அதிகார அமைப்பா?
அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,
பலரின் சந்தேகங்களை, அறிவற்ற கேள்விகளை, மிக அழகிய முறையில் நுண்மையான தகவல்களுடன் தாங்கள் கூறிய பதிலை படித்தேன். உங்களின் மேன்மையான நோக்கத்தை அறியாமல் பலர் செய்யும் செயல் அதீத கவலைக்குரியது. உங்களின் கனவு, நீங்கள் பெற்ற அரிய அனுபவங்கள், பல ஆளுமைகளின் சிந்தனைகள் போன்றவை என்னைப்போன்ற வாசகனிடம் உண்மையான தேடலின் மூலம் புரிந்து, அறிந்து கற்று மேலும் அவனின் தேடலை வலுப்படுத்தும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை.
உங்களின் பயணம், பணி, இயக்கம் அனைத்திலும் அதீத வளர்ச்சியை பெறுவீர்கள் என உறுதியுடன் நம்புகிறேன். அது தான் நடக்க வேண்டும் என்று விழைகிறேன். உங்களின் பல படைப்புகளை படித்து வியந்த எண்ணங்கள் எண்ணற்றவை. புதிதாக ஒரு படைப்பு எப்போது உங்களிடம் இருந்து வரும் என்று அதீத ஏக்கம் கொண்ட வாசகன் நான்.
உங்களைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் தவிர்த்து உங்களை அறிய உங்களின் எழுத்துக்களின் மூலம் முயன்று கொண்டே இருக்கிறேன். உங்களின் மொழி நடை மிகவும் தனித்துவமான ஒன்று. என்னால் யாருடனும் ஒப்பீடு என்ற எண்ணம் தோன்றவே இல்லை.
அன்புடன்
பழனியப்பன் முத்துக்குமார்
***
அன்புள்ள பழனியப்பன் முத்துக்குமார்,
உண்மையில் இந்த விமர்சனங்களை நுண்ணுணர்வுள்ள, அடிப்படையில் அறிவுத்திறனுள்ள எவரும் ஐயப்படவே செய்வார்கள். இவற்றை முன்வைப்பவர்களின் தரமென்ன, அவர்கள் சாதித்தவை என்ன என்பதையே அவர்கள் பார்ப்பார்கள். செயலில் சாதனை புரிந்தவர்களையே செயலில் ஆர்வமுடையோர் செவிமடுப்பார்கள்.
அதேபோல இந்த இணையதளத்தை, அல்லது இந்த இலக்கிய இயக்கத்தை ஏதேனும் வகையில் அறிந்தவர்களுக்கு இங்கே நிகழ்வதென்ன என்று தெரிந்திருக்கும். அவர்களுக்கு விளக்கங்கள் தேவையுமில்லை.
ஆனால் தொடர்ச்சியாக இங்கே புதிய வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏராளமான உளத்தடைகளை இந்த அற்பப்பிரச்சாரகர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு சிறிய இலக்கிய இயக்கம்கூட இங்கே நிகழ்ந்து விடக்கூடாது, ஒரு சிறிய அளவில்கூட வாசகர்சூழல் உருவாகிவிடக்கூடாது என நினைக்கும் சுயநலப் பார்வை கொண்ட பேராசிரியர்கள், அரசியலாளர்கள் அவர்கள்.
தமிழில் எந்த ஒரு இலக்கியப் படைப்பாளி பற்றியும் ஒரு நல்ல கட்டுரை இவர்களால் எழுதப்பட்டதில்லை. தமிழிலக்கிய வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட்டதில்லை. அதற்கும் எழுத்தாளனே வரவேண்டும். அதற்கு மூளையோ நேரமோ இங்குள்ள கல்வித்துறை ஆசாமிகளுக்கு இல்லை.
(அண்மையில் சிவசங்கரி தொகுத்த இலக்கியம் வழியாக இந்திய இணைப்பு நூலை வாசித்தேன். அதில் மற்ற அத்தனை மொழிகளிலும் அந்தந்த மொழி இலக்கிய அறிமுகம் எழுதியிருப்பவர்கள் பேராசிரியர்கள். தமிழில் மட்டும் இலக்கியவாதிகள். அப்படி எழுதத்தெரிந்த ஒரு பேராசிரியர்கூட இங்கில்லை)
ஆனால் ஓர் இலக்கிய வாசிப்பு வட்டம் உருவானால் அதை அழிக்க இரவுபகலாக அமர்ந்து எழுதுவதற்கு இவர்களுக்குச் சலிப்பே இல்லை. அவர்களால் குழப்பப்படுகிறார்கள் எளிய தொடக்கநிலை வாசகர்கள். அவர்களுக்கான விளக்கங்களை இங்கே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
உண்மையில் அந்த உளத்தடைகளைக் கொண்டவர்கள் இரு சாரார். ஒரு சாரார் உளத்தடை காரணமாக இங்கே வரவே மாட்டார்கள். அவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்களல்ல. அவர்கள் மேலோட்டமான இளைஞர்கள். அவர்கள் வராமலிருப்பதே நன்று. இன்னொரு சாரார், உளத்தடை இருந்தாலும் சரி என்ன சொல்கிறார் இதற்கு என்று பார்ப்போம் என வருபவர். அல்லது விவாதிப்பவர். அவருக்கு இந்த பக்கத்தின் சுட்டியை இன்னொருவர் அளிக்கமுடியும்.
அத்துடன் இந்த விவாதங்கள் வழியாக நாம் க.நா.சு முதலான இலக்கிய முன்னோடிகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர்கிறோம் அல்லவா?
ஜெ