(விஷ்ணுபுரம் நாவலில் இருந்து ஒரு பாடல். இசையமைப்பு ராஜன் சோமசுந்தரம்)
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம்.
சுனில் கிருஷ்ணன் அவர்கள், அரூ மின்னிதழுக்கு நடத்திய நேர்காணல் ஒன்றில், எழுத்தாளர் நாஞ்சில் நாடனிடம், தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து கேள்வி கேட்டிருப்பார். அதற்கு அவர், பாதித்த ஆளுமைகள் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு, புதுமைப்பித்தனின் ‘அன்று இரவு’, ‘கயிற்றரவு’ மற்றும் ‘சாப விமோசனம்’ கதைகளை 20, 30 தடவை வாசித்ததாக பதில் சொல்லியிருப்பார். நான் நாஞ்சில் அவர்களைப் போல 20, 30 தடவைகள் எந்தச் சிறுகதையையும் வாசித்ததில்லை. ஆனால், பிடித்த சிறுகதைகளை நான்கு அல்லது ஐந்து முறைகள் வாசித்திருக்கிறேன். சுனில் கிருஷ்ணனின், வாசுதேவன் கதையை சில வருடங்களுக்கு முன் பலமுறை வாசித்த வாசகனாக , “வீடொன்று கட்டி ஒரு செங்கல்லை எடுத்துவிட்டால் வீடே இடிந்துவிடும் என்பதுபோல ஒரு வார்த்தையை / ஒரு வாக்கியத்தை எடுத்தாலும் இந்தக் கதையின் ஆத்மார்த்தம் போய்விடும் என்பதுபோல செதுக்கியுள்ளீர்கள் “ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவரது பேசும்பூனை , அம்புப்படுக்கை கதைகளை மாய்ந்து மாய்ந்து வாசித்திருக்கிறேன். ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றிய ஒரு புரிதலை சுனிலின் கட்டுரைகளின் மூலமே கண்டடைந்தேன். அவரை மார்ச் 18, 2023 இணைய நிகழ்வில் சந்திக்க ஒரு விழாக்கால மனநிலையுடன் வாசகனாக காத்திருந்தேன். அதே மனநிலையில்தான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களும் இருந்தார்கள். கடந்த இருபது நாட்களாகவே அவரது புனைவுகள் / அபுனைவுகள் பற்றிய குறிப்புகள் வந்தவண்ணம் இருந்தன. 2019-ல் தாங்கள் அமெரிக்கா வந்தபொழுது, குழந்தைகளுக்கு இந்து ஞானத்தை அறிமுகப்படுத்த சுனிலின் நூலை பரிந்துரை செய்ததாக, தனக்கான தகவலை நண்பர் ஒருவர் பகிர்ந்தார்.
பிரபு, அவரது திரைப்படம் வெளியிடும் பணிகளுக்கு இடையில் சுனிலின் புனைவுகளை வாசிப்பதும், உரையாடுவதுமென இருந்தார். முதலில் சிறுகதைகள் குறித்து மட்டும் பேசுவதாக இருந்தவர், நாவலையும் வாசித்துவிட்டு சுனிலின் புனைவுகளுக்கு மொத்தச் சித்திரம் கொடுப்பதற்கு தயாராகிவிட்டார். அவரது உரையை நிகழ்வில் கேட்டவர்கள், Well Connected Speech என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), முதன் முதலில் இணைய நிகழ்வு நடத்தியபொழுது, மதன் இன்றைய காந்தி வாசித்துவிட்டு அருமையான உரை ஒன்று நிகழ்த்தியது ஒவ்வொருவர் மனதிலும் அப்படியே இருந்தது. நவகாந்தியவாதியாக அறியப்படும் சுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்களைப் பற்றிப் பேச, காந்திய நூல்களை தொடர்ந்து வாசிக்கும் மதனே சரியான ஆள் என ஏகமனதாக ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டார்கள். நிகழ்வில் மதனும் , நம்பிக்கையை தக்கவைப்பவராக, ‘கல்மலர்’, ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ நூல்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கொடுத்தார். சுனில் கட்டுரைகள் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளன என்று மதன் விளக்கும் விதத்திலேயே, காந்தி பற்றிய மேற்போக்கான எண்ணம் உள்ளவர்களுக்கு புதிய பாதை ஒன்று விரிவது தெரியும்.
திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் உண்டு. அதற்கென பாட்டு உண்டு. ஆனால், ஒரு எழுத்தாளுமையை அழைத்துச் சிறப்பிக்கும் விழாவில், புதிதாக ஒரு பாடலுக்கு இசையமைத்து அதைப் பாடிய புதுமையை ராஜன் சோமசுந்தரமும், விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமாரும் நிகழ்த்தியுள்ளார்கள். விஷ்ணுபுரம் நாவலில், திருவிழாவைப் பார்ப்பதற்கு , மாட்டுவண்டியில் பயணம் செல்லும் மக்கள் நகர் பற்றி, கோவில் பற்றி பாடும் பாடலை இசையமைத்து பாடத் தயாராவார்கள் என்று யாரும் எதிர்பார்க்காததால், ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும். வாசகனாக சுனில் விஷ்ணுபுரம் நாவலை அணுக்கமாக உணர்வார். அந்த வகையிலும் இந்தப் பாடல் பொறுத்தமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டேன்.
சுனில் கிருஷ்ணன், எழுதியிருக்கும் 35 / 40 கதைகளில் பேசுபொருள் ஒரு கதைபோல் இன்னொன்றில் இருப்பதில்லை. காந்திய சிந்தனைகளை முன்னெடுக்கும் நூல்கள், ஆயுர்வேத மருத்துவக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் என வெவ்வேறு தளங்களில் அவர் நூல்கள் இருப்பதாலோ என்னவோ இணைய அரங்கம் வாசகர்களால் நிறைந்து இருந்தது. குறைந்தது நாற்பது வாசகர்களாவது பதினைந்து நிமிடம் முன்னர் வந்து காத்திருந்தனர். கேள்விகளும் அவர் எழுதிய அனைத்துத் துறைகளிலும் இருந்து கேட்கப்பட்டன. ஒருங்கமைப்பாளர் ஜாஜா, பழுவேட்டரையரின் கதையின் பின்னனி என்ன என்று சுனிலைக் கேட்டு காத்திரமாக செல்லும் சூழலை கொஞ்சம் இலகுவாக்கினார். ஆயுர்வேதம், யோகா – இவைகளை சொந்தவாழ்க்கையில் பின்பற்றுவது. – நுகர்வோரின் உலகமான நவீனவாழ்க்கையில் சாத்தியமில்லை. இலக்கியச் செயல்பாடு, எழுத்து, வாசிப்பு – அடுத்து அடுத்து என ஓடும் வாழ்க்கையில் இது எப்படி சாத்தியம். இந்த அனைத்து முகங்களும் உடையவராக சுனில் வாசர்களது எண்ணங்களில் உள்ளதால் – அவரை அறிந்துகொள்ள ஆர்வமான கேள்விகள் இருந்தன. சுனிலின் விளக்கங்கள் மேன்பட்ட புரிதல்களை கொடுப்பதாக இருந்தன..
தாங்களும் வந்திருந்து வாசகர்களோடு வாசகராக கேட்டு ஆதரவு கொடுத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும்..
இதுவரை க.நா.சு உரையாடல் அரங்கில், கவிஞர் ஒருவரை அழைத்து உரையாடியதில்லை. அடுத்து அனைவருக்கும் அணுக்கமான கவிஞர் ஒருவரை, விருந்தினராக நண்பர்கள் எதிர்பார்க்கலாம்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்