ஆசிரியருக்கு,
பெண்கள் ஆண்கள் மீது பொய்ப்புகார் அளித்து துன்புறுத்துவது பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தீர்கள். குறிப்பாக இதை செய்வது நடுத்தர குடும்பங்கள் அல்லது மேல் நடுத்தர வர்க்கப்பெண்கள் என்பது முற்றிலும் உண்மை.
அந்த பேட்டியில் நீங்கள் கூறியதை 22 ஆண்டுகள் அனுபவம் உடைய குற்றவியல் வழக்கறிஞர் என்கிற வகையில் முழுமையாக ஏற்கிறேன். கணவனுடன் சேர்த்து வயோதிக மாமனார், மாமியார், வெளியூர் நாத்தனார் கொழுந்தனார்கள் மீது பொய் புகார் அளித்து துன்புறுத்துவது இன்று ஒரு trending தான்.
உச்ச நீதிமன்றம் சொல்லியும் கூட பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மகிளா நடுவர் நீதிபதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியது. உரிய பகுதிகளை மொழியாக்கம் செய்து கீழே தந்திருக்கிறேன்.
Arnesh Kumar vs State of Bihar 2014 8 Scc 273
https://indiankanoon.org/doc/2982624/
“உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தை பார்வையிட்டதில் இதுபோல ஆண்டுக்கு 1.9 லட்சம் பேர் தேசம் முழுவதும் இந்த வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள் என தெரியவருகிறது. ஆனால் 15% க்கு கீழ் தான் தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் உள்ளதிலேயே தண்டனை சதவிகிதம் குறைவான வழக்கு வகை.
இ த ச 498 A என்கிற துன்புறுத்தல் பிரிவு ஒரு பெண்ணை அவரின் கணவர், மாமனார் மாமியார் துன்புறுத்துவதை தடுக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் இது கேடயமாக அல்ல, ஆயுதமாக பயன்படுகிறது. விரக்தியுற்ற மனைவிகள் தனது கணவர், வயோதிக மாமனார் மாமியார் வெளிநாடு வாழ் நாத்தனார் மீது தேவையற்ற புகார் அளித்து அவர்களை பிணையில் விடா குற்றத்தில் சிறையில் தள்ளுகிறார்கள். எங்கள் அனுபவத்தில் கைதுகள் அதன் முக்கியத்துவம் உணராமல் ஒரு சாதாரணச் சடங்கு போல செய்யப்படுகின்றன. நீதிமன்றக் காவலும் வெகு சாதாரணமாக செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு வழக்கில் ஒரு நீதித்துறை நடுவர் தன் முன் கைது செய்து கொண்டு வரப்படும் நபரை சிறைக் காவலுக்கு அனுப்ப உண்மையில் தேவை இருக்கிறதா என இத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படும் அம்சங்களை பொறுத்து திருப்தியுற வேண்டும். இல்லையெனில் அவரை விடுவிப்பது நீதித்துறை நடுவரின் கடமை. காரணமின்றி நீதிமன்றக் காவலுக்கு ஒருவரை உட்படுத்தினால் அந்த நடுவர் மீது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் “
10 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணா என்கிற ஒரு வடக்கத்திய நண்பர் “ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்” ஒன்றை வைத்திருந்தார். அவர் நீதிமன்றத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவிகள் செய்வார். அவர் மனைவியால் பாதிக்கப்பட்டு சிறை சென்று பிணையில் வந்தவர். இந்த டிரெண்ட் ஐ அப்போதே அவர் உணர்ந்திருந்தார்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
***
அன்புள்ள கிருஷ்ணன்,
நாலைந்து நாட்களுக்குள் இரண்டு சாவுச்செய்திகள், மூன்று வழக்குச் செய்திகள் என்னை வந்தடைந்தமைக்கான எதிர்வினையாகவே அதைச் சொன்னேன். அதாவது ஒரு சமூக நிகழ்வு எனக்கு அளிக்கும் தொந்தரவு எப்படி கலையாக ஆகிறது என்பதற்கான உதாரணமாக சொன்னது. சொல்லக்காரணம் அன்று காலை அந்த வீடியோவை பார்த்ததும் அந்த உணர்வில் இருந்ததும்.
அப்போது அந்தப் பேட்டியாளர் உட்பட அனைவருமே ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதைக்கொண்டு கொள்கை உருவாக்கிக் கொள்ளலாமா’ என்று கேட்டனர். சில அரைவேக்காட்டுப் பெண்ணியர், கால்வேக்காட்டு மார்க்ஸியர் ‘எங்கே புள்ளி விவரம்?’ என முகநூலில் கொதிக்கின்றனர்
இந்த தீர்ப்பு 9 ஆண்டுகளுக்கு முந்தையது. இன்றைய நிலைமை இன்னும் மிகப்பரிதாபகரமானதாகவே இருக்கும். ஆண்டுக்கு ஒன்றேகால் லட்சம் வழக்குகள் அன்று. இன்று இரண்டு லட்சமாவது இருக்கும். ஒவ்வொரு வழக்கிலும் ஒரு குடும்பமே கைதாகிறது. சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவருகிறது. குற்றம்சாட்டப்படுபவர்களில் நூற்றில் ஒருவரே இறுதியில் ஏதேனும் தண்டனை பெறுகிறார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள், ஆண்களின் உறவினர் அனைவருமே சிறைசெல்கிறார்கள். அதாவது தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
இவை நீதித்துறையே அளித்த மிகமிக விரிவான தரவுகள். என்னிடம் புள்ளி விபரம் எங்கே என்பவர்கள் இதை படித்திருக்க மாட்டார்கள். இப்போது கொடுத்தாலும் இதை திரிப்பார்களே ஒழிய படிக்க மாட்டார்கள். இங்கே இருப்பது மனச்சிக்கல் அளவுக்கே சென்றுவிட்ட ஒரு வகை மிகைவெளிப்பாடு. தான், தன் தரப்பு மட்டுமே என நம்பி வெறிகொண்டு கூச்சலிடும் ஒருவகை நரம்புச்சிக்கல்.
எனக்கு திகைப்பூட்டியது ஒன்று. குற்றம் சாட்டப்பட்ட ஆணின் குடும்பத்தினர் நீதிமன்றம் வரவேண்டியதில்லை என உயர்நீதிமன்ற ஆணை சொல்கிறது. அவர்களை மிக அவசியம் இல்லாவிட்டால் கைது செய்யலாகாது என்கிறது. ஆனால் நடைமுறையில் உடனடியாகவே கைது நடைபெறுகிறது. எல்லா நீதிமன்றங்களிலும் ஆணும் அவர் குடும்பத்தினரும் வழக்கு நடைபெறும் நாட்கள் முழுக்க வரும்படிச் செய்யப்படுகிறார்கள். மிக வயதானவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
குற்றம்சாட்டப்பட்டாலே நீதிமன்றம் வரவேண்டியதில்லை, வராவிட்டால் வாரண்ட் வராது, அதற்குச் சட்டமில்லை என்று அவர்களிடம் வழக்கறிஞர்கள் சொல்வதில்லை. அவர்கள் வந்தால்தான் தங்களுக்குப் பணம் வரும் என்று நினைக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வரவேண்டியதில்லை என உயர்நீதிமன்ற ஆணை உண்டு என அவர்களிடம் ஊடகம்தான் சொல்லவேண்டும். (முகநூலில் சதா புரட்சி கொப்பளிக்கும் நம்மூர் முற்போக்கு வக்கீல்களும் இதையெல்லாம் சொல்லலாம்- கட்சிக்காரர்கள் இருந்தால்)
நான் இந்த ஓராண்டில் அறிந்த குடும்பங்கள் எத்தனை. எத்தனை நண்பர்களின் கதைகள். இப்போது கடிதங்கள் வந்து குவிகின்றன. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குறைந்தபட்சம் உயர்நீதிமன்றமாவது இன்றைய சூழலை உணர்ந்திருப்பது ஒன்றே நம்பிக்கை அளிக்கிறது
ஜெ
*
அன்புள்ள ஜெ,
நீங்கள் ஓர் இணையக் காணொளியில் இன்றைய குடும்பச் சூழலில் உள்ள ஒரு சிக்கல் பற்றிச் சொல்கிறீர்கள். நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் இன்று வளர்ந்து வரும் பெண்கள் பற்றிய ஒரு அவதானிப்பு அது.
பெண்கள் ஆயிரமாண்டுகளாகச் சுரண்டப்பட்டனர் என்றும், ஆகவே அவர்களுக்குச் சாதகமாக சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றும், ஆனால் அச்சட்டங்களைச் சென்ற சில ஆண்டுகளாக நடுத்தர உயர்நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களில் ஒரு சாரார் மிகத்தவறான முறையில் பயன்படுத்துவதாக தனியனுபவங்களின் வழியாக நீங்கள் உணர்வதாக அதில் சொல்கிறீர்கள்.
கூடவே, கீழ்நடுத்தர, அடித்தள குடும்பங்களில் அந்த மனநிலை இல்லை என்கிறீர்கள். அடித்தளக் குடும்பங்களில் அப்பெண்களின் உழைப்பாலேயே குடும்பங்கள் வாழ்வதாகவும் சொல்கிறீர்கள்.
மிக தெளிவான பேட்டி. ஆனால் அதை உடனே ஒற்றை வரியாக ஆக்குகிறார்கள். ‘குடும்ப பிரச்சினைக்கு காரணம் பெண்கள்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொல்லி முகநூலில் இணையச்சல்லிகள் ஒரே கூச்சல். இந்த கூச்சலை நீங்கள் எதிர்கொள்வதிலுள்ள நிதானம் திகைப்பூட்டுகிறது.
ராஜ்
*
அன்புள்ள ராஜ்,
கூச்சலிடுபவர்கள் அவர்களின் அறியாமை, உள்நோக்கம் ஆகியவற்றையே வெளிப்படுத்துகிறார்கள். அது நல்லது. சிலரை அந்த முழு வீடியோவையும் பார்க்க வைத்தால் சிறப்பு.
நரம்புநோயாளிப் பெண்கள் சிலர் அக்கருத்தைச் சொன்னமைக்காக என்னை கைது செய்யவேண்டும் என்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வந்த விஷயம் அது. அதையே நான் வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். உயர்நீதிமன்றத்தையே கைதுசெய்ய பாய்வார்கள் என நினைக்கிறேன்.
ஜெ