மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சுவாரசியமான நிகழ்வு. அவருடைய ஒரே மகன் நடராஜ பெருமாள் பிள்ளை என்னும் நடராஜ பிள்ளை. மகன் வறுமையில் வாடுவான் என்று சோதிடர்கள் சொன்னார்கள். சுந்தரம் பிள்ளை அதற்கு பரிகாரமாக வாரந்தோறும் பெரும் கொடைகள் செய்துவந்தார்.
சுந்தரம் பிள்ளை பெரும் பணக்காரர். வணிகக்குடியில் பிறந்து பெரும் பதவிகளில் இருந்தவர். மகனுக்கு திருவனந்தபுரம் பேரூர்க்கடை பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலம் விட்டுச்சென்றார்.
ஆனால் நடராஜ பிள்ளை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசவிடுதலைப்போரில் ஈடுபட்டார். மொத்த நிலமும் அரசால் கையகப்படுத்தப்பட்டது. அதே பேரூர்க்கடையில் குடிசையில் வாழ்ந்தார். பின்னர் கேரள நிதியமைச்சர் ஆனார். பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆயினும் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து பெரும் கடனாளியாக மறைந்தார்.