ஒரு தென்னை
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தங்களின் இன்றைய ‘ஒரு தென்னை’ பதிவை ஒட்டிய ஒரு நிகழ்வு. தங்களிடம் பகிர்ந்தால் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்பது என்னெண்ணம்.
என் தந்தைகடந்த 2018 ல் மறைந்தார். அவர் எங்கள் ஊரில், ஒரத்தநாடு பகுதியில் நன்கு அறியப்பட்டவர். திராவிட இயக்கங்களின் மேல் 1967 பொதுத்தேர்தல் காலம் தொட்டு தீவிர ஈடுபாடு மற்றும் செயல் வேகம் கொண்டவர். இதெல்லாம் நான் 1986 ல் பிறந்தபிறகு விவரம் தெரிந்து நான் அறிந்து கொண்டது.
நான் அவரை பார்த்த போதெல்லாம் கோபத்தையோ அன்பையோ நியாயத்திற்கு எதிராக பயன்படுத்தியதில்லை. தான் சார்ந்த கட்சியேயாயினும் தவறென்றால் சுட்டிக்காட்டவே செய்தார். ஜாதியையோ கட்சியையோ அவர் மனிதர்களை மதிக்கும் அளவுகோலாக கொள்ளவில்லை.
இதெல்லாம் ஒரு புறம்.”கட்சி சார்ந்து அவரின் பெயரை வைத்தோ அல்லது படத்தை பிரசுரித்தோ மறைவை நாளிதழ்களில் விளம்பரப்படுத்து..நினைவு நாளுக்கு ப்ளக்ஸ் வை” என்று தனது பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட இழக்க விரும்பாத சிலரும் விளம்பரப் பிரியர்களும் அறிவுரை செய்தனர்.
ஆனால் நான் அவைகளை (அவர்களை) தவிர்த்து ஆண்டு தோறும் மரக்கன்றுகள் எங்கள் கிராம மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஐந்தாவது நினைவு நினைவு நாளான மார்ச் 24 இந்த ஆண்டு முதல் ‘தென்னை’.
ஒருவர் நினைவு கூறப்பட வேண்டியது ‘பலனால்’ தானே ஒழிய ‘படத்தால்’அல்ல என்று உறுதிகொண்டுள்ளேன்.
அதோடு அருகில் உள்ள கிராமத்தின் நூலகத்திற்கு நூல்கள் சிலவற்றை அன்பளிப்பாக அளித்தேன். (இந்த கிராமத்தில்தான் என் தந்தை அவரின் இளமை காலத்தில் கள்ளுக்கடை நடத்தியதாக என்னிடம் சொன்னார்).
தனது செலவில் தானே மெனக்கெட்டு வைத்த ப்ளக்ஸில் தனது படத்தை, பெயரை பார்த்து சுயபெருமை பெருக்கிக்கொள்ளும் பிரகஸ்பதிகளில் சிலரேனும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்
விக்னேஸ்