சினிமாவின் சோதனைமுயற்சிகள்

மணி கௌல்

எனக்குக் கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது. இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள் என்று வகுத்துவைத்திருக்கிறேன்

மணி கௌலைப் பற்றிய தன் பதிலில் ஜெயின் இந்த வரிகளைப் படித்தேன்.  இருபதாம் நூற்றாண்டு வடிவச் சோதனைகளின் விளைவாய் ‘தூய கலை’ என்ற நிலைப்பாடு நவீனத்துவத்தில் ஓங்கியிருந்ததைப் பற்றி நானே முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சினிமா என்பது இருப்பதிலேயே இளைய கலை; புகைப்படத்தின் அழகியல் கூட இத்தாலிய ஓவியக்கலையின் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்தே ஆராயப் பட்ட ஒன்று.

ஆனால் சினிமா என்பது, அதிலும் ஒலி கூடிய சினிமா என்பது ஒரு நூற்றாண்டே வயதான புத்தம் புதுக் கலை வடிவம். அதன் மொழி, இன்றளவும் முழுமையாக வகுக்கப்படாத ஒன்று. மேற்கிலேயே கூட சினிமாவுக்கென்று மிகக் குறைந்த சாத்திரங்களே உள்ளன. ஐசின்ஸ்டைன், தெலூஸ் , பெரெக்சொன், இவர்கள் எழுதியது மட்டுமே இன்றளவும் செல்வாக்குடைய சாத்திரங்கள். இந்திய கலாசாரத்துக்கு ஏற்ப நமது சினிமாவுக்கென்று எந்த அடிப்படை நூலோ, ஆலோசனையோ திரட்டப்படவில்லை.

எனவே பரிசோதனைகள் இல்லாமல் இந்தப் புதிய ஊடகத்தின் சாத்தியங்களை நிறைவுபடுத்த முடியாது. எந்தக் கலையின் பரிணாமத்திலும் வெற்றி பெற்ற பரிசோதனைகள் மட்டுமே மேலும் எடுத்துச் செல்லப் படுவதால், தோற்றுப் போன பரிசோதனைகளை நாம் நினைவு கூர்வதில்லை. (இது மொழிக்கும், கவிதைக்கும், காவியத்துக்கும் கூடப் பொருந்தும்.)

மேலும், வடிவம் என்பது உட்பொருளின் ஒரு இணைபிரியா அங்கமாகும் வரை பரிசோதனை தேவை. ஒவ்வொரு உட்பொருளும் தனக்கேற்ற வடிவத்தைத் தேர்வு செய்வது என்பது ட்ரையல் அண்ட் எர்ரர் முறைப்படியே சாத்தியமாகிறது; சினிமா என்பது மிகுந்த பொருட்செலவுள்ள ஊடகமாதலால், காகிதம் போலக் கிழித்துப் போட்டு, அடுத்த trialக்குச் செல்ல முடியாது. எனவே இதில் சமூக உணர்வு மிகத் தேவை.

அந்த முறையில், கொதார்த், புனுவெல் போன்றவர்கள் தங்கள் நாடுகளின் பூர்ஷுவா சமூகத்தின் போலித்தனங்கள், மனிதம் குன்றி விட்ட விழுமியங்களை விமர்சிக்க, அவர்களைத் தங்கள் சுகமான மரத்துப்போன போதை நிலையிலிருந்து விழித்துத் தங்கள் வக்ரமடைந்துவிட்ட சுயரூபத்தைக் காண்பிக்க ஏற்படுத்திய வடிவங்களே அவை.

கொதார்த் மஞ்சள் பத்திரிகைகளின் அலறும் தடித்த எழுத்து வடிவங்களாலான inter-titles, மற்றும் தாவித் தாவி அதிர்ச்சியடைய வைக்கும் ’கட்’களையும், அதைப் போன்ற மற்ற வடிவப் பரிசோதனைகளையும் உபயோகித்தது, தன் கருத்துக்களின் தாக்கம் சரியான குறியில் போய் விழ வேண்டும் என்பதற்காக. புனுவெலும் அங்ஙனமே; அவர் சால்வதார் தாலியுடன் சண்டை போட்டு விலகியதே அவரது புரட்சிகரமான கருத்துக்களுக்கு சினிமாவை ஊடகமாக்கியதால் தான். தாலி வெறும் வடிவப் பரிசோதனைகள், ஆழ்மன விசித்திரங்கள் என்பதோடு நிறுத்திக் கொண்டார்; சமூகத்தை நேரடியாய் விமர்சனம் செய்வதில் அவருக்கு உவப்பில்லை.

எனவே இருவரும் மேற்கத்திய சிந்தனை மரபையே தங்களது சினிமா மூலம் முன்னெடுத்துச் சென்றுள்ளனர்; தாமஸ் மன்ன், கார்ல் ஹைஸ்மன், ஹென்ரி மில்லர் போன்றவர்களின் கருத்துக்களையொட்டிய நவீன சிந்தனனையாளர்களாக இவர்களுக்கு அங்கு பெருமதிப்புள்ளது.

நம்மூரில், பாவம் கௌல், NFDC அளித்த shoe-string budgetஐ வைத்துக் கொண்டு தன்னால் இயன்றவரை அபினவ குப்தர், அனந்தவர்தனர் எல்லாம் சொன்னதை நினைத்துக் கொண்டு சில பரிசோதனைகளைச் செய்துள்ளார். அதற்கென்று இந்திய சினிமாவிற்கு ஒரு உபயோகம் உள்ளது. எல்லா ஊடகங்களும் இலக்கியத்தின் இலக்கணத்தைப் பின்பற்றினால், அப்பறம் ஜெ சொல்வதைப் போல ஒன்றை ஒன்று மறுத்து சூன்யம் தானே மிஞ்சும்? தத்தம் பாதைகளைத் தேடி அடைவதில் பிழையில்லையே. எப்படி நல்ல இலக்கியம் படிக்க அதன் மொழியை நாம் கற்க வேண்டுமோ, அதே போல நல்ல சினிமாவின் மொழியையும் புரிந்து கொள்ள ஒரு தனி முயற்சி தேவை; அதுவும் உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு மொழியை அவதானிப்பது மிகவும் பொறுமை தேவையான விஷயம்.

எனவே, ஏதாவது அதிகப் பிரசங்கம் செய்வதாய்த் தோன்றினால் ஜெ மன்னிப்பாராக, எடுத்துக் கூறுவாராக. மற்றவர்களுக்கும் இதே வேண்டுகோள்.

பி.கு. கௌலின் பல படைப்புகள் என்னையும் வெகுவாகத் தொட்டவை அல்ல, வடிவ அல்லது அழகியல் முயற்சிகளே என்று நினைக்கிறேன். ஆனால் அவை தேவை என்றும் நினைக்கிறேன்.அதிலும் சினிமா அங்காடியைத் தாண்டிய இந்த முயற்சிகள் மட்டுமே நம் கலாசாரத்திற்குக் கொஞ்சமாவது பலமூட்டும். நம் அறிவுச் சூழல் இவற்றை ரசிக்காவிட்டலும், தன் புரிதல், தரவரிசை மூலம் அடையாளம் காண வேண்டும். முழுமையான நிராகரிப்பிலிருந்து இவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்றே நினைக்கிறேன்.

சிவன் சுந்தரம்

 

[ஜான் ஆப்ரஹாம்]

அன்புள்ள சிவன்

நான் கலையில் சோதனை முயற்சிகளுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சோதனைமுயற்சிகளை நாம் பார்க்கும்போது நமக்கென ஒரு அளவுகோல் தேவையாகிறது. நான் இதை நான்கு தளங்களிலாக அணுகுவேன்

கலையில் சோதனை முயற்சிகள் ஏன் தேவையாகின்றன? ஒரு கலைஞனுக்கு ஒன்று சொல்ல, அல்லது உணர்த்த இருக்கிறது. அதற்கு வழக்கமான வடிவங்கள் போதுமானவையாக இல்லை. அவனுக்கு அந்த கலைவடிவில் புதிய ஒரு சாத்தியம் தேவையாகிறது. அந்த உந்துதல் அந்தக் கலைவடிவை மோதும்போது அக்கலைவடிவு உடைந்து, நெகிழ்ந்து புதிய வடிவொன்றை உருவாக்கி அளிக்கிறது. இவ்வாறுதான் மெய்யான சோதனை முயற்சிகள் உருவாகின்றன.

செயற்கையான சோதனை முயற்சிகள் எப்படி நிகழ்கின்றன? சோதனை முயற்சிகளுக்கு ஒரு கவனம் கிடைப்பதைக் கண்டு சிலர் அதற்கு முயல்கிறார்கள். பல அமைப்புகளில் இருக்கும் கலைஅதிகாரிகளுக்கு மெய்யான கலைமுயற்சிக்கும் செயற்கைச் சோதனைக்கும் வேறுபாடு தெரிவதில்லை. அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். இதை எல்லா உலகப்படவிழாக்களிலும் காணலாம் – சர்வதேசப்புகழ் கொண்ட கலைவிழாக்களில்கூட காணலாம்.

ஒரு கலையில் நீண்டநாட்களாக ஈடுபடுபவர்கள் தங்களுக்கான அகத்தேடலோ கலைநுண்ணுணர்வோ அற்றவர்கள் என்றால் அவர்கள் ரசிப்பது வடிவங்களை மட்டுமே. அந்த ரசனை சீக்கிரமே சலித்துவிடும். அவர்கள் புதிய வடிவங்களை தேடுவார்கள். அவர்களால் அவற்றை மட்டுமே ரசிக்க முடியும். அவர்கள் இத்தகைய செயற்கைச் சோதனைகளைக் கொண்டாடுவார்கள். ஆகவே இவை ஏற்பு பெறுகின்றன.

கலைஞர்களில் மெய்யான தேடலும் நுண்ணுணர்வும் அற்றவர்கள் அக்கலையை தொழில்முறையாகப் பயின்று அதை நிகழ்த்தும்போது மேற்கண்ட இரு வகை ரசிகர்களின் ஏற்பை பெறமுடியுமென கண்டடைகிறார்கள். அவர்கள் உலகமெங்கும் உண்டு. மேலே சொன்ன ஏற்பும் அதற்கான தயாரிப்பும் இணையும்போது போலிக்கலை உருவாகிறது.

கடைசியாக ஒன்றுண்டு, கலையுலகில் ஈடுபடுபவர்களில் ஒரு சாராருக்கு தங்களை ‘அதிநுண்ணுணர்வர்கள்’ என காட்டிக்கொள்ளவேண்டிய அரிப்பு உண்டு. ஆகவே எங்கும் ரசிக்கப்படாத, அனேகமாக அனைவராலும் மறக்கப்பட்ட ஒன்றை அடாடா அய்யய்யோ என ரசித்து, ஏற்பு கொண்டு மையத்தில் திகழும் கலையை நிராகரிப்பார்கள்.

உதாரணமாக இந்தியத் திரைரசிகர்கள் பலர், சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புகூட சத்யஜித் ரேயை நிராகரித்து, ஏளனம் செய்து ரித்விக் கட்டகை முன்வைப்பார்கள். ரிதுபர்ணோ கோஷை நிராகரித்து புத்ததேவ்தாஸ் குப்தா அல்லது மணி கௌல் பெயரைச் சொல்வார்கள். அண்மையில் மலேசிய இலக்கிய விழாவில் ஒரு வங்காள விமர்சகர் பேச ஆரம்பித்ததுமே இதைச் சொன்னார். உடனே அவருடனான உரையாடலை முடித்துக்கொண்டேன். அவர் புதுமைப்பித்தன் மொழியில் ஓர் ’அபிநவ ஸ்நாப்’

ஷாஜி என் கருண்

சோதனை முயற்சிகளை நான் இப்படி வகைப்படுத்துவேன்.

ஒன்று,  போலித்தனம். கலைசார்ந்த நுண்ணுணர்வோ அதற்கான அறிவுத்தயாரிப்போ இல்லாமல் வெறுமே ஏதாவது சாயல்களை அங்கே இங்கே பொறுக்கிக்கொண்டு பண்ணப்படும் செயற்கையான முயற்சிகள்.

கலை என்பது அவ்வளவு எளிதாக உருவாக்கப்படுவதல்ல. அதன் பின் ஒரு மனம் , ஒரு புத்தி,தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தவிக்கவேண்டும். எந்த ஒரு கலைக்குப் பின்னும் ஒரு ஆத்மார்த்தமான பெருமுயற்சி, ஓர் அர்ப்பணிப்பு உள்ளது. போலிக்கலை உண்மையான கலையின் சில பாவனைகளை, சில உத்திகளை, மொழி மற்றும்  பாணியிலுள்ள  சில புறவயமான அடையாளங்களை  மட்டுமே மிமிக் செய்கிறது. அதைக்கண்டு கலையுணர்வற்றவர்கள் ஏமாறுவார்கள். அதை உண்மையான கலையுடன் ஒப்பிடுவதுடன் சில சமயம் உண்மையான கலைக்கும் மேலாகவும் முன்வைப்பார்கள். இது வரலாற்றில் எப்போதுமே நிகழக்கூடியது.

இந்தப் போலி முயற்சிகளை உண்மையான முயற்சிகளுடன் ஒப்பிடுவதென்பது கலையில் உள்ள மெய்யான முயற்சியையும் அர்ப்பணிப்பையும்  அவமதிப்பது. ரசனையை அவமதிப்பது. காலப்போக்கில் கலையையே அழிப்பது. இதில் குரூரமான ஒரு கறார்த் தன்மையுடன் மட்டுமே இருந்தாகவேண்டும்.

சினிமாக்களில் அவ்வகையான பல போலி முயற்சிகள் உண்டு. மிகச்சிறந்த  உதாரணம் ஜான் ஆபிரகாமின் வித்யார்த்திகளே இதிலே,  அம்ம அறியான் போன்ற படங்கள். கலை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அசட்டு விமர்சகர்களை அவை ஏமாற்றலாம். ஏதாவது ஒரு கலையை உள்ளார்ந்து அறிய முடிந்த ஒருவர் கண்டிப்பாக இவற்றை அடையாளம் காணமுடியும், ஒதுக்கமுடியும்.

இரண்டு, கணக்குவழக்குகள்.  உண்மையான கலை எழுச்சி அகத்தில் நிகழாமல் கலையின் வடிவத்தால் மட்டுமே ஈர்க்கப்பட்டு  செய்யப்படும் சோதனை முயற்சிகள். இவை வெறும் வடிவப்பரிசோதனைகள். இசையில் செய்யப்படும் கணக்குவழக்குகளுக்கு நிகரானவை.

இலக்கியத்தில் மிகச்சிறந்த உதாரணம் என்றால் தமிழவனின் நாவல்கள். அவர் அங்கே வாசித்ததை இங்கே செய்து பார்க்கிறார். அவ்வளவுதான் அவரது ஆர்வம். சினிமாவில் ஷாஜி என் கருணின் பிறவி தவிர  பல படங்கள் உதாரணம்.ஸ்வம் முதல் குட்டிசிராங்கு வரை எடுத்துப்பார்க்கலாம். உயிர் என்பதே இருக்காது. பிறவி அதன் திரைக்கதையாசிரியரான சி வி ஸ்ரீராமன் என்ற பெரும் சிறுகதையாசிரியரின் சிருஷ்டி.

அடூர்

மூன்று, முதிரா முயற்சிகள் . ஒரு கலையை உருவாக்குவதற்கான மன எழுச்சியும் தேடலும் இருந்தும் அக்கலையை உருவாக்குவதற்கான பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் உருவாக்கப்படக்கூடியவை இவை. எந்த கலையிலும் அக்கலையின் ஊடகம் மீதான தீவிரமான ஒரு பயிற்சி தேவை. அந்தப் பயிற்சி இல்லாத நிலையில் மனம் அடைவதை ஊடகம் அடையாமல் போகும்.

இலக்கியத்தில் அதற்கான பல உதாரணங்கள் உண்டு. தமிழில் சம்பத் எழுதிய குறுநாவலும்,நாவலும் அதற்குச் சிறந்த உதாரணங்கள். அவருக்கு புனைகதையின் வடிவமோ மொழியோ கைகொடுக்கவில்லை. ஆனால் அவர் என்ன உத்தேசித்தார் என அவரது ஆக்கங்கள் சொல்கின்றன

சினிமாவில் சிறந்த உதாரணமாக அமைபவை ஜி.அரவிந்தனின் காஞ்சனசீதா, தம்பு, ஒரிடத்து, எஸ்தப்பான், போக்குவெயில் போன்ற படங்கள். அவரது கலை எழுச்சியின் தீவிரத்தை நாம் அவற்றில் உணரமுடியும். ஆனால் அவை நன்றாக அமைந்த படங்கள் அல்ல. நம் திரையின் பரிணாம வரலாற்றில் அவற்றுக்கு ஓர் இடம் உள்ளது அவ்வளவுதான்.

ஜி.அரவிந்தன்

நான்கு, கலைப்பிழைகள். ஓர் உண்மையான கலைஞன் தன்னுடைய சுயவெளிப்பாட்டுக்கான வடிவைக் கண்டடைதலில் அடையும் பிழைகள் இவை. இவை அந்த அளவிலேயே முக்கியமானவை. கலையின் புதிய சாத்தியங்களைத் தொட்டு எழுப்பக்கூடியவை அவை. அக்கலைஞனுக்கு வழக்கமான வடிவம் போதவில்லை. தனக்கான வடிவுக்காக அவன் சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவை அவனை வெளிப்படுத்தாமல், அல்லது முழுமையாக வெளிப்படுத்தாமல் நின்றுவிடுகின்றன.

இலக்கியத்தில் சிறந்த உதாரணம், நகுலன். அவரது ஆக்கங்களில் நாய்கள் போன்ற பல ஆக்கங்கள் பரிதாபகரமான தோல்விகள். சிறுகதைகளில் ஒன்றிரண்டுகூட நல்ல கதைகள் அல்ல. கவிதைகளில் பத்துக் கவிதைகள் தேறினால் அதிகம். நினைவுப்பாதை, வாக்குமூலம் என்னும் இரு ஆக்கங்களையே ஓரளவேனும் அவரது மேதமையின் சாயல் கூடிய ஆக்கங்கள் என்று சொல்லமுடியும். அவையும் கலைவெளிப்பாடுகள் அல்ல, கலைக்கான தவிப்புகளும் தடுமாற்றங்களும் மட்டுமே. ஆங்காங்கே மிளிரும் மேதமையாலேயே அவை கலையாகின்றன

ரித்விக் கட்டக்கின் பெரும்பாலான ஆக்கங்களை இந்த வகையில் சேர்ப்பேன். மேக தக் தாரா விதிவிலக்கு. ஆனால் கட்டக் தேடியது அதை அல்ல. அவரது மேதமை வெளிப்பட்ட படங்கள் சுபர்ணரேகா போன்றவை. ஆனால் அவை சிதைந்த ஆக்கங்கள்.

 

[ரித்விக் கட்டக்]

ஐந்து , கலைத்திருப்பங்கள். உண்மையில் வெற்றிபெற்ற எல்லாக் கலைப்படைப்பும் எந்த சம்பிரதாயமான வடிவை எடுத்துக்கொண்டிருந்தாலும் அவ்வடிவை வெற்றிகரமாக மறுஆக்கம் செய்திருக்கும். ஆகவே எல்லா நல்ல ஆக்கங்களும் வடிவ அளவில் புத்தம்புதியவையே. ஆனால் அபூர்வமாக சில ஆக்கங்கள் ஒரு கலைச்சூழலில் புத்தம்புதிய வடிவத்தை உருவாக்கி அதன் தேவையைத் தங்கள் கலைத்திறன் மூலம் நிலைநாட்டியும் இருக்கும்.

தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த உதாரணம் என்றால் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லகிராமம். மிக விசித்திரமான வடிவம் கொண்ட இந்நாவல் அதன் வடிவத்தேவையை முழுமையாக நிலைநாட்டவும் செய்தது. அது ஒரு வகைமையை உருவாக்கவில்லை. கி.ராவே அதை முன்னெடுக்க முடியவில்லை.  ஆனால் அது காலத்தை வென்று நின்று கொண்டிருக்கிறது

சினிமாவில் ஐந்தாம் வகைக்கான உதாரணங்கள் என சத்யஜித் ரேயின்  பாதேர்பாஞ்சாலி, சாருலதா போன்றவற்றைச் சொல்வேன். அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் போன்றவற்றைச் சொல்வேன்

 

[சத்யஜித் ரே]

நான் சோதனை முயற்சிகளை எப்படிப்பார்க்கிறேன்? முதல் வகையை முழுமையாக-தீவிரமாக நிராகரிக்கிறேன். அவற்றை முழுக்க நிராகரிப்பது கலைக்கும் அதை உருவாக்குபவர்களுக்கும்கூட நல்லது செய்வது என நினைக்கிறேன். இரண்டாம் வகையைப் பொருட்படுத்தவில்லை. மூன்றாம் வகையை எப்போதும் ஆர்வத்துடன் பார்க்கிறேன். நான்காம் வகையை ஆழ்ந்து கவனிக்கிறேன், ரசிக்கிறேன். அந்தக்கலையை என் ரசனையால் முழுமைசெய்துகொள்கிறேன். அது ஏன் முழுமையடையவில்லை என்பதை மீளமீள சிந்திக்கிறேன். ஐந்தாவது வகையை வழிபடுகிறேன்.

என் பார்வையில் மணி கவுல் இரண்டாம் வகையைச்சேர்ந்தவர். அவரது ஆக்கங்கள் உயிரற்றவையாக எனக்குப்பட்டன. வடிவச்சோதனைகளுக்காகச் செய்யப்படும் கலை முயற்சிகளுக்கு மிக மிகத் தற்காலிகமான மதிப்பே உள்ளது. எல்லாக் கலைவடிவங்களும் மிகச்சீக்கிரத்திலேயே காலாவதியாகும். காலத்தைத் தாண்டி வருவது கலைவழியாகத் தன்னை வெளிப்படுத்தும் மானுட ஆழம்தான். கலைஞன் அந்த ஆழம் வெளிப்படும் ஒரு திறப்பு மட்டுமே.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 8, 2011

குட்டி சிராங்க் -திருமலைராஜன்

 சுவரில் முட்டிநிற்கும் மலையாள சினிமா

மலையாளசினிமா-கடிதங்கள்

நமதுசினிமா ரசனை

மலையாள சினிமா ஒரு பட்டியல்

சமரச சினிமா

 

 

 

முந்தைய கட்டுரைஜேம்ஸ் எம்லின்
அடுத்த கட்டுரைவெண்முரசொலி