குமரித்துறைவி வாங்க
பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
புத்தகக் கண்காட்சியில் தங்களிடம் பெற்றுக் கொண்ட குமரித்துறைவியை முதலில் அம்மா தான் வாசித்தார்கள். சில நாட்களாய் அவரை சலனப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சிறு மனச்சஞ்சலிருந்து மீண்டு புன்னகையும் தெளிவும் பெற்றார். “நீ எப்ப படிக்கப்போற” “படிச்சிட்டியா” என்று என்னைக் கேட்டு சலித்து மறந்தும் விட்டார். நான் சென்ற வாரம் படித்து முடித்து அம்மாவிடம் பேசினேன். உவகையும் நிறைவும் தவிர பேசவும் பகிரவும் சொற்களின்றி மகிழ்ந்தோம்.
இரண்டு நாட்கள் கழித்து குலதெய்வம் கோவில் பயணம். ஐந்து தலைமுறையாக அறியாமல் என் அண்ணனின் தீவிர முயற்சியால் கண்டுபிடித்து கடந்த ஆறு வருடங்களாக போய் வந்து கொண்டிருக்கிறோம். கமுதி ஶ்ரீவீரமாகாளி அம்மன். குமரித்துறைவி வாசிப்புக்குப் பின் தெய்வத்தை தரிசிப்பதில் எவ்வளவு மாற்றம்! வேண்டுதல் முறையீடு குறைபாடு எதுவும் இல்லை. உற்சவம் முழுக்க என் இரு மகள்களையும் அள்ளி அணைத்துக் கொஞ்சிக் கொண்டே இருந்தேன்.
விளக்குப் பூஜை, அர்ச்சனை என்று இரண்டு நாட்களாக பல தேங்காய்கள் சேர்ந்து விடும். வீடு திரும்பியதும் அம்மா அதில் மிட்டாய் செய்தார்கள். தேங்காய் மிட்டாயுடன் சேர்த்து குமரித்துறைவியை என் அக்காவிற்கு கூரியரில் அனுப்பியுள்ளேன் :)
நன்றி
மதன் ஜெகநாதன்
பி.கு: இக்டிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் என்னுடைய முதல் கடிதம் குறும்படங்களுடன் உங்கள் வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்த செய்தியை அனுப்பியிருந்தான். பெரும் மகிழ்ச்சி. உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதில் ‘நி.ச.ரி.ஸ’ என்ற குறும்படத்திற்கும் குமரித்துறைவிக்கும் உண்டான சிறு துளி ஒற்றுமையை பேச எண்ணியிருந்தேன்.