தியானம், திரளும் தனிமையும்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

இப்போதுதான் தியான முகாமில் கலந்து கொண்டு கோவை போய்க்கொண்டு இருக்கிறேன். அவ்வளவு புத்துணர்ச்சியாகவும் அகவலு கூடியும் இருக்கின்றது.

தில்லை செந்தில் அண்ணா அவர்களின் வகுப்பு 2010 போல நான் கலந்து கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக அன்றாட வாழ்க்கையில் அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை உபயோகப்படுத்தி பார்க்கும் படியாக மிக்க உறுதுணையாக இருக்கும் என்று தோன்றுகிறது.மிகக்குறைந்த  நபர்களே இருந்ததால் அவரோடு உரையாட அவர் நாங்கள் செய்யும் பயிற்சிகளை எளிதாக சரிபார்த்து சொல்ல ஏதுவாக இருந்தது.

இரண்டாம் நாள் எதிர்பாராமல் மழை பெய்தது ஒரு நல் ஆசீர்வாதமாக தோன்றியது.உணவு உபசரிப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடு மணி அண்ணா மற்றும் சமையல் கலைஞர்கள் பொம்மன் மிகச் சிறப்பாக இருந்தது.

பல்வேறு கூட்டு தியானங்கள், மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள்,கேள்வி பதில்கள் என வகுப்பு மிகச் சிறப்பாக திட்டமிட பட்டிருந்தது.இது போன்ற விஷயங்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும்அதற்கு சூழல் அமைத்துக் கொடுத்த உங்கள் எண்ணத்திற்கும்மிகுந்த நன்றி கடன் பட்டவனாக இருக்கின்றோம்.

அன்பும் நன்றியும்

குமார் சண்முகம்

***

அன்புள்ள குமார்,

தில்லை செந்தில்பிரபு அவர்கள் தொழில்துறையில் மிகப்பெரிய பதவியில் இருந்து அதைத் துறந்து மிகப்பெரிய அமைப்பொன்றில் முழுநேர உறுப்பினராக ஆனார். பல ஆண்டுகள் புகழ்பெற்ற தியானப் பயிற்றுநராக இருந்தார். பலநூறுபேர், ஆயிரம்பேர் கலந்துகொள்ளும் முகாம்களை நடத்தியிருக்கிறார். அந்தப் பெருந்திரள் தியான முறையின் குறைபாட்டைக் கண்டு ஒதுங்கிக்கொண்டார். மீண்டும் தொழில்துறையில் இறங்கி பணியாற்றுகிறார். கூடவே கல்விப்பணி, தியானப்பயிற்றுமுறைகள் ஆகியவற்றைச் செய்து வருகிறார். எனக்கு நன்றாகவே தெரிந்தவர்.

தியான – யோகப் பயிற்சிகளில் பெருந்திரள் நிகழ்வுகளுக்கு ஒரு நடைமுறைப்பயன் உண்டு. பெருந்திரளுடன் இருப்பது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. உற்சாகமான மனநிலை அமைகிறது. விழாமனநிலை அது. அது தேவை. ஆனால் உண்மையான பயிற்சி சிறிய அளவிலேயே நிகழமுடியும். ஆசிரியரை மாணவர் அறிவது முக்கியமல்ல, அறியவும் முடியாது, அறிந்ததுமே அவரும் ஆசிரியர் ஆகிவிடுவார். ஆனால் ஆசிரியர் மாணவரை தனிப்பட்ட முறையில் அணுக்கமாக அறிந்து வழிகாட்டவேண்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உடனிருக்கவேண்டும்

இந்த பயிற்சிகள் வழியாக உத்தேசிப்பது அதுவே. நான் எல்லாவற்றிலும் பொதுவாக இருப்பவற்றுக்கு எதிராக ஒரு மாற்று சொல்கிறேன்.  அதற்கு ஒரு வழியும் அமையட்டுமே, சிலருக்காவது பயன்படும் என்பதே நோக்கம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅகநிலம் – கடிதம்
அடுத்த கட்டுரைகருணாலய பாண்டியனார்