அன்புள்ள ஜெ,
சாவர்க்கர் பற்றிய இன்றைய ஊடகவியலாளர்கள் சொல்லும் கருத்துகளை தற்போது கவனிக்கையில், காந்தி சிறையில் கண்ணியமாக நடத்தப்பட்டார், போரட்டங்களில் கூட அவர் முன் நின்றாலும் அடி வாங்கியதில்லை, ஆனால் சாவர்க்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார் என்கின்றனர். எனில், சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஒரு எளிய சுதந்திரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதில் என்ன தவறு உள்ளது. காந்திக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட்டன.
த. பிரபாகரன்
அன்புள்ள பிரபாகரன்,
ஒவ்வொரு விவாதத்தையும் அதன் அடிப்படைக் கேள்விகளைக் கொண்டே அணுகவேண்டும். ஒட்டுமொத்தமாகவே வகுத்துக் கொள்ளவேண்டும். என் வழி அது. அதையே முன்வைக்கிறேன். ஆகவே எப்போதுமே ஒரு விரிவான சித்திரத்தை அளிக்க முயல்கிறேன்.
தமிழில் பொதுவாக அவ்வகை அணுகுமுறைகள் வழக்கமில்லை. தீவிரமான நிலைபாடு ஒன்றை எடுத்து அதனடிப்படையில் மிகையுணர்ச்சியுடன் அனைத்தையும் அணுகுவதே இங்கு வழக்கம். கட்சிச்சார்பு, சாதி மதச்சார்பு. பலசமயம் அவை எல்லாம் ஒன்றாகவே உள்ளன.
ஆகவே எதையும் ஒற்றைவரி, ஒற்றைக்கருத்தாக ஆக்கிக் கொள்வார்கள். எல்லாவற்றிலிருந்தும் ஒற்றை நிலைபாட்டை அடைவார்கள். ஒற்றை வரியை பிடுங்கிக்கொண்டு விவாதிப்பார்கள். எதிர்த்தரப்பு என்றால் அதிலுள்ள எல்லாமே அயோக்கியத்தனம். தன் தரப்பு என்றால் அதிலுள்ள எல்லாமே உயர்வு. அதையே பிறரிடம் எதிர்பார்ப்பார்கள். சார்புநிலை எடு, ஒற்றைவரியைச் சொல், எதிர்க்கூச்சல் இடு- இதுதான் நம்மிடம் எப்போதும் கோரப்படுகிறது. அதைச்செய்ய எழுத்தாளர் தேவையில்லை.
அவ்வாறு அவர்கள் சொல்லும் ஒற்றை வரியை நாம் சொல்லவில்லை என்றால் அவர்களின் எதிரித்தரப்புக்கு நம்மை கொண்டுசெல்வார்கள். நம்மிடம் ஒற்றைவரிகளை பிடுங்குவார்கள். அந்த ஒற்றைவரிக்கு ஆவேசமான மறுப்பும், வசைபாடலும், ஏகத்தாளமும் கிளம்பி வரும். ஆயினும் ஒரு முழுச்சித்திரத்தை அளிக்க முயல்கிறேன். உடனே ‘வளவளவென பேசுகிறார்’ என்ற குற்றச்சாட்டு வரும். கட்டுரைகளை முழுமையாக படிக்க மாட்டார்கள். ஆயினும் எனக்கான சில வாசகர்கள் உண்டு என்னும் நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் பேசுகிறேன்.
கல்லக்குடி சிறையில் மு.கருணாநிதி இருந்ததை பற்றி கண்ணீர் மல்கும் ஒருவருக்கு சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தது ஒரு பொருட்டே அல்ல. வாழ்நாள் முழுக்க பிரிட்டிஷ் ஆதரவு நிலைபாடு எடுத்த தலைவர்களை ஆதரிக்கும் ஒருவருக்கு சவார்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது மாபெரும் கோழைத்தனம். இப்படியே இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன.
இந்த வகை விவாதங்களிலேயே நீங்கள் எழுப்பியது போன்ற ‘உதிரி விவாதங்கள்’ உருவாகின்றன. காந்தியும் நேருவும் சிறையில் இருந்தார்கள், அம்பேத்கர் சிறை சென்றாரா என கேட்பவர்கள் உண்டு. பகத்சிங் தூக்கில் தொங்கினார், காந்தி சிறையில் வசதியாக இருந்தார் என வாதிடுபவர்கள் உண்டு. இந்தவகை விவாதங்கள் போல ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரத்தை மறைக்கும் செயல் வேறொன்றில்லை.
சவார்க்கர் கடுந்தண்டனை அனுபவித்தார், அதை இந்திய சுதந்திரத்தின் பொருட்டே அனுபவித்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர் கோழையோ தன்னலவாதியோ அல்ல. அவரது தியாகத்தை மறுப்பதென்பது எதிர்த்தரப்பை முழுமையாக மறுத்து இழிவுசெய்யும் மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே. நான் சவார்க்கரை விரிந்த ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து தர்க்கபூர்வமாக அணுகவே முயல்கிறேன்.
வன்முறையாளரும் ஜனநாயகவாதிகளும்
சவார்க்கரின் சிறைவாழ்க்கையை காந்தி அல்லது நேருவின் சிறைவாழ்வுடன் ஒப்பிடுகையில் ஓர் அடிப்படையான தெளிவு வேண்டும். உலகில் உள்ள எந்த அரசும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்வைப்பவர்களையும் ஜனநாயகப்போராட்டத்தை முன்வைப்பவர்களையும் வேறுபடுத்தியே பார்க்கும். வரலாறு முழுக்க அப்படித்தான் நிகழ்ந்துள்ளது.
நீங்கள் ஆயுதமெடுக்கையிலேயே உங்களுக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்தும் உரிமையை மறுதரப்புக்கு அளித்துவிடுகிறீர்கள். நீங்கள் வன்முறை வழியை தெரிவு செய்யும்போது உங்கள்மேல் வன்முறையைச் செலுத்தும் நியாயங்களை நீங்களே உருவாக்கிவிடுகிறீர்கள். ஆயுதம் என்பது மிகத்தெளிவான ஒரு செய்தி. எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை, எந்தச் சமரசத்திற்கும் வழியில்லை என்பதுதான் அது. ஆயுதங்கள் மோதி அதன் வழியாக உருவாகும் சமநிலைப்புள்ளி மட்டுமே தீர்வு என்ற அறிவிப்புதான் அது.
அப்படி ஆயுதத்தை எடுத்தபின் எதிர்த்தரப்பு வன்முறையை கைக்கொள்கிறது என்பதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைப்பதில் பொருளே இல்லை. தங்கள் வன்முறை அறம் சார்ந்தது எதிரியின் வன்முறை அறமற்றது என்று சொல்வதைப்போல அபத்தமும் வேறில்லை.
தனக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சியை எந்த அரசும் அடக்கவே முயலும். அது பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும் சரி, இன்றைய இந்திய அரசாக இருந்தாலும் சரி. அதில் வெல்லமுடியாதவர்கள் தங்கள் தோல்வியை ஒரு தியாகம் என சித்தரிப்பதில் மிகப்பெரிய தர்க்கப்பிழையே உள்ளது. அறப்பிழையும்தான். ‘நீ வென்றிருந்தால் அவர்கள் உனக்குச் செய்ததை நீ அவர்களுக்கும் செய்திருப்பாய் அல்லவா?’ என்பதே அதில் எழும் முதல் அறம்சார்ந்த கேள்வி.
சவார்க்கர் பிரிட்டிஷ் அரசு மேல் தொடுத்தது ஆயுதக்கிளர்ச்சிக்கான அறைகூவல். அதற்கான தயாரிப்புகளையும் அவர் செய்தார். அவருக்கு எந்த யதார்த்தவுணர்வும் இருக்கவில்லை. எந்த வரலாற்றுணர்வும் இருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசின் மாபெரும் நிர்வாக இயந்திரம், அதன் மாபெரும் ராணுவம் பற்றிய புரிதலே அவருக்கு இல்லை. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் கோடானுகோடி மக்கள் அதற்கு அளித்த ஏற்பின் வலிமையில் நிலைகொள்கிறது என்றும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்தியாவில் முகலாய அரசின் வீழ்ச்சிக்குப் பின் உருவான மாபெரும் அராஜகச்சூழலில் ஆட்சிக்கு வந்தவர்கள் பிரிட்டிஷார். அவர்கள் இங்கே வரும்போது நூற்றுக்கணக்கான குட்டிப்போர்களில் இந்தியா அழிந்துகொண்டிருந்தது. ராணுவங்கள் சிதைந்து கொள்ளைக்கூட்டங்களாக ஆகிவிட்டிருந்தன. பிரிட்டிஷார் இங்கே உள்நாட்டு அமைதியை, சீரான நிர்வாகத்தை, பொதுவான சட்டத்தை உருவாக்கினர். ஆகவே மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டனர். மக்கள் அளித்த அந்த ஏற்பை இல்லாமலாக்காமல் பிரிட்டிஷாரை எதிர்த்தால் அதற்கு மக்களின் ஆதரவு இருக்காது என்பதே அன்றைய வரலாற்றுச்சூழ்நிலை. அது சவார்க்கருக்கு தெரிந்திருக்கவில்லை.
பிரிட்டிஷாரின் தீமை என்பது அவர்களின் ஈவிரக்கமில்லாத பொருளியல் சுரண்டலில் இருந்தது. அச்சுரண்டலுக்கு உள்ளூர் ஜமீந்தார்களை கட்டவிழ்த்து விட்டனர். விளைவாக உருவான பெரும் பஞ்சங்களில் இந்தியாவின் அராஜக காலகட்டத்தில் நிகழ்ந்ததை விட நூறு மடங்கு உயிரிழப்பும் அழிவும் இடப்பெயர்வும் நிகழ்ந்தது.அந்தப் பொருளியல் சுரண்டலை முன்வைத்து, நடைமுறைகள் வழியாக அதை கண்கூடாகக் காட்டி விளக்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்குமேல் மக்களிடம் உண்மையான விமர்சனத்தை உருவாக்கியவர் காந்தி. அதன்பின்னரே இந்தியச் சுதந்திரப்போர் மக்களியக்கமாக ஆகியது. (இன்றைய காந்தி நூலில் விரிவாகவே இதை விவாதித்துள்ளேன்)
அதற்கு முன் சவார்க்கரின் காலகட்டத்தில் ‘அறிவாளிகள்’ சிலர் வன்முறை வழியாக பிரிட்டிஷாரை துரத்திவிடலாம் என நம்பியிருந்தனர். வன்முறையை தொடங்கி வைத்தால்போதும், மக்கள் கிளர்ந்து பிரிட்டிஷாரை அழிப்பார்கள் என நினைத்தனர். மேலும் ஐம்பதாண்டுகள் கழித்து இந்திய நக்சலைட்டுகளும் அச்சு அசலாக அதே நம்பிக்கையும் அதே வழிமுறையுமே கொண்டிருந்தனர்.
சவார்க்கரும் சரி, பகத்சிங்கும் சரி, சுபாஷ் சந்திர போஸும் சரி அந்த அபத்தமான வரலாற்றுப் புரிதல் கொண்டவர்களே. அவர்களுடையது சிறுபிள்ளைத்தனமான ஒரு போர் முயற்சி. முழுக்கமுழுக்க வன்முறை மற்றும் தனிநபர் சாகசம் சார்ந்தது. அவர்களின் அந்த தன்னம்பிக்கை என்பது தங்களை அசாதாரணமான மனிதர்களாக, வரலாற்றை தீர்மானிக்கும் ஆற்றல்கொண்டவர்களாக கற்பனைசெய்துகொள்வதில் இருந்து வருவது. அடிப்படையில் மக்கள் என்னும் மாபெரும் சக்தி மேல் நம்பிக்கையில்லாமையில் இருந்து உருவாவது.
பிரிட்டிஷார் வன்முறைக் கிளர்ச்சிகளை ஒடுக்கினர். ஏனென்றால் அவர்கள் உலகமெங்கும் அத்தகைய பல வன்முறைக் கிளர்ச்சிகளை ஒடுக்கிய அனுபவம் கொண்டவர்கள். சவார்க்கர் சிறைப்பட்டார். பிறர் கொல்லப்பட்டனர். சவார்க்கர் முதலிய அன்றைய கிளர்ச்சியாளர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளலாம், அவர்களின் நோக்கத்தை மதிக்கலாம், அவர்கள் சுதந்திரப் போராளிகளே. ஆனால் அந்த மதிப்பு அவர்களின் பார்வையையோ வழிமுறைகளையோ எந்தவகையிலும் நியாயப்படுத்தாது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள மிகையுணர்ச்சிக் கூச்சலிடுபவர்களால் இயலாது. நான் பேசுவது கொஞ்சமேனும் பிரித்துப் புரிந்துகொள்ளும் சிலரிடம் மட்டுமே.
காந்தியும் நேருவும் முன்னெடுத்தது ஜனநாயகப் போராட்டம். ஓர் இந்திய உயிர் அளவுக்கே பிரிட்டிஷ் உயிரும் முக்கியமானது என்று சொன்னவர் காந்தி. பிரிட்டனில் உள்ள எளிய உழைக்கும் மக்களுக்காகவும் தான் போராடுவதாக நிலைகொண்டவர். பிரிட்டன் சென்றால் அங்கே அந்த அடித்தள மக்களுடன் தங்கியவர். அவரை வரவேற்க பிரிட்டிஷ் உழைப்பாளி மக்கள் திரண்டு துறைமுகத்திற்கு வந்து கூடியமை வரலாறு.
ஒவ்வொரு தருணத்திலும் மிகக்கவனமாக வன்முறையை காந்தி தவிர்த்தார். தன்னுடையது அகிம்சைப்போர் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சித்தரப்பில் இருந்த மிகச்சிறந்த ஆளுமைகளுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட நட்பை கொண்டிருந்தார். அவர்களும் அவரைப்பற்றி உயர்மதிப்புடன் இருந்தனர்.
காந்தி தான் முன்னெடுப்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமே ஒழிய, பிரிட்டிஷாருக்கு எதிரான போர் அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார். பிரிட்டிஷார் எவரும் தன் எதிரிகள் அல்ல என்று காந்தி திரும்பத் திரும்பச் சொன்னார். இந்திய மக்களிடமும் அதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். தன் போராட்டம் வரலாற்றின் ஒரு தருணத்தில் நிகழ்ந்தே ஆகவேண்டிய ஜனநாயகம் நோக்கிய மாற்றத்திற்கான ஓர் எழுச்சி மட்டுமே என தெளிவு கொண்டிருந்தார். அதில் பிரிட்டிஷார் ஒரு தரப்பும் தான் இன்னொரு தரப்பும் மட்டுமே என நினைத்தார்.
காந்தி சம்பாரன் முதலிய மக்கள் போராட்டங்கள் வழியாக தலைவராக உருவானவர். ஜனநாயக முறையிலேயே அரசியல் வெற்றியை அடையமுடியும் என்று மக்களுக்குக் காட்டினார். அரசியல் போராட்டங்களுக்காக எளிய மக்களை களப்பலி கொடுக்கக்கூடாது என்னும் திடம் கொண்டிருந்தார். வரலாற்றில் அத்தகைய பொறுப்புணர்ச்சி கொண்ட முதல் அரசியல்தலைவர் காந்தியே.
ஆகவே காந்தி ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருந்தார். அவருக்குப்பின்னால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் இருந்தனர். உலகமே அவரை கவனித்தது. அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஊடகங்களால் கவனிக்கப்பட்டது.அவர் 1918ல் இந்தியா வருவதற்கு முன்னரே அவர் உலகமெங்கும் அறியப்பட்ட அகிம்சைப் போராளியாக இருந்தார்.
அகிம்சைப்போராளியும் ஜனநாயகவாதியுமான காந்தியையோ அல்லது அவரது வழிவந்த நேருவையோ வன்முறை மூலம் ஒடுக்கினால் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்றும், பாரபட்சமற்ற சட்டநிர்வாகம் கொண்டவர்கள் என்றும் பிரிட்டிஷார் சொல்லிக்கொண்டது உலகின் கண்களின் முன் பொய்யாக ஆகும். பிரிட்டிஷ் நீதிமுறை மீதும், பிரிட்டிஷ் நிர்வாகவியல் மீதும், அவர்களின் ஜனநாயகம் மீதும் உலகமெங்கும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையால்தான் கீழைநாடுகள் முழுக்க பிரிட்டிஷ் ஆட்சிக்கு மக்களாதரவு இருந்தது. காந்தியை கொடுமைப்படுத்தி அந்த அடித்தளத்தை இழக்க பிரிட்டிஷார் தயாராகவில்லை. அந்த அறிவு அவர்களுக்கு இருந்தது.
தொடர்ச்சியாக பிரிட்டிஷார் தாங்கள் ஜனநாயகவாதிகள் ஆகையால் காந்தி, நேரு உள்ளிட்டவர்களையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தையும் மிகமிகச் சட்டபூர்வமாகவே நடத்துவதாக உலகின் முன் காட்டிக்கொண்டிருந்தார்கள். காந்தியும் அவர்களின் சட்டம், நிர்வாகம், ஜனநாயகப்பண்பு ஆகியவற்றின் மேல் நம்பிக்கை உண்டு என்றும்; ஆனால் இந்தியாமீதான அவர்களின் ஆதிக்கத்தையும் அவர்களின் பொருளியல் சுரண்டலையும் ஏற்க முடியாது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அந்த போராட்டமே இரண்டு தரப்புகளும் தங்கள் ஜனநாயகப்பண்புகளை முன்வைத்து நடத்திய ஒரு பேரமாகவே இருந்தது.
சவார்க்கரின் நிலை அப்படி அல்ல, அவரை இந்தியாவிலேயே எவருக்கும் பெரிதாக தெரியாது. அவர் ஒரு வன்முறைக் குறுங்குழுவின் தலைவர் மட்டுமே. அவர் வன்முறையை கையில் எடுத்ததுமே அவரை கடுமையாக நடத்தும் உரிமையை பிரிட்டிஷ் அரசுக்கு அவர் வழங்கிவிட்டார். இந்தியாவில் வன்முறைப்பாதையை தெரிவுசெய்த அனைவரையுமே பிரிட்டிஷ் அரசு கடுமையாகவே நடத்தியது. ஆயுதக்கிளர்ச்சி செய்த சிற்றரசர்களும் ஜமீன்தார்களும் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டனர். பின்னர் படித்த இளைஞர்கள் ஆயுதக்கிளர்ச்சி நோக்கி சென்றபோது அவர்களும் ஒடுக்கப்பட்டனர்.
காந்தியின் போராட்டத்தில் வன்முறை நிகழவேண்டும் என்று பிரிட்டிஷார் காத்திருந்தனர். அதை அன்றைய பிரிட்டிஷ் நாளிதழ்கள், அரசு அறிக்கைகள் அனைத்திலும் காணலாம். வன்முறை சற்றேனும் நிகழ்ந்திருந்தால் உலகின் மிகமிக வல்லமை மிக்க ராணுவமாக இருந்த பிரிட்டிஷ் ராணுவம் களமிறக்கப்பட்டிருக்கும். காந்தியும், நேருவும் கடுமையாக ஒடுக்கப்பட்டிருப்பார்கள். இந்திய சுதந்திரப்போராட்டம் ரத்தத்தால் அழிக்கப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை பிரிட்டிஷாருக்கு அளிக்கவே கூடாது என்பதில் காந்தி மிக உறுதியாக இருந்தார். சிறு வன்முறை நிகழ்ந்தால்கூட அதற்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பொருட்டு மன்னிப்பு கோரினார். தன்னை தண்டித்துக்கொண்டார்.
சென்ற நூறாண்டுகளில் பல்வேறு அரசியல் போராட்டங்களில், உள்நாட்டுப்போர்களில் எத்தனை கோடி சாமானிய மக்கள் கொன்றழிக்கப்பட்டனர் என்று கொஞ்சம் தேடிப்பாருங்கள். எத்தனை கோடி மக்கள் இடம்பெயர்ந்து அகதியாயினர். எத்தனை கோடி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. அவற்றை கொண்டு பார்த்தால் காந்தியின் அந்த எச்சரிக்கையுணர்ச்சி, அந்த பொறுப்புணர்ச்சி, அவருடைய தீர்க்கதரிசனம், எளிய மக்கள் மேல் அவர்கொண்ட பரிவு மானுட வரலாற்றிலேயே ஒரு மகத்தான புதிய நிகழ்வு என்று புரியும். ‘வாழ்விக்க வந்த காந்தி’ என்று நம் பெருங்கவிஞன் வெறுமே பாடவில்லை.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். காந்தி எதிர்கொண்டது பிரிட்டிஷ் அரசின் ‘குடிமை’ முகத்தை. பிரிட்டிஷ் ராஜதந்திரிகளை அவர் சந்தித்தார். சவார்க்கரோ ,பகத்சிங்கோ, சுபாஷ்சந்திர போஸோ எதிர்கொண்டது பிரிட்டிஷ் அரசின் ஆயுதங்களை, அதன் ராணுவத்தை. காந்தி ஜனநாயக, அகிம்சை வழியை கடைப்பிடித்தார். ஆகவே அரசும் அதே ஆயுதத்தை எடுத்தாகவேண்டியிருந்தது. இதுதான் வேறுபாடு.
சாகசக் கிளர்ச்சியும் வரலாற்றுணர்வும்
பொதுவாக நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய உளநிலை ஒன்றுண்டு. அமைதியான சமூகச் சூழலில், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் எளிமையான அன்றாடத்தில், நமக்கு ஒருவகை ‘கிளர்ச்சி மனநிலை’ தேவையாகிறது. ஆகவே மிகையுணர்ச்சிகளை நாடுகிறோம். செயற்கையாக கொந்தளிக்கவும், கூச்சலிடவும், கண்ணீர்மல்கவும் காரணங்களை தேடி அலைகிறோம். அதன் வழியாக நம்மை நாமே தீவிரமானவர்கள் என்றும் உண்மையானவர்கள் என்றும் கற்பனை செய்துகொள்கிறோம். கழிவிரக்கமும் போலிவீரவுணர்சியும் சரிசமமாக கலந்த ஓர் உணர்வுநிலை அது.
அது ஒரு மாபெரும் அசட்டுத்தனம். இருபது வயது வரை அந்த மனநிலை இருப்பது மன்னிக்கத்தக்கது. சாகச சினிமாக்கள் பார்த்து மெய்சிலிர்ப்பதுபோன்ற மனநிலைதான் அது. அதன்பிறகும் இந்த அசட்டுத்தனத்தில் இருந்து விடுபடாதவருக்கு எந்த சிந்தனைக்குள்ளும் நுழையும் தகுதி இல்லை
நம் அசட்டு மிகையுணர்ச்சிகள் வழியாக நாம் அரசியலையும் வரலாற்றையும் அணுகும்போதுதான் ‘வீர வழிபாட்டு’ மனநிலையைச் சென்றடைகிறோம். ஆளுமைகளை திருவுரு ஆக்குகிறோம். அப்போது நமக்கு உகந்தவர்கள் சாகசக்காரர்கள், தியாகிகள் ஆகியோர்தான். அவர்களின் சாகசங்களை சொல்லிச் சொல்லி பெரிதாக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட ஒரு வன்முறையாளர் ஒருவர் தன் தன்முனைப்பால் உருவான சாகசத்தன்மையால், வரலாற்றுணர்வு இல்லாத காரணத்தால், அறிவற்ற மூர்க்கத்தால் வீழ்ந்துபட்டால் உடனே அவரை தியாகி ஆக்குகிறோம். அவர் அடைந்த கஷ்டங்களை எல்லாம் சோகக்காவியங்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
இந்த அசட்டுத்தனமே வரலாறு முழுக்க போலி ஆளுமைகளை தலைவர்களாக கொண்டு வந்து நிறுத்துகிறது. வரலாறு குறித்த எந்தப் புரிதலுமில்லாத ஒருவர், மக்கள்மேல் எந்த மதிப்புமில்லாத ஒருவர், எந்தவகையான தலைமைப் பண்பும் இல்லாத ஒருவர், வன்முறையில் ஈடுபட்டு சிறைசென்று; அங்கே கொடுமைக்குள்ளாகி திரும்பி வந்தால் அவர் தியாகியாகிவிடுவார். அந்த ‘தியாகத்தை’ சோட்டா அறிவுஜீவிகள் கொண்டாடுவார்கள். நடுத்தரவர்க்கத்தினர் மெய்சிலிர்ப்பார்கள். அவர் அந்த சிலிர்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் மக்களால் ஏற்கப்பட்டு தலைவரும் ஆகிவிடுவார். அப்படி மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வரலாறு முழுக்க பலர் தலைவர்களாகியுள்ளனர். அவர்களனைவருமே மூர்க்கமான சர்வாதிகாரிகளாகவே இருந்துள்ளனர். அந்த தேசங்களையே பேரழிவு நோக்கித்தான் கொண்டு சென்றுள்ளனர்.
இந்தியாவின் தொடக்ககால சுதந்திரப்போராட்டத்தில் வன்முறையில் நம்பிக்கை கொண்ட சாகசக்காரர்கள் பலர் இருந்தனர். பின்னர் இந்தியச் சுதந்திரப்போராட்டம் மக்களியக்கமாக ஆனபோது, மக்களை கவர்வதற்காக அவர்களின் வாழ்க்கைவரலாறுகள் உணர்ச்சிக்காவியங்களாக ஆக்கப்பட்டன. அவர்கள் திருவுருக்களாக மாற்றப்பட்டனர். ஏனென்றால் மக்களுக்கு ஜனநாயகம் புதியது, அவர்களால் ஜனநாயகத்தலைவர்களை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் வீரவழிபாட்டுக்கு இரண்டாயிரமாண்டு வரலாறு உண்டு. மிக எளிதில் வீரகதைகள் அவர்களைச் சென்று சேரும். இந்தியா முழுக்க வீரசூரபராக்ரமிகளான தேசப்போர்த் தியாகிகள் கண்டடையப்பட்டு, அவர்களுக்கான கதைகள் உருவாக்கப்பட்டன
ஆனால் இன்றைய ஜனநாயக யுகத்தில் நாம் அந்த வீரவழிபாட்டு புல்லரிப்புகளை கடந்தே ஆகவேண்டும். அவர்களை வரலாற்றில் வைத்து புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் தொடக்ககால வன்முறைக் கிளர்ச்சியாளர்களை அன்றைய உலகச்சூழலில் வைத்து மதிப்பிடலாம். அன்று உலகில் எங்குமே ஜனநாயகப்போராட்டம் என்பது ஆழமாக வேரூன்றவில்லை. ஐரோப்பாவில் அப்போதுதான் அது தோன்றி, நடைமுறையில் சில எளிய வெற்றிகளை அடைந்துகொண்டிருந்தது. ஆகவே அன்று உலகமெங்கும் வெவ்வேறு தளங்களில் சமூக மாற்றத்தையோ அரசியல் மாற்றத்தையோ விரும்பியவர்கள் அனைவருமே வன்முறைப்பாதையே அதற்கான ஒரே வழி என நினைத்தனர்.
வரலாற்றில் அதற்கு முன்னர் மன்னராட்சி நிலவியது. மன்னருக்கு எதிரான போர்கள் ராணுவக் கிளர்ச்சிகளாகவே இருந்தன. அதன்பின் வெவ்வேறு சிறு மக்கள் கிளர்ச்சிகள் தோன்றின. அதன்பின்னர் கம்யூனிஸ்டுப் புரட்சிகள் உருவாயின. அவை அனைத்துமே மன்னராட்சிக்கால கிளர்ச்சிகளை வேறொருவகையில் நகல் செய்பவை. ஆக, அன்று பரவலாக இருந்த இரண்டு அதிகார எதிர்ப்பு வழிமுறைகளும் வன்முறை சார்ந்தவை. பகத்சிங்கோ ,சவார்க்கரோ, சுபாஷ் சந்திரபோஸோ அவற்றையே நம்பினர்.
முந்தைய மன்னராட்சிக்காலத்திலேயே வன்முறையற்ற மக்கள் எதிர்ப்புகள் பல நிகழ்ந்து வெற்றியும் அடைந்துள்ளன. ஐரோப்பாவில் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (புரட்டஸ்டாண்டுகள்) வன்முறையற்ற போராட்டம் வழியாக மக்கள் செல்வாக்கை அடைந்து தங்களை நிறுவிக்கொண்டனர். இன்றைய ஜனநாயகப் போராட்டங்களின் ஐரோப்பிய முன்னுதாரணம் அவர்களே. காந்தி அகிம்சைப்போராட்டத்தை முன்னெடுத்தபோது கிறிஸ்தவர்களால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தமைக்குக் காரணமும் இதுவே. அதன்பின் ஐரோப்பாவில் பல ஜனநாயகப் போராட்டங்கள் நிகழ்ந்தன. காந்தி அவற்றில் இருந்தும், இந்தியாவில் சமணர்கள் நிகழ்த்திவந்த ‘சகிப்பு– தியாகம்’ வழியான போராட்டங்களில் இருந்தும் தன் ஜனநாயக வழிகளை கண்டுகொண்டார்
அந்த வழிமுறைகளை அறியாத ஒரு காலகட்டத்தின் ஆளுதான் சவார்க்கர். அந்த வழிமுறைகளை புரிந்து கொள்ளாதவர்கள் பகத்சிங்கும், சுபாஷ் சந்திரபோஸும். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதும், வீழ்ந்ததும், அழிந்ததும் தவிர்க்கவே முடியாத நிகழ்வுகள். அவர்களைப்போல உலகமெங்கும் பல்லாயிரம் பேர் வரலாற்றில் காணக்கிடைக்கின்றனர். வன்முறையை கைக்கொண்டு, ஒரு நவீன அரசின் உண்மையான ஆற்றல் எங்குள்ளது என புரியாமல் அதனுடன் மோதி அழிந்தவர்கள் அவர்கள். அவர்களில் மெய்யான அறிஞர்கள் உண்டு. மாவீரர்கள் உண்டு. உண்மையான பெருநோக்கம் கொண்டவர்களும் உண்டு. அவர்கள் வரலாற்றின் தோற்கும் அலையில் இருந்தனர், அவ்வளவுதான்.
யோசித்துப் பாருங்கள், நம்மில் பலர் ஏன் தோற்றவர்கள் மேல் அனுதாபம் கொண்டிருக்கிறோம்? அவர்களை தியாகிகளும் திருவுருக்களும் ஆக ஏன் மாற்றத் துடிக்கிறோம்? அவர்கள் தோற்றமைக்கான காரணம் என்ன, அவர்கள் தங்கள் தோல்வி வழியாக மற்றவர்களுக்கு அளித்த அழிவுகளும் துயரங்களும் என்ன என ஏன் நாம் யோசிப்பதில்லை? அந்த தோல்வியடைந்த ஆளுமைகள் ஏதேனும் சந்தர்ப்பத்தில் வென்றிருந்தால் தங்கள் தவறான வரலாற்றுப் புரிதல்கள் வழியாக நம்மை ஒட்டுமொத்தமாக அழிவுக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என ஏன் நினைப்பதில்லை நாம்?
என் பார்வையில் சவார்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் மூவருமே மக்களேற்பை அடைந்து இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்தால் இந்தியா பேரழிவை சந்தித்திருக்கும். மூன்று வழிகளிலான பேரழிவு. சவார்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் மூவரும் முறையே அயதுல்லா கொமெனி, ஸ்டாலின், ஹிட்லர் ஆகியோர் அவர்களின் நாட்டுக்கு அளித்த அழிவுக்கு நிகரான பேரழிவை நமக்கு அளித்திருப்பார்கள்.
வன்முறைப்பாதையை தெரிவுசெய்தவர்கள் அவர்கள் வன்முறைப்பாதையை தேர்வு செய்தமையாலேயே எதிர்த்தரப்புக்கும் வன்முறைக்கான உரிமையை வழங்கிவிடுவதனால் அவர்களால் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் அடையும் துன்பங்கள் மிகுதி. அந்த துன்பம் அவர்களின் வன்முறைப்பாதை அவர்களுக்கு அளிப்பதே ஒழிய எவ்வகையிலும் அவர்களின் ஆளுமைத்திறனுக்கான சான்று அல்ல. நாம் நம்முடைய நடுத்தவர்க்க வாழ்க்கை மீதான குற்றவுணர்வாலோ அல்லது சலிப்பாலோ அவர்களை திருவுருவாக்கினால், தலைவர்களாக ஆக்கினால் நம்மை அழித்துக்கொள்கிறோம்.
ஆகவே, தியாகக் கணக்கெடுப்பின் வழியாக தலைவர்களை மதிப்பிடுவது அபத்தமான ஒன்று. அவர்களின் வரலாற்றுப் புரிதல் என்ன என்பதே கேள்வி. அவர்களின் வழிகள் என்ன, அவ்வழிகளின் அறுதி விளைவுகள் என்ன என்பது மட்டுமே ஆய்வுக்குரியது. தலைவர்கள் அவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும்
சவார்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய மூவரையும் மூன்றுவகை வன்முறைப்பாதையின் உதாரணங்களாகவே சுட்டிக்காட்டுகிறேன். மூவரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால் ஒரே பாதையை தெரிவுசெய்தவர்கள். மூவருமே வீழ்ந்துபட்டவர்கள். மூவருமே தியாகிகளாக வெவ்வேறு தரப்பினரால் கொண்டாடப்படுபவர்கள்.
மாறாக ஜனநாயகப்பாதையை தெரிவுசெய்தவர்கள் என காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகிய மூவரையும் சொல்வேன். அவர்களின் பார்வைகள் வேறுபடுபவை. வழிமுறை எப்போதுமே ஜனநாயகம் சார்ந்தது. நான் ஏற்பது அவர்களின் வழியையே.
காந்தி, நேரு, அம்பேத்கர் மூவரும் இந்தியத் தலைவர்களில் என்றல்ல; அன்றைய உலகத்தலைவர்களிலேயே தெளிவான வரலாற்றுப்பார்வையும் திட்டவட்டமான ஜனநாயகப்புரிதலும் கொண்டவர்கள். அவர்களால் நம் தேசம் வடிவமைக்கப்பட்டது நமது நல்லூழ்.