2023 ஆம் ஆண்டு இரண்டு இலக்கிய முன்னோடிகளின் நூற்றாண்டு. கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி. இருவரும் இரட்டையர் என அழைக்கப்பட்டவர்கள். கி.ரா பேச்சில் எப்போதுமே அழகிரிசாமியை அவன் இவன் என்றுதான் சொல்வார். வேறு எவரையும் அவ்வாறு சொல்வதில்லை. அவருடைய பேரன் போன்ற கோணங்கியைக்கூட அவர், இவர் என்றே அழைப்பார். அழகிரிசாமி மறைந்துவிட்டார் என்ற நினைப்பும் கி.ராவிடமிருப்பதில்லை. நாம் பேசும்போது “…ஆனா அழகிரிசாமி இப்டி சொல்றான்…” என அவர் ஆரம்பிக்கும்போது பக்கத்துவீட்டில் அழகிரிசாமி குடியிருப்பதாகத் தோன்றும்.
கு.அழகிரிசாமி – கிரா நினைவை சேர்த்து ஒரு விழாவாக ஒரு கல்லூரி கொண்டாடுவதே நிறைவூட்டும் விஷயம். மாணவர்களில் எத்தனைபேர் உடனடியாக வாசிப்பார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு ஆழ்ந்த நினைவாக இது நீடிக்கக்கூடும்
கி.ரா நூற்றாண்டுவிழாவை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கொண்டாடவிருப்பதாக ஸ்டாலின் ராஜாங்கம் கூப்பிட்டுச் சொன்னார். நான் அக்கருத்தரங்கை துவக்கிவைத்து உரையாற்றாவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மதுரையில் ஸ்டாலின் ராஜாங்கம்,அரிபாபு ஆகியோர் கல்வித்துறையில் தீவிரமாக இலக்கியத்தை அறிமுகம் செய்துவருகிறார்கள். மதுரை அமெரிக்கன் கல்லூரியுடன் எனக்கு முப்பதாண்டுகள் தொடர்பும் உண்டு. அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் இசையமைப்பாளருமான பிரபாகர், எனக்கு நன்குத்தெரிந்தவர்.
ஆயினும் எனக்கு வழக்கமான தயக்கமிருந்தது. நான் கடுமையான பணித்திட்டங்கள் கொண்டவன். ஒரு நாள் என்பது எனக்கு நீண்ட காலம். ஒரு நாளை ஒரு கல்லூரிக்காக வீணடிப்பது சரியா என்ற கேள்வி எனக்கு எப்போதுமே உண்டு. ஆனாலும் செல்லமுடிவெடுத்தேன்.
நான் சென்ற கல்லூரிகளில் மாணவர்களின் கவனமும் சரி, அவர்களின் தரமும் சரி வருந்தச்செய்வதாகவே உள்ளன. மாணவர்கள் இருவகை. சென்னை, கோவை மாணவர்கள் ஏற்கனவே எல்லாம் தெரிந்தவர்களாகவும், இந்த நாட்டைவிட்டு தப்பிச்செல்லப்போகிறவர்களாகவும், சமூகத்தின் ’நெய்’ ஆகவும் தங்களை கருதிக்கொள்பவர்கள். மற்ற ஊர் மாணவர்கள் எளிமையான கிராமப்புறப் பின்னணி கொண்டவர்கள். அறிவியக்கம் பற்றிய அறிமுகமே இல்லாதவர்கள். இங்குள்ள ஊடகங்களில் நிறைந்திருக்கும் வழக்கமான வணிகசினிமா, வழக்கமான கட்சியரசியலுக்கு அப்பால் எதுவுமே தெரியாதவர்கள்.
ஆனால் கிராமப்புற மாணவர்களிடம் கொஞ்சம் கவனம் இருக்கும். நகர்ப்புற மாணவர்கள் ஒப்புநோக்க தூய மடையர்கள். அவர்களுக்கு கவனமே இருப்பதில்லை. அவர்கள் அப்படியே ஒரு தொழில்நுட்ப ஊழியராகி, இ.எம்.ஐ போட்டு, அதை வாழ்நாள் முழுக்க கட்டி, வயதாகி, புலம்பி சாகவேண்டியவர்கள். உயிரியல் நியதிப்படி அவர்களுக்கும் ஒரு தேவை உண்டுதான். மற்றபடி பொருட்படுத்தவேண்டியவர்கள் அல்ல.
ஸ்டாலின் ராஜாங்கத்தின் மாணவர்கள் சிலரைச் சந்திக்கலாமென நினைத்தேன். என் வாசகர்கள் சிலர் வரக்கூடும். அதைவிட அருண்மொழியுடன் ஒரு சிறு பயணம் செய்யலாமெனத் திட்டம். அவள் கவிஞர் அபியைச் சந்திக்க விரும்பினாள். தொடர்ச்சியாக அவள் அவருடன் உரையாடலில் இருப்பவள். இருவருக்கும் பொதுவானது ஹிந்துஸ்தானி இசை. ஆகவே ஒரு மதுரைப்பயணம் முடிவாகியது.
கிளம்பும் அன்று காலை எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் ஷாகுல் ஹமீதுடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அவர் குமரியின் புகழ்பெற்ற நாடகநடிகர் அலி அவர்களின் மகன் என்பதை தெரிந்துகொண்டேன். மீரான் மைதீன் டி.ஆர்.ராமண்ணாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். முன்னர் அவர் பொன்னீலனைப் பற்றி எடுத்த ஆவணப்படத்தின் பொருட்டுச் சந்தித்திருக்கிறேன்.
மீரான் மைதீனின் அஜ்னபி கதையைத்தான் சூரியை கதைநாயகனாக்கி வெற்றிமாறன் எடுப்பதாக இருந்தது. படப்பிடிப்புக்கான இடங்களையும் பார்த்துவிட்டனர். கோவிட் தொற்றினால் அது நிகழாமல் விடுதலை எடுக்கும்படி ஆகியது. ஆனால் அஜ்னபி போன்ற ஒரு கதை எப்படியும் சினிமாவாக ஆகிவிடும் (மீரான் மைதீன் சிறுகதைகள்)
காரில் செல்லலாம் என திட்டமிருந்தது. ஆனால் நிகழ்ச்சி காலை 930 க்கு. அங்கே சென்றுசேர வேண்டுமென்றால் அதிகாலையில் கிளம்பவேண்டும். ஆகவே ரயிலில் செல்லலாம் என நினைத்தேன். புனலூர் மதுரை எக்ஸ்பிரஸ் சௌகரியமானது. நாகர்கோயிலுக்கு நள்ளிரவு 11 மணிக்கு வரும். அதிகாலை 4 மணிக்கு மதுரை செல்லும். அக்காலத்தில் நங்கையவர்கள் அதில்தான் பயிற்சிவகுப்புகளுக்கு தோழிகளுடன் செல்வது வழக்கம்.
நாகர்கோயிலில் இருந்து மாலை கிளம்பினோம். பகலில் தூங்காததனால் இரவில் உடனேயே தூங்கிவிட்டேன். அத்துடன் தொப்பையைக் குறைப்பதற்கான உணவுக்கட்டுப்பாட்டிலும் இருக்கிறேன். மாலை பழங்கள் சாப்பிட்டால் 16 மணி நேரம் கழித்து மறுநாள் 9 மணிக்குத்தான் அடுத்த உணவு. ஆகவே களைப்பிலேயே தூக்கம் வந்துவிடும்.
மதுரையில் காலையில் அமெரிக்கன் கல்லூரி விருந்தினர் அறையில் தங்கினோம். நண்பர் அருள் ரயில்நிலையத்திற்கு வந்திருந்தார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வுமாணவர் காந்தராஜ் என்பவரும், அறந்தாங்கியில் இருந்து வந்திருந்த என் வாசகர் கார்த்திக்க்கும் ரயில்நிலையம் வந்திருந்தனர்.எட்டு மணிவரை தூங்கிவிட்டு எழுந்து குளித்து தயாரானோம்.
கி.ராஜநாராயணன் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். ஒரு நூலாகவே தொகுக்கலாமென தோன்றுகிறது. மீண்டும் ஓர் உரை என்பது ஒரு சவால்தான், அதுவரைச் சொல்லாத ஒரு புள்ளியைச் சொல்லவேண்டும். ஒரு தொடக்கவுரை என்பது ஆய்வுரை அல்ல. யோசிப்பதற்கான சில புள்ளிகள் மட்டும்தான் அளிக்கப்படவேண்டும்.
ஆகவே எந்த தயாரிப்பும் இல்லாமல்தான் சென்றேன். மதுரையில் அமர்ந்து சரசரவென ஒரு குறிப்பு தயாரித்தேன். அதையே பேசினேன். நான் பேச்சின் கட்டமைப்பை உருவாக்கி, அதை ஒரு வரைவாக ஆக்கிக்கொள்ளாமல் பேசுவதில்லை. ஆனால் கூடுமானவரை அக்குறிப்பைப் பார்ப்பதுமில்லை. குறிப்பைப் பார்ப்பது இயல்பானது, ஆனால் அந்த அரை நொடியிலேயே அரங்கினர் பேச்சில் இருந்து துண்டிக்கப்பட்டுவிடுவார்கள்.
அமெரிக்கன் கல்லூரிக்குள் மரங்களின் செறிவும் செங்கல் வெளித்தெரியும் சீரான கட்டிடங்களும் ஒரு காலவுணர்வை அளிப்பவை. டேனியல் பூர் நினைவு நூலகம் தமிழகத்தின் அரிய கலைச்செல்வங்களில் ஒன்று. அதை வடிவமைத்துக் கட்டிய ஹென்றி இர்வின் தமிழகத்தின் கட்டிடக்கலை வரலாற்றில் அழியா இடமுள்ளவர்.அருண்மொழிக்கு அமெரிக்கன் கல்லூரி வளாகம் மிகமிகப் பிடித்துவிட்டது. முன்னரும் நாலைந்துமுறை வந்த இடம்தான். ’இங்கே சேர்ந்து படிக்கணும்போல இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.
கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி பற்றி நாற்பது நிமிடம் பேசினேன். மூன்று கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். நல்ல உரைதான் என நினைக்கிறேன். பொதுவாக இத்தகைய உரைகளை நான் அங்குள்ள சூழலுக்காக மட்டும் பேசுவதில்லை. அங்கே ஒரு முந்நூறுபேர் இருந்திருக்கலாம். யூடியூபில் ஐந்தாயிரம்பேர் இதற்குள் பார்த்துவிட்டனர். எந்த உரையையும் அந்தப் பெருந்திரளுக்காகவே உத்தேசிக்கிறேன்.
மதியம் அமெரிக்கன் கல்லூரியிலேயே சாப்பிட்டோம். அறைக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திருச்செந்தாழை, பௌத்தவியலில் ஆய்வுசெய்யும் அவர் நண்பர் அன்புவேந்தன் ஆகியோர் வந்தனர். மதியம் மூன்று வரை தமிழக தொல்லியல், பௌத்த தடங்கள் பற்றிய ஓர் உரையாடல் நடைபெற்றது. அங்கிருந்து கிளம்பி GRT Regency Madurai விடுதிக்குச் சென்றோம். நண்பர் பிராபகர் கொண்டுசென்று விட்டார்.
காலையிலேயே கொஞ்சம் வெக்கை இருந்தது. மாலையில் மழைபெய்ய ஆரம்பித்தது. அபியின் ராசி அது. அவருடைய எண்பதாவது அகவைநிறைவு விழாவிலும் மதுரையில் மழை கொட்டியது. காரில் அபியின் இல்லத்தைக் கண்டுபிடித்துச் சென்றோம். அபி நன்றாக இருக்கிறார். உடல்நிலை தேறியிருக்கிறது. அருண்மொழியும் அபியும் பேசிக்கொண்டனர். நடுவே நான் அவருடைய பேரன்களுடன் பொன்னியின் செல்வன் பற்றி கொஞ்சம் பேசினேன். மதுரை வந்த நோக்கம் இனிதாகியது.
மறுநாள் நானும் அருண்மொழியும் காலையிலேயே கிளம்பி திருமோகூர் காளமேகப்பெருமான் ஆலயம், திருவாதவூர் மறைநாதர் ஆலயம் இரண்டையும் பார்த்துவந்தோம். மதுரையை ஒட்டியே இருக்கும் முக்கியமான ஆலயங்கள் இவை. ஆனால் கூட்டமே இருப்பதில்லை. பெரிய அமைதியான ஆலயங்கள்.
காளமேகப்பெருமான் ஆலயத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சிற்றாலயம் உள்ளது. நின்ற திருக்கோலம் கொண்ட கரிய திருமேனி. வேதவல்லி தாயார் படிதாண்டா பத்தினி என்றார் அர்ச்சகர். அம்மனுக்கு எல்லா வழிபாடும் கருவறைக்குள்தான். உற்சவம் கிடையாது. ஆண்டாள் சன்னிதி தனியாக உள்ளது. ஊர்க்கோலம், உற்சவம் எல்லாமே ஆண்டாளுக்குத்தான். அழகிய ஊர். ஆனால் கட்டிடங்களெல்லாம் கண்கூசும் வண்ணம். வழக்கம்போல அழகான தெப்பக்குளம் குப்பைக்குழியாக பயன்படுத்தப்படுகிறது.
மோகூர் வரலாற்றில் முக்கியமான ஊர். மோகூரை ஆட்சிசெய்தவர்கள் பாண்டியர்களின் அரசகிளையைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். மோகூர் பழையன் எனச் சங்ககாலச் செய்திகள் சொல்கின்றன. பழையன் என்பது பாண்டியர்களின் பெயர்களிலொன்று. இவர்களின் காவல்மரம் வேம்பு என்றும், அதை வெட்டி வீழ்த்தி இவர்களை சேரன் செங்குட்டுவன் வென்றான் என்றும் புறநாநூறு சொல்கிறது.
திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த இடம். வாதவூரடிகள் என்றே அவர் அறியப்படுகிறார். அழகான பெரிய கோயில். நாங்கள் செல்லும்போது வெயிலெழுந்துவிட்டிருந்தது. ஆயினும் அந்த இடத்தின் தனிமை நிறைவூட்டுவதாக இருந்தது.
அருண்மொழி பயின்ற மதுரை வேளாண் கல்லூரி அப்பகுதியில்தான். ஒத்தக்கடை வரை வந்ததுமே அந்த யானைமலையைப் பார்த்ததுமே பரவசமாகிவிட்டாள். பொதுவாக ஆண்களுக்கு அவர்கள் பயின்ற கல்லூரி பற்றிய பரவசங்கள் இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையில் அது ஒரு பகுதி, அவ்வளவே. பெண்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் கல்லூரி நாட்களில் அடைந்த சுதந்திரத்தை பிறகெப்போதுமே அடைந்திருக்க மாட்டார்கள்.
எனக்கும் அந்த மலை கொஞ்சம் விசேஷம்தான். அங்கேதான் அருண்மொழியைச் சந்தித்ததும் திருமணம் செய்துகொண்டதும் எல்லாம். ரயிலில் வரும்போதே பழைய மதுரை நினைவுகளை கொறித்துக்கொண்டேதான் வந்தோம். அன்றெல்லாம் அருண்மொழிக்கு மதுரை என்றால் வேளாண் கல்லூரி, நேராக பெரியார் பேருந்துநிலையம், சர்வோதய புத்தகப் பண்ணை, நியூசெஞ்சுரி புத்தகநிலையம், மீனாட்சியம்மன்கோயில், கடைசியாக காலேஜ்ஹவுஸில் டிபன். அவ்வளவுதான். காலேஜ்ஹவுஸ் முன்னர் மாதிரி இல்லை என்பதில் பெரிய வருத்தம்.
மதியம் இரண்டு மணிக்கே மதுரை ரயில்நிலையம் வந்துவிட்டோம். நான்கு மணிக்குத்தான் ரயில். அதுவரை அங்கிருந்த காத்திருக்கும் அறையில் இருந்தோம். குளிர்சாதன வசதியும், படுக்கும் வசதியும் இருந்தது.ரயில் கொஞ்சம் தாமதமாகவே நாகர்கோயில் வந்தது.நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தோம். நான் மதிய உணவுக்குப்பின் அடுத்தநாள் காலை உணவுதான். ஆகவே நல்ல பசி. வந்திறங்கியதும் வெந்நீர் குடித்துப் பசியாறிக்கொண்டேன்.
அருண்மொழியின் படத்தை என் வாட்ஸப் ஸ்டேடஸில் வைத்து ஒரு குறிப்பு போட்டிருந்தேன். அதற்கு இசை ஓர் எதிர்வினை ஆற்றியிருந்தார். நான் மனைவியை ரொம்ப கொஞ்சுகிறேனோ என ஒரு பிரியமான கிண்டல். நான் பதிலளித்தேன். ஐம்பது வயதுவரை பிரச்சினை இல்லை. அதற்குப்பிறகு ஆண்களுக்கு தவிர்க்கமுடியாத ஓர் அனாதைத்தனம் வந்துவிடும். அப்போது மனைவி கொஞ்சம் அம்மாத்தனத்துடன் இருந்தால் வாழ்க்கையே மனைவியைச் சார்ந்ததாக ஆகிவிடும். வேறுவழியே இல்லை.
ரயில் காத்திருப்பறையில் நான் சரசரவென கழிப்பறைக்குள் நுழைய அருண்மொழி கதவை படபடவென தட்டினாள். வெளியே வந்து என்ன என்றேன். அது பெண்கள் கழிப்பறை. நான் Female என தெளிவாகவே படித்தேன். ஆனால் ஃபீமேல் என்றால் ஆண் என என் மண்டை புரிந்துகொண்டுவிட்டிருந்தது. எப்படி என்பது விந்தைதான். உள்ளே பெண்கள் எவருமில்லை. இருந்திருந்தால் அடி விழுந்திருக்கும். அதற்குத்தான் மனைவியைச் சார்ந்திருப்பது