எழுத்தாளர் உரைகள்

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்

அன்புள்ள ஜெ

எழுத்தாளர் உரைகள் பற்றிய கட்டுரை கண்டேன். உரைகளின் வகைமைகளை அழகாகச் சொல்லியிருந்தீர்கள். என்னுடைய பார்வையில் கொஞ்சம் முன்னுக்குப்பின் இருந்தாலும் எழுத்தாளர்களின் உரைகளின் அளவுகோல் ஒன்றுதான். அந்த எழுத்தாளர் நல்ல எழுத்தாளரா, நிறைய வாசித்து ஒரிஜினலாக பேசுகிறாரா என்பது மட்டும்தான்.

அண்மையில் அருண்மொழி நங்கை திருவாரூரில் ஆற்றிய உரை ஓர் உதாரணம். இயல்பாக பேசிச்செல்கிறார். மேடைப்பாவனை கிடையாது. குட்டிக்கதை நகைச்சுவை ஒன்றும் இல்லை. ஆனால் தஞ்சைப் பண்பாட்டில் இனிமேல் என்ன எழுதலாம் என்று சொல்லுமிடத்தில் சட்டென்று ஒரு பெரிய கனவை முன்வைக்கிறார். சொந்தவாழ்க்கையின் சிமிழ்களில் இருந்து வெளிவந்து தஞ்சையின் பண்பாட்டை தெரிந்துகொண்டு பெரிய திட்டங்களுடன் எழுதுவதற்கான அறைகூவல் அது.

அதைப்போன்ற உரைகள் முக்கியமானவை. திருவாரூர் புத்தகக் கண்காட்சி அரங்கில் பல இளைஞர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது. சுரேஷ்பிரதீப், கீரனூர் ஜாகீர்ராஜா, காளிப்பிரசாத் அனைவரும் அருமையாகப்பேசினார்கள். எழுத்தாளர்களின் உரைகள் எனக்கு ஏன் முக்கியம் என்றால் இலக்கியம் பற்றி மேற்கொண்டும் எனக்கு யோசிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு அந்த உரைகள் அவசியம். நானே எனக்குள்ளே பேசிக்கொள்வேன்.

அந்த எழுத்தாளர்களின் முகம் அறிமுகமாவதும் அவர்களின் பேச்சும் சிரிப்பும் தெரிந்திருப்பதும் அவர்களின் புத்தகங்களை வாசிக்கையில் ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்குகின்றன. பேசும் எழுத்தாளர் எனக்கு ஒரு படி கூடுதலாகவே நெருக்கமாகவே உள்ளார்.

திருவேங்கடம் கிருஷ்ணசாமி

அன்புள்ள திருவேங்கடம்

எழுத்தாளர்கள் உரை பற்றி என் கருத்தும் அதுவே. எழுத்தாளர்கள் உரையாற்றத்தொடங்கியிருப்பதே இப்போதுதான். உரையாற்றும் எழுத்தாளர் நம்மிடம் நேரடியாகப் பேச ஆரம்பிக்கிறார். அவருடைய சொற்கள் அவருடைய எழுத்துலகில் இருந்து வருகின்றன. அவருடைய எழுத்துலகுக்குள் நுழைவதற்குரிய சரியான வாசல்கள் அவை.

ஜெ

முந்தைய கட்டுரைதியானப்பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைஇரா. திருமுருகனார்