சிவசங்கரியின் இந்திய தரிசனம்

சிவசங்கரி தமிழ் விக்கி

கே.எம்.ஜார்ஜ் தமிழ் விக்கி

நேற்று என்னிடம் ஓர் ஆங்கில இதழாளர் பேட்டி கண்டபோது இந்திய இலக்கியம் பற்றி நான் இவ்வாறு சொன்னேன். இந்திய இலக்கியம் என்பது இந்திய ஆங்கில இலக்கியம் அல்ல. ஆங்கிலம் வழியாக அறியவரும் இந்திய இலக்கியமும் அல்ல. இந்திய இலக்கியம் இந்திய மொழிகளில் உருவாவது, தனக்கென சுயமான அறிவுத்தளமும், அழகியலும், ஆன்மிகத்தேடலும் கொண்டது. அது இந்திய ஆங்கிலத்தில் வெளியாவதில்லை.

ஏன்? இந்திய ஆங்கிலத்தின் மிகப்பெரிய இரு சிக்கல்கள்தான் காரணம். ஒன்று போலிமுற்போக்கு. இரண்டு செயற்கைப்பாவனை எழுத்து. முதல்வகைக்கு முல்க்ராஜ் ஆனந்த் முதல் அருந்ததி ராய் வரை உதாரணம். இரண்டாம் வகை எழுத்துக்கு ராஜாராவ் முதல் சல்மான் ருஷ்தி வரை உதாரணம்.

இவ்விரு வகைமைகளுமே நாம் மேலைநாட்டு வாசகர்களை திருப்திப்படுத்த முயல்வதனால் உருவாவன, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது எளிமையான சமூக விமர்சன, முற்போக்கு எழுத்தை. நாம் அதை சமூகவிமர்சனமாக எழுதுகிறோம். அவர்கள் அதை இந்திய விமர்சனமாக எடுத்துக்கொண்டு ரசிக்கிறார்கள். அல்லது உத்திச்சோதனைகளைக்கொண்டு அவர்களை ஏமாற்றிவிடவேண்டும். இன்னமும் கூட ஐரோப்பிய வாசக உலகம் இந்திய அழகியலை, இந்திய அறிவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படவே இல்லை.

இதுவே மொழியாக்கத்திலும். இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்படும் படைப்புகள் ‘ஐரோப்பியர் விரும்புவார்களா?’ என்னும் கேள்வியை அடிப்படையாகக்கொண்டே தேர்வாகின்றன. கவனிக்கப்படுவதற்கான அளவுகோலும் அதுவே. ஆகவே ஆங்கிலம் வழியாக நமக்குக் கிடைக்கும் இந்திய மொழி ஆக்கங்கள் பெரும்பாலும் மேலோட்டமானவை.

நமக்கு இந்திய மொழி இலக்கியங்கள் சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் வழியாகவே அறிமுகமாயின. அவை இந்திய மொழிகளுக்குள் நிகழ்ந்த மொழியாக்கங்கள். அல்லது வட இந்திய மொழிகள் அனைத்துக்கும் அணுக்கமான மொழியான இந்தி வழியாக நிகழ்ந்தவை,அவற்றின் தெரிவுக்கு அவை சாகித்ய அக்காதமி உள்ளிட்ட விருதுகள் பெற்றதே அளவுகோல்.

தமிழ், தெலுங்கு போன்ற சில மொழிகளில் சாகித்ய அக்காதமி பெருமளவுக்கு தரமிழந்ததாகவே உள்ளது. இங்குள்ள பேராசிரியர்களின் தரம் மிகக்குறைவு என்பதே காரணம். ஆனால் பொதுவாக இந்திய அளவில் அவ்வாறல்ல. ஆகவே சாகித்ய அக்காதமி, நேஷனல் புக்டிரஸ்ட் வழியாக நாமறியவந்த எழுத்தாளர்கள் மிக முக்கியமானவர்கள்.

கே.எம்.ஜார்ஜ்

(ஆனால் அண்மையில், இன்றைய பாரதிய ஜனதா அரசு, தொடர்ச்சியாக இந்தப் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான நிதியை குறைத்துக்கொண்டே இருக்கிறது. நூல்களின் தெரிவில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இப்போது அனேகமாக நூல்களை வெளியிடுவதில்லை. சாகித்ய அக்காதமி மிகக்குறைவான நூல்களை, மிக அதிகமான விலையில், மிகக்குறைவான தரத்துடன் வெளியிடுகிறது)

சென்ற எழுபதாண்டுகளாக மாத்ருபூமி வார இதழ் ஆண்டுதோறும் குடியரசு தின மலரை இந்திய இலக்கியமலர் ஆக வெளியிட்டு வருகிறது. இந்திய தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்யும் கனமான நூல்கள் அவை. அவற்றில் பெரும்பகுதியை இளமைமுதலே படித்திருக்கிறேன். இந்திய இலக்கியம் பற்றிய என் புரிதலை அவை உருவாக்கின.

இன்று இந்திய இலக்கியத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிவது மிகப்பெரிய சவால். உதிரியாக நூல்கள் நமக்குக் கிடைக்கும். முழுச்சித்திரம் மிக அரிது. அண்மைக்காலம் வரை டாக்டர் கே.எம்.ஜார்ஜ் தொகுத்த இந்திய இலக்கிய அறிமுக நூல் மட்டுமே இருந்தது. நான் முதல்முறை வாங்கிய தொகுதிகள் பழையதாகி அழிந்தபின் இன்னொரு பிரதி வாங்கிய நூல் அது. அதன்பின் அத்தகைய ஒரு நூல் வெளிவரவில்லை.

சிவசங்கரி தினமணிக் கதிர் இதழில் முன்பு தொடர்ச்சியாக இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்து கட்டுரைகளும், பேட்டிகளும் எழுதிவந்தார். கூடவே கதைகளின் மொழியாக்கங்களும் வெளிவந்தன. முழுநூலாக அவற்றை நான் பார்க்க நிகழவில்லை. அண்மையில் அந்நூலின் மூன்று பெருந்தொகுதிகளைக் கண்டேன். உண்மையில் இந்திய மொழிகளிலேயேகூட அண்மையில் நிகழ்ந்த மாபெரும் இலக்கியச் செயல்பாடு என ஐயமின்றி இதைச் சொல்லமுடியும்.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் இந்நூல் சிவசங்கரியின் வாழ்நாள் சாதனைப் படைப்பு.முதல் தொகுப்பில் மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் ஆகிய தென்னிந்திய மொழிகளின் படைப்புகள். இரண்டாம் தொகுப்பில் அஸாமி, வங்காளி, மணிப்பூரி,,நேபாளி, ஒரியா ஆகிய கிழக்கிந்திய மொழிப்படைப்புகள். மூன்றாம் தொகுதியில் கொங்கணி, மராத்தி, குஜராத்தி, சிந்தி என்னும் மைய இந்திய மொழிகள். நான்காம் தொகுப்பில் வடக்கிந்தியாவின் காஷ்மீரி, பஞ்சாபி, உருது, இந்தி மற்றும் சம்ஸ்கிருதம்.

இந்திய நவீன இலக்கியத்தின் முழுமையான சித்திரத்தை அளிக்கும் இதைப்போன்ற இன்னொரு நூல் நானறிய இந்தியாவின் எந்த மொழியிலும் உருவாக்கப்படவில்லை. பல்கலைக்கழக உதவி, அமைப்புப்பின்புலம் இல்லாமல் தனிமுயற்சியால் இதை சிவசங்கரி நிகழ்த்தியிருப்பது வணங்கத்தக்கச் சாதனை. நான் மலையாள டி.சி.புத்தக நிறுவனத்திடம் இந்நூலை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்யும்படி பரிந்துரைத்தேன்.

சிவசங்கரியின் தெரிவுகள் மிகச்சிறப்பாக உள்ளன. உதாரணமாக, மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ், தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், சுகதகுமாரி, சேது, பாலசந்திரன் சுள்ளிக்காடு ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.சிவசங்கரி சுருக்கமாக கேரளம் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிக்கிறார். எம்.டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ், தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம் முகமது பஷீர்,சுகத குமாரி, சேது, பாலசந்திரன் சுள்ளிக்காடு ஆகியோரின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன.

யதார்த்தச் செவ்வியல், நவீனத்துவம் என இரு அலைகளும் மிகச்சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக ஐயப்பப் பணிக்கர் மலையாள நவீன இலக்கியம் பற்றி எழுதிய விரிவான ஓர் ஆய்வுக்கட்டுரையும் உள்ளது.

மலையாள இலக்கியம் மட்டுமே ஆல்பம் அளவில் 120 பக்கங்கள். சாதாரண அளவு என்றால் இருநூறு பக்கமுள்ள தனிநூல். மலையாள இலக்கியம் பற்றி ஒட்டுமொத்தமான புரிதலை அளிக்கும் ஒரு நூலாக அதை கருதமுடியும். அத்தகைய ஒரு நூல் இன்னொன்று இன்னமும் தமிழில் எழுதப்படவில்லை. கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்குக் கூட முழுமையான அறிமுகச்சித்திரம் இப்பகுதி என மலையாள இலக்கியம் அறிந்தவன் என்னும் வகையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

நானறிந்த இன்னொரு இலக்கிய உலகையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். கன்னடத்தில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, சிவராம் காரந்த்,எஸ்.எல்.பைரப்பா,தேவனூரு மகாதேவா, சதுரங்க, எல்.எஸ்.சேஷகிரி ராவ் ஆகியோரின் பேட்டியும் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. காரந்த், பைரப்பா ஆகியோர் யதார்த்தவாத மரபைச் சேர்ந்தவர்கள். சதுரங்க, அனந்தமூர்த்தி இருவரும் நவ்யா எனப்படும் நவீனத்துவர்கள். தேவனூரு மகாதேவா தலித் இலக்கியத்தின் பெரும் படைப்பாளி. சேஷகிரி ராவ் மரபான அறிஞர்.

கன்னட இலக்கியத்தின் எல்லா பகுதிகளும் மிகச்சரியாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள கட்டுரைகளிலேயே நவீனக் கன்னட இலக்கியம் பற்றி கே.நரசிம்ஹமூர்த்தி எழுதியது மிகவிரிவானது, முழுமையானது. ஒரு சிறு நூல் அளவுக்கே பெரியது.

சட்டென்று தமிழ் வாசகன் தமிழிலக்கியப் பகுதிகளையே எடுத்துப் பார்ப்பான். அப்துல் ரகுமான், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம், பிரபஞ்சன், பொன்னீலன், தமிழ்க்குடிமகன் ஆகியோரின் பேட்டிகளும் மாலன், நீல பத்மநாபன் ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய அறிமுகக் கட்டுரைகளும் உள்ளன. நவீனத் தமிழின் சாதனையாளர்களான அசோகமித்திரனோ, சுந்தர ராமசாமியோ, பிரமிளோ இல்லாத இது என்னவகை தொகுப்பு என்னும் அவநம்பிக்கை எளிமையாக அவனுக்கு வரக்கூடும்.

ஆனால் அது இயல்பானதே. ஏனென்றால் இத்தொகுப்பு உருவான காலகட்டத்தில் 1992-1997 ல் தமிழ் நவீன இலக்கியம் சிற்றிதழுலகுக்குள் இருந்து அப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருந்தது. இலக்கியவிமர்சனக் கருத்துக்கள் வேரூன்றத் தொடங்கியிருக்கவில்லை. இன்று நவீன இலக்கியத்தின் விமர்சன அளவுகோல்கள் பரவலாக ஏற்கப்பட்டுவிட்டன. இன்று, சு.சமுத்திரம் அல்லது மாலன் போன்ற ஒருவர் இத்தகைய தொகுப்பில் இடம்பெற இயலாது.

நான் வாசித்தவரை இந்நூலில் உள்ள மிகப்பலவீனமான கட்டுரை மாலன் எழுதிய தமிழிலக்கிய அறிமுகம். அவருக்கு நவீன இலக்கிய அழகியல், அதன் அறிவுச்சூழல் முற்றாகவே அறிமுகமில்லை. அவர் புழங்கிய சாவி -குமுதம் மனநிலையில் நின்று இலக்கியத்தை அணுகியிருக்கிறார்.

இத்தகைய தொகுதி எவருக்காக உருவாக்கப்படுவது என்னும் எளிய பொதுப்புத்தியும் மாலனுக்கு இல்லை. ஒரு வணிக வார இதழில் நவீன இலக்கியம் பற்றி எழுதப்படும் வம்புக்கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். இத்தொகுதியில் உள்ள எல்லா கட்டுரையும் தரவுகள் வழியாக என்ன நடந்தது என்பதன் சித்திரத்தை அளிக்கின்றன. அதுவே இலக்கியவரலாற்று வாசகனுக்கு அவசியமானது.

மாறாக இக்கட்டுரை மட்டும் சம்பந்தமே இல்லாமல் இவருடைய காழ்ப்புகள், கசப்புகள் மட்டுமே வெளிப்படும் எதிர்மறைத்தன்மை கொண்டுள்ளது. இத்தகைய ஒரு மதிப்புமிக்க தொகுப்பில் அதற்கான அறிவுத்தகுதி இல்லாத, அதைப்பற்றிய எந்தப்புரிதலுமில்லாத ஒருவர் எழுத நேரிட்டது துரதிருஷ்டவசமானதே.

நல்ல வேளையாக நீல பத்மநாபனின் கட்டுரை விரிவாக தமிழிலக்கிய அலைகள் அனைத்தைப் பற்றிய தரவுகளையும் அளிக்கிறது. இண்டியன் லிட்டரேச்சர் இதழுக்காக அவர் முன்னரே எழுதிய கட்டுரை ஒன்றின் தமிழாக்கம் அது.

ஆந்திர இலக்கியம் பற்றிய தொகுப்பிலும் இச்சிக்கல் உள்ளது. அங்கே இலக்கியவிமர்சனம் கூரானது அல்ல. ஆகவே கல்வித்துறை சார்ந்து எல்லா இடங்களிலும் இடம்பெறுபவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆருத்ரா மட்டுமே இலக்கிய மதிப்பு கொண்டவர்.

வட இந்திய எழுத்து நமக்கு பெரும்பாலும் இந்தி வழியாகவே அறிமுகமாகியிருக்கிறது. அந்த இரண்டாவது கை மொழியாக்கத்தால் மொழிபெயர்ப்பாளரின் தனித்தேர்வு என ஒன்று இல்லாமலாகிறது. காஷ்மீரி, பஞ்சாபி, கொங்கணி, சிந்தி, குஜராத்தி இலக்கியம் பற்றிய நம் அறிவு மிக மேலோட்டமானதுதான். மராட்டிய இலக்கியத்தில் இதிலுள்ள தெரிவுகள் சிறப்பானவை என்று சொல்லமுடியும் பாலசந்திர நொமாடே, திலீப் சித்ரே , லட்சுமண் கெய்க்வாட் ஆகியோர் எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.

வடகிழக்கு இலக்கியம் இந்தி அல்லது வங்காளி வழியாகவே தமிழில் பெரும்பாலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள்ளது. அஸாம் மொழியில் இருந்து சில மொழியாக்கங்கள் வெளிவந்துள்ளன. ஒரிய மொழி அதைவிட குறைவாக. மற்ற வடகிழக்கு மொழிகளின் இலக்கியங்கள் நாம் அறியாதவை. ஆனால் வடகிடக்குக்கு ஒரு பெரிய சாதக அம்சம் உள்ளது. அவர்களின் பல மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுவன. அங்கே ஆங்கிலக் கல்வியும் வலுவானது. ஆகவே பல ஆசிரியர்கள் அண்மையில் ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்க அறியப்பட்டவர்கள் ஆகியுள்ளனர்

வங்க இலக்கியத்தில் சுனில் கங்கோபாத்யாய, மகாஸ்வேதா தேவி, பிமல் கர் ஆகிய அறியப்பட்ட முகங்கள் உள்ளன. அஜித்குமார் கோஷ் வங்க மொழி பற்றி எழுதியிருக்கும் கட்டுரையும் முக்கியமானது ஒரிய இலக்கியப் பகுதியிலும் ரமாகாந்த் ரத், பிரதீபா ராய், மனோஜ் தாஸ் அறியப்பட்டவர்கள். இத்தொகுதியில் அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா போன்ற எல்லையோர மாவட்டங்களின் இடம் குறைவே. இத்தொகுதி வெளிவந்தபின் சென்ற இருபத்தைந்தாண்டுகளாகவே அவை தங்கள் இலக்கிய இடத்தை இந்திய இலக்கியச் சூழலில் அடைந்துள்ளன.

இந்திய இலக்கியம் பற்றிய ஒரு முழுமையான பார்வையை அளிக்கும் மிக முக்கியமான தொகுதி இது. 1998ல் முதல் பதிப்பு வந்தபின் இப்போது வானதி பதிப்பகம் மூன்றாம் பதிப்பை வெளியிடுகிறது. எந்த ஒரு இலக்கிய நூலகத்திலும் இருந்தாகவேண்டிய ஒரு ஆக்கம். உண்மையில் ஒரு பயணத்தின்போது அந்த ஊர் பற்றிய ஓரிரு இலக்கியப்படைப்புகளை வாசித்துவிட்டுச் செல்வது மிகப்பெரிய ஓர் அனுபவத்தை அளிக்கிறது. அதை எங்கள் பயணங்களில் செய்துபார்த்துள்ளோம்.  அதற்கு இத்தகைய தொகுதிகள் உதவியானவை.

சிவசங்கரியின் தனிப்பெரும் இலக்கியச் சாதனை என இந்தத் தொகுதியை ஐயமில்லாமல் சொல்லமுடியும். இந்த எண்ணமும் பிரமிப்பூட்டும் அர்ப்பணிப்புடன் பல்லாண்டு உழைப்பில் இதைச் செய்து முடித்துள்ளமையும் பெருமதிப்புக்குரியவை.

(இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு. வானதி பதிப்பகம்)  

முந்தைய கட்டுரைஇராவுத்தர் சாஹிபு
அடுத்த கட்டுரைThe Abyss, is a spiritual inquiry into beggars’ lives