறானது.

இந்தியாவில் ஜனநாயகத்தின் மையப்புள்ளி என காந்தியைச் சொல்லலாம். நேர் எதிராக அடிப்படைவாதத்தின் மையப்ப்புள்ளி என சவார்க்கரைச் சொல்லலாம். ஒரே காலகட்டத்தில் தோன்றிய இரண்டு வாய்ப்புகள் அவை. இரண்டுக்குமே ஐரோப்பாவில்தான் தொடக்கங்கள் இருந்தன. நாம் ஜனநாயகத்தை தேர்வுசெய்தோம்.

அடிப்படைவாதம் பற்றி இரண்டு கண்ணோட்டங்களைச் சொல்லியாகவேண்டும். முன்னர் ஒரு நீண்ட கட்டுரையில் இதை விளக்கமாக எழுதியிருக்கிறேன். இவற்றை புரிந்துகொள்ளாமல் அடிப்படைவாதத்தை எவராலும் எதிர்க்க முடியாது (உரையாடும் காந்தி நூலில் அக்கட்டுரையை காணலாம்.)

அடிப்படைவாதம் வேறு பழமைவாதம் வேறு. எல்லா மதங்களிலும் உறுதியான மதப்பழமைவாதிகள் உண்டு. வெவ்வேறு வகையான பழமைவாதங்கள் உலகமெங்கும் உண்டு. பழமைவாதம் என்பது ஒரு தேக்கநிலை. பழைய மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கைமுறைகளில் நின்றுவிடுவது. அதில் சில பகுதிகள் காலத்திற்கு ஒவ்வாதவையாக இருக்கலாம். ஆகவே இன்றைய பார்வையில் அநீதி என்றோ அபத்தம் என்றோ தோன்றலாம். ஆனால் சிலர் அத்தகைய வாழ்க்கையில் உறுதியாக நின்றுவிட விரும்புவார்கள். 

ஏனென்றால் பழமையிலுள்ள சில பண்பாட்டுக்கூறுகள் அல்லது ஆன்மிகக்கூறுகள் அவர்களுக்கு வாழ்க்கையில் ஓர் உறுதியான பிடிமானத்தை அளிக்கின்றன. மாறுதல்களின் அலைக்கழிப்பை விட அந்த உறுதிப்பாடு அவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். இன்னொருவர் வாழ்க்கையை பாதிக்காதவரை அந்த வாழ்க்கையை வாழ ஒருவருக்கு உரிமை உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.  

அடிப்படைவாதம் என்பது பழமையில் இருந்து ஓர் அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை நவீனக் கருத்துருவாக ஆக்கி, அதை மையமாக கொண்டு ஓர் நவீன அதிகாரத்தைக் கட்டமைக்க முயலும் பண்பாட்டுஅரசியல் நடவடிக்கை. அது பழமையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. பழமையில் தன் அதிகார அரசியலுக்கு எவையெல்லாம் உகந்தவை அல்லவோ அனைத்தையும் அதுவும் நிராகரிக்கும்

ஆகவே அடிப்படைவாதத்திற்கு எப்போதும் ஒரு சீர்திருத்த முகம் இருக்கும். அடிப்படைவாதம் எப்போதுமே தர்க்கபூர்வமானதாகவும், ஓரளவு அறிவியல் சார்ந்ததாகவும், பெருமளவு சமகாலப்பார்வை கொண்டதாகவும் இருக்கும். அது நவீனமானது என்றுகூடத் தோன்றும். 

ஆச்சரியமான ஒன்று உண்டு. அடிப்படைவாதம் என்பது உண்மையில் நவீனத்துவம் (Modernism) எனப்படும் பண்பாட்டுக் காலகட்டத்துடன் சம்பந்தப்பட்டது. உலகிலுள்ள எல்லா அடிப்படைவாதங்களும் நவீனத்துவம் தொடங்கிய காலகட்டத்தில் தொடங்கியவை. நவீனத்துவத்துடன் இணைந்து வளர்ந்தவை. அடிப்படைவாதமே ஒருவகை நவீனத்துவ அம்சம்தான் என்று சொல்லமுடியும்.

நவீனத்துவம் என்பது சென்ற நூறாண்டுகளில் உலகில் தோன்றிய சிந்தனைசார்ந்த, வாழ்க்கைமுறை சார்ந்த ஒரு போக்கைச் சுட்டிக்காட்டுவதற்கான பெயர். நவீனத்துவத்தின் இயல்புகளான தர்க்கபூர்வத்தன்மை, உலகளாவிய பார்வை, மையத்தை வலியுறுத்தும் நோக்கு, தனிமனிதப்பார்வை, அதிகாரத்தை குவிக்கும்தன்மை எல்லாமே அடிப்படைவாதத்திற்கும் உண்டு.  

உலகமெங்கும் நவீனத்துவ கருத்தியல்களான தாராளவாதமோ, பகுத்தறிவுவாதமோ , மார்க்ஸியமோ தீவிரமாக தாக்கி உடைக்க முயல்வது பழமைவாதத்தை மட்டுமே. அடிப்படைவாதத்தை அவை வலுவாக எதிர்க்க முடியாது. பெரும்பாலும் அவை அடிப்படைவாதத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கின்றன.ஏனென்றால் தாராளவாதமும் பகுத்தறிவுவாதமும் நவீனத்துவத்தின் வேறுமுகங்கள். நவீனத்துவத்தின் தர்க்கபூர்வத்தன்மை, உலகளாவிய பார்வை, மையத்தை வலியுறுத்தும் நோக்கு, தனிமனிதப்பார்வை, அதிகாரத்தை குவிக்கும் தன்மை ஆகியவை இவற்றுக்கும் உண்டு. 

எந்த அடிப்படைவாதத்தையும் தர்க்கபூர்வமானது என்றும், சீர்திருத்த நோக்கம் கொண்டது என்றும் விளக்கிவிடலாம். ஆகவேதான் இந்தியப் பகுத்தறிவுவாதிகளுக்கும் மார்க்ஸியர்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதமான வஹாபியம் சீர்திருத்தத் தன்மை கொண்டதாக தோன்றுகிறது. அந்த மேடைக்குச் சென்று தங்களையும் அதனுடன் இணைத்துக்கொள்ள அவர்களால் இயல்கிறது.

சவார்க்கர் தர்க்கபூர்வமான பார்வை கொண்டவர். அறிவியல் நம்பிக்கை கொண்டவர். பகுத்தறிவுப்பார்வை கொண்ட நாத்திகர். .வெ.ராவும் சவார்க்கரும் சந்தித்திருந்தால் ஒரே ஒரு புள்ளி தவிர வேறு அனைத்திலும் அவர்கள் ஒத்துப்போயிருப்பார்கள். சவார்க்கரின் தேசியம் வேறு ஈ.வெ.ராவின் தேசியம் வேறு. மற்றபடி இருவருமே நவீனத்துவர்கள்.

சவார்க்கர் முழுக்க முழுக்க ஓர் ஐரோப்பிய உருவாக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் உருவானபண்பாட்டுத் தேசியம்என்னும் கொள்கையின் இந்திய வாரிசு அவர். பண்பாட்டுத்தேசியம் பின்னர் ஐரோப்பாவில் ஃபாசிசமும் நாசிசமுமாக ஆகி ஐரோப்பாவை அழித்தது. சவார்க்கரின் சிந்தனைமுறை, நம்பிக்கைகள் எல்லாமே பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவைச் சார்ந்தவை.

நவீனத்துவர்களின் பார்வையில் சவார்க்கருடன் ஒப்பிட காந்தி பலவகையிலும் ஏற்புடையவர் அல்ல. காந்திக்கு தர்க்கபூர்வப் பார்வை குறைவு. அவர் பலசமயங்களில் உள்ளுணர்வை நம்பியவர். காந்தியிடம்மூடநம்பிக்கைகள்இருந்தன. காந்தி அறிவியலை சந்தேகப்பட்டார். உலகளாவிய சிந்தனைகளுக்குப் பதிலாக அந்தந்த பகுதிகளில் எழுந்துவரும் சிந்தனைகளை முன்வைத்தார். ஒற்றை மையத்தை மறுத்து பன்முகத்தன்மையை முன்வைத்தார். தேசத்தையே சுதந்திரமான தனித்தனி பொருளியல் அலகுகளின் கூட்டாக உருவகித்தார். காந்தி தன்னை ஒரு பழமைவாதி, சனாதனி என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால் நடைமுறையில் எல்லா சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டார். மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.

காந்தியுடன் கடும் முரண்பாடு கொண்டிருந்த அம்பேத்கருக்கு சவார்க்கர் மேல் நல்லெண்ணம் இருந்தது. பல்வேறு இடங்களில் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்சய்கீர் அம்பேத்கரின் வரலாற்றாசிரியர். ஏனென்றால் அம்பேத்கரின் பார்வை நவீனத்துவநோக்கு கொண்டது. அறிவியல்தர்க்கம், மையப்படுத்தும் பார்வை என்னும் அம்சங்கள் அவர் சிந்தனையில் வலுவாக இருந்தன. அவர் ஒரு சீர்திருத்த பௌத்தத்தை முன்வைத்தவர். ஆகவே சவார்க்கரின் தர்க்கப்பார்வையும், அறிவியல் ஈடுபாடும், மையநோக்கும், சீர்திருத்தப்பார்வையும் அவருக்கு ஓர் எல்லைவரை ஏற்புடையதாக இருந்தன.

அதுதான் நவீனத்துவர்கள் விழும் பொறி. நவீனத்துவர்களால் அடிப்படைவாதத்தை முழுமையாக எதிர்க்கமுடியாது. அவர்கள் அதை வளர்த்துவிடும் பிழையையும் செய்வார்கள். தாலிபானை ஆதரித்து ஐரோப்பிய அமெரிக்க நவீனத்துவ அறிவுஜீவிகள் எழுதிய பல கட்டுரைகளை 1990 தொடக்கத்தில் நான் வாசித்திருக்கிறேன். வாசிக்காதவர்கள் ராம்போ 3 படத்தையாவது பார்க்கலாம். தாலிபான்கள் தர்க்கபூர்வ பார்வை கொண்ட மதச்சீர்திருத்தவாதிகள் என்றும், பழமைவாத இஸ்லாமுக்கு எதிரான  இளைஞர்சக்தி என்றும் ஐரோப்பிய அமெரிக்க அறிஞர்கள் எழுதினர்.

நவீனத்துவத்தின் கருவிகளான தாராளவாதம், பகுத்தறிவுவாதம், மார்க்ஸியம் ஆகியவற்றைக்கொண்டு காந்தியை எதிர்க்கலாம், சவார்க்கரை எதிர்க்க முடியாது. சவார்க்கரே பகுத்தறிவுவாதிதான், நாத்திகர்தான், அறிவியல் நம்பிக்கை கொண்டவர்தான் என்று சொல்லி அந்த எதிர்ப்பை உடனடியாக உடைத்துவிடுவார்கள்.

ஆகவே இங்கே அரசியல் ரீதியாக சவார்க்கரை எதிர்க்க விரும்புபவர்கள் வழக்கமான பாணியில் அவரை கோழை, தேசப்பற்றில்லாதவர் என்றெல்லாம் முத்திரையடித்து தாக்குகிறார்கள். அது உண்மை அல்ல என்பதனால் அந்த தாக்குதல்கள் வழியாக அவர் மேலும் வலிமை அடையவே செய்வார்.அல்லது சவார்க்கரை பழமைவாதி, மதவெறியர் என்று முத்திரை குத்தி தாக்குகிறார்கள். அதுவும் உண்மை அல்ல என்பதனால் அவரை அது நிராகரிப்பதில்லை, மாறாக வலிமைப்படுத்துகிறது.  

சவார்க்கர் அடிப்படைவாதி. ஒரே சொல்லில் சொல்லவேண்டுமென்றால்இந்து வஹாபிஅவர். அவருடையது தேசிய அடிப்படைவாதம். இந்தியப் பழமையில் இருந்து  இந்துதேசியம்என்னும் கருத்துருவத்தை எடுத்துக்கொண்டு அவர் ஓர் அடிப்படைவாதத்தை கட்டமைத்தார். இந்திய நிலத்தில் உருவான முதல் அடிப்படைவாதம் சவார்க்கருடையதே. இந்து அடிப்படைவாதத்தின் தந்தை அவர். 

அடிப்படைவாதம் எப்போதுமே தான் மரபில் இருந்து எடுத்துக்கொண்ட கருத்துரு மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையை கொண்டிருக்கும். மற்ற அனைத்து மரபுக்கூறுகளையும் மறுக்கும், அல்லது தனக்கேற்ப மாற்றியமைக்க முயலும். வஹாபியம் செய்வது அதைத்தான். அவர்களும் சீர்திருத்த முகம் கொண்டவர்களே. சவார்க்கரும் அப்படித்தான். அவருடைய சீர்திருத்த முகமும் அவ்வாறு உருவானதே.

பொதுவாக அடிப்படைவாதிகள் எவராயினும் அவர்கள் மூர்க்கமான நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே ஈடிணையற்ற பிடிவாதம் அவர்களிடமிருக்கும். கொல்லவும் உயிர்விடவும் துணிந்திருப்பார்கள். விளைவாக அவர்கள் கடும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடலாம். மிகமிக வீரமாக அவற்றை எதிர்கொள்ளவும்கூடும். ஆனால் அந்த தியாகமும் வீரமும் எவ்வகையிலும் போற்றத்தக்கவை அல்ல. 

அந்த தியாகத்தையும் வீரத்தையும் நம் நடுத்தரவர்க்க கோழைத்தனத்தாலோ சலிப்பாலோ நாம் கொண்டாட ஆரம்பித்தால் நாம் அடிப்படைவாதத்தை அரியணை நோக்கிக் கொண்டுசெல்கிறோம். இஸ்லாமிய அகிலம் அந்தப் பெரும்பிழையை சென்ற ஐம்பதாண்டுகளில் செய்துவிட்டது. ஜனநாயகப் பாதையில் பல வகையிலும்  முன்னேறி வந்த  பல நாடுகள் இன்று அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்கி அழிகின்றன.  ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் ஈராக்கும் ஈரானும் சிரியாவும் லெபனானும் எல்லாம் அடிப்படைவாதத்தின் சாகசத்தன்மையையும் தியாகத்தையும் வீரத்தையும் கண்டு அதை நம்பிய  பெரும்பிழையின் தண்டனையை கண்ணீராகவும் குருதியாகவும் அடைந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அடிப்படைவாதியின் வீரம் அல்லது தியாகம் பற்றி எவர் பேசினாலும் அவர்கள் அழிவைக் கொண்டுவரும் தீயசக்திகள் என்றே எண்ணுவேன். 

பழமைவாதம் வேறு அடிப்படைவாதம் வேறு. அடிப்படைவாதத்தின் அறிவுத்தன்மையும் சீர்திருத்தத் தன்மையும் மேலோட்டமானவை. இந்த இரு அடிப்படைப்புரிதல்களுடன் மட்டுமே அடிப்படைவாதத்தை எதிர்க்கமுடியும். இல்லையேல் இரண்டு பிழைகள் நிகழும். எல்லா பழமைவாதத்தையும் கண்டபடி வசைபாடி, அவற்றையும் அடிப்படைவாதம் என முத்திரைகுத்தி நாமே அவற்றை அடிப்படைவாதம் நோக்கி தள்ளிவிடுவோம். அதேசமயம்  நம்முடன் கைகோக்க வரும் அடிப்படைவாதத்தை சீர்திருத்த இயக்கம் என எண்ணி ஏற்றுக்கொள்வோம். இந்த இரண்டு பிழைகளையும் இங்குள்ள முற்போக்கினர், தாராளவாதப்பார்வை கொண்டவர்கள், மார்க்ஸியர் அனைவரும் அன்றாடம் செய்துகொண்டிருக்கிறார்கள். வஹாபிகளை மேடையேற்றிக்கொண்டு எவரும் சவார்க்கரை எதிர்க்க முடியாது. அது சவார்க்கரை பேருரு கொண்டவராக ஆக்கும். அதுதான் இன்று நிகழ்கிறது.

சவார்க்கர் எனக்கு கடும் ஒவ்வாமையை அளிப்பவர். இக்கட்டுரைக்காக அவருடைய படத்தை இணையத்தில் இருந்து எடுக்கையிலேயே அருவருப்பும் கசப்பும் அடைகிறேன். ஆனால் சவார்க்கர் கோழை என்று நான் நினைக்கவில்லை. அவருடைய ஆளுமைமேல் எனக்கு ஐயமும் இல்லை. அவர் பழமைவாதியும் அல்ல. ஆனால் இந்தியா உருவாக்கிய மிகக்கொடிய நஞ்சு அவரே. இந்தியாவின் அடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம் அவரே. அதன்பொருட்டே அவர்மேல் ஒவ்வாமை கொண்டிருக்கிறேன்.

சவார்க்கர் என்னும் நஞ்சின் எதிர்விசை காந்தி என்னும் மருந்து. ஆகவேதான் சவார்க்கரின் மறைமுகக் கை காந்தியை கொன்றது. என்னதான் சொன்னாலும் காந்தி கொலையின் பெரும்பழி நம் தேசம் மீது உள்ளது என்றே நான் நம்புகிறேன். அப்பெரும்பழியை நம் மீது சுமத்தியவர் சவார்க்கர். சிந்திக்கும் ஒரு நபர் தன் அனைத்துச் சொற்களாலும் நிராகரிக்க வேண்டிய மனிதர் சவார்க்கர். இந்தியாவில் உருவான ஆளுமைகளில் ஹிட்லர் போல உலகமே உலகமே வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஆளுமை அவர் ஒருவரே. எங்கும் எந்நிலையிலும் எதற்காகவும் இம்மிகூட மதிக்கப்படவேண்டியவர் அல்ல. இந்த தேசம் சவார்க்கருக்கு அளிக்கும் ஒவ்வொரு மெல்லிய ஏற்பும் காந்திக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஒட்டுமொத்தமாகவே மானுடத்திற்கு எதிரானது.  

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் ஏப்ரல் 8 2023.

முந்தைய கட்டுரைசவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?
அடுத்த கட்டுரைஒரு முன்பாதை- கடிதம்