கி.ரா, கே.எஸ்.ஆர்

கி.ரா -100

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அழைத்திருந்தார். கி.ராஜநாராயணனுக்கு அவர் தொடர்ச்சியாகச் செய்து வரும் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். கி.ரா-100 தொகுப்பே அவர் முயற்சியால் உருவானது. 500 கட்டுரைகளில் இருந்து கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. அவர்தான் அதன் தொகுப்பாசிரியர்.

கி.ராஜநாராயணனுக்கு 60 நிறைவு விழாவை கொண்டாடியது, 70 நிறைவை கொண்டாடியது, 80 நிறைவை கொண்டாடியது, டெல்லியில் 95 நிறைவை கொண்டாடியது ஆகியவை தன் முயற்சியாலும் முன்னெடுப்பாலும்தான் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சொன்னார். அரசியல்வாதியும், வழக்கறிஞருமான ஒருவர் ஓர் எழுத்தாளரின் படைப்புலகில் இத்தகைய தீவிரமான அர்ப்பணிப்புடன் இருப்பதும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவ்வெழுத்தாளரை கொண்டாடி வருவதும் மிக முன்னுதாரணமான ஒரு நிகழ்வு. இலக்கியவாதி என்னும் வகையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என் நன்றிக்குரியவர்

நான் கிரா 100 நூலை பற்றி எழுதும்போது எவ்வகையிலும் அதைத் தொகுத்தவர்களின் பணியை குறைத்து எழுதவில்லை.ஆனால் இன்னும் ஒருங்கிணைந்த முயற்சிகளைச் செய்திருக்கலாமோ என்னும் ஆதங்கமே என்னிடம் இன்னும் உள்ளது.

பிறந்தநாள் விழாக்கள் சிறப்பானவை. ஆனால் அதை சாதாரணமானவர்களுக்கும் செய்கிறார்கள். டெல்லியில் ஓர் இந்திய அளவிலான கருத்தரங்கு நிகழ்த்தியிருக்கலாம். அதில் இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்குகொள்ளச் செய்திருக்கலாம் . ஆங்கிலத்தில் கி.ராவின் நூல்கள் வெளிவரச்செய்திருக்கலாம். ஒரு நல்ல தொகைநூலும் ஆங்கிலத்தில் வந்திருக்கலாம். கி.ரா ஞானபீடம் நோக்கிச் சென்றிருப்பார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனிமுயற்சியால் செய்த பணிகள் பாராட்டுக்குரியவை. தமிழ் அறிவியக்கம் இன்னும் கூடுதலாக இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே என் மனக்குறை.

முந்தைய கட்டுரைவெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார்
அடுத்த கட்டுரைதிருவாரூரில் அருண்மொழி