திருவாரூரில் அருண்மொழி

அருண்மொழியின் அப்பா திரு. சற்குணம் பிள்ளை.எம்.ஏ.பி.எட் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் அம்மா திருமதி சரோஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) இருவரையும் மெய்சிலிர்ப்பு பரவசம் ஆகியவற்றை அடையச்செய்யும் புகைப்படம் இதுவாகவே இருக்கும். அருண்மொழி திருவாரூரில் பொதுமேடையில் பேச பின்னணியில் மு.கருணாநிதி அவர்களின் முகம். அவர்கள் பரம்பரை திமுக.

நான் பொதுவாக திறந்தவெளி மேடையில் பேசுவதில்லை. ஓரிருமுறை புத்தகக் கண்காட்சிகளில் பேசியது சரியாக அமையவுமில்லை. என்னை எவரேனும் கேட்கிறார்களா என்னும் ஐயம் வந்துவிடும். பார்வையாளர்கள் வந்தமர்ந்துகொண்டும் எழுந்து சென்றுகொண்டும் இருந்தால் சரியாகப் பேசமுடியாது. அத்துடன் என்னை முறையாகப் பேச அழைப்பது எனக்கு முக்கியம். சட்டென்று பேசு என்றால் பதறிவிடுவேன்.

திருவாரூரில் பேச அருண்மொழிக்கு அழைப்பு வந்ததுமே அவளிடம் இதைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவள் ‘சரி, பாத்துக்கலாம்’ என்ற மனநிலை கொண்டிருந்தாள். ஏற்கனவே இதேபோல நான் பயமுறுத்தியும் பொருட்படுத்தாத போகன் சங்கர் மேடையில் இயல்பாகவே சிறப்பாகப் பேசியது நினைவுக்கு வந்தது.

அந்தமேடையில் சுரேஷ்பிரதீப், செந்தில் ஜெகன்னாதன் எல்லாம் சிறப்பாகப் பேசியதாக அறிந்தேன். கீரனூர் ஜாகீர்ராஜா ஏற்கனவே நல்ல பேச்சாளர். காளிப்பிரசாத் பேசவிருந்தார். ஆகவே நமக்குத்தான் சரிவரவில்லை என்று சொல்லிக்கொண்டேன்.

ஆனால் அருண்மொழி முதல்முறையாக மேடையில் தடுமாறுவதைக் காண்கிறேன். அன்றுகாலை திருவாரூர் தேர்விழா. அதற்குச் சென்றுவிட்டு அப்படியே புத்தக விழாவுக்குச் சென்றுவிட்டாள். முதல் ஐந்து நிமிடம் உரை எங்கெங்கோ தொட்டுச் செல்கிறது. ஒரு கோவையான ஒழுக்குக்கு வர பத்து நிமிடங்கள் ஆகின்றது. அதன் பின் வழக்கமான ஜெட் பயணம்.

நினைவுகள் ஆங்காங்கே தடுக்குகின்றன. அது அவள் இயல்பே அல்ல. அருண்மொழி எதையாவது மறந்து நான் கண்டதில்லை. இதில் தஞ்சை எழுத்தாளர்களில் சாரு பெயர் இல்லை. (சாருவை விரும்பும் வாசகி அருண்மொழி. ஆனால் அவரை ஒரு சென்னை எழுத்தாளர் என நினைவில் கொண்டிருக்கலாம்). மேலும் பல முக்கியமான விடுபடல்கள்.

ஆனால் தஞ்சைக்காரர் அல்லாத மௌனி பெயர் அவள் பட்டியலில் இருக்கிறது. (இது வேண்டுமென்றே சேர்க்கப்படுவதாகவும் இருக்கலாம். முன்பு பலரும் செய்துள்ளனர்) தஞ்சைப்பெருமை கொஞ்சம் அதிகமாக எழுகிறது.

ஆனால் என்னென்ன இனி எழுதப்படலாம் என்று சொல்லுமிடத்தில் உரை குறிப்பிடத்தக்க ஒன்றாக ஆகிறதென நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைகி.ரா, கே.எஸ்.ஆர்
அடுத்த கட்டுரைஅறம், Stories of the True, ஒரு சந்திப்பு