அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

முதற்சிந்தனையாளர் என்றால் யார்?

அசல் சிந்தனையாளர்  அல்லது மூலச்சிந்தனையாளர் அல்லது முதற்சிந்தனையாளர் என்ற ஒரு கருதுகோள் என் சிந்தனையில் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன் கேட்டுக்கொள்ளவேண்டியது, உண்மையில் மூலச்சிந்தனை என ஒன்று உண்டா என்பதே. மானுடச் சிந்தனை என்பது ஒரு அறுபடாத பெரும்பிரவாகம். எல்லாச் சிந்தனைகளும் ஏற்கனவே இருந்த சிந்தனைகளின் தொடர்ச்சிதான், வரப்போகும் சிந்தனைகளின் முன்னோடிதான். சுத்த சுயம்புவான சிந்தனை என ஒன்று இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக்கூட அப்படி மூலவடிவங்களைத் தேட முடியும். தத்துவத்தின் அடிப்படையான தேடல்களும் பதில்களும் மிகமிகத்தொன்மையானவை.

அப்படியென்றால் மூலச்சிந்தனை என்றல் என்ன? நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன். ஏற்கனவே இருந்த ஒரு சிந்தனைப்போக்கில் புதிய ஒரு திசைவழியையோ புதிய ஒரு கட்டமைப்பையோ உருவாக்கும் சிந்தனையே மூலச்சிந்தனை. அப்படியல்லாமல் ஏற்கனவே இருக்கும் சிந்தனைகளின் விரிவாக்கமாகவோ நடைமுறைப்படுத்தலாகவோ இருக்கும் சிந்தனையை வழிச்சிந்தனை என்று சொல்லலாம். மூலச்சிந்தனையாளர்கள் தங்கள் முன்னோடிகளிடமிருந்து எடுத்த கருதுகோள்களில் தங்கள் சொந்த மெய்யறிதல் மூலம் தெளிவான திருப்பம் ஒன்றை நிகழ்த்துகிறார்கள். அந்தத் திருப்பத்தை அவர்களின் தனிப்பட்ட சிந்தனையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

வழிச்சிந்தனையாளர்களுக்குப் பல உதாரணங்களை நாம் கூறமுடியும். இரு வேறுபட்ட உதாரணங்கள் என பாரதியையும் ஈ.வே.ராவையும் சொல்வேன். விரிவாக்கம் நடைமுறையாக்கம் என்ற இரு முறைமைகளுக்கான உதாரணங்கள் இவர்கள்.

பாரதியைப் பத்தொன்பதாம்நூற்றாண்டு ஐரோப்பா உருவாக்கிய புரட்சிகரச் சிந்தனைகளுக்கும் இந்திய மறுமலர்ச்சி உருவாக்கிய நவீன ஆன்மீக சிந்தனைகளுக்கும் வாரிசாக அமைந்தவர் என வரையறைசெய்யலாம். அவரே சொல்லிக்கொண்டபடி அவர் ஒரேசமயம் ஷெல்லிதாசன் மற்றும் சக்திதாசன். பாரத நாட்டை சக்திவடிவமாக கண்டார் பாரதி. அது இந்திய மறுமலர்ச்சிப் பேரியக்கம் உருவாக்கிய ஒரு தரிசனம். அரவிந்தரிடம் இருந்து பாரதி பெற்றுக்கொண்டது. இந்திய விடுதலைக்காக, மீட்புக்காக பாரதி நம்பியது ஷெல்லி பிரதிநிதித்துவம் செய்த ஐரோப்பிய புரட்சிகர- சீர்திருத்தவாத நோக்கை.

இந்த இரண்டின் கலவையாக பாரதியின் நோக்கை எடுத்துக்கொண்டோமென்றால் பாரதியின் சுயமான பங்களிப்பு என்பது இவ்விரண்டுக்கும் ஒரு வெற்றிகரமான கலவையை உருவாக்கியது மட்டுமே என்று காணலாம். ஷெல்லியின் ஓர் இந்திய விரிவாக்கம். பல கவிதைகளை உதாரணமாகக் காட்டலாமென்றாலும் ’சிவாஜி தன் படைகளுக்குச் சொன்னது’ என்ற நீள்கவிதை அடிப்படையில் ஷெல்லியின் அழகியலையும் நோக்கையும் கொண்டது, அதே சமயம் இந்திய மறுமலர்ச்சியுகத்தின் மன எழுச்சிகளால் ஆனது. இந்தக் கலவையும் விரிவாக்கமும் தான் பாரதியின் சிந்தனைத்தளத்துச் தனித்தன்மை.

ஈவேரா அவர்களைப் பத்தொன்பதாம்நூற்றாண்டு ஐரோப்பிய நாத்திகவாதச் சிந்தனைகளைத் தமிழ்ச்சூழலில் நடைமுறைத்தளத்தில் கொண்டுவர முயன்றவர் என்று எளிதாக வரையறை செய்யலாம். அச்சிந்தனைகளை அவர் நேரடியாகக் கற்றவரல்ல. அவர் நடைமுறைத்தளத்தில் இருந்து தொடங்கினார். அன்றைய காங்கிரஸ் அரசியலில் புகுந்து அதிலிருந்த முதல்கட்ட சாதிய ஆதிக்க நோக்குக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசியலை உருவாக்க ஆரம்பித்தார். அந்த அரசியல் அவரைப் பிராமண எதிர்ப்புக்கும், அதனூடாக இந்து மத எதிர்ப்புக்கும், பின்னர் கடவுள்மறுப்புக்கும், கடைசியாகப் பகுத்தறிவியக்கத்துக்கும் கொண்டுவந்து சேர்த்தது.

ஈவேரா தன் மாணவர்களிடமிருந்தே மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கற்றுக்கொண்டார். அவரது கருத்துக்களைத் தீர்மானித்த மாணவர்களில் இருவர் முக்கியமானவர்கள்.குத்தூசி குருசாமி அவர்களில் மூத்தவர். பின்னர் ஈவேரா அவர்களின் கடும் விமர்சகராகவும் வாரிசாகவும் ஆன சி.என்.அண்ணாத்துரை அடுத்தவர். இந்தப் பகுத்தறிவுவாதக் கருத்துக்கள் அன்றைய இந்தியச்சூழலில் பரவலாகப் புழக்கத்தில் இருந்தன. அவை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் கிறித்தவ மேலாதிக்கத்துக்கு எதிராக உருவாகிக் கல்வி வட்டாரங்களில் புகழுடன் இருந்தன. ஆங்கிலக் கல்வி வழியாக இந்தியாவிலும் அவை பரவின.

ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இந்தியாவின் எல்லா மொழிச்சூழல்களிலும் பகுத்தறிவுவாதம் அறிமுகமாகியிருப்பதைக் காணலாம். கேரளம் முதலிய இடங்களில் இடதுசாரி இயக்கம் அதை உள்வாங்கி வளர்ந்தது. கர்நாடகத்தில் சோஷலிச இயக்கத்தின் ஒரு முகமாக அது இருந்தது. தமிழகத்தில் அது பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் ஒரு கொள்கைமுகமாக முன்வைக்கப்பட்டமையால் பிற இடங்களைவிட அதிகமான அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

ஈவேரா அவ்வாறு வந்துசேர்ந்த ஐரோப்பிய பகுத்தறிவுவாத சிந்தனைகளை தமிழ்நாட்டில் நடைமுறை நோக்குடன் முன்வைத்தார். அச்சிந்தனைகளை அவர் இந்திய வரலாற்றின் அடிப்படையில் அல்லது பண்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்ததாகவோ முன்னெடுத்ததாகவோ கூறமுடியாது. சொல்லப்போனால் அச்சிந்தனைகளை அவ்வப்போது தோன்றியபடி முன்னுக்குப்பின் முரணாகக்கூட அவர் தீவிரமான கருத்துப்பூசல் நடையில் முன்வைத்துச்சென்றார்.

பாரதி , ஈவேரா இருவருமே தமிழ்ச்சிந்தனையைப் பெருமளவு பாதித்திருக்கிறார்கள். நீண்ட மரபைப் புதிய காலச்சூழலில் வைத்து மறுபரிசீலனைசெய்யவும் மறு ஆக்கம் செய்யவும் பாரதி தூண்டுதலாக இருந்தார். தமிழில் பின்னர் உருவான முக்கியமான இலக்கியவாதிகள் , சிந்தனையாளர்களில் அவரது செல்வாக்கு அதிகம். அவருடையது ஆக்கபூர்வமான அணுகுமுறை என்பதனால் அதன் பாதிப்பும் படைப்பூக்கம் கொண்டதாக இருந்தது. பாரதியின் செல்வாக்கு அறிவுஜீவிகளிடம் தான் அதிகம். ஐந்து தலைமுறைக்கும் மேலாக அது நீடிக்கிறது.

ஈவேராவின் பாதிப்பு என்பது அதிகமும் பொதுமக்களிடம்தான். அவருடையது வெகுஜன இயக்கம் சார்ந்த செயல்பாடு. மரபின் இறுகிப்போன நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் உடைத்து மறுபரிசீலனைசெய்ய வைத்ததில் அவர் ஆற்றிய பணி குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆனால் அது பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பு சார்ந்த வெளிப்பாடுகளால் ஆனது என்பதனாலேயே அதன் செல்வாக்கும் மேலோட்டமானதே. பெரும்பாலும் வெகுஜன அரசியல் தளத்திலேயே அது நின்றுவிட்டது. சிந்தனைத்தளத்தில் அதன்மூலம் ஆக்கபூர்வமாக ஏதும் நிகழவில்லை. தமிழ் மரபோ வரலாறோ அவரது நோக்கில் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஓர் அறிவியக்கம் இங்கே உருவானதென எவரும் சொல்லமுடியாது.

இவ்விரு சிந்தனையாளர்களையும் வழிச்சிந்தனையாளர்களுக்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். பின்னர் தமிழில் வந்த பெரும்பாலான சிந்தனையாளர்களை இவ்விருவரில் ஒருவரின் மரபில் வைத்து ஆராய்வது சாத்தியம்தான். ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையும் பாரதி மரபைச்சேர்ந்தவர்கள் எனலாம். எஸ்.வி.ராஜதுரையை அல்லது அ.மார்க்ஸை ஈவேரா மரபைச்சேர்ந்தவர் எனலாம்.

முதல்சிந்தனையாளர் மூவர்

மூலச்சிந்தனையாளர் என்பவர்,தான் உள்வாங்கிக்கொண்ட சிந்தனைகளைக் கையாண்டவர் அல்ல, தன் நோக்கினால் அதைக் கணிசமாக மாற்றியமைக்க முடிந்தவர். அதற்குத் தனக்கான பங்களிப்பை அளித்தவர். நம் பண்பாட்டு வரலாற்றில் கடந்த நூறாண்டுகளை நவீனத்துவ யுகம் என்று சொல்லலாம். இந்த நூறாண்டுக்காலத்தில் நம்மிடையே முன்வைக்கப்பட்ட உண்மையான மூலச்சிந்தனைகள் எவை?

என் நோக்கில் மூன்று பேரையே சொல்லத்தோன்றுகிறது. காலவரிசைப்படி பின்னுக்குச்சென்றால் மார்க்ஸிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராஜன் முதலில். ஈழச் சிந்தனையாளரான மு.தளையசிங்கம் பிறகு. கடைசியாகப் பண்டித அயோத்திதாசர். இந்தக் கருத்தை நான் சில இடங்களில் குறிப்பிட்டதையொட்டியே இந்த உரைக்காக நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

முதல் இருவரைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன். எஸ்.என் நாகராஜன் [1927-]  அடிப்படையில் ஒரு வேளாண் அறிவியலறிஞர். இந்தியாவில் பசுமைப்புரட்சி அறிமுகம்செய்யப்பட்டபோது அதனுடன் சேர்ந்தே இங்கே அறிமுகம்செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் வீரிய விதைகளும் இந்த நாட்டின் நெடுங்காலப் பண்பாட்டை அழிக்கும் என்று சொல்லி முரண்பட்டு அந்த முயற்சிகளில் இருந்து விலகினார். இந்திய நாட்டு விவசாயிகள் நெடுங்காலமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் நடைமுறை ஞானமும் மரபறிவும் அழிக்கப்படும் என முன்னறிவிப்பு செய்தார்.

நவீன அறிவியலால் முன்வைக்கப்பட்ட நவீன வேளாண்மை,தீவிரமான இலாப நோக்கு கொண்டதாக இருந்தது. அது பிற அனைத்தையும் அழித்துச்செல்லும் போக்கு கொண்டிருந்தது.   அதை ஒட்டிய விவாதங்களின் வழியாக அவர் நவீன அறிவியலில் உள்ள வன்முறையை அடையாளம் காண முற்பட்டார். நவீன அறிவியல் புறவயமான தர்க்கத்தை மட்டுமே நம்புகிறது. நிரூபணவாத அணுகுமுறைகளுக்கு அடிப்படை மதிப்பு அளிக்கிறது. மனித உணர்ச்சிகள், மனித அறவுணர்ச்சி , அழகுணர்ச்சி எதற்கும் அதில் இடமில்லை. அதில் லாபநோக்கு உள்ளுறைந்துள்ளது. அது மையப்படுத்தும் போக்குள்ளது. மையத்தில் அது அறிவின் அதிகாரத்தையே முன்வைக்கிறது.

இந்த தரிசனத்தில் இருந்தே நாகராஜன் மார்க்ஸிய ஆய்வுகளுக்கு வந்துசேர்கிறார். மார்க்ஸியத்தை ஒரு கறாரான அறிவியலாக முன்வைக்கும் ஐரோப்பா மார்க்ஸியத்தின் சாரமாக உள்ள இலட்சியவாத அம்சத்தை, அதாவது அதன் மெய்யியலை, இல்லாமலாக்குகிறது என்பதே நாகராஜனின் முதல்கருத்து.  அதுதான் ஸ்டாலினியத்தை உருவாக்கியது. அந்த மார்க்ஸியத்தை இயந்திரவாத மார்க்ஸியம் என அவர் நிராகரித்தார். மார்க்ஸியம் ஒரு மெய்யியல் தரிசனம். அதன் சாரமாக உள்ளது கறாரான அறிவியல் நிர்ணயம் அல்ல, மாறாக மானுடநேயம் என்ற விழுமியம்தான். அது ஒரு காரணமோ, அல்லது உபவிளைவோ அல்ல. அதுவே அதன் எல்லா செயல்பாட்டுக்கும் ஆதாரம்.

’அன்பு ஒரு மெய்காண்முறை’ என்று அதைப்பற்றிப் பேசும்போது நாகராஜன் குறிப்பிட்டார். ஒரு விஷயத்தை அன்புடன் அணுகுவதற்கும், அன்பில்லாமல் அணுகுவதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. நிலத்தை அன்புடன் விவசாயம் செய்வதற்கும்,அன்பில்லாமல் விவசாயம் செய்வதற்கும் உள்ள வேறுபாடுதான் அது. அன்பில்லாத செயலில் வன்முறை வந்துசேர்கிறது.  அதுவே மார்க்ஸியத்தின் பேரால் அதிகாரப்போர்களும் அழிவும் உருவாக வழியமைக்கிறது. அதைவிட முக்கியமான நாசகாரப் பிரச்சினையாக நாகராஜன் சுட்டிக்காட்டியது மார்க்ஸியத்தின் பேரால் இயற்கையை வெறும் உற்பத்தி சக்தியாக மட்டுமே அணுகி அதை ஒட்டச்சுரண்டிப் பெரும் சூழியல் அழிவுகளை உருவாக்கிய சோஷலிச அரசுகளின் நடவடிக்கையைத்தான்.

இதிலிருந்து எஸ்.என்.நாகராஜன் மேலைச்சிந்தனை x கீழைச்சிந்தனை என்ற ஒரு இருமையை உருவாக்குகிறார். இதை அவர் ஒரு வரையறையாக அல்ல புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே கையாள்கிறார். மேலைநோக்கு ஆண்தன்மை கொண்டது.கீழைநோக்கு பெண் தன்மை கொண்டது. மேலைநோக்கில் ஆதிக்கம், நுகர்தல் என்னும் அம்சங்கள் மேலோங்கி உள்ளன. கீழைநோக்கில் ஒத்துப்போதல், இணைந்துவாழ்தல் ஆகிய அம்சங்கள் மேலோங்கியிருக்கின்றன. மேலைநோக்கு தர்க்கத்தன்மை கொண்டது. கீழைநோக்கு உணர்ச்சிநோக்கு கொண்டது. எஸ்.என்.நாகராஜன் நம் நாட்டுக்காக ஒரு கீழை மார்க்ஸியம் தேவை என்று எண்ணினார்.

நாகராஜன் கீழை மார்க்ஸியத்தைப்பற்றிப் பல்வேறு தருணங்களில் விதவிதமான கோணங்களில் பேசியிருக்கிறார். அவர் எழுத்தாளர் அல்ல. பேச்சாளரும் அல்ல. உரையாடல்காரர். தொடர்ச்சியாகப் பலமணிநேரம் உரையாடுபவர். அந்த உரையாடல்மூலம் அவர் பிறரில் உருவாக்கும் விளைவுகள் மூலமே அவர் தன் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். அவரது கருத்துக்கள் கடிதங்களாகவும் நினைவுக்குறிப்புகளாகவும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றின் தோராயமான ஒட்டுமொத்தத்தையே நாம் பெறமுடிகிறது.

கீழை மார்க்ஸியத்தை முன்வைத்த நாகராஜன் மார்க்ஸியத்துக்கு அளித்த விளக்கங்கள் பல. மார்க்ஸ் அவரது இளமையில் ஹெகலின் சீடராக இருந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் முக்கியமான பிரச்சினையாக,உழைப்பாளி உழைப்பில் இருந்து அன்னியமாவதை முன்வைத்தார். தொழிற்சாலை உற்பத்திமுறையில் அவனிடமிருந்து உழைப்பில் இருந்த படைப்பூக்கம் பிடுங்கப்படுகிறது. உற்பத்தியில் அவனுடைய பங்களிப்பு இயந்திரத்தனமாக ஆகிறது. தன் உழைப்பின் விளைவும் அவனை வந்தடைவதில்லை.

இந்த அன்னியமாதல் சிந்தனையைப் பின்னர் மார்க்ஸ் கைவிட்டார். உற்பத்திசக்திகளைக் கைப்பற்றி உழைப்பின் விளைவுகளுக்கு முழுக்க சொந்தக்காரனாகும்போது உழைப்பாளி தன்னைக் கூடுமானவரை உழைப்பில் இருந்து விடுவித்துக் கலாச்சார செயல்பாடுகளில் ஈடுபடலாம் என கூறினார். உழைப்பில் இருந்த படைப்பின்பம் என்ற அம்சத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டார். மார்க்ஸியம் பற்றிக் கேள்விப்படும்போது காந்தி முதலில் சுட்டிக்காட்டியதே இந்த அம்சத்தைத்தான். பியாரிலாலிடம் உரையாடும் காந்தி உழைப்பாளியின் வெற்றிமூலம் அவன் உழைப்பை நிராகரிப்பானென்றால் அவன் ஆளுமை எப்படி முழுமைபெறும் என்று கேட்கிறார்.

நாகராஜன் இளம் மார்க்ஸின் கருத்துக்கள் சரியே என நினைக்கிறார். அந்தக் கோணத்தில் மார்க்ஸியத்தை விளக்க முனைகிறார். உற்பத்தியில் இருந்து அன்னியப்படுத்தப்படுவதே உழைப்பாளி முதலாளித்துவத்தில் அடையும் முதல் ஒடுக்குமுறை, அதைக் களைவதே அவன் அடையும் சுதந்திரம் என்கிறார். அந்த நோக்கில் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் அல்தூசர் மார்க்ஸியத்தை விளக்கமுனைந்தார்.  முப்பது வருடங்கள் கழித்து   அச்சிந்தனைகள் தமிழுக்கு வந்து சேர்ந்தன.

அதேபோல, உற்பத்திசக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் மட்டும் அடிக்கட்டுமானமாக எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த பண்பாட்டையும் மேற்கட்டுமானமாகக் காணும் மார்க்ஸியப்போக்கையும் நாகராஜன் நிராகரிக்கிறார். பண்பாட்டுக்கூறுகளும் சமூகத்தை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளே என்று வாதிட்டு, பண்பாட்டின் சாராம்சமான தரிசனமாக அன்பை முன்னிறுத்துகிறார். அன்பு ஒரு மாபெரும் சமூகக் கட்டுமான மூலப்பொருள் என்று சொல்கிறார்

நாகராஜனின் கருத்துக்களை ஏற்றோ மறுத்தோ விவாதிக்கலாம். ஆனால் தமிழ்ப்பண்பாட்டுச்சூழலில் நின்றுகொண்டு உலகை நோக்கி முழுமையான பார்வையுடன் அவர் பேசினார். மார்க்ஸியத்தை இந்தியாவுக்காக, தமிழ்நாட்டுக்காக மறு ஆக்கம்செய்வதைப்பற்றி வலியுறுத்தி அதற்கான அடிப்படைகளை நம் பண்பாட்டில் இருந்தே கண்டெடுத்துக் காட்டினார். அவ்வாறு நமக்கேற்ப உருமாற்றம்செய்யப்பட்ட மார்க்ஸியமே நம் விவசாயிகளிடம் சென்று சேரமுடியும் என்று அவர் சொன்னார். நம் விவசாயிக்குப் புரியாத, அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாத மார்க்ஸியத்தால் என்ன பயன் என்று கேட்டார்.

நம் விவசாயி நெடுங்காலமாக உருவாக்கித் தன்னுடைய ஆதாரப்பண்பாக கொண்டுள்ள ஒன்றை நிராகரிப்பதாக எப்படி மார்க்ஸியம் இருக்கமுடியும்? அதை உள்வாங்கி மறு ஆக்கம்செய்யப்பட்டால்தான் மார்க்ஸியம் அந்த விவசாயியால் ஏற்கப்படும் என்றார். அந்த மார்க்ஸியம் அன்பெனும் விழுமியத்தாலானதாக, ஆக்ரமிப்புத்தன்மை அற்றதாக, தர்க்கத்துக்குப்பதில் உணர்ச்சியையும் அறிவுக்குப்பதில் அன்பையும் முன்வைப்பதாக இருக்கவேண்டும் என்றார். சுருக்கமாகச் சொன்னால் நாம் உருவாக்கும் மார்க்ஸியம் திருவள்ளுவருக்கும், ராமானுஜருக்கும், வள்ளலாருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்றார்.

நாகராஜன் பேசியவை அவர் காலகட்டத்துக்கு மிக மிகத் தாண்டியவை என்பதனால் அவற்றைப் புரிந்துகொள்ளப் பெரும்பாலானவர்களால் முடியவில்லை. அவர் சில்லறைத்தனமாக வழக்கமான சாதிய நோக்கில் வசைபாடப்பட்டார்.  அவரும் ஒரு புறவயமான விவாதத்துக்கு வரவேயில்லை.

ஈழத்தைச்சேர்ந்த மு.தளையசிங்கம் [1935- 1973]  ஒரு பள்ளி ஆசிரியர்.  குறைந்த காலமே உயிர்வாழ்ந்த தளையசிங்கம்,ஆரம்பத்தில் மார்க்ஸியராக இருந்தார். பின்னர் காந்தியாலும் கடைசியாக அரவிந்தராலும் ஈர்க்கப்பட்டார்.  தன்னை ஓர் இலக்கியச் சிந்தனையாளராகவே தளையசிங்கம் முன்வைக்கிறார். தன் சிந்தனைகளை தளையசிங்கம் ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என பெயரிட்டு அழைக்கிறார்

 

மார்க்ஸியத்தின் மீது விமர்சனங்களை எழுப்பியபடியே தளையசிங்கமும் தன் சிந்தனைகளை ஆரம்பிக்கிறார். காந்தியையும் அரவிந்தரையும் உள்வாங்கி மேலேசென்றாலும் கடைசிவரை தளையசிங்கம் மார்ஸியத்தின்மீது பிடிப்புடன்தான் இருந்திருக்கிறார்.

தளையசிங்கத்தின் சிந்தனைகளை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தளையசிங்கம் மானுடகுலம் சிந்தனைத்தளத்திலும் ஒரு தொடர்பரிணாமத்தில் இருப்பதாக நினைக்கிறார். இக்கருத்து அவரால் அரவிந்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைய சூழலில் ஐரோப்பாவிலும் பரிணாமக்கோட்பாடுகள் பிரபலமாக இருந்தன. மானுடப்பரிணாமத்தின் தொடக்கத்தில் மனிதர்கள் உடல்சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் பின்னர் மூளைசார்ந்தவர்களாக ஆனார்கள் என்றும் இனி ஆழ்மனம் சார்ந்தவர்களாக ஆவார்கள் என்றும் அவர் உருவகம்செய்கிறார். இதற்கான கலைச்சொற்களை அவர் இந்திய சிந்தனை மரபுகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்.

இதற்கான சான்றுகளாக அவர் தத்துவத்துறையில் உருவாகி வரும் உறைநிலையை சுட்டிக்காட்டுகிறார். அது வரை தத்துவம் கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் போன்ற இருமைகளாலேயே செயல்பட்டுவருகிறது என்று சுட்டும் தளையசிங்கம் அத்தகைய இருமைகள் எல்லாம் மெல்லமெல்லப் பொருளிழந்து மோதிச் செயலிழந்து வருகின்றன என்கிறார். வரும் காலத்தில் அவற்றுக்கு தத்துவ மதிப்பேதும் இருக்காது என்கிறார்.

ஆகவே எளிய வர்க்கவேற்றுமை போன்ற இருமைகளின் அடிப்படையில் செயல்பட்டுவரும் சோவியத் ருஷ்யாபோன்ற நாடுகள் விரைவிலேயே தேக்கநிலையை அடைந்து அழியும் என முப்பதாண்டுகளுக்கு முன்னரே ஆருடம் சொல்கிறார்.

வரும்காலத்தில் மனித மூளையின் தகவல் கையாள்வதும் சிந்தனையும் எல்லாம் முக்கியமற்றுப்போகும் என்றும் உள்ளுணர்வுக்கே முக்கியத்துவம் உருவாகும் என்றும் தளையசிங்கம் சொல்கிறார்.  ஆழ்மனத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலை உருவாகி வரும்.  மார்க்சியம் உடல்சார்ந்த சமூகநிலையையில் இருந்து விடுதலை பெற்று மூளைசார்ந்த சமூகநிலை நோக்கிச் செல்ல முயல்கிறது என எண்ணும் தளையசிங்கம் ஆழ்மனம் சார்ந்த சமூகநிலைகளுக்குச் செல்லும் கோட்பாடாக அது விரிவாக்கம் பெறவேண்டும் என்று சொல்கிறார். அவர் பயன்படுத்தும் சொல்லாட்சி சுத்தமனோமயநிலை அதைப் பேர்மனம் என்றும் சொல்கிறார்.

ஆகவே சமூகக் கட்டமைப்பை மாற்றுவதுடன் நில்லாது தனிமனித விடுதலை, அல்லது பூரணநிலைக்காகவும் பேசும் ஒரு புதியசிந்தனையை மார்க்சியத்தில் இருந்து உருவாக்கியாகவேண்டும் என மு.தளையசிங்கம் சொல்கிறார். நிலப்பிரபுத்துவநிலையில் இருந்து முதலாளித்துவநிலைக்கு வராமலேயே கம்யூனிசநிலை நோக்கி ருஷ்யா போகமுடியுமென்றால் ஏன் அடுத்தநிலைக்கு நாம் இங்கிருந்தே செல்லக்கூடாது என்று அவர் கேட்டார்.

இலக்கியம் இன்று அறிவுத்தள வாசகர்களுக்காக அறிவுத்தளத்தில் எழுதப்படுகிறது. அதில் அபூர்வமான ஆழ்மன வெளிப்பாடு நிகழும்போது அது ஆழமான இலக்கியம் எனப்படுகிறது. எதிர்காலத்தில் எல்லாருமே ஆழ்மன நிலையில் வாழும் சமூகத்தில் இந்த இலக்கியம் போதாது. மொழி வெறும் ஆழ்மன வெளிப்பாடு மட்டுமாகவே தன்னை முன்வைக்கும் ஓர் இலக்கியவடிவம் உருவாகி வரும் என்கிறார் தளையசிங்கம்.

இவ்விருவரையும் பொதுவாக ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும் பொதுத்தன்மைகள் ஆச்சரியமூட்டுபவை. இருவருமே சிந்தனையாளர்கள் என்பதுடன் நேரடியான களப்பணியாளர்களும்கூட. நாகராஜன் தன் வேளாண்மை அறிவியல் உலகையும் அது அளிக்கும் பல்வேறு உலகியல் வெற்றிகளையும் முற்றிலும் துறந்து தீவிர இடதுசாரி அரசியல் களப்பணியாளராகச்செயலாற்றினார். அதற்காகத் தன் சொந்தவாழ்க்கையைப் பணயம்வைக்கவும் செய்தார். மு.தளையசிங்கம்,சர்வோதய இயக்கத்தைச் சார்ந்து கிராமிய மேம்பாட்டுக்காகவும் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் போராடினார்

இருவருக்குமே தலித் அரசியலில் ஆழமான ஈடுபாடு இருந்தது. தமிழ்ச்சூழலில் மிக ஆரம்ப காலத்திலேயே தலித் உரிமைகளைப்பற்றிப் பட்டறிவுத்தளத்தில் நின்று நாகராஜன் பேசியிருக்கிறார். தளையசிங்கம் 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுப்பதற்கான போராட்டத்தை முன்னின்று நடத்திக் காவல்துறையால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

இருவரையும் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டிச்செல்ல முயன்ற தமிழ்ச்சிந்தனையாளர்கள் என்று சொல்லலாம். நாகராஜன் நவீன அறிவியலில் உள்ள வன்முறையையும் அறிவதிகாரத்தையும் சுட்டிக்காட்டி நவீன அறிவியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நவீனத்துவத்தை நிராகரித்தார். புறவயத் தர்க்கத்தில் உள்ள ஆதிக்கத்தன்மையை அவர் நிராகரித்தது மிகமுக்கியமானதாகும். பண்பாட்டின் பன்மையை, மையமற்ற தன்மையை நாகராஜன் முன்வைத்தார்.

நவீனத்துவச்சிந்தனைகள் அனைத்துக்குமே அடிப்படையாக அமைந்த  மு.தளையசிங்கம் இருமைச் சிந்தனைகளின் எல்லையைச் சுட்டிக்காட்டினார். அறிவுத்தளத்துக்கு அப்பாற்பட்ட உன்னத பிரக்ஞை நிலை சார்ந்த சிந்தனைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இலக்கியத்தில் தர்க்கத்தின் இடத்தை நிராகரித்து மொழியின் தடையற்றவெளிப்பாட்டை முன்வைத்தார்.

இந்தச் சிந்தனைகள் அனைத்தும் இவர்கள் பேசிய காலகட்டத்துக்குப்பின் கால்நூற்றாண்டு கழித்துப் பின்நவீனத்துவச் சிந்தனைகளாக மேலை நாடுகளில் இருந்து இங்கே வந்து சேர்ந்து பரவலாகப் பேசப்பட்டன.  அப்போது கூட இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்களால் நாகராஜனையும் தளையசிங்கத்தையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் எவருமே அவரைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. அவர்கள் புதியதாகப் பேச ஆரம்பித்த நிரூபணவாத எதிர்ப்பு, இருமைநிராகரிப்பு, மையம்அழிப்பு, அதிபிரக்ஞைநிலை போன்றவற்றை முழுக்கமுழுக்க இந்திய, தமிழ்ச்சூழலில் வைத்து அசலாக இம்முன்னோடிகள் விரிவாகவே பேசிவிட்டிருந்தனர் என இன்றும்கூட அவர்களுக்கு தெரியாது.

காரணம், இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் எந்தவிதமான சிந்தனைத்தேடலாலும் அல்லது நெருக்கடிகளாலும் பின்நவீனத்துவம் நோக்கிச்சென்றவர்கள் அல்ல. அவர்கள் கல்வியாளர்கள். மேலைநாட்டில் புதியதாகப்பேசப்பட்ட ஒன்றை அப்படியே பெயர்த்து இங்கே கொண்டுவந்தார்கள். அவர்களுக்கு எதையும் புரிந்துகொள்ள, மேலே யோசிக்கப் பயிற்சி இல்லை. அவர்கள் தமிழ்ச்சூழலுக்குக் கொஞ்சம் கலைச்சொற்களையும் சில மேற்கோள்களையும் மட்டுமே கொடுத்தார்கள். பின்நவீனத்துவச் சிந்தனைகளைக்கொண்டு இங்குள்ள பண்பாட்டையோ அரசியலையோ எந்த புதிய ஆய்வுகளுக்கும் ஆளாக்கவில்லை. எந்தத் திறப்பையும் நிகழ்த்தவில்லை. அவர்கள் ஏற்கனவே பேசிவந்த விஷயங்களைப் பின்நவீனத்துவ மேற்கோள்கள் காட்டி மேலும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அலை அப்படியே பத்தாண்டுகளில் அடங்கியது. ஒரு முக்கியமான படைப்பைக்கூட அது விட்டுச்செல்லவில்லை. ஏன் குறிப்பிடும்படியான ஒரு நல்ல இலக்கிய விமர்சனத்தை அல்லது ஆய்வுக்கட்டுரையைக்கூட அது உருவாக்கவில்லை.

நாகராஜனும்,தளையசிங்கமும் சிந்தனையைப் புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் திராணிகொண்டவர்களுக்காகக் காத்து, இன்னமும் கண்டடையப்படாதவர்களாகவே எஞ்சுகிறார்கள்.

 

[ 30-07-2011 அன்று மதுரை அயோத்திதாசர் ஆய்வு நடுவத்தில் ஆற்றிய உரையின் முன்வடிவம்]

 

தளையசிங்கம்- எம் வேதசகாயகுமார்

 

 

ஒரு சந்திப்பு-கடிதங்கள்

கல்வாழை -நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும், 2


திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்


மிஷனரிவரலாறு சக்கிலியர் வாஞ்சி கடிதங்கள்

 

வாஞ்சிநாதன்


இந்தியசிந்தனை மரபில் குறள்


நாராயணகுரு என்னும் இயக்கம்

அறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரை- ஈவேராவின் அணுகுமுறை

 

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் பற்றி