Stories of the True வாங்க
அறம் வரிசைக் கதைகளின் மொழியாக்கமான Stories of the True நூலின் மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமார், இலக்கிய ஒருங்கிணைப்பாளரும், மொழிபெயர்ப்பாளருமான மேரி குர்கலாங் (MaryTKurkalang ) இருவரும் சென்ற ஏப்ரல் ஒன்றாம்தேதி சிக்கிம் காங்டாக் நகரிலுள்ள Rachna Books என்னும் புத்தகக் கடையில் ஓர் உரையாடலை நடத்தினார். வாசகர் சந்திப்பும் நிகழந்தது.
சிக்கிம் காங்டாக் நகருக்கு நான் நீண்டகாலம் முன்பு சென்றிருக்கிறேன். அந்த நிலம் மிக அன்னியமானதாகத் தோன்றியது. அங்குள்ள ஒரு புத்தகக் கடையில் என் நூல் கட்டுகட்டாக கையெழுத்திடப்படுவதைப் பார்க்கையில் ஆங்கிலத்தின் வலிமை என்ன என்பதைக் காணமுடிகிறது. நல்ல ஆங்கிலத்தின் தேவையும் தெரிகிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற நூல்களில் மிகக்குறைவான படைப்புகளே இப்படி விரிவாகச் சென்றடைந்துள்ளன.
கூடவே ஒரு சின்ன வருத்தம். எல்லாமே பேப்பர்பேக் நூல்கள். கெட்டிஅட்டைப் பதிப்புகள் எல்லாம் விற்றுத்தீர்ந்துவிட்டிருக்கின்றன. அவை விரைவாக விற்றமையால் இந்த மெல்லிய அட்டைப் பதிப்பு வெளிவந்துள்ளது. இருந்தாலும் எனக்கு என்னவோ தாள்அட்டை பதிப்புகள் மேல் கொஞ்சம் தாழ்வான எண்ணம். அவை ஒரு வகை மன்னிப்புகோரும் பாவனை கொண்டிருப்பதாக தோன்றும். எனக்கு இன்றும் பிரியமானவை பழைய பிரிட்டிஷ் பாணி தோல் அட்டைபோட்ட, தடிமனான நூலகப்பதிப்பு நூல்கள். கிளாஸிக் எடிஷன். என் நூல்களில் ஒன்றாவது அப்படி வந்தால் நன்று என்பது ஓர் ஏக்கம்.
ஏழாம் உலகம் நாவலின் மொழியாக்கமான The Abyssமின்னூலாக கிடைக்கிறது. அதன் அச்சுவடிவம் வரும் ஏப்ரல் 10 முதல்தான் கடைகளில் கிடைக்கும். இப்போது அமேசானில் முன்பதிவு செய்யப்படுகிறது. அச்சுநூலை வாசித்த நண்பர்கள் அபாரமான மொழியாக்கம் என்றார்கள். ஆனால் அதுவும் தாளட்டைப் பதிப்புதான்.