நண்பர் ராஜமாணிக்கம் திருப்பூர்க்காரர். கட்டுமானத்துறை பொறியாளர், தொல்லியலில் ஆர்வம் கொண்டவர். எங்கள் பயணத்துணைவர். ராஜமாணிக்கம் தமிழகக் கட்டுமானப்பொறியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி ஒரு விழா திருப்பூரில் 27 மார்ச் 2023ல் நடைபெற்றது. அதில் அவருடைய கட்டாயத்திற்கு இணங்க நான் கலந்துகொண்டேன்.
விந்தையான அரங்கு. என் வாசகர்கள் பாதிப்பேர், எஞ்சியவர்கள் கட்டிடப்பொறியாளர்கள். நான் பேசுவதுபோன்ற ஓர் உரையை அவர்கள் செவிகொடுத்துக் கேட்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.சம்பிரதாயமான ஒரு வாழ்த்து சொல்லி திரும்பிவிடலாம் என்றால் ராஜமாணிக்கம் நான் அதை ஒரு தலைப்பு சார்ந்து தனி உரையாக ஆற்றவேண்டும் என்று கோரியிருந்தார். ‘படைப்பியக்கத்தின் அறம்’ என நானே தலைப்பை தேர்வு செய்துகொண்டேன். அவர் சொன்ன தலைப்பு ‘தொழிலில் அறம்’ என்பது.
26 மாலை நாகர்கோயிலில் இருந்து கோவைக்கு கிளம்பினேன். உரைகளை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைத்தாலும் வேறு வழியில்லாமல் உரைகள் அமைந்துகொண்டே இருக்கின்றன. ரயிலில் சரியாக தூக்கமில்லை. குடும்பங்கள் உடன் ஏறிக்கொண்டால் தூங்க விடமாட்டார்கள். கடைசி நிறுத்தம் வரை கலைந்துகொண்டே இருப்பார்கள். அதிகம் பயணம் பண்ணி பழக்கமில்லாதவர்கள் என்பதனால் அவர்களுக்கு ரயிலில் தூக்கமும் வருவதில்லை. ரயில் நிலையத்திற்கு ராஜமாணிக்கம் வந்திருந்தார்.
ஆர்.கே.ரெசிடென்ஸியில் தங்கினேன். அறைக்குள் வந்ததுமே படுத்து இரண்டு மணிநேரம் தூங்கியதனால் கொஞ்சம் தெளிவடைந்தேன். அதன்பின்னர் சொற்பொழிவுக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் வரத்தொடங்கினர். மதியம் கிருஷ்ணனும் ஈரோட்டு நண்பர்களும் வந்தனர். இந்த வகையான நிகழ்ச்சிகளில் பேச்சுக்கு முன் அதிகமாக உரையாடி மூச்சை கெடுத்துக்கொள்ளலாகாது என்பது என் முன் அனுபவம்.
திருப்பூரில் பல இடங்களில் பேனர் எல்லாம் வைத்திருந்தார்கள். அரங்கு நிறைந்த கூட்டம். கட்டுமானத்துறை பொறியாளர்களின் சங்கத் தலைவராக முறைப்படி ராஜமாணிக்கம் பொறுப்பேற்றார். இரண்டு ஆச்சரியங்கள். கட்டுமானத்துறையின் மூத்த பொறியாளரும் பேராசிரியருமான முனைவர் ஜெயகோபால் அவர்களின் சுருக்கமான, அழகான உரை. திருக்குறள் பற்றிய புதிய பார்வை கொண்டது. இன்னொன்று கட்டுமானத்துறைப் பொறியாளர் சி.கல்யாணசுந்தரம் அவர்களின் உரை. அதில் மு.கருணாநிதி அவர்களின் ஒரு பொறியியல் சார்ந்த ஒரு கூரிய அறிவுறுத்தலைப் பற்றிச் சொன்னார். அது அரசுவிழாக்களிலோ கட்சிவிழாக்களிலோ எழும் வழக்கமான புகழுரை அல்ல, அதற்கான அரங்கும் அல்ல அது. அந்த உண்மைத்தன்மையாலேயே அதன் மதிப்பு மிக அதிகம்.
நான் அரைமணிநேரம் பேசினேன். அதன்பின் புகைப்படங்கள். இப்போது இரவுணவு உண்பதில்லை. 15 மணிநேர உண்ணாமை நெறி. ஆகவே விடுதிக்கு வந்து வெந்நீர் குடித்துக்கொண்டேன். நண்பர்கள் பேசிக்கலைய இரவு 12 ஆகியது. அதிகாலை 4 மணிக்கு கோவைக்கு கிளம்பினேன். அதிகாலை 6 மணிக்கு சென்னை விமானம். இன்னொரு தலைபறபறக்கும் நாளை எதிர்நோக்கி. பொன்னியின் செல்வன்2, விடுதலை பற்றிய உரையாடல்கள். என்னுடைய The Abyss நாவல் பற்றிய பேட்டிகள்….
இன்னும் ஒரு மாதம் புயல்சுழலும் நாட்கள்…